மொழி - 13
கதவருகே நிழலாட போய்க் கதவைத் திறந்தான் சொரூபன். வெளியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் யதீந்திரா. உணர்ச்சியற்றிருந்த அவன் கண்களில் கண நேரம் ஆச்சரியம் வந்து போக வழி விட்டு விலகி நின்றான்.
‘இன்று பின்னேரம் தானே டிக்கெட் வெட்டுவதாக சொன்னார்கள்’ புருவம் நெரித்து யோசித்தான். பின்னேரம் அங்கே சொல்லும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனாலும் மருத்துவமனையில் இருந்து தனியாய் வந்ததை பார்க்க ஏதோ போலிருந்தது.
உள்ளே வந்தவள் உடைகளை எடுத்துக் கொண்டு வாஷ்ரூம் வாசலில் நின்று மீண்டும் அவனைப் பார்த்தாள். பல்கனியில் கதிரையில் கால் நீட்டி கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான். அன்று மருத்துவமனையில் கண் விழித்த போதும் இப்படிதான் அமார்ந்திருந்தான். அவள் விழித்ததும் மருத்துவர் அவளை பரிசோதித்து அவளுக்கு ஒன்றுமில்லை என்றதும் சென்றவன்தான் அதன் பிறகு மருத்துவமனை பக்கமே எட்டி கூட பார்க்கவில்லை.
என்ன நடந்தது இவனுக்கு யோசனையுடன் குளித்து வர சீருடை அணிந்த பணிப்பெண் பெரிய ட்ரே ஒன்றில் இரண்டு தட்டுகள் ஹோட் போக்ஸில் உணவு பிளாஸ்கில் பாலையும் வைத்து செல்வதை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
குளித்து உடை மாற்ற என்று வேலை செய்ததில் தலை லேசாய் வலிப்பது போலிருக்க கை பையினுள் தலைவலி டப்லேட்டை தேடினாள்.
“என்ன தேடுகிறாய்?”
திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்க்க சொரூபன்தான் சிவந்த கண்களுடன் நின்றான்.
“தலைவலி... டப்லேட்”
“என்னிடம் இருக்கு சாப்பிடு தாரேன்” அவன் குரல் ஏதோ போலிருந்தது.
சோபாவில் அமர்ந்தவள் இருவருக்குமாய் தட்டில் போட்டு ஒன்றை அவனிடம் நீட்டினாள். தட்டையே வெறித்துப் பார்க்க “சொரூபன்” அழைத்தாள்.
“ஹ்ம்ம்” ஏதோ சிந்தனையிலிருந்து விழித்தது போல் வாங்கியவன் அமைதியாய் உண்ணத் தொடங்கினான். இருவருமாய் உணவை முடித்ததும் தட்டுகளை ஒதுக்கவே அவளைத் தடுத்து அவனே எடுத்துச் சென்றான். மீண்டும் வரும் போது கையில் பூஸ்ட் கிளாசுடன் வந்தவன் “இதை குடி” அவள் கையில் திணித்தான்.
கவனமாய் மருந்துகளை எடுத்துக் கொடுத்தவனை விநோதமாய் பார்த்தாள் யதிந்தீரா.
சொக்லேட் பபுல்ஸ் போல் கலர்கலராய் பத்து டப்லேட். அவளுக்கு சும்மாவே மருந்து குடிப்பதென்றால் கள்ளம். அதற்கு பதிலாய் காய்ச்சல் தலைவலியை சமாளித்துவிடுவாள். பரிதாபமாய் பார்த்தவள் முகத்தைப் பார்க்க அவனிருந்த மனநிலையையும் மீறி இதழ் கடையில் புன்னகை தோன்றி மறைந்தது.
“இதில் எது தலைவலி டப்லேட்” கையிலிருந்த மருந்துகளை ஒரு விரலால் ஆராய்ந்தவாறே கேட்டவளை லேசாய் முறைத்தான்.
