உறக்கத்தில் இருந்து எழுந்த யதி முதலில் தேடியது சொரூபனைதான். அவனைக் காணவில்லை எனவும் முகம் விழுந்துவிட்டது. குளித்து வரவும் கதவில் தட்டி சத்தம் கேட்டது. வெளியே எட்டிப் பார்க்க கண்ணை ஒரு கையால் மூடியவாறே நின்றாள் லக்கி.
சிரித்தவாறே விளையாட்டாய் அவள் தலையில் தட்டி விட்டு குளித்து வந்தாள். லக்கி கொடுத்த தேனீரை வாங்கியவள் கண்கள் அந்த இடத்தையே சல்லடை போட்டது.
லக்கியும் கண்மணியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
மெல்லிய முக சிவப்புடன் கையிலிருந்த தேநீரை நோக்கிக் குனிந்தவள் தடுமாறினாள் “அ அது வந்து”.
“சந்தைக்கு போயிருக்கிறார் வருவார். அவர் வரும் வரை எனக்கு உதவி செய்யுங்கள்” இருவரையும் அழைத்துச் சென்றார்.
“லக்கி எங்கே”
“அவள் சந்தைக்கு போட்டாள் மாமி”
அவளின் மாமி என்ற அழைப்பில் யதிக்கு சிரிப்பு வந்தது.
“ஏன் திடிரென்று சந்தைக்கு?” வந்து இத்தனை நாளில் விடியும் முன் சந்தைக்கு சென்று பார்க்காததால் ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“அது நாளைக்கு” என்று லக்கி தொடங்கவே அவளை இடைமறித்தார் கண்மணி “அது நாளைக்கு நிறைய பேருக்கு சாப்பாடு அதான் மரக்கறி எல்லாம் வாங்க போட்டார்”.
“மரக்கறி” குழப்பமாய் பார்க்க “அதுதான் இந்த கத்தரிக்காய் வாழைக்காய்” என்றாள் இலக்கியா.
“ஒஹ் காய்கறியா” என்று கேட்டுக் கொண்டாள்.
‘இங்கே கல்யாணத்துக்கு அடுத்த நாள் சாப்பாடு போடுவார்களோ?’ மூளை கேள்வி கேட்டு ‘யாருக்கு தெரியும்’ அதுவே பதிலையும் சொல்லிக் கொண்டது.
அதை கண்மணியிடம் கேட்பதற்கு முதல் அவளிடம் ஏதோ வேலை சொல்ல அதில் கேட்க வந்ததை மறந்தே போனாள். கேள்வியாய் பார்த்த இலக்கியாவிற்கு மறுப்பாய் தலையசைக்க அவளும் மேற்கொண்டு அதை பற்றி கதைக்கவில்லை.
அன்று யதியின் நிலைமையை பார்த்தவருக்கு இப்போது இதை நினைவுபடுத்தினால் மீண்டும் அது போல் வர கூடுமே என்ற எண்ணத்தில் நாளை தெரியும் போது தெரியட்டும் என்று விட்டுவிட்டார்.
மத்தியானம் சாப்பாடும் செய்து முடித்த பின்னர்தான் பதினோரு மணியளவில் சொரூபன் நிஷாந்த இருவரும் வந்தனர். அவர்களுடன் ஒரு மினி எல்ஃப்பும் கூடவே வந்தது.
சொரூபன் குரல் கேட்டு முன்னே சென்ற யதி அதிலிருந்து இறக்கிய மரக்கறிகளை பார்த்து கண்களை விரித்தாள்.
“மேலே அலுமாரியில் என்ட பேங்க் கார்ட்டும் இரண்டு லட்சம் பணமும் எடுத்திட்டு வாருமப்பா” என்றான் சொரூபன்.
“ஆஹ்” அவன் அப்பாவில் என்று ஒருகணம் வியப்பாய் பார்த்தவள் “இதோ கொண்டு வாரேன்” என்று மேலே சென்றாள்.
அலுமாரியை திறந்து பார்க்க கட்டுக் கட்டாய் இருந்தது. இரண்டு லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டவள் பேங்க் கார்ட்டையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.
அவனிடம் கொடுத்து விட்டு கண் இமைக்கமால் அவனையே பார்க்க இயல்பாய் வாங்கிக் கொண்டவன் ஓட்டுனருக்கும் மரக்கறிகளை கீழே இறக்க அழைத்து வந்தவர்களுக்கும் பணத்தை கொடுத்து விட்டுக் கேட்டான்.
“என்ன?”
“ஹா”
“என்ன என்றேன்” காலையிலிருந்து அவன் முகம் காணமல் இருந்தது மனதை சஞ்சலபடுத்த இப்போது கண் முன் நின்றவனை காண தெவிட்டவில்லை.
