மொழி - 18
வெகு நேரம் யோசித்து விட்டு விடிகாலைப் பொழுதிலேயே கண்ணயர்ந்தது அடுத்த நாள் நேரம் கழித்தே எழுந்திருந்தான் சொரூபன். அவன் எழுந்ததைப் பார்த்து விட்டு கொக்கோ பவுடர் போட்டு பால் கலந்து கொண்டு வந்தாள் யதி.
அதை வாங்கியவன் பெருவிரலால் கன்னம் வருடிக் கேட்டான் “யூ ஒகே”.
“ம்ம்” சிறு குன்றலுடன் தலை குனிய “இதில் என்ன இருக்கு” மெலிதாய் அணைத்துக் கொண்டான். “சாப்பிட்டீரா?”
கண்கள் மின்ன தலையாட்டினாள் “அவங்க ஏதோ மா மாதிரி உருண்டை பிடித்து தாந்தார்கள். நன்றாக இருந்தது. பாதிக்கு மேல் சாப்பிட்டேன். இருங்க கொண்டு வாரேன்”
அவனுக்கு கொடுத்தவள் “இது என்ன மா? எங்கே வாங்கலாம்? ஒரு ஐந்து அல்லது பத்து கிலோ வாங்குவோமா?” விசாரித்தாள்.
அவள் ஆர்வத்தில் என்ன என்று பார்த்தவன் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டான். “எது இதுல பத்து கிலோவா? இருவரையும் சேர்த்து உள்ள போட்டுருவாங்க. இது திரிபோசா, அரசாங்கத்தால் சத்துக் குறைந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணி தாய்மாருக்கும் கொடுப்பது” சிரிப்பை அடக்கியவாறே கூறினான்.
“வாங்க முடியாத?” விழுந்து விட்ட முகத்துடன் கேட்டாள்.
“விசாரித்து விட்டு சொல்கிறேன், இன்று நைட் ஒரூ மணிக்கு வெளிக்கிடுவோம். ரெடியாகும்”
“எங்கே?”
“யாழ்ப்பாணம் தான் வேறு எங்கே?” என்றவன் அவள் முகத்தில் தயக்கத்தை கண்டு விசாரித்தான் “என்ன?”.
“அம்மாம்மா அன்று... அந்த வீடியோ” தடுமாறினாள் யதி.
குறும்புச் சிரிப்புடன் அவள் சிவந்த முகம் நோக்கியவன் “எப்படியும் மண்டகபடி விழும்” அவள் கையிலிருந்த மோதிரத்தைக் காட்டி “இதை வைத்து சமாளிப்போம்” என்றான்.
“அதுதான் அவசரமாய் எங்கேஜ்மென்ட் செய்தீங்களா?” அவள் மனம் என்ன எதிர் பார்க்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.
இதகளுக்குள் சிரித்தவன் “இங்கிருந்து போவதற்குள் உமக்கே விளங்கும்” என்றான் மூடு மந்திரமாய்.
“ஒஹ்” என்றவள் அதை பற்றி மேற்கொண்டு ஆரயவில்லை. அவனோ அவள் இடையில் கை கொடுத்து அருகே இழுத்தான்.
“எஎன்ன?” ஹாலை பார்த்தவாறே “அவர்கள் உள்ளே சமைகிறாங்க” நெளிந்தாள்.
“சரி சரி பயணத்திற்கு தேவையானவற்றை ரெடி பண்ணும், ஈவ்னிங் வேறு வேலை இருக்கு. வெளியே போகணும்” அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யவில்லை. தன் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
***
“என்ன உங்கள் ஊரில் கடலை கிரவுண்ட் ஃபுளோர் வைத்திருக்கிறீர்கள்?” கிண்டலாக கேட்டவாறே தொங்கிக் கொண்டிருந்த காலை ஆட்டினாள் யதி.