அசட்டு சிரிப்பொன்றை அவிழ்த்துவிட்டவள் கன்னம் நிறைய தண்ணீரை வைத்துக் கொண்டு ஒவ்வொரு டப்லேட்டாக முழுங்கினாள். கடைசி மருந்தையும் போட டைரி மில்க் சொக்லேட் பார் ஒன்றினை அவள் கையில் வைத்தான் சொரூபன்.
சட்டென பத்து வயது சிறுமியாய் இருந்த போது அவள் அப்பா சொக்லேட் தந்தது கண்ணில் தோன்றி மறைய கலங்கிய கண்களை மறைக்க மறுபுறம் திரும்பினாள். அதன் பிறகு அவளுக்கு என்று யாரும் எதையும் வாங்கிக் கொடுக்கவில்லை.
“சாப்பிடல?”
பேசினால் தொண்டை துரோகம் செய்து விடும் போலிருக்கவே மறுத்து தலையை மட்டும் அசைத்தாள். அதை வாங்கி மேசையில் வைத்தவன் அவளை அப்படியே தூக்கி கட்டிலில் விட “வந்து இன்று...” தடுமாறினாள் யதீந்திரா.
‘என்னை என்னவென்று நினைத்தாள்’ மனதினுள் சீறியவன் முகம் நொடியில் மாறிவிட அவள் இதழ்களை வன்மையாய் சிறைபிடித்தான். வலியில் புருவம் சுழிக்க அதில் இதழ் பதித்தவன் “படு” என்று விட்டு கண்ணுக்கு மேல் கையை வைத்துக் கொண்டு அருகில் படுத்துவிட்டான்.
“ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” கேட்டவள் கண்கள் தானாகவே சொக்கியது. போட்ட மருந்தின் வேலை என்பது புரிய அவள் புறம் திரும்பிப் படுத்தவன் மனதில் என்னனென்ன உணர்வு ஓடியதோ முகம் இறுகியே இருந்தது. எதையோ ஒன்றை செய்வோமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவன் அவள் நெற்றியில் விழுந்த கேசத்தை ஒதுக்கிவிட்டான்.
***
போன் சத்ததில் புரண்டு படுத்தவள் அருகே பார்க்க அவன் படுத்ததற்கான அடையாளமாய் இன்னும் கதகதப்பு மிச்சமிருந்தது. ‘எங்கே’ என்ற கேள்விக்கு குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. போனை எடுத்து நம்பரைப் பார்த்தவள் உறக்கம் காத தூரம் ஓட பல்கனியை நோக்கிச் சென்றாள்.
குளித்து வந்தவன் கட்டில் காலியாய் இருக்க அவனையும் மீறி அவன் கண்கள் தேடியது ‘எங்கே போனாள்’. பல்கனியில், ஆழ்ந்த யோசனையுடன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். போர்வையை மடித்து மெத்தையை ஒழுங்குபடுத்தியவன் கண்கள் அவளை விட்டு அசைய மறுத்தது.
“பிங்கி, லெமன், இந்திரா” வேகமாய் அழைத்தவாறே உள்ளே வந்தாள் ஜானகி.
‘என்ன சாப்பாடு செய்யலாம்’ என்று யோசித்துக் கொண்டிருந்த நிஷாந்த கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தான்.
“ஜானகி இங்கே”
“பிங்கி” ஆர்வமாய் அவனருகே வந்தவள் “டீ ஊத்துரியா? எனக்கும் சேர்த்து போடு. நான் யதியை பார்த்திட்டு வாரேன்” மாடியை நோக்கி திரும்ப அவள் கையை சுண்டி இழுத்தான்.
அவன் மார்பில் மோதி நின்றவள் விழிக்கவே சற்று விலகி “யதிக்கு சாப்பாடு செய்ய எனக்கு ஹெல்ப் பண்ணு” அவள் கையில் கத்தியையும் வெங்காயத்தையும் வைத்தான். திரும்பி நின்று வாய் வழியே மூச்சு விட்டான். ‘ஹப்பா, எத்தனை மென்மை’ இத்தனை நாளில் இல்லாத ஆசைகள் எல்லாம் அவளருகே மட்டுமாய் தலை விரித்து ஆடியது.
