மொழி - 24
“இதை செய்தே தான் ஆக வேண்டும், உனக்கு தெரியாது மச்சா, விளக்கமா சொல்ல இப்ப நேரமில்ல”
அவள் நின்ற இடத்தின் மேல் இருந்த மாடி பல்கனியில் நின்று நிஷாந்த உடன் எதையோ தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தான் சொரூபன். சூரியனுக்காய் போட்டிருந்த ஷடோ அவள் உருவத்தை இருவர் கண்ணிலிருந்தும் மறைத்திருந்தது.
“நீ சொன்ன மாதிரியே விபத்துக்கான அத்தனை ஆதாரங்களையும் சேகரித்தாகிவிட்டது. இனி நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் மிச்சம்” என்றான் நிஷாந்த்.
இருண்டிருந்த அடிவானை அமைதியாய் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன்.
“இதை செய்தே தான் ஆக வேண்டுமா? இனி நடந்தது எதையும் மாற்ற முடியாது தானே” சொரூபனின் மௌனத்தை பார்த்து விட்டு மீண்டும் கேட்டான் நிஷாந்த.
“அப்படியில்ல அவளை” என்று ஏதோ சொல்ல வந்தவன் அவர்கள் இருந்த இடத்துக்கு சற்று தூரத்தில் ஏதோ அரவம் கேட்கவே வேகமாய் அந்தப் பக்கம் சென்று பார்த்தான்.
இருவரும் வெளிப்படி வழியே இறங்கி வருவது தெரிய அதற்கு மேல் யதியும் அங்கு நிற்காமல் விலகி வந்து விட்டாள்.
செடியின் மறைவிலிருந்து ஒரு உருவம் செல்ல, சத்தமின்றி அதை கவனித்த சொரூபனும் நிஷாந்தவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நிஷாந்த் கண்கள் விரிய கேட்டான் “அவன்தானா?”
“ஜெகதீஷ்” என்று பல்லை கடித்த சொரூபன், லேசாய் சிரித்தவாறு சொன்னான் “அவன்தான் அந்த கருப்பு ஆடு”
“யதிக்கா” நம்ப முடியாத திகைப்புடனும் குழப்பத்துடனும் கேட்டான் நிஷாந்த. “ஆனால் அவனுக்கு எப்படி யதியை தெரியும் உன்னிடம்தானே இவ்வளவு காலம் வேலை செய்கிறான்”.
கண்கள் சுருங்க தாடையை தடவினான் சொரூபன் “ஒரு கெஸ் இருக்கு. என்ன செய்கிறான் பார்ப்போம்” அவனைக் கண்காணிக்கவும் ரகசியமாய் ஆள் போட்டான்.
ஆனால் அவனோ ஒரு ஓரமாய் அமர்ந்திருந்து கைபேசியை பார்ப்பதும் சொரூபன் சொல்வதை செய்வதும் ஓரத்தில் அமர்ந்து உறங்கியதையும் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
அவ்வளவு ஏன், காதில் விழுந்த செய்தியை கூட யதியிடம் பரிமாறிக் கொள்ளவில்லை. அவன் கைபேசியில் இருந்து எந்த ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ கூட போகவில்லை யதியின் மற்ற இலக்கத்தையும் கண்டு பிடித்து இருந்தான். அதிலும் அவர்களின் கல்யாண சான்றிதழை மட்டும் அனுப்பியிருந்தான்.
“ஏன் கண்மணி அப்படி எங்களில் ஆட்கள் இல்லாமலா போட்டோம். ஒரு வார்த்தை கேட்க கூடாது” அறையை நோக்கி போகும் யதியை பார்த்தவாறே கண்மணியின் வயதினை ஒத்த மூத்த பெண்மணி ஒருவர் கேட்க “என்ர பேரனின்ட சந்தோசம்தான் எனக்கு முக்கியம். இப்ப அவன் வேணும் என்டு சொல்ற யாருமே அவன் கஷ்டபடும் போது திரும்பிக் கூட பார்க்காத ஆட்கள் தானே.” லேசாய் சொல்லியும் காட்டினார்.
ராஜாவை போல் வளர்த்த பிள்ளை தெருவில் நிற்கும் போது சொந்தம் என்று ஒருவர் கூட கை கொடுக்காதது அவர் மனதிலும் கசப்பை விதைத்திருந்தது. என்ன சொரூபனிடம் அதை காட்டிக் கொள்ள மாட்டர்.
அவர்கள் அறையை நோக்கிச் சென்ற யதியின் காதுகளிலும் இந்த உரையாடல் விழவே செய்தது.
அறைக்குள் வரும் வரை சமாளித்தவளுக்கு அதற்கு மேல் முடியாமல் கண்ணில் முட்டிக் கொண்டு நின்ற நீர் கரை கடந்த வெள்ளமாய் கன்னத்தில் வழிய திடீரென இரு கரங்கள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டது.
“இதற்கெல்லாமா அழுவார்கள் ஹா” புருவம் நெறிய கேட்டான் சொரூபன். இது போன்ற சிறுவிடயங்களுக்கும் அழும் ஆளில்லையே அவள். மேல் மாடியில் நின்று யதியை பற்றி கதைத்ததையும் அவள் கலங்கிப் போய் வந்ததையும் பார்த்திருந்தான்.
யதிக்கு விளங்கவே செய்தது அவன் சொந்தகாரர்களின் கதையை கேட்டு அழுவதாய் நினைக்கிறான் என்று. எதுவும் சொல்லாமல் சிலை போல் நின்றவள் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.