பின்னேரம் கோல் ஃபேஸ் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான் சொரூபன். கடற்கரையே ஜேஜே என்றிருந்தது. இறால், மாசி வடை விற்பவர்கள், ஐஸ்கிரீம் விற்பவர்கள், குழந்தைகளை கவரும் காற்றாடி, விசில், பலூன் விற்பவர்கள் சத்தம் என்று கடலையின் சத்தத்தை மீறி கேட்டது. அங்கங்கே கம்பளத்தை விரித்து குடும்பமாக அமர்ந்திருந்து சிரித்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
யதியும் சொரூபனும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இலங்கையின் தேசியக் கொடியும் முப்படைகளின் கொடியும் பறந்து கொண்டிருந்தது.
“அங்கே ஒவ்வொரு நாளும் காலையில் கொடி ஏற்றுவார்கள்” என்றான் சொரூபன். அவளோ கையில் இருந்த இறால் வடையை வாய்க்குள் போட்டவாறே கேட்டாள் “கடலுக்குள் கால் நனைக்க முடியாதா?”
“இன்று அலை கொஞ்சம் உக்கிரம இருக்கும் நிப்பிறோ?” பதிலுக்கு கேட்டான் சொரூபன்.
“நீங்க இருகிறீங்க தானே” சிறிதும் யோசிக்காமல் பட்டென பதிளித்தாள் யதி.
அவள் பதிலில் இமைக்க மறந்து பார்த்திருந்தான் சொரூபன்.
கடந்த சில நாட்களாகவே அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிவதாய் இல்லை. “என்ன பாக்குறீங்க?” குழம்பி போய் பார்த்தவள் ஏமாற்றத்துடன் கேட்டாள். “ஒஹ் உங்களுக்கு கடலில் கால் நனைக்க பிடிக்காதா?”.
மெல்ல மறுத்து தலையசைத்தவன் “வாரும்” எழுந்து நடந்தான். அவன் பின்னே சற்று தூரம் நடக்க அங்கிருந்து கீழே செல்ல படியிருந்தது.
அவள் கடலை ரசிக்க, அவனோ அலையோடு விளையாடும் அவளை ரசித்தான்.
சூரிய அஸ்தமனத்தை ரசித்து விட்டு பிரபல உணவகம் ஒன்றில் இரவு உணவையும் முடித்து கொண்டு காரை செலுத்தியவனையே வைத்த கண் விலகாது பார்த்தாள். அன்று தோட்டத்தில் அவனும் நிஷந்தாவும் கதைத்ததை கேட்காமல் இருந்திருந்தால் வேறு நினைத்திருப்பாளோ! என்னவோ! இன்றோ உடல் ரீதியான தேவை தாண்டி தன்னிடம் பிடித்தம் என்ற ஒன்று இருக்க கூடும் என்பதை அவள் மனம் நம்ப மறுத்தது.
குறுக்கும் நெடுக்குமாய் வந்து கொண்டிருந்த வாகனங்களுக்குள் கவனமாய் காரை செலுத்தி காலி வீதியிலிருந்து குறுக்கே உள்ள சிறு ரோட்டுக்குள் காரை செலுத்தியவாறே கேட்டான் “என்ன?”.
“ஹா..”
“பார்வை எல்லாம் பலமா இருக்கு” லேசாய் முகம் சிவக்க வெளியே பார்த்தாள்.
“யதி” அழுத்தமாய் அழைத்து கேட்டான் “என்ன?”
“நீங்க வித்தியாசமா இருக்கிறீங்க”
புருவத்தை உயர்த்தி “வித்தியாசம் எண்டா” ஆச்சரியத்துடன் கேட்டான்.
“இல்ல முதலில் வந்த போது சிரிப்பு இல்ல, அப்படியே சிரிச்சாலும் பொய்யா... வஞ்..” வஞ்சகம் என்று சொல்ல வந்து, சற்று தயங்கி “இப்போதெல்லாம் அப்படி இல்ல” என்றாள்.
சற்று நேரம் கீழ் உதட்டை கடித்தவன் காரை நிறுத்தி விட்டு அவளை நோக்கித் திரும்பினான். “உமக்கு முதலே தெரியுமா?” வீதியோர கடைகளில் இருந்து விழுந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் கண்களை நோக்கிக் கேட்டவன் முகம் தீவிரமாய் இருந்தது.