பிளாட்டில் ஏறி அமர்ந்தவள் “வேற ஏதாவது வெட்டித் தரவா?” தீவிரமாய் கேட்டாள்.
“ஏன் இதற்கு என்ன?”
“அது வெங்காயம் உள்ளி மணக்கும் மாத்தையா” உதட்டை சுளித்தாள்.
அவள் செய்கையில் பின் கழுத்தை அழுத்தி விட்டவன் “சரி இதை கழுவித் தா” அரிசியை அவள் கையில் வைத்தான்.
மேலே மோதுவது போல் வரவே சற்று விலகி “பிரிட்ஜில் பால் இருக்கும் பார்” என்று அனுப்பி வைத்தான்.
"பால் இருக்கு"
"எடுத்திட்டு வாடா"
“பிங்கி நீ இப்படி சோறுடன் பால் கலந்து சாப்பிடுறதால தான் பிங்க் கலரில் இருக்கிற. இனி நானும் இப்படிதான் சாப்பிட போறேன்”
“இந்த கலரை நீ விடவே மாட்டியா? அந்த தண்ணீர் ஜக்கை எடு”
அவன் சொல்வதை செய்து விட்டு மேலே போக துடித்தவளை அடுத்தது இல்லாத வேலையெல்லாம் சொல்லியே பிடித்து வைத்திருந்தான்.
“சொரூபன்...” அழைத்தவாறே உள்ளே வந்தவள் அவன் கோலத்தில் முகம் சிவக்க தலையை திருப்பினாள்.
இடையில் வெள்ளை நிற துவாய் மட்டும் அணிந்து தலையிலும் மேலிலும் ஈரம் சொட்ட சொட்ட நின்றான். அவனிடமிருந்து ஓடப் போனவளை தனக்கும் டிரேஸ்ஸிங் மேசைக்கும் நடுவில் சிறைப் பிடித்தவன் சிவந்திருந்த முகத்தை கண்ணில் ரசனையுடன் நோக்கினான்.
“நீர் என்னை இப்படி பார்த்ததே இல்லையா?” குறும்பாய் கேட்க அவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“நிமிர்ந்து பாரும்” அவன் குரல் கட்டளையாய் ஒலித்தது.
கண்களை மட்டும் உயர்த்தி பார்க்க “என்னைப் பார்த்தால் முன்றாம் தர காமுகன் மாதிரியா இருக்கு?” கண்களில் மெல்லிய வலியுடன் கேட்டவனை குழப்பமாய் பார்த்தாள். அவன் வலியை குறைக்க வேண்டும் போல் ஏதோ ஒன்று மனதில் உந்த நுனி விரலால் அவன் கன்னம் வருடினாள்.
இன்றும் மின்சாரம் பாய்ந்தது போல் சொருபனுக்கு மேல் சிலிர்த்தது.
“நேற்று” அழுத்தமாய் பார்க்க “அஅது நீங்..” தடுமாறினாள்.
அவளைக் காக்கவென்றே அழைத்தது கைபேசி. கடைசி மூன்று இலக்கங்கள் மட்டும் கண்ணில் படவில்லை. சரியாய் பார்பதற்கு முன் மறைத்துவிட்டாள்.
‘போ’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தான் சொரூபன்.
மீண்டும் பல்கனியை நோக்கிச் சென்றவளைப் பார்த்தவன் கண்கள் சுருங்கியது.
அலுவலகத்திற்கு தயாராகி கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தவன் அருகே வந்து நின்று முகம் பார்த்தவளை ‘என்ன’ என்று கேள்வியாய் நோக்கினான்.
“எனக்கு மூன்று நாள் லீவு வேணும்”
“அஹ் லீவா” குழப்பாமாய் பார்த்தவன் வினவினான் “என்ன லீவு”
“யாழ்ப்பாணம் போக கேட்டீங்க இல்லையா? அதான் கொஞ்ச வேலை இருக்கு, முடிக்கணும்”
“அப்படியென்றால் வாறீரா?” முகம் மலரக் கேட்டான்.
“அதுதான் லீவு…” என்று இழுக்கவே “லீவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம், காயம் பட்டு இருக்கு ரெஸ்ட் எடும்.” குரலில் துள்ளல் தென்படக் கூறினான்.
