மொழி - 14
‘அவன் கண் முன்னே தான் கதைத்தாள். ஆனால் அவளின் சிம் கார்டில் இருந்து உள்வந்த வெளிச்சென்ற எந்த அழைப்பிலும் அந்த இலக்கம் இல்லை. அப்படியானால் அவனுக்கு தெரியாத இன்னொரு இலக்கம் அவளிடம் இருக்கு. அதை எப்படி கண்டு பிடிப்பது.
இன்று வீட்டுக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்கள் வந்திருந்தது. அனைவரும் தமிழ் நாட்டின் மிகப் பெரிய கம்பெனி ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர்கள். அவளிடம் பணிவுடன் நடந்ததை வீடியோவாக எடுத்து அனுப்பியிருந்தான் அவனின் ஆள்’
இதுநாள் வரை இப்படி வெளிபடையாக சந்தித்ததில்லை என்ற தகவலுடன்.
யோசனையுடன் வீட்டிற்குள் வந்த போது மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. நடுஹாலில் சோபாவில் உறங்கியவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். சாதரணமாய் கீழேயே வர மாட்டாள். அவள் முன்னிருந்த கோப்புகளை கண்டவன் நெற்றி சுருங்க அருகே அமர்ந்து அவற்றை ஆராய்ந்தான் சொரூபன்.
மனோகரி அண்ட் கோ என்ற கம்பனி தொடர்பான கோப்புகள், மின்சார பொருட்களை விற்பனை செய்வதுதான் அந்தக் கம்பனியின் பிரதான தொழில், தமிழ்நாடு முழுவதும் கிளைகள் உண்டு. இப்போது சில மின்சார பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன. அவனுக்கு அந்தக் கம்பனியை நன்றாகவே தெரியும். இவர்கள்தான் இந்தியாவில் கால் பதிக்க முழுக் காரணம். ஒப்பந்தத்தில் ஈடுபட முன்னர் விசாரித்த போது சேர்மேன் லேடி என்றும் கம்பனியை நடத்துவது இளங்கோ என்ற பிரபல சட்டத்தரணியின் மகன் இளையமாறன் என்றும் அறிந்திருந்தான். சிலவேளைகளில் சற்று வயதான பெண்மணிகள் இதுபோல் செய்வதுண்டு. எனவே பெரிதாய் அதை பற்றி கவலைப்படவில்லை. அதோடு அப்பா மகன் இருவர் நடத்தையும் அப்பழுக்கின்றி இருக்கவே மேற்கொண்டு தீவிரமாய் விசாரிக்கவில்லை.
இன்றோ சேர்மேன் என்ற இடத்தில் அவள் கையெழுத்து. உதட்டை கடித்தவாறே அருகே உறங்கியவளைப் பார்த்தவன் உடல் நடுங்கியது.
தன்னை நிதானித்து அவளை எழுப்ப சென்றவன் கைகள் அந்தரத்தில் நின்றது. குழந்தை போல் லேசாய் வாய் திறந்து உறங்குபவளை பார்க்க எழுப்ப மனமில்லை.
“எப்படி நித்திர கொள்ளுது பார், வீணி வடியாததுதான் குறை” என்றவன் கைகளில் தூக்கிக் கொண்டான்.
அலுங்காமல் மெத்தையில் படுக்க விட்டு விலக முயல அவனோடு ஒன்றினாள். ஏற்கனவே ஒரு கிழமைக்கும் மேல் அவள் நெருக்கமின்றி தவித்தவனுக்கு நெருப்பை தூண்டி விட்டது போலிருந்தது. அவள் கழுத்தில் முகம் புதைக்க உறக்கத்தில் அவனோடு இழைந்தவாறே முனகினாள் “ஞானா”.
வேகமாய் விலகி நேரே குளியலறை சென்று உடை கூட மாற்றாமல் ஷவரின் கீழ் நின்றான். இபோதெல்லாம் காமம் கடந்து அவளைத் தேடுவது புரிந்தே இருந்தது. அவளின் ‘ஞானா’ என்ற அழைப்பு அவனை ஏதோதோ செய்தது. அழுத்தமாய் கேசத்தை கோதினான்.
