Share:
Notifications
Clear all

மொழி - 12

Posts: 88
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 5 months ago
மொழி  - 12
 
 
“ஏஏய் உஉனக்கு எஎப்படி?” தடுமாறினார்.
 
 
“இங்கே வந்து ஆறாவது மாதமே உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. பெயர் கூட பொய்யில்லையா? சீ உங்களுக்காக என் அண்ணகளை எதிர்த்து... சாகும் வரை அப்பாவை நிம்மதியில்லாமால்....” பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள் “அதுதான் அன்றே நீங்கள் கட்டிய தாலியை கழட்டி தந்து விட்டேனே, இப்போது என்ன?” கறாராகவே கேட்டாள்.
 
 
இன்பமாய் அதிர்ந்தான் பாலா. அன்று அங்கே என்ன நடந்தது என்று என்ன கேட்டும் அவள் சொல்லவில்லை.
 
 
“என்னை மன்னிச்சிரு. நான் உன்னைத்தான் லவ்...” என்று தொடங்கவே “இதை நம்ப நான் ஒன்றும் பதினேழு வயது மடச்சி இல்லை” சீறினாள்.
“சரி நம்ப வேண்டாம். உன் மகளும் மகனும் வேணுமில்லையா?” தன் சுயரூபத்தை காட்டினார் யோகேஸ்வரன்.
 
 
சட்டையை எட்டிப் பிடித்தவள் “அவர்களை என்ன செய்தாய்?” அவரை உலுக்கினாள்.
 
 
இலகுவாய் அவள் கையை தட்டி விட்டு “அவர்கள் உயிரோடு வேண்டுமேன்றால் இப்போதே என்னுடன் வா” என்றார் அலட்சியாமாய். அழுதவாறே நிமிர்ந்தவள் கண்கள் விரிய “பாலா” என்று அவன் மார்பில் ஒடுங்கினாள். அனைத்தையும் கேட்டிருந்தான் அவன்.
“சொரூபன்... சொரூபி...”
 
 
“ஷ்... தைரியமாய் இரு” அவளை தட்டிக் கொடுத்தவன் “உங்களுக்கு என்ன வேண்டும்? இருந்து கதைப்போமா?” அருகேயிருந்த மேசையை கை காட்டினான்.
 
 
“ஹ்ம்ம் புத்திசாலி. எனக்கு சொரூபன் வேண்டும்”
 
 
பாலாவின் கைகளில் அவளுடல் உதறியது.
 
 
“சொரூபன் என்ன மேசையா கதிரையா கேட்டதும் தூக்கித் தர?”
 
 
“அவன் தங்க முட்டையிடும் வாத்து” அவர் கண்கள் ஆசையில் மின்னியது.
“நீங்கள் நினைப்பது போல் இப்போது சொரூபனுக்கு சொத்துகள் எதுவுமில்லை. அவன் மாமன்மார் அனைத்து சொத்துகளையும் எடுத்துவிட்டார்கள்” பாலா அவருக்கு விளங்க வைக்க முயற்சித்தார்.
 
 
“நல்லதுதான் அவன் திரும்பி போக தேவையில்லை பாருங்கள். ஆனால் அந்த சொத்துகள் எனக்குத் தேவையில்லை. இங்கே இருக்கும் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அவன் வாரிசாகலாம்”
 
 
“ஏன்? இங்கே இருக்கும் மனைவியின் மகனை வாரிசு ஆக்குங்கள்” எரிச்சலுடன் இடையிட்டாள் தர்சினி.
 
 
“அவள் மலடி. அவளுக்கு பிள்ளைகள் இல்லை. அதோடு வேறொரு காரணமும் இருக்கு. அது உங்கள் இருவருக்கும் தேவையில்லாதது” சிறிது கூட குற்ற உணர்ச்சியின்றி கூறியவரை வெறுப்புடன் பார்த்தாள்.
 
 
‘ஒரு காலத்தில் இவரை எப்படி காதலித்ததாக நினைத்தேன்.’
 
 
“இப்போது சொரூபன் சொரூபி இருவரும் எங்கே?” அழுத்தமாய் கேட்டான் பாலா.
 
 
“எனக்கு தேவை சொரூபன்தான். சொரூபி யாரு?” என்றவரை இருவருமே வெறுப்புடன் நோக்கினார்கள். மகளை கூட தெரியவில்லை இவனெல்லாம் அப்பன். 
 
 
“சொரூபனை பார்க்க வேண்டும்” ஆணித்தரமாய் கேட்டான் பாலா அவனுக்கு நம்பிக்கையிருந்தது அவன் தங்கையை அத்தனை இலகுவில் தனியாய் விட்டுவிட மாட்டான்.
 
 
“என் வீட்டில்தான் இருக்கிறான்”.
 
 
கார் யோகேஸ்வரனின் வீட்டினுள் செல்லவே அங்கே கலவரத்துடன் நின்று கொண்டிருந்தார்கள் அவரின் அடியாட்கள். யோகேஸ்வரனின் காரில் அமர்ந்திருந்த தர்சினி கவலையுடன் அடிக்கடி பாலாவின் முகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
 
 
***
 
 
அம்மாவும் அப்பாவும் ஐஸ்க்ரீம் வேண்ட போகவே தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் சொரூபன்.
 
 
தன் முன்னே ஓடிய ரிமொர்ட் வாத்தை துரத்திக் கொண்டு ஓட “சொரூபி நில்லுங்கள்” என்று பின்னால் துரத்தி சென்றான். சரியாய் ஒரு காரின் அருகே நிற்க சொரூபி அருகே அமர்ந்து அதை தட்டிக் கொண்டிருந்தாள்.
 