மறுத்து தலையாட்டியவள் “இல்ல சில முக்கியமான வேலைகள் முடிக்க இருக்கு. அதோட…” மீண்டும் தயங்கினாள்.
“அன்டிய ஒருக்கா பார்க்கணும்” அவன் முகம் இறுகுவதைப் பார்த்தவள் “வெளியில் வைத்து என்றாலும் பரவாயில்லை” அவசரமாய் சேர்த்து சொன்னாள்.
சில கணங்கள் அவள் முகத்தையே பார்த்தான். கண்களில் தவிப்புடன் அவனையே நோக்கிய முகம் காயம்பட்டதில் அதைத்துப் போயிருந்தது. “ஜெகதீஸ்ஸிடம் சொல்கிறேன் இங்கேயே இன்று பத்து மணிக்கு இங்கேயே அழைத்து வருவான்.”
கீழே இறங்கி வர ஹாலில் மேலே போகத் துடித்த ஜானகியை கட்டிப் போடாத குறையாய் பிடித்து வைத்திருந்தான் நிஷாந்த. கீழ் படியில் அவளைக் கண்டதும் “இந்திரா” என்ற கூவலுடன் ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள்.
“ஏய்… பார்த்து” இருவரையும் விழாமல் பிடித்தான் சொரூபன்.
கம்பனி வேலையாய் சண்முகம் அங்கிளுடன் சிங்கப்பூர் போயிருந்தவள் இன்று காலைதான் வந்திருந்தாள். வந்ததும் நடந்ததை அறிந்தவள் ஏழு மணிக்கே வந்துவிட்டாள். மேலே போக நின்றவளை “யதிக்கு ப்ரேக்பாஸ்ட் செய்ய ஹெல்ப் பண்ணு” என்று நிஷாந்த தான் பிடித்து வைத்திருந்தான். மேலே நிலை என்ன என்று தெரியாமல் அவளை விடவும் யோசனையாய் இருந்தது.
“ப்ரேக்பாஸ்ட் ரெடி சாப்பிட்டே போவோம்” என்ற நிஷாந்தவை ஆச்சரியத்துடன் பார்க்க ஜானகி பதில் சொன்னாள் “நானும் பிங்கியும் சேர்ந்து சமைச்ச”.
இருவருக்குமே என்ன நடந்து என்று புரிந்ததில் முகம் சிவந்துவிட்டது. இந்த வாண்டு மேலே வர ஏதோ அட்டகாசம் செய்திருக்கு.
“மேலே வர விட்டுருக்க வேண்டியது தானே” ‘நீ உன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேண்டும் என்றேதான் அவளை அனுப்பவில்லை’ என்பது போல் குறும்பாய் கேட்க நிஷாந்த முறைத்தான்.
அதிர்ந்து போய்ப் பார்த்தாள் யதீந்திரா.
வெளியில் சும்மா இருக்கும் அவன் கை கால்கள் அறையினுள் இருந்தால் சும்மாவே இருக்காது. அவளிடம் ஏதாவது சேட்டை செய்யும். இவனின் அட்டகாசத்தில் நிஷாந்ததான் மாதத்தில் இருபத்தி எட்டு நாள் வேலையாய் வெளியில் தங்கி விடுவான். இருக்கும் இரண்டு நாளும் மேலேயே வர மாட்டான். இந்த லட்சணத்தில் சின்ன பெண்ணை ஏன் மேலே அனுப்பவில்லை என்று கேள்வி வேறு.
அவள் அதிர்ந்து நின்றதைப் பார்த்து கண்ணடித்தான்.
‘இவனுக்கு என்னவானது’ நேற்று முழுதும் உலகத்தையே பறி கொடுத்தது போலிருந்தான் இன்றானால் ஜாலியாய் இருக்கிறான்’ மீண்டும் தலை வலிக்கும் போலிருந்தது.