கடைசி கோப்பையும் சரி பார்த்து சில இடங்களில் ஸ்டிக்கர் நோட் மூலம் குறிப்பை எழுதி ஒட்டி வைத்து விட்டு கையை உயர்த்தி சோம்பல் முறித்தான். வரும் போது வெள்ளியாய் இருந்த வானம் இப்பொது சிவந்து அந்தி வானமாய் மாறியிருந்தது. பல்கனியில் இருந்தவாறே திரும்பிப் பார்த்தான். யதிந்தீரா இன்னும் உறக்கத்தில் இருந்தாள். இத்தனை நேரம் சரி பார்த்த அவள் கோப்புகளை கட்டிலின் அருகே உள்ள மேசையில் வைத்தவன் கீழே இறங்கிச் சென்றான்.
சுத்தமாய் இருந்த கிச்சின் கூறியது மத்தியானம் சமைக்கவேயில்லை. “டேய் உனக்கு வாச்சது சுத்த சோம்பேறி போல இருக்கே. தனக்கு கூட சமைக்காம இருந்திருக்கு” புலம்பியவாறே சமையலை செய்ய ஆரம்பித்தான்.
வீட்டை சுத்தபடுத்த மட்டுமே ஆட்களை வைத்திருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் வந்து சுத்தபடுத்தி விட்டு சென்று விட வேண்டும். இருவரும் எப்போது எங்கே சாப்பிடுவார்கள் என்றே தெரியாது. வேண்டுமானால் தாங்களே சமைத்து கொள்வோம் என்று சமையலுக்கு ஆள் வைக்கவில்லை.
அவன் கீழே சென்று சற்று நேரம் கழித்து புரண்டு படுத்தாள் யதீந்திரா. கடைசியாய் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த நினைவு வர சட்டென எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க படுகையில் இருப்பது புரிந்தது. ‘எப்படி’ தலையை சொறிந்தவாறே யோசிக்க கண்ணில் பட்டது சொரூபனின் பர்ஸ். எப்போதும் அலுவலகத்தால் வந்தால் கைகடிகாரம், பேர்ஸ், கையில் அணியும் பஞ்சலோக காப்பு என மூன்றையும் ட்றேசிங் டேபிள் அருகே அழகாய் கழட்டி வைத்து விடுவான்.
“அவன்தான் கொண்டு வந்து விட்டிருக்கான் போலேயே” முணுமுணுத்தவாறே ஃபரஸ் ஆகி வந்துதான் மேசை மீது இருந்த கோப்பைப் பார்த்தாள். அதிலிருந்த குறிப்புகளைப் பார்த்து விட்டு “பேசாம சொரூபனிடமே எல்லா பைலையும் கொடுத்து விடுவோமா? இவ்வளவு அழகாய் பார்த்து இருக்கிறான். இன்று ஏதோ பார்த்தான். ஒவ்வொரு நாளுமா பார்ப்பான்” என்ற கேள்விக்கு திருட்டுத்தனமாய் கூறியது மூளை ‘பேசாம இன்று போல் வைச்சிட்டு தூங்கிடு. அவன் பார்த்து வைப்பான்’.
கீழே வர புட்டை அவித்து வைத்து விட்டு கத்தரிக்காய், உருளைகிழங்கு, வெங்காயம் என்று தனித்தனியாய் வெட்டி வைத்து பொரித்துக் கொண்டிருந்தான். தயக்கத்துடனேயே வந்தவள் புட்டை பார்த்து நாக்கை சப்புக் கொட்டினாள்.
“குழாய் புட்டா” ஆர்வமாய் கேட்டவாறே அருகே இருந்த பிளாட்டில் ஏறி அமர்ந்தவளை முறைத்தான் சொரூபன்.
“வாம்மா பரதேவதை, இதுக்கு பெயர்தான் கிச்சின் இங்கே சமைப்பார்கள் தெரியுமா?” கிண்டலாய் கேட்டான். அவள் கையை பிசைந்து கொண்டு இருக்க “மத்தியாணம் என்ன சாப்பிட்டாய்?” சிடுசிடுத்தான்.
“நிஷாந்த அண்ணா பால் சோறை வெட்டி வைத்திருந்தார். அதுவும் மாசி கருவாட்டு சம்பலும் சாப்பிட்டேன்” மெலிந்த குரலில் சொல்லவே அவன் சினம் மட்டுப்பட்டது.
