உன்னை நான் யாசிக்கி...
 
Share:
Notifications
Clear all

உன்னை நான் யாசிக்கின்றேன்

Posts: 49
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 16

 

கரண் புருவத்தை சுருக்கி யோசனையில் ஆழ்ந்ததை பார்த்த சன்விதா புன்னகையுடன் அருணை பார்த்து கூறினாள் "உங்கள் ரூட் கிளியர் ஜிஜு "

"என்னோட ரூட்..." புருவத்தை உயர்த்தினான் அருண். 

அதற்குள் ஜூஸ் கிளாஸுடன் அருகே  வந்த ஆகாஷ் கால் இடறி(!) மாதவானுக்கு ஜூஸ் அபிஷேகம் செய்து முடித்திருந்தான்.  ஆகாஷ் கால் இடறுவதை பார்த்துவிட்டு சட்டென மானஸாவை அருண் தன் பக்கம் இழுக்க ஜூஸ் அபிஷேகத்திலிருந்து அவன் காப்பாற்றப்பட சன்விதா மேசையில் சோஸ் ஊத்தி தயாராக வைத்திருந்த டிஸ்ஸுவை மாதவனிடம் துடைக்க கொடுத்தாள்.

"அச்சச்சோ புல்லா கொட்டிடுதே இந்தாங்கோ துடையுங்கோ" போலியாய் அலங்காலய்த்தவாறு கொடுத்தாள். நடந்த கலவரத்தில் அச்சுதனை தவிர வேறு எவரும் கவனிக்கவில்லை. ஆனால் அவனுக்கு தான் தடுக்கும் எண்ணமும் இல்லையே வாங்கி முகத்தை துடைத்திருந்தார் மாப்பிள்ளையார்.

"எரியுதே எரியுதே" கத்தினான் மாதவன். கண்ணில் மட்டுமில்லாமல் மூக்கிலும் நன்றாக பட்டிருந்தது. அதற்குள் அச்சுதன் கண்ணசைவில் ஆகாஷ்  அருகே இருந்த செக்யூரிட்டி மூலம் அவனை வாஷ் ரூம் அழைத்து சென்று விசேட கவனிப்பு கொடுக்க சொன்னான். 

"இது அதிகமில்லை" கரண் அருண் இருவரும் கோரஸாக கேட்க

"என்ன தைரியம் இருந்தா அக்காவை அதட்டுவான்"

"என்ன தைரியம் இருந்தா சன்வியை அதட்டுவான்"

அச்சுதன் சன்விதா இருவரும் கோரஸாக சினந்தார்கள்.

வெறும் அதட்டலுக்கு இவ்வளவு அலப்பறையா இரண்டும் நல்ல சாடிக்கேத்த மூடிதான் என்று மனதில் நினைத்தவாறு மீதி மூவரும் தலையில் கைவைத்தனர். ஆனாலும் அவர்களுக்கே சன்விதாவை மனநிலை சரியில்லை என்று கூறியது சிறிது கூட பிடிக்கவில்லை எனவே அதை பற்றி மேற்கொண்டு எவரும் பேசவில்லை.  

அதற்குள் ஆகாஷ் "மேசை தயார்" என அச்சுதனிடம் வந்து அறிவித்தான். கரணிடம் திரும்பி "வி காண்ட் யூஸ் திஸ் டேபிள் எனிமோர் சோ" அருகேயிருந்த இன்னொரு மேசையை கை காட்டினான் அச்சுதன்.

அதில் சாப்பாடு தயாராக காத்திருந்தது. கரனும் மானசாவும் தயங்கியவாறு நிற்க "பீச் போகலையா?" என்று மூக்கை சுருக்கினாள் சன்விதா. "இன்று காலையில் இருந்து ஒரு நிமிடம் கூட ஓய்வில்லை பசிக்குது சாப்பிடலாமே" சற்று சன்விதா புறம் குனிந்து கெஞ்சலாக கேட்டான் அச்சுதன்.

நிமிர்த்து சில கணங்கள் அவன் முகத்தையே பார்த்தாள் சன்விதா.