‘என்ன நடு ரோட்டில் நிறுத்தி விட்டான்’ மனதினுள் நினைத்தவள் நிமிர்ந்து பார்க்க முன்னே போக்குவரத்து போலீஸ் மறுபக்க வாகனங்கள் செல்ல சைகை செய்து கொண்டிருந்தார்.
அவன் கேள்விக்கு பதிலாய் மெல்ல தலையாட்டினாள்.
சற்று நேரம் மௌனத்தில் கழிய திடிரெனக் கேட்டான் சொரூபன் “என்னிடம் எதையாவது சொல்லனுமா?”
“ஹா.. இல்லயே”
“என்னிடம் சொல்வதற்கு எதுவுமே இல்லையா?” குரல் கரகரத்தது போலிருக்க திடுக்கிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள் யதி.
காரில் நிறைந்திருந்த மெல்லிய இருளில் பனி படர்ந்திருந்த அவன் கண்கள் அவள் கண்ணில் படவில்லை.
இருந்தது அவனிடம் சொல்ல, மார்பில் சாய்ந்து அழ என்று ஆயிரம் இருந்தது. இன்றோ ‘யாரிடம் என்ன சொல்லி என்ன’ என்ற மனநிலையில் இருந்தாள்.
போலீஸ் கைகாட்ட அமைதியாய் காரை செலுத்தினான் சொரூபன். அவன் கீழுதடு பல்லில் வதைப்பட்டது.
உப்புக் காற்றில் நின்றது கசகசவென்று இருக்கு என்று குளிக்கச் செல்ல பின்னாலேயே அவனும் வந்தான் “சரி நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள்” என்று அவள் வெளியே வர முயல “டைம் வேஸ்ட்” என்று உள்ளே வர முயன்றவனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.
வெளியே வந்தவளை நெருங்க முயல “ஒட்டுது போய்க் குளியுங்கள் போங்கள்” என்று துரத்திவிட்டாள்.
பிரஷ் ஆகி வந்தவன் ஹெயர் டிரையர் மூலம் தலை காய வைத்தவள் கழுத்தில் முகம் புதைத்தான். “பயணம்” என்று எதையோ சொல்ல முயன்றவளை பேச விடவில்லை அவன்.
அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்தி அவளுள் புதையல் தேடினான். அவளின் மேடு பள்ளங்களில் தேடிக் களைத்து மீண்டும் தேட முயல சிணுங்கினாள் “என்னால் முடியாது”.
அவள் கழுத்துக்கு கீழே முகம் புதைத்து வாசம் பிடித்தவன் “யாழ்ப்பாணம் போக வேண்டாம்” என்றான் ஒரு வித சிறுபிள்ளை பிடிவாதத்துடன்.
சற்று விலகி ஆச்சரியமாய் பார்த்தவள் வினவினாள் “ஏன்?”
“அங்கே போனால் அம்மம்மா தனித்தனி அறையில்தான் இருக்க விடுவா”
கிளுக்கி சிரித்தவள் அவன் கழுத்தை சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டு உதட்டைக் கடித்து யோசித்தவள் “யாருக்கும் தெரியாமல் நான் உங்கள் அறைக்கு வாரேன்’ என்றாள்.
“ஹ்ம்ம் குட் ஐடியா, நான் வந்தாலும் சரிதானே” என்றவன் விரல்கள் அவள் வெற்றிடையில் குறுகுறுப்புட்டியது.
“ம்கூம், அது வேண்டாம்” என்று உதட்டை சுழித்தாள்.
“ஏன் வேண்டாம்” அவள் உதட்டை இரு விரலால் பிடித்தான்.
கையை தட்டி விட்டவள் “உங்கள் பெயர் கெட்டுவிடும்” சாதாரணமாய் சொன்னவளை திகைத்து போய்ப் பார்த்தான் சொரூபன்.