“ஏன் சமைக்க தெரியாதா?” ‘என் வீட்டு கிச்சினில் சமைக்க தயங்குகிறாளா?’ என்ற ஈகோ தலை தூக்க நக்கலாய் கேட்டான்.
‘இல்லை’ என்று பாவமாய் தலையாட்ட சிரிப்பே வந்துவிட்டது அவனுக்கு.
“உண்மையாவே சமைக்க தெரியாதா?” கேட்டவாறே புட்டை தட்டில் போட்டு கூடவே பொறித்த வகையாறவையும் வைத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவள் கண்கள் லேசாய் பனித்தது.
காரணம் புரிய “ஏன் உன் மாமா உன்னை கவனிக்கவில்லையா?” விசாரித்தான்.
அவள் உதடுகளில் கசந்த முறுவல் வழிந்தது.
பதினான்கு வயது வரை அவள் இளவரசி. அவள் கண்ணசைத்தால் உலகையே அவள் காலடியில் வைக்க தயாராய் இருந்தனர் அவள் பெற்றோர், மனோகரி சிவகுமார் தம்பதிகள். ஒரு நாள் அவர்கள் விபத்தில் இறந்து விட அவள் உலகமே தலை கீழாய் மாறிவிட்டது.
தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
இந்தியா வருவதற்கு முன் அவளைப் பற்றி விசாரித்த போதுதான் அவனுக்கும் தெரிய வந்தது. பதினான்கு வயதில் அவள் அம்மா அப்பாவும் இறந்துவிட்டனர் என்று. அவன் மனதினோரம் ஒளிந்திருந்த சாத்தான் அவளுக்குத் தேவைதான் என்று கொக்கலித்த போதும் வலிக்கதான் செய்தது.
பின் தலையை தாங்கி நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து நெற்றியோடு நெற்றி முட்ட அவள் கண்ணில் தேங்கி நின்ற கண்ணீர் கோடாய் இறங்கியது.
“ஷ் அழாதே” என்ற அவன் வார்த்தையில் என்னதான் இருந்ததோ பதினைந்து வருடங்களாய் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் கண்ணீராய் வெளிவர தொடங்கவே சத்தமின்றி அவன் தோளில் முகத்தைப் புதைத்து அழுதாள்.
“உன்னட்ட சொல்லதான் வந்தேன் ஆனா நீ...” விக்கலும் விசும்பலுமாய் கோவியவள் முதுகை வருடி ஆறுதல்படுத்தினான். “ஷ் புட்டை வாய்க்குள் வைத்துக் கொண்டு அழாதே விக்கிரும்”
புட்டோடு சேர்த்து தன் துக்கத்தையும் விழுங்கி கொண்டு நிமிர்ந்தாள். கிச்சின் சிங் பைப்பில் முகம் கழுவ அவள் கையில் துவாயைக் கொடுத்தான். அதை வாங்கி அழுந்த முகத்தை துடைத்தவளைப் பார்த்துக் கேட்டான் “யூ ஒகே”.
சங்கடமான புன்னகையுடன் தலையை ஆட்டியவள் அவன் தோளைப் பார்த்து உதட்டைக் கடித்தாள்.
“சாரி”
“எதுக்கு?” புருவத்தை உயர்த்தினான்.
கையிலிருந்த டவலை நனைத்து அவன் தோளில் சிந்தியிருந்த புட்டை தடித்து விடவே கீழ் கண்ணால் பார்த்து சிரித்தான் “பரவாயில்ல விடு”.
“நான் போய் வேறு டிசேர்ட் எடுத்திட்டு வாரேன்” அவன் மறுப்பதற்கு முன் சிட்டாய் பறந்திருந்தாள்.
அலுமாரியில் இருந்து டீசேர்ட்டை எடுத்தவள் சிறிது நேரம் நின்று தன் உணர்வுகளை கட்டுபடுத்தியே பின்னரே கீழே வந்தாள். முகம் பழையபடி அமைதியாய் இருந்தது. அவளைப் பார்த்தவாறே டீசேர்ட்டை மாற்ற முகத்தை திருப்பினாள்.
“என்னடி நானும் பார்த்திட்டே இருக்கிறான் ரெம்பத்தான் பிகு பண்ணுற. என்னை இப்படி பார்த்ததே இல்லையா?” அவள் இருபுறமும் கையூன்றி கண்களை சுருக்கிக் கேட்கவே திகைத்து விழித்தாள் யதீந்திரா.