 
“உங்களிடம் எத்தனை தரம் சொல்வது இதுபோல் தனியாக ஓடக் கூடாது என்று” கண்டித்தவாறே தங்கையின் கையைப் பிடிக்க இருவரையும் தூக்கிக் காரில் போட்டனர் யோகேஸ்வரனின் அடியாட்கள்.
 
நொடியில் அனைத்தும் நிகழ்ந்திருக்க கத்துவதற்கு கூட சந்தர்ப்பம் அமையவில்லை. நகரை விட்டு வெளியே அமைந்திருந்த யோகேஸ்வரனின் வீட்டிற்கு கடத்தி சென்று சாதரணமாய் ஒரு அறையில் விட்டு வந்து யோகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்தார்கள். இலங்கையை சேர்ந்த சிறுவர்கள் தெரியாத இடத்தில் தப்ப முயற்சிக்க மாட்டார்கள் என்ற எண்ணம்.
 
 
அழுகையில் உதடு பிதுக்கிய தங்கையை சமாதானப்படுத்தியவாறே தப்ப வழி தேடினான் சொரூபன்.
 
 
ஜன்னலில் மெதுவாய் தட்டி சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தான். முகத்தை முக்கோண துணியால் மறைத்து கட்டிக் கொண்டு ஒருவர் நின்றார். உதட்டில் விரல் வைத்து சத்தம் போட வேண்டாம் என்று எச்சரித்தவர் கம்பியில்லாத ஜன்னல் வழியாய் இருவரையும் வெளியே தூக்கி விட்டார்.
 
 
சொரூபியை  தோளில் தூக்கிக் கொள்ள அவர் முழங்கை அருகே காயத்தின் வடு ஒன்று இருந்தது சொரூபனின் கண்ணில்பட்டது.
 
 
அங்கிருந்து இருவரையும் அழைத்து வந்தவர் “இதற்கு மேல் நான் வர முடியாது. நீங்கள் இருக்கும் விலாசம் உங்களுக்கு தெரியும்தானே” கவலையுடன் கேட்டார்.
 
 
“ஓம் எனக்கு தெரியும். உங்கள் உதவிக்கு நன்றி ஐயா உங்களை எப்படி கூப்பிடட்டும்” மறைமுகமாய் அவர் யாரென விசாரித்த சொரூபனை பார்த்து மெல்ல நகைத்தார்.
 
 
அவன் புத்திசாலித்தனமான கேள்வியில் கண்ணோரம் சுருங்க “நான் யாரென்று தெரியாதது தான் உங்களுக்கு நல்லது சீக்கிரம் போங்கள்” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.
 
 
அவர்கள் சந்தியில் சென்று திரும்பவும் இங்கே அவர்களை தேடி வந்த அடியாள் கத்தினான். “இருவரும் தப்பி விட்டனர்”
 
 
யாரோ யோகேஸ்வரனின் காருக்கு குறுக்கே வர கீறிச் என்ற சத்தத்துடன் பிரேக் அடித்தான் அவரின் டிரைவர்.
 
 
கீழே இறங்கி சென்றவர் “பார்த்து வர மாட்டாய்” தன் அடியாள் என்பதை கண்டு சீறினார்.
 
 
“ஐயா அவன் அந்த குட்டிசாத்தனுடன் தப்பிவிட்டான்” யோகேஸ்வரனிடம் கூறியது உள்ளே அமர்ந்திருந்த பாலாவின் காதிலும் விழுந்தது. நொடியும் தாமதிக்கமால் தர்சினியின் கையைப் பிடித்துக் கொண்டு காரை விட்டு வெளியேறி அருகே இருந்த குறுக்கு சந்துக்குள் ஒளிந்தார் பாலா. அவருக்கு நம்பிக்கையிருந்தது அவர்கள் குட்டி சாத்தான் என்று அழைத்தது நிச்சயமாய் சொரூபியை தான்.
 
 
அதே சந்தின் மறுமுனையில் சொரூபியை முதுகில் சுமந்த வண்ணம் எந்த திசையில் போவது என்று தெரியாமல் நின்றான் சொரூபன். கத்தி அழைக்க போன தர்சினியின் வாயை பொத்தி விட்டு சத்தமின்றி அவர்களை அணுகினான்.
 
 
“அப்பா அம்மா ” அதிக சத்தமின்றி காலைக் கட்டிக் கொண்டனர் இருவரும்.
 
 
ஒட்டோ டக்ஸி எதுவும் தென்படமால் போகவே பாலா குழந்தையை சொரூபனின் கையிலிருந்து வாங்கிக் கொள்ள நால்வரும் முடிந்த வரை வேகமாக நடக்கத் தொடங்கினார்கள்.
 
 
பாலா யோகேஸ்வரனை வெறும் ஏமாற்றும் ஒரு நபராகவே நினைத்திருந்தான். இங்கே பார்த்தால் அடியாள் எல்லாம் வைத்துக் கொண்டு... சொரூபனை வேறு கடத்த திட்டம். என்னவென்று முழுதாய் புரியாவிட்டாலும் இப்போதைக்கு இந்த இடத்தை விட்டுப் போனால் போதேமென்றே இருந்தது.
 
 
“தர்சினி குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்” தோளில் இருந்த குழந்தையை கீழே இறக்கிவிட்டவன் அருகேயிருந்த கடையில் சென்னையில் இருக்கும் தன் நண்பனுக்கு போன் செய்ய அனுமதி கேட்டான்.
 