“சாப்பிட வாரும்” டைனிங் டேபிளை நோக்கி நடக்க “பிரெஷ் ஆகி வாரேன்” என்று மேலே ஓடிவிட்டாள். “லெமன் அண்ணா, எனக்கும் கொஞ்சம் கிரிபத் வையுங்கோ” என்றவாறே ஜானகியும் அவள் பின்னால் வால் பிடித்துக் கொண்டு செல்ல புன்னகையுடன் சோபாவில் அமர்ந்தனர் ஆண்கள் இருவரும்.
இருவருக்குமே பெண்களை விட்டு தனியாய் உண்ண மனமின்றி தொழில் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். அரை மணி நேரமாகியும் கீழே வாராமல் இருக்கவே “இன்னும் என்ன செய்கிறார்கள்?” கேள்வியுடன் சொரூபன் எழுந்து மேலே சென்றான்.
அறையின் கதவு லேசாய் திறந்திருக்க உள்ளே நடந்த சம்பாசனையில் திறக்க போன கை அப்படியே நின்றது.
“அக்கா பேசாமல் நீ என்னுடனே வந்து இரு” தீவிரமாய் கேட்டாள் ஜானகி.
உதட்டைக் கடித்தபடி ஆடைகளை சரி செய்ய “உண்மையாய் தான் சொல்கிறேன். அந்த மனேஜர் ராகவன் அந்த கௌரி எல்லாம் சேர்ந்து கொண்டு உன்னையும் லெமனையும் பற்றி தப்பு தப்பாய் பேசுறாங்க” அழுகைக் குரலில் கூறினாள். “அன்று இருவரையும் பிடித்து நன்றாய் திட்டிவிட்டேன்” கழுத்தை வெட்டித் திருப்பினாள்.
தொண்டையை செருமி சரி செய்தவள் “இப்போதைக்கு யாரிடமும் எதுவும் பேசாதே, உன் லெமனுடன் சிலோன் போறேன். வரும் போது அனைத்தையும் சரி செய்து விடுவேன் சரியா?” அவள் கன்னத்தை மென்மையாய் வருடிக் கேட்க “நாம் எப்ப ஒன்றாய் இருப்போம் என்று இருக்கு. நீ நான் அன்டியம்மா எல்லோரும்” மூக்கை உறிஞ்சினாள்.
“அப்ப உனக்கு நிஷாந்த மாத்தையா வேண்டாமா?”
ஒரு கணம் விழித்தவள் “நானும் இங்கே வந்து விடவா? உன்னைப் போலவே” என்று கேட்டு வெளியே நின்ற சொரூபன் உள்ளேயிருந்த யதிந்தீரா இருவரையும் ஒரே நேரத்தில் அதிர வைத்தாள் ஜானகி.
‘பட்’ என்ற சத்தத்தில் கதவை முழுதாய் திறந்து கொண்டு உள்ளே சென்றான் சொரூபன்.
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியில் கண்கள் விரிய அவளையே பார்த்திருந்தாள் ஜானகி.
“ச்சு சின்னபிள்ளைதனாமா அவள்தான் தெரியாமல் சொன்னாள் என்றால்” கண்டித்தவன் ஜானகியின் தோளில் ஆதரவாய் கை வைக்க “லெமன், நான் உண்மையைதானே சொன்னேன். என்னை அடிச்சிட்டா” குழந்தை போல் அவனிடம் முறைப்பாடு செய்து அவன் தோளில் தலை சாய்த்தாள்.
“ஜானகி” அதட்டினாள்.
“நீ கீழே போய் நிஷாந்தவுடன் வெயிட் பண்ணு நான் யதியிடம் கொஞ்சம் கதைச்சிட்டு வாரேன்” என்று அவளைக் கீழே அனுப்பி வைத்தான்.
***
கன்னத்தை பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் வழிய வந்தவளைக் கண்ட நிஷாந்த பார்த்துக் கொண்டிருந்த கோப்பை அப்படியே போட்டு விட்டு அவளிடம் நெருங்கினான்.
“மொக்கத வுனா, என்ன நடந்தது? ஏன் அழுகை”
“பிங்கிஈ... யதி அடிச்சு போட்டாள்” சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து குழந்தையாய் முறைப்பாடு செய்தாள்.