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமே”
அவள் எதை பேச துடிக்கிறாள் என்று தெரிந்த போதும், அது இப்போதைக்கு பேசி தீர்க்கும் பிரச்சனை இல்லை என்பதும் விளங்கவே செய்தது. அவள் மனதை திசை திருப்ப நினைத்து “விடிய வெள்ளன ஐந்து மணிக்கு போனது ஒரு தேத்தண்ணி கூட இல்ல” முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டான்.
அவன் முகம் சற்று வாடிப் போனது போல் தோன்றவே “மத்தியான சாப்பாடும் ரெடி. சோறு சாப்பிடுவோமா? இல்ல புட்டு தரவா?” கண்ணில் கவலையுடன் யதி கேட்டாள்.
“நானும் தான் விடிய வெள்ளென அவனுடன் போனேன்” மூக்கை உறிஞ்சினான் நிஷாந்த.
“நானும் போனான்” என்று போட்டிக்கு வந்தாள் கவிதா.
“சரி சரி எல்லோரும் கைகால் கழுவிக் கொண்டு வாங்கோ யதியும் இன்னும் சாப்பிடல” என்றார் கண்மணி.
அவளை சிறு கண்டிப்புடன் நோக்கவே “அது...” தலை குனிந்தாள் யதிந்திரா.
“அம்மம்மா இவவுக்கு அல்சர் இருக்கு. அந்தந்த நேரத்திற்கு சாப்பிடுறாவ என்டு கொஞ்சம் பாருங்கள்” என்றான் சொரூபன்.
“சொரூபன்” அவன் கையில் கிள்ளினாள்.
“இந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம். ஒழுங்க நேரநேரத்துக்கு சாப்பிடும்” என்றவன் மேலே சென்று குட்டி குளியலைப் போட்டு வர அறையில் காத்திருந்தாள் யதி.
“விடமாட்டாளே” வாய்க்குள் முனகியவன் அருகே வர “ஞானா” என்ற இதழ்களை சிறையெடுத்தான் சொரூபன். கண்ணை விரித்து பார்த்தவள் கள்ளுண்ட மானாய் மயங்கி கண் மூடிக் கொண்டாள். நேரம் தெரியாமல் இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருக்க அவன் கைகள் எல்லை மீறிய நேரம் கதவை தட்டும் சத்தத்தில் இருவரும் கலைந்தார்கள்.
“யாரு?” துள்ளி விலகியவளை கைக்குள் வைத்தவாறே கேட்டான்.
“மச்சா இல்லத்துக்கு போகணும் லேட் ஆகுது” நிஷாந்தவின் குரல் சங்கடத்துடன் ஒலித்தது.
“ம் வாரேன்” பதிலளித்தவன் சிவந்த முகத்தை வருடிவிட்டான் “உமக்கு எல்லாம் சொல்றன் கொஞ்சம் பொறுமையா இரும் ப்ளீஸ்” அவன் குரல் கெஞ்சியது.
சோர்ந்து போன முகத்துடன் தலை குனிந்து மெதுவாய் தலையசைத்தாள்.
கன்னம் பற்றி முகத்தை தனக்காய் உயர்த்தி நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் குரல் மெல்லிய தவிப்புடன் கெஞ்சியது. “ப்ளீஸ்டி சரியான வேலை, இரண்டு நாள் மட்டும்”.
முயன்று வருவித்த புன்னகையுடன் தலையாட்டினாள். இத்தனை நாளில் என்னதான் கோபமாய் இருந்தாலும் அவளை நடாமல் இருந்ததில்லை. இருவருக்குமிடையே திடிரென வந்த இடைவெளி அவள் மனதில் வெறுமையை தோற்றுவிக்க என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள்.
அவள் கைகள் இரண்டையும் தன் கைக்குள் பொதிந்து கொண்டு, நீண்ட மூச்சை வாய் வழியே விட்டு, கண்களில் உறுதியுடன் அவள் கண்ணை நோக்கி கூறினான் “கடந்த காலத்தில் என்ன நடந்து இருந்தாலும் எங்கள் இருவருக்குமான இந்த பந்தம் என்றும் மாறாது”.
“மோர்னிங் எழும்பும் போது நீங்க இல்ல” மெல்லிய குரலில் குற்றப் பத்திரிகை வாசித்தாள்.
மகிழ்வுடன் சத்தமாய் சிரித்தான் சொரூபன். “இனிமேல் எழுப்பி சொல்லிட்டு போறேன்”.