 
“சொரூபா, இந்த நம்பரை தேட ஹெல்ப் செய்யுங்க” என்றவர் அருகே சொரூபன் செல்ல ஆறு வயது மகளின் அருகே தர்சினி மண்டியிட்டாள்.
 
 
“அம்மா” பயத்துடன் தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
 
 
குழந்தை பயந்திருப்பது புரிய முதுகை தட்டிக் கொடுத்தவள் “அங்கே பாருங்கள் வாத்து” வீதியில் தன் குஞ்சுகளுடன் திரிந்த வாத்தை காட்டினாள்.
 
 
வாத்தை பார்த்ததில் தன் பயம் குறைய குத்துகாலிட்டு அமர்ந்து ரசித்தாள் சொரூபி.
 
 
பாலாவிற்கு அவர் கேட்ட இலக்கத்தை எடுத்துக் கொடுத்தவன் ‘அம்மாவும் சொரூபியும் எங்கே’ யோசனையுடன் தேட காதில் விழுந்தது தர்சினியின் அலறல்.
 
 
“சொரூபி”
 
 
வெளியே ஓடி வந்த பாலா சொரூபனின் கண்களில் தென்பட்ட காட்சி, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த தர்சினியும், அவளிடமிருந்து இரண்டடி தள்ளி தலையால் இரத்தம் வழிய கிடந்த சொரூபியும், கையில் இரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்ற யதியும்தான்.
 
 
கண்கள் விரிய “அம்மா... சொரூபி” அதிர்ச்சியின் உச்சத்தில் சில கணங்கள் இருவராலும் அசைய முடியவில்லை “யதிஈஈ... நீ எங்கே இங்கே? கையில் என்ன கத்தி?”
 
 
அவன் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் வெறியேற அவனை நோக்கிப் பாய்ந்து வந்தாள். பாலா முன்னே வந்து தடுப்பதற்குள் பின் மண்டையில் சுளீர் என்று வலியுடன் நினைவு மங்க அவரருகே சொரூபனும் விழுவது தெரிந்தது.
 
 
முழுமையான மயக்கத்திற்கு செல்ல முன்னர் சொரூபன் அரைக் கண் திறந்து பார்க்க தர்சினியின் கை விரல்கள் அவனை நோக்கி நீள உதடுகள் அதிர்ந்தது தெளிவாக தென்பட்டது. “சொரூபா...”.
 
 
**
 
 
“சொரூபா” யாரோ அவன் கன்னத்தை பலமாய் தட்டினார்கள்.
 
 
அவன் முன்னால் பாலநாதனும் முகத்தை மறைத்து முக்கடிட்ட ஒரு உருவமும் தென்பட “அப்பா அம்மா எங்கே? அவர்கள்” சுற்றும் முற்றும் பார்த்தான். இருண்ட அறை ஒன்றில் அடைத்து வைத்திருந்தார்கள்.
 
 
“ஷ்...” அவன் வாயைப் பொத்தியது அந்த முக்காடு போட்டிருந்த உருவம். “சத்தம் போடாதீர்கள், வெளியே ஆட்கள்” என்றது ஒரு ஆணின் குரல்.
 
 
“இந்த ஜன்னல் வழியே உங்களை ஒரு காரின் டிக்கியில் ஏற்றி விடுகிறேன். நான் திரும்ப வந்து ஞானா வெளியே வாருங்கள் என்று சொல்லும் வரை இருவரும் வெளியவே வரக் கூடாது. அது எவ்வளவு நேரமானாலும் புரியுதா?”
 
 
ஆமோதிப்பாய் தலையாட்டிய சொரூபன் “அம்மா எங்கே?” கவலையுடன் விசாரிக்க “தெரியல, அவரை இவர்கள் இங்கே அழைத்து வரவுமில்லை. ஆனா நீங்கள் இருவரும் வெளியே சென்றால்தான் அம்மாவை தேடவோ காப்பற்றவோ முடியும்” அழுத்தமாய் கூறவே அவர் சொன்னது போலவே செய்தார்கள்.
 
 
ஜன்னலை உடைத்து உள்ளே வந்திருந்தார் அவர். அதன் வழியாய் வெளியேற்றி அருகே நின்ற காரின் பின்புற டிக்கியில் ஒளித்து பூட்டிவிட்டார். சற்று நேரத்தில் கார் கிளம்பியது தெரிந்தது. ஒவ்வொரு கணமும் மணித்துளியாய் கழிய கிட்டத்தட்ட பத்து இடங்களுக்கும் மேல் கார் நின்று நின்று பயணித்தது. யார்யாரோ பேசும் சத்தம் கேட்ட போதும் இருவராலும் அவர்கள் யாரென அடையாளம் காண முடியவில்லை.
 
 
அவர்கள் இருந்த இடமும் தெரியவில்லை போய் சேருமிடமும் புரியவில்லை. சற்றே அசைந்த சொரூபனை தன்னோடு அணைத்துக் கொண்ட பாலாவிற்கு துக்கம் தொடையை அடைத்தது. மணமாகி ஒரு நாள் கூட முடிவதற்குள் இருண்டு விட்ட வாழ்கையை நினைத்து.
 
 
கடைசியாய் கார் ஓரிடத்தில் நிற்க “ஞானா, வெளியே வாருங்கள்” என்ற குரல் கேட்டது. சற்று நேரம் கழித்து கதவு திறந்து கொள்ள இருவரும் வெளியே வந்தார்கள்.
 