“உம்மட பெயர் கெட்டு விடாதா?” லேசாய் தொண்டை கரகரக்க கேட்டான்.
“பச் அது ஆல்ரெடி நிறைய டேமேஜ் ஆகிட்டு அதால பரவாயில்ல” விளையாட்டாய் கண் சிமிட்டினாள் அவள்.
உதட்டை வலிக்க கடித்தவனுக்கு தான் இந்தியா வருவதற்கு முன் அவளின் களங்கமில்லா நடத்தையும் அதன் மூலம் தேடி வைத்திருந்த நற்பெயரும் நினைவு வர பேச்சின்றி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் “கொஞ்ச நேரம் படும், பயணம் கொஞ்சம் பெரிது” என்றான்.
“அப்ப பாப்பா வேண்டாமா?” விளையாட்டாய் மொழிய “பாப்பா வர வேண்டிய நேரம் வரும் இப்ப கொஞ்ச நேரம் படும்” என்றான் பதிலுக்கு கெத்தாய்.
***
“முதல் வேலையாய் அவவை டிஸ்மிஸ் செய்யுங்கள் ஜெகதீஸ்” கைபேசியை அனைத்து வைத்தவன் “யதி யதி” அவர்கள் பயணம் செய்த வேன் அனுராதபுரத்தை நெருங்கிக் கொண்டிருக்க மடியில் கிடந்தவளின் கன்னத்தை மெதுவே தட்டினான் சொரூபன். வழியெல்லாம் சத்தியெடுத்து களைத்துவிட்டாள். அதற்கு வேண்டிக் கொடுத்த மருந்தில் உறக்கம் வந்து விட அவன் மடியிலேயே உறங்கியிருந்தாள்.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை எப்படியோ சமாளித்து விட்டான். இனி செக்கிங் கொஞ்சம் அதிகமாய் இருப்பதால் சமாளிப்பது கடினம் என்று யோசித்தே அவளை எழுப்பினான்.
கூடவே நிஷாந்தவின் ஆர்மி நண்பனான பெரேராவையும் அழைத்து வந்திருந்தாலும் இனி போலிஸ் இல்லாமல் ஆர்மி தனிப்பட்ட ரீதியில் வானுக்குள்ளும் செக்கிங் செய்வார்கள். எனவே சற்று கவனமாய் இருக்க வேண்டி இருந்தது.
“என்ன ஞானா” தூக்க கலக்கத்துடன் நிமிர்ந்தவளை பார்த்து உதடு கடித்தான். அவளுக்கு வேன் பயணம் இத்தனை தூரம் ஒத்துக் கொள்ளாமல் இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
“இனி கொஞ்ச தூரம் முழித்து இருக்கணும்”
“ம்ம் சரி” சோர்வுடன் நேராய் அமர்ந்து விசாரித்தாள் “இப்ப எங்கே நிற்கிறோம்”
“அனுராதபுரம்” என்றவன் முகத்தில் தென்பட்ட தீவிரத்த்தில் அதற்கு மேல் கேள்வி கேட்டு தொல்லைபடுத்தவில்லை அவள்.
வழி முழுதும் இராணுவம் தென்பட சொரூபனுடன் ஒன்றினாள்.
அவளைக் குனிந்து பார்த்தவன் சிறு புன்னகையுடன் கையை தட்டிக் கொடுத்தான். வவுனியாவில் ஆயுதங்களுடன் நின்றவர்களில் சிலர் சிநேகபூர்வமாய் தென்பட்டதை கவனித்து விட்டு விசாரித்தாள் யதி “உங்கள் ஊர் எல்லையிலா இருக்கு. இலங்கையில் பிரச்சனை என்றார்கள்”.