தோளோடு அணைத்துக் கொண்டவன் சோபாவில் இருத்தி விட்டு தண்ணீரை கண்ணாடி குவளையில் ஊற்றியவாறே சந்தேகமாய் கேட்டான் “நீ என்ன செய்தாய்?”.
மறுத்து தலையை ஆட்டியவள் “நான் ஒன்றுமே செய்யல. உன்னை மாதிரியே நானும் இங்கே வரட்டா என்று மட்டும்தான் கேட்டேன்” மூக்கை உறிஞ்சி உதட்டை பிதுக்கினாள்.
கண்ணாடி குவளை நழுவி விழப் பார்க்க அதை நடு வழியில் பிடித்துக் கொண்டான் நிஷாந்த.
திரும்பி நீரில் நீந்திய விழிகளைப் பார்க்க இதயத்துள் ஏதோ செய்தது. “உமக்கே தெரியும் அவள் சின்ன பெண். உம்முடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னது. கீழே வாரும்” மெல்லிய குரலில் கண்டிப்புடன் கூறினான்.
வாஸ்ரூம் சென்றவள் கண்ணாடியையே வெறித்துப் பார்த்தாள். ‘எல்லாம் கை மீறிப் போவதற்குள் இதற்கு சீக்கிரமே முடிவு கட்டு’ கண்ணாடியில் இருந்த பிம்பம் அவளிடம் கூறியது. ஏற்று தலையசைத்தவள் முகம் கழுவி வர உள்ளே நின்று எதையோ எடுத்துக் கொண்டிருந்தான் சொரூபன்.
கடந்த சில தினங்களாய் இவனிடம் என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு மாற்றம். அது வேறு அவள் சிந்தையை சலனபடுத்தியது. அவள் செய்ய வேண்டியது கண் முன்னே தெளிவாய் தெரிந்தது.
ஆனால் திட்டமிட்ட அனைத்தையும் செய்து முடித்த பின்னர் என்ன செய்ய போகிறாள் என்பது இருண்ட கானகம் போலிருந்தது.
கண்முன் யாரோ சொடக்குப் போட திடுக்கிட்டு போய்ப் பார்த்தாள். சொரூபன்தான், கண்ணாலேயே கேட்டான். ‘என்ன?’
“ஒன்றுமில்லை போவோம்” முன்னே நடந்தவள் கையைப் பிடித்து நிறுத்தி நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து விட்டு “போவோம் வா” என்றான் சிறு புன்னகையுடன்.
இயல்பான புன்னகை, இப்போதெல்லாம் வஞ்சகம் கபடமின்றி இப்படி அழகாய் சிரிக்கிறான்.
தான் நினைத்ததை சாதிக்க போறேன் என்ற எண்ணமா?
இல்லை பழி வாங்கிவிட்ட சந்தோசமா?
இல்லை வேறு ஏதாவது காரணமா?
எதுவாய் இருந்தாலும் அவன் இப்படி வஞ்சகமின்றி உள்ளார்ந்த மகிழ்ச்சியில் சிரிப்பது பிடித்திருக்க மயங்கிப் போய்ப் பார்த்திருந்தாள் மாது.
“க்கும்” அவள் பார்வையில் தொண்டையை செருமினான்.
“இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இல்லாவிட்டால்” என்று அவளை ஒரு பார்வை பார்க்க, தன்னிலை உணர்ந்தவளாய் சட்டென வெளியே சென்றுவிட்டாள்.
அவள் சென்ற வழியையே சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தவன் நீண்ட பெருமூச்சை வெளியேற்றி விட்டு கீழே சென்றான்.
அமைதியாய் உணவை முடித்து விட்டு எழும்ப அவள் கையில் சில மருந்துகளை வைத்தான் சொரூபன். “வோமிட் வாற மாதிரி இருக்கு. நான் பிறகு போடுறேன்” தப்பப் பார்த்தாள்.