 
கடற்கரையின் உப்புக் காற்று முகத்தில் மோதியது.
 
 
பொழுது விடிந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாய் கீழ் வானம் வெளுத்துக் கொண்டிருந்தது.
 
 
“இன்று இந்தக் குடிசையில் இருங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் தந்த விலாசத்தில் இருக்கும் பாட்டியையும் அழைத்துக் கொண்டு வருகிறேன். இலங்கை தூதரகம் திறந்ததும் உங்களை அங்கே விட்டு விடுகிறேன். சரிதானே”
 
 
சொரூபன் முகம் சிந்தனையை காட்ட பாலாவே கேட்டார் “நீங்கள் யார்? எங்களுக்கு ஏன் உதவுகின்றீர்கள்?”
 
 
“நான் யாரென்பது வெளியே தெரிந்தால் உயிருக்கு ஆபத்தாய் முடியும். நிச்சயமாய் உங்களுக்கு கெடுதி செய்யவில்லை. என்னை நீங்கள் நம்பலாம்” என்றார் அவர். முக்கோண துணியினால் முகத்தை மறைத்துக் கட்டி தலையில் தொப்பி, மேலே நீண்ட ஓவர் கோட் அணிந்திருந்ததில் யார் என்னவென்றே அடையாளாம் தெரியவில்லை.
 
 
அங்கங்கே மீனவர் குடிசை இருக்க அருகே நின்ற மீனவ தம்பதிகளைப் பார்த்த அந்த மனிதர் “போலிஸ் பிரச்சனை எதுவுமில்லை. சிலோனை சேர்ந்தவர்கள். இங்கே யாரோ கொல்ல முயற்சிகின்றார்கள்.” அவர்களுக்கு சமாதனம் சொன்னவர் “கொஞ்ச நேரத்தில் உங்கள் பாட்டி வரும் காரில் ஏறிப் போனால் உங்களை எம்பசியில் சேர்த்து விடுவார்கள்.” என்று விட்டு நகரப் போனவரை நிறுத்தினான் சொரூபன்.
“ஒரூ நிமிடம் அங்கிள்” அவர் நிற்கவே “என்னோட அம்மா.. அம்மாவை பார்க்கனும்” என்றான்.
 
 
“அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்?”
 
 
“தெரியல ஆனா யதிக்கு நிச்சயமாய் தெரிந்து இருக்கும்”
 
 
பாலாவின் கண் முன்னே நடந்த விபத்து நிழலாட “சொரூபா அம்மா இல்லடா, அஅந்த விவிபத்து” தடுமாறினார் பாலா.
 
 
“இல்லப்பா யதியை எனக்கு தெரியும். அப்படி ஒரு உயிரை நடுத் தெருவில் விட்டுப் போக மாட்டாள்” உறுதியாய் சொல்லும் போதே கத்தியுடன் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்தது ஞாபகம் வந்தது.
 
 
“அந்தப் பெண்ணின் விலாசம் தாருங்கள்” எனக் கேட்டவரிடம் கூடவே தன் நண்பனின் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்த பாலா “அப்படியே இவருக்கும் தகவல் சொல்லிவிடுங்கள். நம்பிக்கையான நபர்தான்” என்றார்.
 
 
அவர் தன் கடமையை சரியாய் செய்தார் என்பதை நிரூபிப்பது போல் சென்னையில் வசிக்கும் பாலாவின் நண்பர் ராஜேந்திரன் கண்மணிப் பாட்டியுடன் அந்த இடத்திற்கு இடத்திற்கு வந்திருந்தார்.
 
 
நடந்தது அனைத்தையும் நிதானமாய் கேட்டு விட்டு கூறினார் “நம்பிக்கைக்குரிய ஆளாய்தான் தெரிகிறார். கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம். இங்கே வந்த பின்னர், யோகேஸ்வரனுக்கு கொஞ்சம் அரசியல் சப்போர்ட் இருக்கு. அதனால் நேரடியாக முண்ட முடியாது. எனக்குத் தெரிந்த அந்த ஏரியவை சேர்ந்த போலீஸ் இருவரிடமும் சொல்லி இருக்கிறேன். விபத்து தொடர்பாக ஏதாவது கேஸ் வந்தால் சொல்ல சொல்லி”
 
 
சிறிது நேரம் அமைதியில் கழிய கேட்டார் “எதற்காக சொரூபனை மட்டும் கடத்த முயற்சி?”
 
 
“எனக்கும் தெரியல ராஜு”
 
 
“சரி எம்பசியிலும் எதற்கும் சொல்லி வைப்போம்” யோசனையுடன் ராஜேந்திரன் கூற நால்வருமாய் இலங்கை தூதரகத்தை அடைந்தார்கள். அவர்களிடம் நிலைமையை சொல்லி விசாரிக்க கேட்க மூன்று நாளைக்கு முன் நடந்த விபத்தின் போது அம்மாவும் மகளும் இறந்து விட்டதாக வந்து அடையாளம் காட்ட சொல்லிக் கேட்டார்கள்.
 
 
ஆனால் அங்கே சென்ற போது அவர்களின் இறுதிக் கிரியைகளினை அரசாங்கமே செய்திருந்தது. அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன் மற்றும் அங்க அடையாளங்களின் குறிப்பின் படி இறந்தது தர்சினியும் சொரூபியும் தான் என்பது முடிவாக சொரூபனை விட பாலாதான் மிகவும் உடைந்து போனார்.
 