“இல்ல இது சமாதானக் காலம்”
“ஒஹ் இன்னும் எவ்வளவு தூரம் போகணும்”
“ஓரு நூற்றி நாப்பது கிலோ மீட்டர்”
“அப்ப இன்னும் மூன்று மணித்தியாலத்தில் போயிருவோம் எண்டு சொல்லுங்கள்” உற்சாகமாய் கேட்டாள். ஏற்கனவே ஆறு மணித்தியாலம் வானில் இருந்தது சத்தி என்று களைத்து போயிருந்தாள். அவள் வாழ்கையில் ஒரு நாள் கூட இது போல் பயணம் செய்யவில்லை, அதிகம் விமானம் தான்.
குறுக்கே தலையசைத்தவன் “இல்ல ஆறு மணித்தியாலம். இங்கால ரோடு கொஞ்சம் சரியில்ல” என்றான்.
உதட்டை பிதுக்கி கன்னத்தில் வைத்தாள் அவள்.
ஓமந்தையில் அனைவரையும் வானை விட்டு இறங்க சொல்ல, அவளை தவிர்த்து மீதி பேரை இறக்கினான் சொரூபன். கூடவே வந்த பெரேரா நெருங்கி வந்த ஆர்மியிடம் ஏதோ கதைத்தான்.
பெரேராவிடம் கதைத்த இராணுவ வீரன் உள்ளே எட்டிப் பார்த்து “தமிழா” வாய் விசாரிக்க, அவன் கண்களோ களைத்து சோர்ந்து இருந்தாலும் அழகாய் இருந்த யதியின் முகத்தை ஆர்வத்தோடு நோக்கியது.
கீழே வேனின் அருகேயே நின்ற சொரூபன் குறுக்கே வந்தான் “மகே நோனா”.
முகம் கடுக்க அவர்களை போகச் சொல்லி அனுமதி கொடுத்தான் ஆர்மி.
உள்ளே ஏறியவனிடம் கேட்டாள் யதி “அவரிடம் என்ன சொன்னீர்கள்?”.
“ஏன்?”
“இல்ல சந்தோசமாய் எட்டிப் பார்த்தார். நீங்க சொன்னத கேட்டு கடுப்பான மாதிரி இருந்திச்சு அதான்”
சொரூபன் முகத்தை திருப்ப முன்னே இருந்த பெரேரா சத்தமாய் சிரித்தான்.
“என்ன சிரிப்பு?” அவனிடம் எரிந்து விழுந்தவனை வியப்புடன் பார்த்தாள் யதீந்திரா.
“இங்கே சிங்கள பொடியங்களுக்கு தமிழ் பெண்கள் என்றால் ஒரு விருப்பம் அவ்வளவுதான்” என்றான் பெரேரா நமுட்டு சிரிப்புடன்.
குழப்பமாய் அவன் முகம் நோக்கியவளுக்கு ஓரளவு புரிய “ஒஹ் பொறாமையா?” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள்.
கோபத்துடன் திரும்பியவன் அவள் கண்ணில் இருந்த குறும்பில் சில கணங்கள் தன்னை மறந்து பார்த்திருந்தான். முதல் முறையாக தன்னை டீஸ் செய்கிறாள், அதுவும் உரிமையுடன்.
“ஓமடி பொறமைதான்” என்றவன் பதிலுக்கு கண்களை சிமிட்டினான்.
“அவரிடம் என்ன சொன்னீர்கள்?” அதை அறிவதிலேயே பிடிவாதமாய் நின்றாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் “எனக்கு டயர்ட்டா இருக்கு” என்று கண் மூடி சீட்டில் சாய்ந்துவிட்டான்.
உதட்டை சுளித்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள் யதி. அரைக் கண்ணால் அவளைப் பார்த்து விட்டு சிறு சிரிப்புடன் மீண்டும் கண் மூடி விட்டான் சொரூபன்.
யாழ்ப்பாணம் போய் சேர்ந்த போது நேரம் இரவு எட்டை நெருங்கியிருந்தது. வீட்டின் முன் இறங்கி சுற்றிப் பார்த்தாள். அவர்கள் நின்ற சிறு வீதியில் இருந்து பார்க்க பிரதான வீதியில் நிறைய பேர் வருவதும் போவதுமாய் சந்தடியாய் இருந்தது. கூடவே நிறநிறமான டியுப் லைட்களும். “அங்கே என்ன விஷேசம்” விசாரித்தாள்.