கடந்த வாரம் முழுதுமான அலைச்சலும், நேற்று இரவு முழுதும் உறங்காததும் தொடர்ந்த வேலைகளிலும் காலையில் இருந்து அவளை பார்க்காமல் உணவை ஏற்க மாட்டேன் என மனதின் அடத்திலும் களைப்பும் சோர்வும் முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும் ஒட்டியிருந்தது. உண்மையில் களைத்து போயிருந்தான் அவளை சந்திப்பதற்காக ஓய்வின்றி மீட்டிங் அனைத்தையும் ஒரே மூச்சில் முடித்ததில் அவன் உடல் அவனிடமே கெஞ்சி கொண்டிருந்தது என்னை கொஞ்சம் உறங்கவிடேன் என்று.

அதற்கு மேல் அவனிடம் வம்பு வளர்க்க மனமின்றி கரணை பார்த்து தலையசைத்தாள். சரியென அனைவரும் கைகழுவ செல்ல சட்டென அவள் கன்னத்தில் காதருகே இதழ் பதித்து அவனும் கை கழுவ செல்ல அதே இடத்தில் சிலையாய் உறைந்திருந்தாள் சன்வி.

திரும்பி வந்த மானஸா அவளை பிடித்து உலுக்கி கேட்டாள் "சாப்பிடல" ஒரு கணம் விழித்தவள் "ஆ... சாப்பிடலாமே... சாப்பிடலாம்" மானஸாவை அருகே இருத்தியவள் மறுபுறமாய் அவள் அமர்ந்தாள். வரும்போதே கவனித்து கொண்டு வந்தவன் "உமாகரன்... நீங்க எங்க ஒர்க் பண்றீங்க" அழைத்து அவனிடம்  பேச்சு கொடுத்தவாறே சன்விதாவின் அருகே அமர்ந்தான்.

நமது ராஜா தந்திரங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என அவனை பார்த்து விழித்தவளை நோக்கி "மீண்டும் சங்கீத கதிரை விளையாடினாய் மடியில் இருந்து தான் சாப்பிடனும்" செல்லமாய் மிரட்டினான்.

மூக்கை சுளித்து விரலால் தேய்த்துவிட்டவள் சாப்பிட தட்டை எடுத்தவள் விழிகள் வட்டமாக விரிந்தன.

அவளுக்கு விருப்பமான அனைத்தது ஐட்டமும் இருந்தது பாணி பூரி, குளோப் ஜாமூன், ஜிலேபி, ரசகுல்லா மற்ற உணவு இருந்தாலும் அவள் கண்கள் அதையெல்லாம் கணக்கே எடுக்கவில்லை "ம்ம்ம் யம்மி" என்றவளை கரணின் குரல் இடையிட்டது "சாப்பாட்டுக்கு பிறகுதான் அது, முதல்ல சாப்பிடு"    

கரண் கண்கள் உணவு மேஜையை வட்டமடிக்க ஆகாஷை பார்த்தவன் விரலால் வட்டமிட்டு காட்டி "இதெல்லாமா இந்த கஃபேயில் விற்கிறார்கள்?" என கேட்க ஆகாஷ் அச்சுதனை பார்த்து விழித்தான். அச்சுதனே தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தட்டில் உணவை போட்டு சாப்பிட தொடங்கினான். 

பெயருக்கு பிரியாணியை லேசாக கொறித்து ஓரம் கட்டியவள் பாணி பூரியை ஒரு கை பார்க்க தொடங்கினாள். அப்போது தான் கவனித்தாள் அச்சுதன் சாப்பிட்ட வேகம் இவ்வளவு பசியுடனா இருந்தான். "மெதுவா யாரும் உங்கள் சாப்பாடை பறிக்கல, விக்கிரும்"

"ஹங்கிரி" ஒரு வார்தையுடன் தொடர்ந்தான்.

அவள் சுற்றி மற்றவர்களை பார்க்க அருண் லேசாக கலங்கிய கண்களை திருப்பினான். "என்னாச்சு" கரண் கேட்டதற்கு எதுவும் பேசாமல் தலையசைத்தான். சன்விதாவோ ஆகாஷையும் அருணையும் மாறிமாறி பார்த்தாள். பார்வையே கேட்டது ‘உங்கள் அலுவலகத்தில் சாப்பாடு கூடவா வாங்கி கொடுக்க மாட்டீர்கள்’. இப்போது இருவரும் சேர்ந்து அச்சுதனை முறைத்தார்கள் ‘சாப்பாடு வாங்கி கொடுத்தால் கண்டு கொள்வதே கிடையாது இப்ப காணாததை கண்ட மாதிரி சாப்பிடுறான் பார்’ மனதினுள் அபிஷேகம் செய்து வைத்தார்கள்.