 
அவர் வாய் விட்டுக் கதறியதைப் பார்த்த சொரூபன் தனக்குள்ளேயே இறுகிப் போனான். நினைவு தெரிந்த நாளில் இருந்து தாத்தா இறந்த பின்பும் கூட ஒரு நண்பனாய், வழிகாட்டியாய் கூடவே இருந்தவர் சோகம் அவனால் தாங்கிக் கொல்ல முடியவில்லை. அதே நேரம் அம்மாவும் தங்கையும் இனி தன்னுடன் இல்லை என்பதையும் ஏற்கவும் முடியவில்லை.
“அப்பா இது அம்மாவாய் இருக்காது அப்பா. யதியிடம் கேட்போம். அவள் நிச்சயமாய் காப்பாத்தி இருப்பாள்” பாலாவை கட்டிக் கொண்டான் சொரூபன்.
 
 
அவன் நம்பிக்கையை பார்த்த ராஜேந்திரன் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர்களுடன் கூட வந்த போலிசை பார்த்துக் கேட்டார் “அந்தப் பெண்ணை மட்டும் பார்க்க கூட்டிச் செல்ல முடியுமா? ப்ளீஸ். திரும்பி நாட்டிற்குப் போனாலும் நிம்மதியாய் இருக்க மாட்டார்கள்”
 
 
அவர்களுக்கும் சிறுகுழந்தையாய் அவன் படும்பாடு புரியவே செய்தது. யதியின் வீட்டிற்கும் அழைத்து சென்றார்கள். அன்று அவள் வீட்டிற்கு போகாமல் வந்திருக்கலாம் என்று சொரூபன் எண்ணாத நாளில்லை.
 
 
அவர்கள் சென்ற போது ஏற்கனவே போலிஸ் அவளை விசாரித்துக் கொண்டிருந்தது.
 
 
“அந்த விபத்து நடந்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?”
 
 
“உண்மையை சொல்வதென்றால் நான்தான் காரை ஒட்டி வந்தேன். தெருவில் ஓரமாக நடக்க வேண்டும். தாத்தன் போட்ட ரோடு என்பது போல் நடந்தால் நான் என்ன செய்ய?”
 
 
சர்வ அலட்சியமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பதினான்கு வயது யதீந்திரா.
 
 
உள்ளே செல்ல முயன்றவர்களை சொரூபன் தடுத்து விட அவர்களிடையேயான உரையாடல் முழுமையாக காதில் விழுந்தது.
 
 
“டிரைவிங் லைசன்ஸ் இல்லமால் காரோட்ட உங்களை யார் அனுமதித்து?”
 
 
“எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்ல. மிஸ்டர் ராகவன் அன்று என்னுடைய காரை ஓடியது யார்?” ஏளனமாய் கேட்டாள்.
 
 
“நான்தான் ஓடினேன் மேடம். அந்த விபத்து கூட என்னால் தான் நடந்தது” என்று முன் வந்தான் ஒருவன்.
 
 
“உங்களுக்கு தேவை கைது செய்ய ஒரு அக்யூஸ்ட். நீங்க இவனை கைது செய்யலாம்” அலட்சியமாய் போலிஸ் அதிகாரிக்கு கையாட்டியவள் “டோன்ட் வொர்ரி உன்னோட குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவனிடம்.
 
 
“இந்த வயதிலேயே இவ்வளவு திமிரா? இது நல்லதிற்கில்லை” எச்சரித்தார் போலிஸ் அதிகாரி.
 
 
கண்ணாடியை உடைத்து விட்டது போல் கலகலவென சிரித்தவள் “யோகேஸ்வரனின் மருமகள் நான், எனக்கு திமிர் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம்” தலையை சிலுப்பினாள்.
 
 
“யதிஈ...” என்ற கூவலுடன் வந்து கழுத்தைப் பிடித்தவன் சட்டென தளர்ந்து அவள் தோளைப் பற்றி “எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு ப்ளீஸ். நீ இப்படி செய்திருக்க மாட்டாய் என்ன நடந்தது என்று சொல்லு. ப்ளீஸ் அவர்கள் உயிருடன் தானே இருக்கிறார்கள்” கெஞ்சினால் போல் கேட்டான்.
 
 
“சொரூபன் நீங்கள் எங்கே இங்கே?” தன்னை மீறி ஆச்சரியத்துடன் கேட்டாள். “அவர்கள் குறுக்கே வந்தார்கள். பிரேக் பிடிக்கவில்லை விபத்து நடந்துவிட்டது. என்ன செய்ய? விதி” ஆர்வத்துடன் நோக்கி “அதை விடுங்கள் நீங்கள் எப்படி இங்கே?” விசாரித்தாள்.
 
 
“ஒரு உயிரின் மதிப்பு தெரியல இல்லையா?” வெறுப்பாய் கேட்டான்.
 
 
ஒரு கணம் அவள் கண்ணில் சலனம் வந்து செல்ல “போவோர் வருவோரை எல்லாமா கணகெடுப்பர்கள்” அலட்சியமாய் கூறினாள்.
 
 
“இந்தப் பணம் பதவி எல்லாத்தையும் வைச்சுத் தானே உனக்கு இந்த திமிர். இது எல்லாத்தையும் தூள்தூளாக்கி இந்த திமிரை உடைக்கல. நான் திருஞானசம்பந்தன் பேரனுமில்லை என் பெயர் ஞான மந்திர சொரூபனுமில்லை” அவன் சீறலுக்கு எதிராய் கண்ணில் நீர்.
 