“ப்ச் நிமிர்ந்து என்னை பாரும்” அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை நோக்கியவன் தேகம் நடுங்கியது.
அன்று போலவே உணர்வுகளற்ற பார்வை….
அதிலும் இந்தியாவை விட்டு வெளிக்கிடும் முன் மாறன் சொன்னவை, அவனுக்கு கிடைத்த தகவல்கள்…
அன்று, பல வருடங்களுக்கு முன்னர் அவளை பார்த்த போது இந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் அன்று என்ன நிலையில் இருந்தாள் என்பது இன்று தெளிவாகவே தெரிந்திருக்க “யதி” பயத்துடன் அழைத்தான்.
ஏதோ யோசனையில் இருந்து விழித்தவள் போல் “ஓஹ் நீங்கள் போக வேண்டுமா? கீழே ஆட்கள் காத்திருப்பார்கள்” அவனிடமிருந்து விலகினாள். கண்ணில் வழிந்த கண்ணீருக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருந்தது அவள் செயல்.
நாளை மட்டும் அம்மாவின் ஆண்டு துவசமாய் இல்லாதிருந்தால் இந்த இடத்தையே ரணகளம் ஆகியிருப்பான்.
நாளைய தினத்தின் முக்கியத்துவம் அவன் வாயை அடக்கியிருந்தது. அவள் குளியலறை செல்லவே கதவைத் திறந்து அந்தப் பக்கம் சென்ற ஒருவரை அழைத்தான் ‘ராசன் அண்ணா”.
சிறிது நேரம் கண்ணாடியில் தன்னைத்தானே வெறித்துப் பார்த்த யதீந்திரா தண்ணியடித்து முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வர சொரூபன் கையில் தண்ணீர் கப்புடன் கதவைச் சாற்றினான்.
கேள்வியாய் பார்க்க “இதைப் போடும்” அவள் கையில் மருந்தினை வைத்தான்.
“என்ன மருந்து?”
“நித்திரை குழுசை”
வேண்..” வேண்டாம் என்று சொல்ல வந்தவள் மறு பேச்சின்றி விழுங்கினாள். அவள் இரவில் வழமையாக அணியும் த்ரீ குவட்டேர் ஜீன்ஸ் டீ சேர்ட்டை கையில் கொடுத்தவன் போனுடன் பல்கனி சென்றான்.
புருவ சுளிப்புடன் கட்டிலில் அமர்ந்தாள் யதீந்திரா. மனம் குழம்பிப் போயிருந்தது. அவளின் தொழிலதிபர் மூளை ‘இப்போது எந்த முடிவையும் எடுக்காதே’ என்று எடுத்து கூற அடிபட்ட மனமோ ‘எல்லாத்தையும் விட்டு தூர ஓடு’ என்றது.
சொரூபன் மீண்டும் உள்ளே வந்த போது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து உள்ளங்கையில் கைபேசியை தட்டிக் கொண்டிருந்தாள். அவள் முன் கட்டிலின் ஓரமாய் அமர்ந்தவன் காதோரமாய் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு சிறு சிரிப்புடன் கேட்டான் “நான் நித்திரை குழுசை தந்தனான், ஞாபகமிருக்கா?”
“குழுசை” என்று விழிக்கவே சிறு முறுவலுடன் சொன்னான் “டேப்லேட்”.
“ஒஹ்!”
“என்ன ஒஹ் படுக்கலய”
திடிரென முன்னே சாய்ந்து அவன் தோளில் கன்னம் பதித்து ஜன்னல் வழியே நட்சத்திரங்கள் மின்னிய வானை நோக்கியவள் மெல்லிய குரலில் கேட்டாள் “உங்களுக்கு என்ன வேண்டும்?”
அவள் தலையை வருடியவாறே சில கணங்கள் மௌனமாய் இருந்தவன் அடைத்த குரலை செருமிக் கொண்டு சொன்னான் “நீர்தான் வேண்டும்”.
அமைதியாய் விலகி கட்டிலில் படுத்தாள் யதீந்திரா. ‘இவனுக்கு என்னதான் வேண்டும்? எதற்கு இன்னும் நடிக்கிறான்? இனி பாப்பா இருந்தாலும் இல்லாவிட்டாலும் சொத்து கிடைத்து விடும், யோகேந்திரன் நிச்சயமாய் சிறை சென்று விடுவார். அந்த கார்மேன்ஸ் தவிர மீதி அனைத்தும் அவன் கைவசம். இன்னும் என்ன வேண்டும்? என் உயிரா! அதுவும்...’ தன் போக்கில் சிந்தித்தவளை கலைத்தது அவன் குரல்.
“எனக்கு நாளை வரை மட்டும் டைம் கொடு. நாளை இரவே எல்லாம் சொல்றேன்” அவன் குரல் கெஞ்சியது அவளுக்கு புரியவேயில்லை.
அவளருகே படுத்தவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு இடையை சுற்றிக் கையைப் போட்டான்.
பின்புறமாய் கழுத்தைத் திருப்பிப் பார்த்தவள் கண்ணிலிருந்த வெறுமையைக் கண்டு கொண்டவன், உடல் நடுங்க கெஞ்சினான் “அப்படி பார்க்காதே ப்ளீஸ்”.
அவன் உடலில் ஓடிய நடுக்கம் அவளுக்கு புரியவில்லை. அந்த நிலையை அவள் கடந்து விட்டது அவனுக்கு புரியவில்லை.
*****