அருகே இருந்த டிஷ் ஒன்றை எடுக்க முயல சன்விதா எடுத்துக் கொடுத்தாள். அதிலிருந்து அதை எடு இதை போடு என்று ஒரு வழி பண்ணிவிட்டான். இடையில் அவன் தொல்லை தாங்காமல் அவள் முறைக்க, ‘அவளையும் சாப்பிட விடுடா’ மனசாட்சி இடிக்க, அவள் பரிமாறுவது எனக்கு பிடிக்குதே என அதனிடம் சப்பைக்கட்டு கட்டினான். அதன் பிறகு அவள் பாணி பூரி உண்டதை விட அவனை கவனித்தது தான் அதிகம் முறைத்தவாறுதான்.

சாப்பிட்ட பின்னர் ஐவரும் சேர்ந்து சிறிது நேரம் அந்த மாலினை சுற்றி வந்தார்கள். தீடிரென  அச்சுதன் கேட்டான் "என்னிடம் என்ன பேச வேண்டும் உமாகரன் "

"ஹ்ம்ம்....." கரன் சுற்றும் முற்றும் பார்த்தவன் சன்விதா மானஸா இருவரும் கார் ரேஸ் கேம் விளையாட ஆகாஷ் துணையாக நின்றதுடன் தானும் அவனும் தனியாக இருப்பது புரிந்தது. 

சற்று தூரத்திலிரருந்து அருண் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

உதட்டை கடித்த உமாகரண் "உங்களையும் சன்வியையும் பற்றி பேசனும்" என்றான்.

"ம்ஹூம் சொல்லுங்கள்"

"உங்கள் பழக்க வழக்கம் அவளுக்கு சரி வராது பிறகும் வற்புறுத்தினால் உங்களுடன் அவளால் மகிழ்ச்சியாய் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அவள் அப்படி மகிழ்ச்சியின்றி இருந்தால் உங்களால் தாங்கி கொள்ள முடியுமா?"

ஒரு கணம் அதிர்ந்த அச்சுதன் எதிரில் இருந்தவனை கூர்ந்து நோக்கினான். இதுவரை இதை பற்றி பேசிய அனைவரும் வடிவேலின் அதுக்கு நீ சரி வரமாட்டா என்பது போல் அவனை தான் சொன்னார்கள். அவளுக்கு நீ சரி வரமாட்டா என்று ஆனால் இவன் அவளை வைத்தே எனக்கு கிடுக்கு பிடி போட்டுவிட்டான். இவன் பார்வைக்கு சாதாரணமாகத்தான் தெரிகிறான் ஆனால் ஆள் கில்லி.

"சோ என்னோட கடந்த காலம் உங்களுக்கு பொருட்டில்லை, இல்லையா?" இவன் தடுக்கில் நுழைந்தான்.

"உங்கள் கடந்த காலம், சன்வி விரும்பியபடி இருந்திருந்தால் கூட இதே கேள்வியை நான் கேட்டிருப்பேன்" அமைதியாய் பதிலளித்தவன் "ஆனால் என் கேள்விக்கு இது பதிலில்லையே"

ஒரு கணம் கண்மூடி அமைதியாய் இருந்தவன் "எனக்கு நம்பிக்கை இருக்கு அவளை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும்". உமாகரனை நேர் கொண்டு நோக்கிய அச்சுதன் கண்களில்  உறுதியுடன் பார்த்தான்.

அதற்குள் ஓடிவந்த சன்வி "காயின்ஸ் தாங்கோ ஜிஜு" அவளுக்கு கொடுத்து விட்டு மீண்டும் அவர்களை பார்த்த போது அச்சுதன் கரண் கையில் சத்தியம் செய்வது போல் கை வைத்திருக்க அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் உமாகரண்.

அதற்கு பின் அவர்கள் பெரிதாக பேசி கொள்ளவில்லை. சன்விதா ஆகாஷ் அருணுடன் சிரித்து பேசுவதையும் விளையாடுவதையும் தூரத்தில் இருந்து ரசித்து கொண்டிருந்தான் அச்சுதன். அருணுடன் பேசிக் கொண்டிருந்த கரண் அவன் எங்கோ பார்த்து உதட்டை கடிக்க அவன் பார்வையை தொடர்ந்தவன் கண்களில் கால்களை நீட்டி இருக்கையில் சாய்ந்து சேர்வாய் தென்பட்டுக் கொண்டிருந்த அச்சுதன் விழுந்தான். இது என்ன பிடிவாதம் மனதினுள் நினைத்தவன் "நாம் கிளம்பவோமா?" அருணிடம் கேட்க ஒரு கணம் அவனை கூர்ந்து நோக்கிய அருண் சிறு புன்னகையுடன் தலையசைத்தான்.