 
அவனுகிருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போக அன்றே இலங்கை திரும்பி வந்துவிட்டார்கள். யாழ்ப்பாணம் சென்றால் கண்மணியும் தர்சினியும் அந்தப் பக்கம் போக சொத்துகள் அனைத்தையும் தாங்கள் எடுத்திருந்தார்கள் அவளின் அண்ணன்கள்.
 
 
திரும்பி வந்த கண்மணியிடம் “விரும்பினால் எங்களுடன் இருக்காலாம். இல்லையா அவனுடனேயே போய் கொள்ளுங்கள்” என்றுவிட்டனர்.
 
 
பாலநாதனின் தொழில் நன்றாக நடந்தாலும், கடந்த இரண்டு வருடமாய் காணியில் இருந்து வரும் வருமானம் என்ற பெயரில் தொடர்ந்து தர்சினிக்கு இங்கேயிருந்து பணம் அனுப்பியதில், பாதிக்கும் மேல் சொத்து கரைந்து போயிருந்தது. அதோடு தர்சினியின் இறப்பில் அவர்தான் மிகவும் இடிந்து போயிருந்தார்.
 
 
அனைத்தையும் யோசித்த சொரூபன் “அம்மம்மா நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சம்பாதித்து விட்டு உங்களை கூட்டிச் செல்கிறேன்” என்ற அவன் வார்த்தையில் கண்மணிக்கு கண்ணில் நீர் சுழன்றது.
 
 
“என் ராசா, இப்படி நடுத் தெருவில் நிற்க விட்டுப் போயிட்டாளே” தன்னையும் மீறி புலம்பிவிட கலங்கிச் சிவந்த கண்களை அவரிடம் மறைத்தவன் “அப்பா பாவம் அம்மம்மா, நொந்து போயிருக்கிறார். இப்போது அவருக்கு ஒரு துணை வேண்டும்” என்றவன் பாலாவுடன் கொழும்பு சென்றுவிட்டான்.
 
 
அவனை நல்ல ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து விட்ட பாலநாதன் அவன் படிப்புக்கு தேவையான செலவுகளையெல்லாம் அவரே பொறுப்பேற்றுக் கொண்டார். வேலை முடித்து வருபவர் நிதானத்தில் வரவே மாட்டார். இத்தனை நாளில் மதுவை கையால் கூட தொடதாவர் குடித்தே அழிந்து கொண்டிருந்தார்.
 
 
“அப்பா ஏன் இப்படி குடித்து உங்களாய் நீங்களே அழித்துக் கொள்கின்றீர்கள்?”
 
 
“பத்தடி தூரத்தில் நின்றவளை காப்பாற்ற வழியில்லாதவன் இல்ல நான்” என்றார், கையிலிருந்த மது கோப்பையை வெறித்து பார்த்தவாறே.  அவர் தன்னைத்தானே வெறுப்பது தெளிவாகவே புரிந்தது.
 
 
‘அவர்கள் குறுக்கே வந்தார்கள். பிரேக் பிடிக்கவில்லை விபத்து நடந்துவிட்டது என்ன செய்ய விதி’
 
 
அவளின் வார்த்தைகள் காதில் ஒலிக்க அவன் கடைசியாய் சபதமிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது. அவர்களை வீழ்த்த வேண்டுமானால் பணம் வேண்டும். அதற்கு வியாபாரம் தான் சரியான வழி. பதினாறு வயது தொடங்கும் போதே வியாபர நுணுக்கங்களை கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பகுதி நேர வேலைக்கு செல்லத் தொடங்கினான்.
 
 
கொழும்பின் பிரதான வியாபார நிலையம் பெட்றா என கேள்விப்பட்டு அங்கு சென்றவனுக்கு யாரிடம் சென்று எங்கு வேலை கேட்பது எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்ற போதே அங்கே வேலை செய்து கொண்டிருந்த நிஷாந்தவை சந்தித்தான்.
 
 
அவனும் தாய் தந்தையின்றி உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் தலை குனிந்து நின்ற உறவுகள் மத்தியில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியுடன் சுற்றிக் கொண்டிருந்தான். சில பேருடனனா உறவுகள் ஏன் எதற்கு என்றே தெரியாமல் அமையும். அதுபோல் எந்தக் காரணமுமின்றி அமைந்த உறவுதான் இருவருக்குமான நட்பு.
 
 
இரண்டாம் குறுக்குத் தெருவில் எலோற்றோனிக்ஸ் பார்ட்ஸ் வாங்கு விற்கும் முல்லா நஸ்ருதீன் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் சேர்ந்தவர்கள் “எங்களுக்கு சம்பளம் வேண்டாம். தொழில் செய்வது பற்றிப் படிக்கவே வந்துள்ளோம்” நேர்மையாக கூறிய இருவரையும் அவருக்கும் பிடித்து விட அவர்களுக்கு அவர் ‘முல்லா நானா’ ஆகிப் போனார்.
 
 
சிறு அறையொன்றில் பத்துப் பேருடன் தங்கியிருந்த நிஷந்தாவை தன்னுடன் இருக்கும்படி வற்புறுத்தி அழைத்து வந்து விட்டான். நிஷாந்த வந்த பின்னர் சொரூபனின் முகத்தில் சிறு புன்னகையையும் இருவரது நட்பையும் பார்த்த பாலா நிஷாந்தவையும் சொரூபன் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்துவிட்டார்.
 