‘வழமையாய் மாடியில் வைத்து தான் இந்த வேலையெல்லாம் செய்வான். இன்று என்ன இங்கே வைத்து யாரும் வந்தாலும்’ மனதின் கேள்விக்கு பதிலின்றி அவனைத் தள்ளிவிட்டாள் “விலகுங்கள் அண்ணா வந்தாலும்”.
அவள் திணறலை ரசித்தவன் வேண்டுமென்றே இன்னும் நெருங்கி “நிஷாந்த லண்டன் போய்ட்டான். வர ஐந்து நாளாகும்” என்றான்
“ச்சு அவரில்லை மாறன் அண்ணா வருவார்”
“மாறன்?” கேள்வியாய் பார்த்தான்.
“வரும் போது இன்றடுயுஸ் பண்ணுறேன்”
இடையை பிடித்து அடுப்பருகில் இருத்தியவன் அடுப்பில் ஒரு கண்ணை வைத்தவாறே புட்டை ஊட்டிவிட்டான். கடைசி வாயை கன்னம் நிறைய அதக்கியவாறே நிமிர்ந்தவள் கண்ணில் விழுந்தான் இளமாறன்.
“ண்ணா” வாய்க்குள் புட்டுடன் அழைக்க திரும்பிப் பார்த்தான் சொரூபன்.
ஆறடி உயரத்தில் ஒற்றை நாடி சரீரத்துடன் நாற்பது வயது மதிக்கதக்க ஒருவர் நின்றிருந்தார். “ஞான மந்திர சொரூபன் ரைட்” அவன் முழுப் பெயர் சொல்லி கையை நீட்டவே புன்னகைத்தான்.
தன் கையைப் ஒருதரம் பார்த்து விட்டு “சொறி, கை... வன் மினிட்” என்று கையை கழுவி சிறு டவலில் துடைத்து விட்டு கை குலுக்கினான்.
“யெஸ், ஞான மந்திர சொரூபன், நீங்கள் இளங்கோ இளமாறன் ரைட்”
“நைஸ் டு மீட் யூ” சொரூபனிடம் பேசினாலும் பார்வை யதீந்திரா மீதே இருந்தது. அவனை தாண்டி சென்று அவள் தலையை ஆதுரமாய் வருடிக் கேட்டார் “ஆர் யூ ஹப்பி?”.
கால்களை ஆட்டியவாறே கண்ணை மூடித் திறந்தாள்.
“வந்தவரை வரவேற்காமல் என்ன பழக்கமிது?” அவளிடம் லேசாய் கடிந்தவன் “டீ குடிக்கிறீர்களா? சாப்பிட்டீர்களா? புட்டு இருக்கு என் கை வண்ணம்தான்” உபசரித்தான்.
“ம்ஹூம், அழைப்பது அண்ணா என்றாலும் மகள் போல தான். இப்படி சந்தோசமாய் இருப்பதே போதும். கொஞ்ச நேரம் கழித்து டீ குடிப்போம். வைப் பார்த்திட்டு இருப்பா சோ நைட் அதிகம் வெளியில் சாப்பிடுவதில்லை” சொரூபனுக்கு பதிலளித்தவர் அவளிடம் திரும்பிக் கேட்டார்
“அந்த பைல்ஸ் எல்லாம் பார்த்து சைன் பண்ணிட்டியா?”.
“ம்ம் எல்லாம் ரெடி” உற்சாகமாய் சொன்னவள் மாடிப் படியில் துள்ளிக் கொண்டு சென்றாள்.
அவளிடமிருந்து கண்ணெடுக்காது கூறினார் “ரெம்ப தங்க்ஸ் சொரூபன். இவளை இப்படி பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை”.
சொரூபன் கேள்வியாய் நோக்க “அவள் அம்மா அப்பா இறந்த பின் ஒரு மாதிரி இறுகிப் போய்... பதினான்கு வயதில் இருபத்தி ஐந்து வயதின் முதிர்ச்சியுடன் நடந்தாள். சந்தோசம் துக்கம் எதுவுமின்றி” அடைத்திருந்த மூச்சைவிட்டார்.
புருவ சுழிப்புடன் பார்த்திருந்த சொரூபன் எதையோ கேட்பதற்கு வாய் எடுக்க அவள் கோப்புகளுடன் இறங்கி வரவே அமைதியாகிவிட்டான்.