Part C
பேசமால் சொரூபனை இந்தியா கடத்திக் கொண்டு போவமா என்று நினைக்கும் அளவு நொந்து போனாள் யதிந்திரா. பதினோரு மணிக்கு சாப்பிட்டு போனவன்தான். இப்போது மாலை ஆறு மணி அவன் நிழல் கூட வீட்டில் விழவில்லை. யதி, லக்கி, கவிதா, கண்மணி, அக்கம் பக்கத்தவர் என்று வட்டமாய் சுற்றி இருந்து மரக்கறி வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
யதியின் முகம் சோர்ந்து இருந்ததை பார்த்து விட்டு “மாமி மிளகாய் தக்காளிக்கு என்ன சொன்னது தெரியுமா?” மிளகாய் காம்பை உடைத்துக் கொண்டிருந்த கவிதா கேட்டாள்.
“நீங்களே சொல்லுங்கள்”
“நீ ரெம்ப சோஸிப்பா”
“நான் நாளைக்கு சிரிக்கிறேன்” லக்கி குறுக்கே வந்தாள். “அதை விட நல்ல ஜோக் இதுதான்”
‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள் யதி.
“தோங்காய் மன நல மருத்துவரிடம் போய் என்ன சொல்லி இருக்கும்?” இலக்கியா கேட்க “ஓடு கழண்டுட்டு எண்டு சொல்லி இருக்கும்” தலையை தட்டிக் கட்டி கிண்டலாய் பதிலளித்தாள் கவிதா.
கையிலிருந்த தேங்காயை உயர்த்திப் பார்த்த யதி கேட்டாள் “இந்த தேங்காயா?”
“இல்ல மாமி, தேங்காய் சொல்லிச்சு எனக்கு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி இருக்கு”
“தேங்காய்க்கா”
“ம்ம் வெளியே கடுமையாவும் உள்ளே தண்ணியாவும் இருக்குல்ல அதான்”
“அப்ப முதலில் உங்களைத்தானே டொக்டரிடம் காட்ட வேண்டும்” படு தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு கவிதா சொல்லவே கலகலவென சிரித்துவிட்டாள் யதிந்திரா.
கைபேசியுடன் வந்த சொரூபன் சிரிக்கும் அவளையே ஆசையுடன் பார்த்திருந்தான்.
“க்ம்” நிஷாந்த, கவிதா லக்கி மூவருமே தொண்டையை செருமினார்கள்.
முகம் லேசாய் சிவக்க “ஜானகி உன்னுடன் கதைக்க வேண்டுமாம்” அவள் கையில் தன் கைபேசியை கொடுத்தான்.
அந்த இடம் சத்தமாய் இருக்கவே அங்கிருந்து விலகிச் சென்றாள் யதி. செல்லும் அவளையே பார்த்திருந்த நண்பனின் தோளை சுற்றிக் கையை போட்டு தொண்டையை செருமினான் சொரூபன்.
“எய மகே நோனா”
“ஓய..” என்று எதையோ சொல்ல எடுத்த நிஷாந்த சொரூபனின் கண்ணில் தென்பட்ட கேலியில் முகம் சிவக்க விலகிச் சென்றான். யதியின் பின்னால் செல்ல கலெடுத்தவனை தடுத்தார் சமைக்க வந்திருந்தவர்.
வீடே ஆட்கள் நிரம்பி சந்தடியாய் இருக்கவே அதற்கு மேல் அவளை நெருங்க முடியவில்லை.
“ஹலோ ஜானகி” அன்புடன் அழைக்கவே மறுபுறம் மௌனம். யோசனையில் நெற்றி சுருங்க அழைப்பை துண்டித்து வீடியோ கோலில் அழைத்தாள்.
அவள் முகத்தை பார்த்ததுமே விளங்கியது. மீண்டும் ஒட்டிசம். ஆனால் ஏன்? யோசனை ஓட உரையாட ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேர உரையாடலின் பின்னர் மெதுவாய் அவளை வாய் திறக்க வைத்திருந்தாள் யதி.
நிஷாந்த பெரும்பாலும் மிகவும் பொறுமையுடன் தான் ஜானகியிடம் நடந்து கொள்வான். ஏதோ டென்ஷனில் அவளிடம் பேசிவிட்டது விளங்கவே செய்தது. கைபேசியை உள்ளங்கையில் தட்டியவாறே யோசனையுடன் நிமிர்ந்தவள் கண்களில்பட்டான் வீட்டின் பின் பக்கமாய் சென்று மறைந்த நிஷாந்த.
ஜானகியிடம் இப்போது பேச முடியும் என்பதை அவனிடம் சொல்ல நினைத்து வேகமாய் அந்த இடத்திற்கு வந்தவள் சுற்றிப் பார்த்தாள் ‘இந்தப் பக்கம் தானே வந்தார் அதற்குள் எங்கே போனார்?’
வியப்புடன் சுற்றிப் பார்க்க காதில் விழுந்தது சொரூபனின் குரல்.
“அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் விடுவதாய் இல்ல”
யதிக்கு ஒரு கூடை நெருப்பை வாரி கொட்டியது போலிருந்தது.