“பரவாயில்லை இப்போதே போடும், சத்தி வந்தால் நான் பார்க்கிறேன்” என்றான் கையைக் கட்டிக் கொண்டு. வேண்டா வெறுப்பாய் விழுங்கியதை பார்த்துவிட்டே கோட்டைக் கையில் எடுத்தான்.
“பார்த்து ட்ரைவ் பண்ணுங்கள்” கலக்கத்துடன் கூறியவளை ஒரு கணம் கூர்ந்து நோக்கியவன் மெல்லிய தலையாட்டாலை மட்டும் பதிலாய்க் கொடுத்தான்.
“ஏன் அவாவே மருந்து போட மாட்டாவா?” ஸ்டீரிங் வீலை லாவகமாய் திருப்பியவாறே கேலியாய் கேட்டான் நிஷாந்தா.
“மருந்து போட அவவுக்கு கள்ளம்.”
“நியமாய், அதுக்குள்ள அவாவைப் பற்றி இவ்வளவு தெரியுமோ?” சீண்டினான்.
“இல்ல ஸ்கூல் படிக்கும் போதே தெரியும்” என்ற சொரூபன் கண்களை மூடி நன்றாக சாய்ந்து அமர ‘க்றீச்’ என்ற சத்தத்துடன் பிரேக் அடித்தான் நிஷாந்த.
“ஒயட்ட பிஷ்ஷு தமாய்” சீறினான் நிஷாந்த. “இரண்டு பேரையும் வேற வேற ஆள் மாதிரி...” ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவன் “நீ மொட்டுதனமா எதுவும் செய்ய முன் கொஞ்சம் யோசி” என்றவன் மீண்டும் காரை செலுத்தினான்.
கண்களை திறக்கமாலே ஒரு சீட்டை அவன் புறம் நீட்டினான் “இந்த சீட்டில் உள்ள நம்பர் யாருடையது என்று தெரியனும் கடைசி மூன்று இலக்கம் பார்க்க முடியல. இந்த அழைப்பு வந்த பின்தான் யாழ்ப்பாணம் வர ஒமொண்டாள்”.
வாங்கி பொக்கெட்டில் வைத்து விட்டு வியப்புடன் கேட்டான் “மெசேஜ் செய்து இருக்கலாம்தானே”.
“இருவர் போனையும் டப் பண்ணுறாள்” என்றவன் கண்கள் ஆகாயத்தை வெறித்தது. ‘இவள் என்னதான் செய்ய முயல்கிறாள்’
***
ஆண்கள் இருவரும் சென்று விட உக்கிரத்துடன் ஜானகியிடம் திரும்பினாள் யதீந்திரா. “நான், உன்னிடம் என்ன சொன்னேன்? இங்கே வரக் கூடாது என்று சொன்னேனா இல்லையா?”
அவளிடம் அத்தனை கோபத்தை எதிர்பார்க்காத ஜானகி கண்ணில் மீண்டும் நீர் நிறைய “உங்களுக்கு அடிபட்டு இருக்கு என்று” வாய்க்குள் முனகினாள்.
ஆழ மூச்செடுத்த்து தன்னை சமாளித்தவள் சோபாவைக் காட்டி “இரு” என்றாள்.
தானும் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கையில் எடுத்தவள் “நான் இன்னும் சில நாளில் சிலோன் போறேன். திரும்ப வரும் போது அனைத்தும் சரியாகி இருக்கும். நானே நிஷாந்தவிடம் பேசுகிறேன். சரியா?” லேசாய் கையை தட்டிக் கொடுத்தாள்.
“நீங்களும் எங்களுடன்...” கேள்வியை முடிக்காமல் பார்க்கவே திரும்பி அமர்ந்தாள் யதிந்தீரா.
“தெரியல அத அப்போது யோசிப்போம்”.
அடுத்த ஓர் மாதத்திற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் பட்டியலிட்டு கூறி “சந்தேகம் இருந்தால் என்னிடம் போன் செய்து கேள்” என்றவள் கண்கள் அடிக்கடி வாசலையே நோக்கியது.
“யாரவது இன்று வருகின்றார்களா?”
“அன்டி” சொல்லி முடிக்கவும் வாசலில் ஜெகதீசின் கார் வந்து நின்றது.