“கோவில் திருவிழா” என்றான் அவன்.
“சொரூபா” என்ற குரலில் திரும்ப அங்கே நின்றார் கண்மணி.
“அம்மம்மா” சலுகையாய் அழைத்தவாறே அவரிடம் சென்றான் சொரூபன். பின் அறுபதில் இருந்தாலும் திடகாத்திரமாய் இருந்தவரை புருவம் சுருங்க யோசனையுடன் பார்த்தாள் யதி.
“நல்லூர் கொடிக்கு வாறதா சொன்னது. இன்னும் ஐந்து நாளில் தேர்” செல்லமாய் கடிந்தவாறே பேரனைக் கொஞ்சினார் அவர். அவனை மேலிருந்து கீழாக பார்த்தவருக்கு அவனில் இருந்த வித்தியாசம் நன்றாகவே புரிந்தது. அவன் கண்களின் மூலையில், எப்போதும் யார் மீதோ இருக்கும் ஒரு வித கசப்புணர்வு துளியும் இல்லை.
அவர் கண்கள் யாரையோ தேட, சிறு வெட்க புன்னகையுடன் ஒரு விரலால் நெற்றியை வருடியவாறே “யதி” அவளை அருகே அழைத்தான். பதிலின்றி போகவே திரும்பிப் பார்த்தான்.
அவள் எதையோ யோசித்துக் கொண்டிருப்பது முகத்தில் தெரிந்தது.
“யதி” மீண்டும் அழைத்தான் “என்ன யோசனை?” கண்ணால் கண்மணியை காட்டி அருகே அழைத்தான் “அம்மம்மா வரட்டாம்”.
பார்த்த முதல் நாளே காலில் விழுந்தால் என்ன நினைப்பரோ என்ற யோசனையுடன் கரம் குவித்தாள் “வணக்கம் அம்மம்மா”.
அவள் முகம் பார்த்தவர் “ஏனம்மா என்னை பார்த்தால் பிடிக்கவில்லையா?” முறுவலுடன் கேட்டார். அன்றைய வீடியோ கோலே ஞாபகத்தில் இல்லாதது போல் நடந்தவளை வியப்புடன் பார்த்தான் சொரூபன்.
“இல்ல நீங்கள்.. உங்களை எங்கோ பார்த்தது போல், வேண்டிய யாரையோ நினைவு படுத்துற மாதிரி... ஆனா யாரென்று தெரியல” குழப்பத்துடன் கூறினாள்.
அத்தனை நேரம் சாதரணமாய் இருந்த சொரூபனின் முகம் இறுக்கத்தை தத்தெடுக்க, அவன் இறுக்கத்தை உணர்ந்த கண்மணி “சரி சரி உள்ளே வந்தே யோசிக்கலாம். பயணத்தில் களைத்து போய் இருப்பியள். வந்து சாப்பிடுங்கோ முதலில்” யதீந்திராவின் கை பிடித்து அழைத்துச் சென்றார்.
அவன் இலகுத் தன்மை நொடியில் மறைந்ததை உணர்ந்த யதி அவனை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அவர் பின்னால் சென்றாள்.
சத்தி, வாகனத்தின் லெதர் மணம் என்று எல்லாம் போக நன்றாக சுடு நீரில் தலை குளித்து, ஹேர் டரையரை எடுத்து தலையைக் காய வைத்துக் கொண்டிருக்க கதவில் தட்டிச் சத்தம் கேட்டது.
கதவை திறக்க சொரூபன்தான் நின்றிருந்தான்.
அவளை தாண்டிக் கொண்டு உள்ளே வந்தவன் “ஏதாவது வேண்டுமென்றால் சொல்லும்” என்றவாறே ஏசியை பரிசோதித்தான். “ஹீட்டர் வொர்க் பண்ணுதுதானே” அவனே குளியலறை சென்று பார்த்தான்.