சன்விதாவை கிளப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்னும் ஒரு கேம் அங்கே போவோம் இங்கே போவோம் என்று உயிரை எடுத்துவிட்டாள்.

"உன் ஹாண்ட் பாக் வேணாமா?" முன்னே அனைவரும் நடந்து கொண்டிருக்க சற்று பின் தங்கிய அச்சுதன் கேட்டான். அவன் கைகளில் நேற்று தொலைத்த அவளது ஹாண்ட் பாக் இருந்தது. அதை வாங்க போக கொடுக்காமல் போக்கு காட்டினான். கோபத்தில் முறைத்தவள் அதை பறித்து கொண்டு காரை நோக்கி விடுவிடுவென நடந்தாள். 

மென்மையாய் சிரித்தாவாறே பின் தொடர்ந்தான் அச்சுதன்.

பார்க்கிங் விட்டு வெளியில் வரும் வழியில் அருண் அச்சுதன் இருவரும் காரில் சாய்ந்தவாறு நிற்க கரண் காரை நிறுத்தி என்னவென்று விசாரித்தான். அருணே பதிலளித்தான் "கார் பிரேக் டௌன் ஆகிட்டு மெக்கானிக் வர லேட் ஆகும் வீட்டிலிருந்து கார் வரும் அதான் வைட்டிங்."

"ஓலா புக் பண்ணலாமே" என கேட்டவனுக்கு "செக்யூரிட்டி பர்போஸ்" சுருக்கமாய் பதிலளித்தான் அருண். மீண்டும் ஒரு தடவை அச்சுதன் பக்கம் பார்வையை திருப்ப கண்களால் சன்விதாவை கபளீகரம் செய்து கொண்டிருந்தான் அவன். வாய்க்குள் "பக்கி" என திட்டியவன் "எவ்வளவு நேரம் எடுக்கும்" கேட்டான்.

"எப்படியும் வன் டு டூ ஹாவொர்ஸ் எடுக்கும், பார்ப்போம் அதற்குள் வேறு யாராவது அருகில் ஆஃபிஸில் வேலை செய்பவர்கள் கார் கிடைத்தால் போகலாம்" அருணும் திரும்பி நண்பனை கவலையுடன் பார்த்தான். போக்குவரத்து நெரிசலான நேரம் வர இரண்டு மூன்று மணித்தியாலம் போக இரண்டு மணித்தியாலம் மொத்தமாக ஐந்து மணி நேரம்.

ஸ்டேரிங் வீலில் விரல்களால் தாளமிட்ட கரண் கேட்டான் "எங்களுடன் வருவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா?" சன்விதா கண்கள் தெறித்து விடும் போல் பார்த்தாள் இல்லை முறைத்தாள். அருணின் முகம் மலர்ந்தது  திரும்பி நண்பனை பார்க்க அவன் எங்கே அவர்களை கவனித்தான்.

ஆனாலும் கேட்பதற்கு முன் சொன்னான் "போகலாம்"

கரண் காரை செலுத்த முன்னிருக்கையில் அருண் அமர்ந்திருந்தான். பின்னே சன்விதா நடுவில் அமர இரு பக்கமும் அச்சுதனும் மானஸாவும் அமைந்திருந்தார்கள். சற்று நெருக்கத்திலேயே அமர்ந்து இருக்க சன்விதாவுக்கு தான் ஏதோ போல் இருந்தது.

காரில் ஏறி முப்பது வினாடிகள் கூட இருக்காது காலை நீட்டி சாய்ந்து அமர்ந்தவன் விழிகள் மூடிக்கொண்டது. கண்களை மூடியவாறே அருகே இருந்த சன்விதாவின் கரத்தை கைகளில் எடுத்தான். ஏற்கனவே அவன் நெருக்கத்தில் அவதியில் இருந்தவள் நெளிந்து கையை விடுவித்து கொள்ள முயன்றாள்.

"றோஸ், ப்ளீஸ்" சத்தமின்றி அசைந்தது அவன் இதழ்கள்.