உள்ளேயிருந்து நடுத்தர வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் இறங்கினார். வந்தவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது. ஆனால் இருவரையும் சரியாய் அடையாளம் கண்டு கொண்டவர் அருகே வந்து இருவர் கையையும் பிடித்துக் கொண்டார்.
“ஏன் நீங்கள் இருவரும் என்னை பார்க்க வரவில்லை” கவலையாய் கேட்டார்.
அவரை சோபாவில் இருத்தி அவர் தோளில் தலை சாய்த்த யதீந்திரா “கொஞ்சம் வேலை அதிகம் அண்டி அதுதான்” என்றாள் சமாதானமாய்.
“சாப்டீங்களா?” ஆதுரமாய் கேட்க ஆமோதிப்பாய் தலையாட்டினார்.
“அண்டி ஒரு அலுவலாய் வெளிநாடு போகிறேன். திரும்ப வரும் வரையும் இருவரும் உங்களைப் பார்க்க வர முடியாது. நீங்கள் நல்ல பிள்ளையாய் சாப்பிட்டு மருந்து குடிப்பீர்களாம்”
“முன்பு போல் இடையில் வர முடியாதா?” கவலையாய் கேட்ட குரலில் உருகிய மனதை இறுக்கிக் கொண்டு மறுப்பாய் குறுக்கே தலையசைத்தாள் யதீந்திரா.
சற்று நேரம் அவர்களுடன் இருந்து சிரித்துப் பேசியவரை ஜெகதீஸ் வந்து அழைத்துச் சென்றுவிட்டான். அவளும் தடுக்கவில்லை. கம்பனி மனேஜர்கள் சில பேரை வீட்டுக்கே வரவழைத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றிக் கட்டளையிட்டாள்.
டிரைவர் சண்முகம் அங்கிளை வரச் சொல்லி ஜானகியை அனுப்பி வைத்தாள்.
வந்தவரிடம் “அங்கிள் நான் சிலோன் போறேன், கொஞ்ச நாளைக்கு ஜானகி இங்கே வரக் கூடாது. அப்படி மீறி வந்தால்” ஓர் கணம் நிறுத்தி ஜானகியைப் பார்த்தவாறே சொன்னாள் “காலை முறித்து விடுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்”.
“வேண்டாம் வேண்டாம் நான் வரல, எனக்கு இருப்பதே இரண்டே இரண்டு கால்” அவசரமாய் சொன்னாள் ஜானகி.
அவள் பயத்திருக்கும் காரணம் இருந்தது. ஒன்று அவள் இங்கு வருவதில் சண்முகம் அங்கிளுக்கு விருப்பமேயில்லை. இரண்டு, யதி என்ன சொன்னாலும் கேட்டுக் கேள்வியில்லாமல் அங்கிள் செய்வார். ஏற்கனவே ஒரு அனுபவம் இருந்தது.
அவர்களும் சென்ற பின்னர் இரண்டு மூன்று பிரைவேட் நம்பருக்கு கோல் எடுத்தாள்.
“ஜாக்கிரதை எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது வித்தியாசமான நடவடிக்கை போல் தெரிந்தால் உடனே கோல் எடுங்கள்” என்று வைக்கவும் இன்னொரு ப்ரைவேட் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
காதுக்கு கொடுக்க “நாளை தூக்குவதற்கு திட்டம்” என்றது ஆண் குரல்.
“அவர்களை எச்சரித்து விட்டாயா?”
“இன்னும் இல்ல, கோல் எடுக்கவா?”
“வேண்டாம் விடு நான் பார்த்துக் கொள்கிறேன்”
இன்னொரு அழைப்பை மேற் கொண்டு “ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்ய வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்கு படுக்கையை விட்டு அசையாத மாதிரி. இன்னும் பத்து நிமிடத்தில் உங்கள் அக்கௌன்ட்க்கு காசு விழும்” என்றாள்.
தொலைபேசி அழைப்புகளை பேசி முடித்தவள் சொரூபன் வந்த போது மருந்தின் வீரியத்தில் அப்படியே சோபாவில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.