 
ஒரு வருடம் தெளிந்த நீரோடை போல் போய்க் கொண்டிருக்க இருவருக்கும் ஒன்று புரிந்தது. என்னதான் அனுபவம் இருந்தாலும் தொழில் என்று ஒன்று தொடங்குவது என்றால் நிச்சயமாய் முதலீடாக பணம் வேண்டும். அப்பாவிடம் கேட்க மனமில்லை. ஏற்கனவே அவரது சொத்தில் பாதி போய்விட்டது. இருக்கும் சொத்தின் மொத்தப் பெறுமதியும் அவர்களுக்குத் தேவையானதில் பாதியைக் கூட தராது.
 
 
இருவரும் நேரே அவர்களின் நானாவிடம் போய் நின்றார்கள்.
 
 
“உங்கள் முடிவு சரியானதுதான் சொத்துகளை வித்து தொழில் நடத்த முடியாது” சிறிது யோசித்தவர் “இரண்டு வழி இருக்கு. ஒன்று கடன் வாங்குவது” நிதானிக்க “இப்ப நாங்க இருக்கிற நிலமையில உங்களை தவிர யாரும் எங்களுக்கு கடன் தர மாட்டார்கள். உங்களிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. பங்கில் கேட்க சுவர்ட்டி சொத்துகள் இல்லை. இரண்டாவது ஒப்சனை சொல்லுங்கள் நானா” என்றார்கள் இருவரும் கோரசாய்.
 
 
“உங்களுக்காகவே யாரிடமாவது வாங்கியாவது தருவேன். ஆனால் இப்ப நாடு இருக்கிற நிலையில அது இப்ப சரிவராது. அடுத்தது வெளிநாட்டுக்கு போய் உழைப்பது”
 
 
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் “நானா அதற்கும் நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்” என்று காலில் விழுந்துவிட்டார்கள்.
 
 
“டேய் டேய் எழும்புங்கடா” என்று சிரித்தவர் “ஒரு பத்து நாட்கள் பொறுங்கள் விசாரித்து சொல்கிறேன். மத்திய கிழக்கு நாடுகள் என்றால் இலகுவாக கிடைத்து விடும். ஆனால் அங்கு வேண்டாம் வேலை செய்ய மட்டும்தான் நேரம் கிடைக்கும். கொஞ்சம் பெரிய நாடாக பார்க்க வேண்டும் வேலையும் செய்து கொண்டு படிக்கவும் செய்ய கூடிய மாதிரி, விசாரித்து சொல்கிறேன்” என்றார் அவர்.
 
 
இருவரும் சிரித்தவாறே வெளியே வர அவர்கள் முன் நின்றிருந்தாள் யதீந்திரா.
 
 
“சொரூபன் உங்களிடம்” என்று தொடங்க முதலே கன்னத்தில் ஓங்கி ஒரு அறைந்து விட்டான்.
 
 
அதையும் மீறி மீண்டும் “சொரூபன் அதில்ல” என்று எதையோ சொல்ல தொடங்கவே கழுத்தைப் பிடித்துவிட்டான். “உன்னை இங்கேயே கொன்று காலி முகத்திடலில் கரைத்து விடுவேன். ஆனா உன் திமிரை உன் இடத்தில் வைத்து அடக்க வேண்டும் அதற்குதான் உன்னை உயிருடன் விட்டு வைக்கிறேன்.” அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட கேட்கமால் உதறிச் சென்றுவிட்டான்.
 
 
நிஷாந்த, நானா, அந்த தெருவில் வேலை செய்பவர்கள் என்று வீதியே சொரூபனின் இந்த அவதாரத்தை ஆச்சரியத்துடன் நோக்கியது. தானுண்டு தன் வேலையுண்டு என்று திரிபவன், ஒருவரிடம் மரியாதைக் குறைவாக கதைத்துப் பார்த்ததில்லை, அப்படிப்பட்டவன் இன்ற ஒரு பெண்ணிடம் நடந்து கொண்ட முறை அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
 
 
திகைத்துப் போய் நின்ற நிஷாந்த “மச்சா” என்று அவன் பின்னால் ஓட முல்லா நானா ஆராய்ச்சியாய் அந்தப் பெண்ணை நோக்கினார்.
 
 
***
 
 
பின்னால் ஓடிய நிஷாந்த அதிர்ச்சியுடன் கூவினான் “மச்சா ரத்தம்”
“ஷ்... கத்ததேடா, அது டென்சன் ஆனதால் வருது” என்றவன் சினம் இன்னும் அடங்கவில்லை.
 
 
“அப்படி என்ன மச்சா கோபம். ஒரு பொம்பிளை பிள்ள கழுத்தை பிடிக்கிறளவு?” ஆச்சரியத்துடன் கேட்க நடந்த அனைத்தையும் மறைக்கமால் அவனிடம் கூறிவிட்டான். அதிலும் ஒரு நன்மையாய் மனம் சற்று லேசானது போலிருந்தது.
 
 
ஐந்து நாள் கழித்து இருவரையும் அழைத்த முல்லா நானா “எனது நண்பர் ஒருவர் ஏஜென்சி வேலை செய்யுறார். உங்களைப் பற்றிக் சொன்னேன். எனக்காக உதவி செய்வதாக சொன்னார். இருவருக்கும் சேர்த்து மொத்தமாக பத்து லட்சம் கொடுக்க வேண்டும்” என்றதைக் கேட்ட இருவருக்கும் முகம் விழுந்துவிட்டது.
 
 
எண்பதுகளின் முடிவில் இலங்கையில் ஒரு பவுனே ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரத்துக்குள் தான் இருந்தது. பத்து லட்சம் என்பது மிகப் பெரிய தொகை.
 