“அம்மம்மா சாப்பிட வரட்டாம்” என்றவனை பாவமாய் பார்த்து வைக்க, அவள் பார்வையில் மனம் இளகினாலும் “விடியல இருந்து ஒண்டும் சாப்பிடல, கதையாம வாரும்” அழுத்தமாய் சொன்னான்.
மாடியிலிருந்து இறங்கி வரும் போதே “நான் கீழே ஹோலில் தான் படுத்து இருப்பேன். ஏதாவது தேவையென்டா எழுப்பும்” என்றான்.
“ஹாலிலா? ஏன்?”
“அம்மம்மா அங்கே தான் படுப்பா, இங்கே வந்தால் அவர்களுடன் சேர்ந்து அங்கேதான் படுப்பேன்”
“ஒஹ்”
இருவரும் சாப்பாட்டு மேசைக்கு வர அதிக கரைச்சல் இல்லாத உணவாய் இடியப்பமும், தோங்காய் பூவும் சீனியும் போட்டு பயறும் வைத்திருந்தார்.
“சொரூபனுக்கு பிடிக்கும் என்று செய்தேன். சத்தி எடுத்த எண்டு சொரூபன் சொன்னார். கொஞ்சமாய் சாப்பிட்டுப் பாருங்கோ, களைப்புக்கு இனிப்பு நல்லா இருக்கும் வயிற்றை பிரட்டுவது போலிருந்தால் குழம்பு இருக்கு அதோட சாப்பிடுங்க” என்றார் அவர்.
அதிக இனிப்பு இல்லமால் இருக்க அவளுக்கு பிடித்துக் கொண்டது.
சாப்பிட்டு முடித்து வரேற்பறையில் அமர்ந்து இருக்கும் போதும் கண்மணியின் முகத்தை பார்த்தவாறே மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள். ‘இவர்கள் முகத்தை பார்க்கும் போது யாரோ முக்கியமான நபர் நினைவுக்கு வாரங்க, யாரு’.
“சிலவேளை வீடியோ கோலில் பார்த்திருப்பீர்” திடிரென்று சொன்னார் கண்மணி.
“அஹ்” என்று சில கணங்கள் விழித்தவளுக்கு அன்று வீடியோ கோலில் இருவரும் சேர்ந்து மாட்டியது நினைவு வர சொரூபனை பார்த்தாள். அவனோ முகம் சிவந்தாலும் சிறு சிரிப்புடன் அவளை பார்த்திருக்க ஒரே ஓட்டமாய் மாடிக்கு ஓடிவிட்டாள்.
ஓடிய அவளையே கண்ணில் கனிவுடன் பார்த்திருந்த சொரூபனைப் பார்த்தவர் “க்கும்” தொண்டையை கனைத்தார்.
திரும்பி அவரை நோக்க அவர் பார்வையில் இருந்த கண்டனம் புரிந்தது.
கன்றிய முகத்துடன் “தப்புதான், உங்களிடம் இன்னும் நிறைய சொல்லனும், செய்யணும்” என்ற பேரனையே பார்த்தவர் “செய்த தப்பை கெதியா சரி செய்யுங்க” என்றதோடு முடித்துக் கொண்டார்.
அவன் முகத்திலும் மனதிலும் தென்படும் நிம்மதிக்கும் சந்தோசத்திற்க்கும் காரணம் யதீந்திரா என்பது அவருக்கு விளங்கவே செய்தது. ஆனாலும் காலம் காலமாக வந்த விழுமியங்களுக்கு எதிராயும் அவரால் நடக்க முடியவில்லை.
“அதற்குதான் இங்கே அழைத்து வந்ததே” என்றான் பேரன் பூடகமாய்.
வழமை போல் சொரூபன் சென்று வந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள் என்று ஊர் கதையெல்லாம் கதைத்து விட்டு இருவரும் உறங்கிய போது நாடு சாமம் தாண்டியிருந்தது.
அப்போதுதான் அயர்ந்த இருவரையும் எழுப்பியது யதியின் அலறல்.