கோப்புகளை அவரிடம் கொடுத்து விட்டு அருகே அமர்ந்திருந்த சொரூபனை பார்த்து வாயசைத்தாள் “தங்க்ஸ்”. நெஞ்சில் கை வைத்து லேசாய் தலை சாய்த்து பதிலுக்கு வாயசைத்தான் “ஒல்வேய்ஸ் வெல்கம்”.
கோப்புகளை பார்வையிட்டவர் “இதையெல்லாம் நீயாம்மா பார்த்தாய்?” ஆச்சரியத்துடன் கேட்க வேகமாய் தலையாட்டி வைத்தாள்.
சொரூபன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க மாறன் “ஹ்ம்ம் அப்ப மீதி பைலை நாளை கொண்டு வருகிறேன்” சிரிக்காமல் கூறினார்.
சொரூபனைப் பார்க்க அவனோ ‘பிசி’ வாயசைத்தான்.
“நாளை வேண்டாம், அடுத்த நாள்”
மீண்டும் ‘பிசி’ வாயசைத்தான்.
“அதற்கு அடுத்த நாள்”
‘பிசி’
“சொரூபன்...” அதட்டினாள்.
“ஒகே ஒகே” சிரித்தவாறே கையை தூக்கி சரண்டர் ஆனவன் “நாளையே அனுப்பிவிடுங்கள். ஆனால் இரவுதான் பார்க்க முடியும் சோ அடுத்த நாள் காலைதான்..” என்று இழுக்கவே “நோ ப்ரோப்லேம்” என்றார் மாறன்.
“அதில் சில ஏலேக்ட்ரோனிக் ஐட்டம் கொஞ்சம் ஏமாற்று வேலை போல் இருக்கு அந்த கம்பனியை கொஞ்சம் கவனிக்க ஆட்கள் வையுங்கள்” இருவரும் வேலை தொடர்பாய் உரையாட போனில் கன்டி கிராஷ் எடுத்து வைத்து விளையாட தொடங்கினாள்.
சொரூபன் தடுத்து ஏதோ சொல்லப் போக வேண்டாமென்று கண்ணைக் காட்டிவிட்டார் மாறன்.
அவர் விடை பெறவே அதே நேரம் வந்த ஜெகதீசின் கைகளில் இருந்த கோப்புகளை வாங்கி அவள் கையில் கொடுத்து “முக்கியமான கோப்புகள் மேலே வைத்து விடு” என்று அனுப்பி வைத்தான்.
அவருடன் காரை நோக்கி நடந்த சொரூபன் கேட்டான் “சொல்லுங்கள்”
“ஹ்ம்ம்”
“யதியை பற்றி என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறீர்கள் சொல்லுங்கள் என்றேன்”
“கெட்டிக்காரன்தான், என்னுடன் சிறிது தூரம் நடக்க முடியுமா?” என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தாலும் மறுக்கவில்லை.
“அண்ணா என்றாலும் மகள் போல என்றேனே பின் உங்களுடனான உறவைத் தெரிந்தும் ஏன் தடுக்கவில்லை. இது தானே உங்கள் மனதில் உள்ள கேள்வி” சொரூபனை பார்த்து கேட்க எந்த உணர்வையும் காட்டாத முகத்துடன் தலையசைத்தான்.
“எங்கள் குடும்பமே நொடித்து போய் வீதியில் நின்ற தருணம் யதீந்திராவின் அப்பா சிவகுமார் சார் தான் எங்களுக்கு உதவி செய்தார். அவரில்லாவிட்டால் குடும்பத்தோடு இறந்திருப்போம்” சில கணங்கள் அமைதி காத்தவர் கூறினார் “எல்லாம் நன்றாய் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாளிரவு வீட்டிற்கு வந்த சிவகுமார் சார் சொத்துக்கள் அனைத்தையும் யதீந்திராவின் கணவனுக்கு அல்லது அவள் குழந்தைக்கு தான் என்றும் அதற்கு முன் அவளுக்கு ஏதாவது நடந்தால் அனைத்து சொத்துகளும் ட்ரஷ்டிக்கு என்றும் எழுத சொல்லிவிட்டார்.”