 
கையாட்டி மறுத்தவர் “பணம் இப்போது கொடுக்கத் தேவையில்லை. நான்தான் சொன்னேனே எனக்கு மிகமிக நெருங்கிய நண்பர். உங்களை லண்டன் அழைத்துச் சென்று தங்குவதற்கு இடம், அசைலம் கேட்பது, அதற்குரிய லோயர் சார்ஜ் எல்லாம் அவரே பார்த்துக் கொள்வார். ஆனால் அங்கே போய் ஒரு வருடத்தினுள் பணத்தை கொடுத்து விட வேண்டும்.” என்றார் கண்டிப்பாய்.
 
 
இருவருக்கும் பேச வாய் வரவில்லை. தலையை மட்டும் அசைத்து வைத்தார்கள்.
 
 
“மச்சா நான் சமைச்சிட்டேன் மறக்கமா சாப்பிட்டுப் படு” தூங்கி வழிந்த சொரூபனை பார்த்து கத்தினான் நிஷாந்தா. அவரகள் லண்டனில் செட்டில் ஆகி கிட்டதட்ட பத்து வருடமாகியிருந்தது. பார்ட் டைமில் எம்பிஏ படித்து நினைத்து போல் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார்கள்.
 
 
இலங்கையில் இருவர் பெயரிலும் பெரிய அளவில் காமர்ன்ஸ் தொடங்கி ஐரோப்பிய நாடுகளுகளில் உள்ள கம்பனிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் கார் பார்ட்ஸ் தயாரித்து ஜெர்மனியின் சில கார் கம்பனிகளுக்கு சப்ளை செய்யத் தொடங்கியிருந்தார்கள். அடுத்த ஐம்பது வருடத்திற்கு அவர்கள் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு விட்டு நேற்று காலைதான் இருவரும் லண்டன் திரும்பியிருந்தார்கள்.
 
 
வந்ததும் ஓய்வு எடுக்க முடியாதபடி அவனின் மாமா மகள் கல்யாணியுடன் அவன் சம்மதத்தை கேட்கமாலே சம்மந்தம் கலக்க போவதாக கேள்விப்பட்டவன் நேரே கன்வேண்டரி சென்றிருந்தான். நாட்டு பிரச்சனையில் அவர்களும் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து இருந்தார்கள்.
“வாங்க தம்பி” வரவேற்ற மாமாவை துச்சமாய் பார்த்தவன் கல்யாணியிடம் திரும்பினான் “விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீர் என்னுடைய மச்சாள் உமக்கும் எனக்கும் எந்த பிராச்சனையும் இல்ல. உம்மை கல்யாணம் செய்ய என்னால் முடியாது. இல்ல என்னைத்தான் கல்யணம் செய்யணும் எண்டு பிடிவாதம் பிடித்தீர்...” நிதானித்து பார்த்தவன் கண்களில் இருந்த கணலில் மாமன் மகள் திகைத்து நிற்க தொடர்ந்தான் “நீர் ஜிஎம்எஸ் ஐ பார்க்க வேண்டி வரும்”.
 
 
மாமாவிடம் திரும்பி “அம்மம்மாவுக்காக உங்களை எதுவும் செய்யவில்லை. உங்கள் எல்லையை மீறி வந்தால்....” முடிக்கவிட்டாலும் அவன் எச்சரிக்கையில் நாளத்திலேயே குருதி உறைந்தது.
 
 
அங்கிருந்தே கண்மணிக்கு அழைத்துக் கேட்டான் “என்ன அம்மம்மா இதெல்லாம்?”
 
 
“ஒரு அவசர ஆபத்துக்கு சொந்தம் வேண்டும் அப்பன்”
 
 
“சொந்த தங்கையின் மகனை நடுத்தெருவில் விட்ட இவர்களா?” கோபமாய் கேட்டவன் கூற்றில் இருந்த உண்மையில் மாமாவும் மச்சாளும் தலை குனிந்து நிற்க அமைதி காத்தார் கண்மணி.
 
 
“அம்மம்மா கனக்க யோசியதீங்க. சீக்கிரமே நல்ல உறவுகளுடன் கூடிய பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்கிறேன். ஆனா அதற்கு முன் எனக்கு ஒரு வேலை இருக்கு” அதை முடிச்சிட்டுதான் எதுவானாலும்” உணர்ச்சியற்ற அவன் குரலில் மறைந்திருந்த வலிகள் அவருக்கும் விளங்கவே செய்தது.
 
 
***
 
 
நிஷாந்த ஊற்றி வைத்திருந்த தேனீர் கோப்பையுடன் வெளியே வந்து பார்த்தான். லண்டனில் இருந்த கட்டிடங்களுக்கு மேலாய் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. இங்கே ஸ்திரமாய் காலூன்றிவிட்டான். அடுத்த ஒரு பத்து வருடத்திற்கு இங்கே இருக்கும் கம்பனியை நன்றாய் நடத்தினாலே போதுமானது.
 
 
அடுத்த அடி இந்தியாவில் எடுத்து வைக்க வேண்டும்.
 
 
ஒரு வாய் தேநீரை குடித்தவன் கண்களிலும் உதட்டிலும் வஞ்சகப் புன்னகை தவழ்ந்தது. “யதி அலைஸ் யதீந்திரா, இட்ஸ் ரைஸ் ஒப் யுவர் டவுன்ஃபால் நொவ்”.
 
 

Share: