அத்தியாயம் 1
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே
கௌரி நாராயணி நமோஸ்துதே!!
கெட்டி மேளம் கெட்டி மேளம்...............
"ஏய் என்னைடி உன்னைய பாத்திரம் கழுவ சொன்னா நீ என்னடானா இங்க நின்னுக்கிட்டு பகல் கனவு கண்டுட்டு இருக்க"
"இதோ இப்ப பண்ணிறேன் சித்தி"
"எப்ப பாரு இதையவே சொல்லு. நானும் உன்னைய பாத்துட்டே தான் இருக்கேன் உன் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை."
"இல்ல சித்தி நான் நல்லாத்தான் இருக்கேன் உங்களுக்குத்தான் அப்படி தோணுதுன்னு நினைக்குறேன்" என கூறினாள் அஞ்சனா. கூறிய மறுநிமிடம் அவளது கன்னம் பழுத்தது. சித்தீ............ என்றாள் அழுதபடியே. இது அவளுடைய வாழ்வில் வழக்கமாக போய்விட்டது. இந்த அடிக்கும், உதைக்கும் 13 வருடமாக அவளை நன்கு பழக்க படுத்தி கொண்டாள். அதுவும் அந்த சித்தி என்னும் அரக்கிக்கு சில சமயம் வேறெங்காவது கோபம் வந்தால் அதை யார் மீது காட்டுவதென்றே தெரியாமல் அவள் மீதே காட்டுவாள் அதில் சில தீ காயங்களும் சங்கமிக்கும். இத்தனை சித்திரவதைகளும் அனுபவிப்பதற்கு ஒரே காரணம் அவள் மாற்றாந்தாய் மகள் என்பதே. பொதுவாக நிறைய கதைகளிலும், ஏன் நிஜத்திலும் நடக்கும் நிகழ்வுதான் நம் கதாநாயகி அஞ்சனா அனுபவித்து கொண்டிருக்கிறாள்.
21 வயது நிரம்பிய அழகிய பதுமை. பார்க்க பார்க்க இன்னும் கொஞ்ச நேரம் பாத்துகிட்டே இருக்கலாம் என தோன்றும். மொழிகள் தேவை இல்லை அவளுக்கு,அந்த அளவுக்கு மனதில் உள்ளதை வெளிப்படையாக காட்டும் அவளது கண்கள். பட்டு போன்ற கன்னங்கள். சங்கு போன்ற கழுத்து. மகனை பெற்ற தாய்மார்கள் பார்த்தால் அவளை கொத்தி கொண்டு போய் விடுவார்கள். சாந்த சொரூபிணியாய் இருப்பாள். போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு. நிறுத்திக்கறேங்க, நிறுத்துக்குறேன் வாசகர்களே !
அஞ்சனாவிற்கு 8 வயதாக இருக்கும் போது அவளது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அவரது அப்பா ஞானவேல்தான் அவளை பார்த்துக் கொண்டார். அவர் ஒருத்தரே அஞ்சனாவை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் நன்றாக இருந்திருப்பாள். பாவம் விதி யாரை விட்டது. அவளையும் விட்டு வைக்கவில்லை. அவள் அப்பா ஒரு எலக்ட்ரீசியன். கவர்ன்மெண்ட் காண்ட்ராக்ட் எடுத்து செய்யும் வேளையில் பணி புரிகிறார். அதனால் நேரம் கழித்துதான் வீட்டிற்கே வருவார். சில சமயங்களில் வராமல் போவதும் உண்டு. அதனால் சுற்றி இருக்கும் உறவினர்கள் ஏப்பா ஞானவேலு நீ பாட்டுக்கு வேலை வேலைன்னு போய்யற பிள்ளையை யார் பாத்துக்கறது அது வீட்டுலயே தனியாவே எத்தனை நாளைக்குத்தான் இருக்கும். பொம்பளை புள்ளப்பா ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது பேசாம நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ என கூற பதிலுக்கு யோசித்து பார்த்துவிட்டு சரி என கூறினார் ஞானவேல்.
ஞானவேலுவுக்கும், திலகவதிக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி சில நாட்கள் திலகவதி அஞ்சனாவிடம் பாசமாகத்தான் இருந்தாள். பிறகு அவளுக்கென்று ஒரு குழந்தை பிறக்க அந்த பாசம் அடியோடு போனது. எல்லா வேலைகளையும் அவளிடமே வாங்கினாள். படிப்பதற்குக் கூட நேரம் கொடுக்கவில்லை அவள் சித்தி. ஆனால் அவளது அப்பா இருந்தால் மட்டும் இந்த உலகத்துலயே அன்பான தாய் நான் ஒருத்திதான் என்னும் அளவிற்கு அவளை பார்த்து கொள்வாள்.
ஒரு நாள் சித்தி தன்னை கொடுமை செய்வதை அப்பாவிடம் சொல்ல வேண்டும் என நினைத்தாள். சொல்லலாம் என வாயெடுத்தால் பேச்சை வேறு கோணத்திற்கு திசை திருப்பிவிடுவாள் அவளது சித்தி. வம்படியாக ஒரு நாள் அஞ்சனாவின் முடியை வேரோடு பிடித்து,
"அடியே ! உனக்கு என்ன அவ்வளவு குளிர்விட்டு போச்சா ? நான் உனக்கு பண்றது எல்லாத்தையும் உன் அப்பண்ட சொல்ல போறீயா? கொன்னுடுவ உன்ன. என்னைய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ம்..... நீ மட்டும் அந்த ஆளுகிட்ட உண்மைய சொன்ன அப்புறம் அவனுக்கு சாப்புடுற சாப்பாட்டுல விஷத்தை வச்சு கொன்னுருவேன் ஞாபகம் வச்சுக்கோ. உங்க அப்பன் உயிரோட இருக்குறது உன் கையிலதான் இருக்கு." அஞ்சனாவும் சித்தி சொன்ன பேச்சை கேட்டு ஒரு நிமிடம் பயந்துதான் போனாள் அதனால் இதை பற்றி அப்பாவிடமும் சரி, சுற்றி இருக்கும் நபர்களிடமும் சரி அவள் வெளியே சொல்லவில்லை.
நாட்கள் வெகு வேகமாக சென்றது. கால போக்கில் வயதின் காரணமாக அஞ்சனாவின் தந்தை இறந்து விட திலகவதிக்கு அவளை கொடுமை படுத்துவது இன்னும் வசதியாய் போய்விட்டது. தந்தை இறந்தபின் அவருக்கு என்று இருக்கு ஒரே சொத்து அந்த வீடு மட்டும் தான். அந்த வீடு எப்படியும் 80 லட்சம் வரை போகும் அதை அஞ்சனாவின் பேரில் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார். சொத்து இப்படி அவளது பேரில் எழுதி வைத்து விட்டதை நினைத்து திலகவதிக்கு கோபம் கோபமாக வந்தது. ச்சே.... இந்த மனுஷனுக்கு திமிர பாத்தியா ? மூத்ததாரத்து புள்ள மேலதான் பாசம் ஜாஸ்தி. போனதுதான் போனான் இந்த சொத்தை என் பையன் பேருக்கு எழுதி வச்சுட்டு போயிருக்க கூடாதா ? கஞ்சபிசுநாரி புருஷன் என்றும் பாராமல் மட்டு மரியாதை இல்லாமல் பேசினாள்.
திலகவதிக்கு இரண்டு குழந்தைகள். முதலில் ஒரு பெண் பெயர் சுலோச்சனா. இரண்டாவது ஆண் தருண்குமார். இரண்டு பேரையும் நல்ல கான்வென்ட் ஸ்கூலில் படிக்க வைத்தாள். ஆனால் இரண்டும் படிக்காமல் மக்கு பண்டாரமாகவே, ஹும்... இதூங்களுக்கு இவ்ளோதான் என நினைத்தவள் திட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை மாறாக பிள்ளைகளை இன்னும் அதிக பாசத்துடன் வளர்த்தாள். சுலோச்சனா அப்படியே அவளது அம்மாவின் குணம். தருணும் அதே குணம் கொண்டு வளர்ந்தான். எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவான். இவர்கள் மூவரும் அஞ்சனாவை கொஞ்ச நஞ்ச கொடுமை படுத்தவில்லை. வீட்டின் எல்லா வேலைகளையும் செய்வது அவர்களையும் நன்றாக கவனிப்பது என சகல வேலைகள் அனைத்தையும் அவள்தான் செய்வாள். இந்த சூழலுக்கிடையில் எப்படியோ அவளும் முட்டி மோதி பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தாள். அதில் நல்ல மார்க்கும் எடுத்தாள். சித்தி பிள்ளைகளை போல அவள் கான்வென்ட் ஸ்கூலிலெல்லாம் படிக்கவில்லை சாதரண கவர்ன்மெண்ட் ஸ்கூலில்தான் படித்தாள். அதனால் படிப்பு செலவு என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவளுக்கு பணம் தேவை படவில்லை.
சித்தி கொடுக்கும் காய்கறி, மளிகை சாமான் பணத்தில் மிச்சம் பிடித்து அதில் அவளுக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு, புத்தகங்கள் என வாங்கி கொள்வாள். +2 முடித்ததற்கப்பறம் மேற்கொண்டு படிக்க அவளது சித்தியிடம் உதவி கேட்டாள் உனக்கு சாப்பாடு போடவே இங்க நாக்கு தள்ளுது இதுல மேற்கொண்டு படிக்கவேற போறீயா என கூறியவள் சிறிது நேரம் யோசித்து விட்டு வீட்டை அவளது பெயருக்கு மாற்ற ஒரு தீர்க்கமான முடிவெடுத்தாள்.
"அஞ்சனா நான் உன்னை படிக்க வைக்கிறேன் உன் படிப்பு செலவுக்கு ஆகுற அனைத்து செலவையும் நான் பார்த்து கொள்கிறேன். அதுக்கு பதிலா நீ ஒன்னு செஞ்சாகனும்."
"என்ன சித்தி ?" என வினவினாள்.
"உங்க அப்பா போகும் போது இந்த வீட்டை உன் பேருல எழுதி வச்சுட்டு போயிட்டாரு அத நீ என் பேருக்கு மாத்தி கொடுக்கணும்."
இதை கேட்டவள் ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள். எனக்குன்னு அப்பா இதைத்தான் விட்டுட்டு போயிருக்காரு அதை போய் கேக்குறாளே. என்ன பண்றது கொடுத்துதான் ஆகணும் வேறு வழியில்லை அப்பத்தான் என்னைய மேற்கொண்டு படிக்க சம்மதிப்பா இல்ல முடியாதுனு சொன்னா சாமி ஆடிருவா, தினம் தினம் என்னைய ரொம்ப டார்ச்சல் பண்ண ஆரம்பிச்சுருவா என நினைத்தவள் சரி என கூறி அவள் நீட்டிய பத்திரத்தில் கையெழுத்து இட்டாள். சிறு பெண்ணல்லவா பாவம் ஏமாற்றி விட்டாள் அந்த ராட்சசி. அஞ்சனாவிற்கு தெரியாது 18 வயது பூர்த்தி ஆன பிறகுதான் அவளுக்கு இருக்கும் சொத்தை யார் பேருக்கு வேண்டுமானாலும் எழுதி தரலாம் அது மட்டுமல்லாது அவள் நினைத்திருந்தால் என் வீடு, என் சொத்து இதில் யார் இருக்க வேண்டும் யார் இருக்க கூடாது என நான்தான் முடிவெடுக்க வேண்டும் அதனால் நீங்க இந்த வீட்டை விட்டு வெளியே போகளாம் எனபதையும் அவள் அறிந்திருக்கவில்லை.
சொத்துஎழுதி கொடுத்த பிறகு சித்தி இந்தாங்க அப்ளிகேஷன் இதுல சைன் பண்ணுங்க, அப்புறம் ஒரு இருபதாயிரம் பணம் கட்ட சொல்றாங்க அதையும் கட்டிருங்க சித்தி.
"வாடியம்மா இருபதாயிரம் பணத்துக்கு நான் எங்கே போவேன். அதெல்லாம் தர முடியாது படிச்சு என்னத்த கிழிக்க போற பேசாம வீட்டு வேலைய பாத்துட்டு இங்கயே இரு" என சிடுசிடுவென பேசினாள்.
"ஆனா சித்தி நீங்கதானே சொன்னீங்க சொத்தை எழுதி கொடுத்ததுக்கப்பறமா என்னைய படிக்க வைக்குறீங்கன்னு இப்ப இப்படி சொல்றீங்க?"
"ஆமா சொன்ன யாரு இல்லனு சொன்னா ? ஏண்டி இத்தனை வருஷம் என் கூடவே இருக்குற நான் யாரு ? எப்படி பட்டவன்னு கூடவா தெரியாம இருப்ப லூசு. நான் உன்கிட்ட சொத்தை எழுதி வாங்குறதுக்காக உன் கிட்ட சும்மா ட்ராமா பண்ணேன் அதைய போய் நம்பிகிட்டு பணத்தை குடுங்கன்னு கேக்குற?"என்றாள் எகத்தாளமாக.
அப்பொழுதுதான் அஞ்சனாவிற்கு புரிந்தது நாம் நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்று இனி இவளிடம் பேசி என்ன பயன் ஹும்.... எல்லாம் என்னைய சொல்லணும். தன் ஆசை நிராசையாக போய்விட்டதே என நொந்தபடியே அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.
சில வருடம் சென்றது. அந்த வீட்டிற்கு திலகவதியின் தம்பி குணசேகரன் வந்தான். பேருதான் குணசேகரன் ஆனால் குணம் கொஞ்சம் கூட இல்லை. சரியான பொம்பளை பொருக்கி. சோம்பேறி வேலை, வெட்டி என எதுக்கும் போக மாட்டான். ஓசி சோறு எங்கே கிடைக்கும் என காத்திருப்பவன்.ஞானவேல் இருந்த வரைக்கும் அந்த வீடு பக்கம் தலை வைத்து கூட படுக்காதவன் அவர் இறந்து விட்டார் என்னும் செய்தி வந்தவுடன் வந்துவிட்டான். அவனுக்கு அஞ்சனாவை பார்த்ததிலிருந்தே அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என கொள்ள ஆசை. அந்த ஆசையை தீர்த்து கொள்ள அவன் எப்படியெல்லாமோ அவளிடம் வம்படி செய்தான். ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் அவன் செய்த செயலுகளுக்கெல்லாம் நெருப்பில் விழுந்த வெட்டுகிளியாய் அவனிடம் துடிதுடித்து போவாள் எப்படியெல்லாமோ அவனிமிருந்து தன் கற்பை காப்பாத்திக்கொண்டு வந்தாள். ஆனால் இப்பொழுது முழுநேர டார்ச்சல் கொடுக்க வந்து விட்டான். இந்த விஷயம் திலகவதிக்கு அரசல் புரசலாக தெரியும். ஆனால் இதை கண்டும் காணாமல் விட்டு விடுவாள்.
ஒரு நாள் சொத்து பத்திரத்தை எடுத்து கொண்டு இதை என் பெயருக்கோ அல்லது என் மகன் பெயருக்கோ மாற்றி கொடுங்கள் என வக்கீலிடம் நீட்டினாள். அது முழுவதும் படித்த பார்த்த அவர்,
"இந்த சொத்தை உங்க பேருக்கு மாத்த முடியாதுமா ?"
"ஏன் சார் அந்த பொண்ணுதான இதுல கையெழுத்து போட்டு கொடுத்திருக்கு"
"கரெக்ட்டுதான் மா ஆனா இதுல கொஞ்சம் வில்லங்கம் இருக்கு."
"என்ன சார் சொல்றீங்க கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க ?"
"இந்த சொத்துல அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் பிறந்து அந்த கணவன் சம்மதமும், அவருடைய கையெழுத்தும், கூடவே அந்த பொண்ணோட கையெழுத்தும் இருந்தா மட்டும்தான் இது செல்லுபடியாகும். அப்புறம் இன்னொரு விஷயம் இதோ இங்க இருக்குற தேதிய பாத்தீங்களா அந்த பொண்ணுகிட்ட நீங்க அவளுக்கு 17 வயசு இருக்கும் போது கையெழுத்து வாங்கிருக்கீங்க அதனால் சுத்தமா செல்லு படியாகாது போயிட்டு வாங்க" என கூறிவிட்டு சென்று விட்டார்.
ஐயோ இப்ப என்ன பண்றது இவளுக்கு நான் எங்க இருந்து மாப்பிள்ளையை தேடுறது அது மட்டுமில்லாம கல்யாணம் பண்ணி வச்சாலும் அந்த மாப்பிள்ளை பையன் நம்ம சொல்லுக்கு கட்டுப்பட்டு கையெழுத்து போட்டு கொடுப்பானா. ஐயோ நினைக்கும் போதே மண்டை குழம்புது.
இவ்வாறாக நினைத்தபடியே வீட்டினை வந்தடைந்தாள். வீட்டின் அருகே வந்ததும்,
"அம்மா அம்மா" என கத்திய படியே சுலோச்சனா வந்தாள்.
"ஏண்டி நான் இங்கதான் இருக்கிறேன் எதுக்கு கத்துற ?"
"ஐயோ அம்மா மாமா வந்துருக்கு ?"
"என்னடி சொல்ற ?"
"ஆமாமா மாமா வந்துருக்கு போய் பாரு" என கூறியவள் அவளது அறையை நோக்கி நடந்தாள்.
ஹாலில் ஒய்யாரமாக அமர்ந்தபடியே டீவியை பார்த்து கொண்டிருந்தான்.
"அக்கா வாக்கா நல்லாருக்கீயா ?"
"ம் நல்லாருக்கேன்டா சேகரா ?" என சோகமாக கூறினாள்.
"என்னச்சுக்கா உன் முகமே சரியில்லையே ?"
"என்னத்த சொல்றது என் தலை விதி கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல" என நொந்த படியே கூறினாள்.
"அக்கா கொஞ்சம் புரியும் படி சொல்லு இப்ப எங்க போன என்னாச்சு ?"
"சொல்றேண்டா" என உரைத்தவள் வக்கீல் சொன்ன அனைத்து விஷயங்களையும் கூறினாள்.
இவையனைத்தையும் கேட்ட குணசேகரன் விஷமத்துடன் சிரித்தான்.
"என்னடா நானே எல்லாம் போச்சேன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடானா இப்படி சிரிக்குற ?"
"உனக்கென்ன இப்ப சொத்து உன் பேருக்கு மாத்தனும் அவ்ளோதான ?"
"ஆமா"
"மாத்திரலாம்"
"எப்படி ?"
"சொல்ற"
தொடுவானம் தொடரும்.