சொரூபனின் உடல் இறுக்கம் வெளிப்படையாக தெரியவே “அவள் மீது நம்பிக்கையில்லாமல் அப்படி எழுதவில்லை. அவள் உயிரை பாதுகாக்கவே அப்படி எழுதினார்” ஒரு பெருமூச்சை வெளியேற்றி தொடர்ந்தார்.
“இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ தெரியல. என் அப்பாவிடம் அங்கிள் சொன்ன வார்த்தை ‘நிச்சயமாய் சொரூபன் அவளைப் பார்த்துக் கொள்வான். சமயம் வரும் போது இந்த டீட் அவனுக்கு உதவியாய் இருக்கும்’ என்றார்.”
சிலை போல் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்ற சொரூபனை பார்த்தவாறே கூறினார்.
“அடுத்த நாளே அதை பதிவும் செய்துவிட்டார். இது நடந்து ஒரு மாதத்திற்குள் மனோகரி அண்டி சார் இருவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர்”.
மனமோ அன்று அவன் குழந்தையை சுமப்பதாக அவள் மாமாவிடம் சாவாலிட்டதை நினைவுபடுத்த அதை ஓரமாய் ஒதுக்கிக் கேட்டான் “அது விபத்து தானா?”
“நிச்சயமாய் இல்ல. நானும் அப்பாவும் இருபது நாள் வேலையாய் டெல்லி போயிருந்த நேரம். தகவல் வரவே எல்லாம் முடிந்து பத்து நாளாகியிருந்தது. திரும்பி வந்த போது” நிறுத்தி தொண்டையில் அடைத்ததை விழுங்கினார். “யதீந்திரா அவளாகவே இல்ல. குழந்தைதனம் தொலைந்து இறுகிப் போயிருந்தாள். சொல்வது எல்லாம் செய்தாள், படித்தாள், கம்பனியை நடத்தினாள். ஆனால் மனதளவில் ஒரு மாதிரி இறுகி சந்தோசம் துக்கம் எதுவுமில்லை. யோகேஸ்வரனுக்கு கூட இப்படி ஒரு நிலை வரக் கூடாது. இந்த பதினைந்து வருடத்தில் சிரித்து பார்த்ததே கடந்த ஆறு மாதமாய்தான்.”
இருட்டியிருந்த ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவர் “இந்த வாழ்கை முறையின் சரி பிழை பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால் இதன் பிறகாவது அவள் ஒரு சராசரி பெண்ணாய் வாழ்ந்தால் போதும். எஸ் இன்று போல் சந்தோசமாய் இருப்பாள் என்றால் எனக்கு இந்த உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றிக் கவலையில்ல. அவள் சந்தோசம்தான் எனக்கு முக்கியம். என்னால் முடிந்தால் அதற்காக உங்களை மிரட்டக் கூட தயங்க மாட்டேன். ஆனால் உங்களை ஒன்று கேட்கலாமா?” கேள்வியில் முடித்தார்.
வியப்புடன் பார்த்தாலும் “கேளுங்கள்” என்றான்.
“உங்களுக்கும் அவளைப் பிடித்துதான் இருக்கு. நீங்களே அவளை கல்யாணம் செய்து கொள்ளுங்களேன். இந்த கம்பனியையும் அங்கிளின் விருப்பபடி உங்கள் கையில் கொடுத்து விட்டு நிம்மதியாய் இருப்பேன்”
போகேடினுள் கையை விட்டு ஆழ்ந்த யோசனையில் நின்றவன் கேட்டான் “அந்த கார் பார்ட்ஸ் தயாரிக்கும் ஒப்பந்தம்... நான் என்று தெரிந்தே...” முழுதாய் கேட்கமால் நிறுத்தவே “ஹ்ம்ம் அது யதீந்திராவின் ஏற்பாடுதான்” அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்தினார்.
மீண்டும் அதே இறுக்கத்துடன் கேட்டான் “அந்த பதினைந்து நாளில் என்னதான் நடந்தது? உங்களிடம் ஏதாவது சொன்னாளா?”
“எத்தனையோ தடவை கேட்டுவிட்டேன் வாயே திறக்கிறாள் இல்ல”
“அந்த நேரம் அவளுடன் இருந்தது யார்?”
“அவள் அப்பாவின் நம்பிக்கையான டிரைவர் சண்முகம்”
“இனி நான் பார்த்துக் கொள்கிறேன்” அவர் கண்களைப் பார்த்துக் கூறினான்.