அதற்கு மேல் கையை அவனிடம் கொடுத்துவிட்டு அமைதியாய் இருந்தாள். சற்று கலைந்திருந்த கேசம் அவன் நெற்றியில் சரிந்து விழுந்திருக்க அதை ஒதுக்கி விட தூண்டிய உணர்வை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள் சன்விதா. சுழித்திருந்த நீண்ட புருவத்தின் கீழ் பெண்களை போல் நீண்ட இமைகளுடன் மூடியிருந்த கண் விழிகள் அமைதியின்றி இங்கும் அங்குமாய் அலைய மெதுவே அவன் கைகளை அழுத்தினாள்.  அந்த சிறிய அழுத்தமே போதும் என்பது போல் புருவநெரிப்பு வெளிப்படையாகவே நீங்க அவன் உடல் தளர்ந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். பயணம் முழுதும் அவன் முகத்தை விட்டு அவள் பார்வை அகலவில்லை. 

கரண் கண்ணாடி வழியே இருவரையும் கவனித்தான். இவ்வளவு சோர்வாய் இருந்தால் ஓய்வு எடுப்பது தானே ஏன் இந்த அலைச்சல். அவ்வளவு தூரம் பிடிக்குமா இவளை உதட்டை கடித்தவன் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.

இன்று அவனுக்கு உறக்கத்திற்கு எழுதவில்லை என்பது போல் போன் சிணுங்கியது. உறக்கம் கலைந்தவன் எடுத்து காதில் வைத்தான் "ஹலோ... ஆ அக்கா வீட்டிற்குத்தான் வாரேன்" சொல்லவும் கரண் காரை வீட்டின் முன் நிறுத்தவும் சரியாக இருந்தது.  

"பை" என்ற ஒரு வார்தையுடன் இறங்கியவனுடன் சேர்ந்து இழுப்பட்டால் சன்விதா. "ச்சு கையை விடுங்கள்" மெல்லிய கோபத்துடன் முறைக்க பின் கழுத்தை வருடியவாறே கீற்றாய் புன்னகைத்து அவள் கைகளை அழுத்தி விடுவித்தவன் "நாளை சந்திப்போம்" விடைபெற்றான்.

உதட்டை சுளித்து மனதினுள் தாளித்தாள் 'பெரீய்ய்ய்ய்ய காதல் மன்னன்'

அச்சுதனை பார்த்து குடித்த தேநீர் கோப்பையை கீழே போட்டுவிட்டு அவசரமாய் வந்து கதவை திறந்த அந்த வயதான வாட்ச்மேன் சன்விதாவையும் கரணையும் பார்த்து வாய் பிளந்தார். முறையாக நன்றி சொல்லி விடைபெற்று அவர்களை அனுப்பிவிட்டு வந்த அருண் கேட்டான் "என்ன ஐயா அப்படி பார்க்கிறீங்க?"

"அவர்கள் தான் அன்று தம்பிக்கு அடிபட்ட போது அழைத்து வந்தவர்கள்" அவர் சொல்லவே அதிர்ந்து நின்றான் அருண். "உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?" உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் கேட்கவே அவர் "நிச்சயமாக தெரியும், ஆனா அந்த மற்ற பெண்ணை சரியா பார்க்கல"

சரி என தலையசைத்து அவரை அனுப்பியவன் சிந்தனையில் ஆழ்ந்தான். ‘அன்று கேட்டதற்கு ஞாபகம் இல்லை என்றான் பின் எப்போது எப்படி தேடி கண்டுபிடித்தான். இல்லையே சன்வியை கோவிலில் பார்த்தாக தானே சொன்னான். இன்று கரனுடன் நன்றாக தான் பேசினான் அப்படியானால் ஞாபகம் வந்திட்டா. வந்தா ஏன் சொல்லல, யோசனைகளை அலைபாய அவனிடம் கேட்டுவிடுவோம்’ என்று உள்ளே போய் பார்த்தவனுக்கு புன்னகை அரும்பியது. கால் ஷூவை கூட கழற்றாமல் கட்டிலில் விழுந்து உறங்கியிருந்தான்.  

அவனது வேலையின் பொறுப்பு யாருக்கு தெரிகின்றதோ இல்லையோ அருணுக்கு தெரியும் தனி ஒருவனாக எவ்வளவு தூரம் களைத்து போகின்றான் என்று அதிலும் இந்த வாரம் முழுவதும் ஓய்வு என்பதே கிடையாது என்றே சொல்லலாம். அவன் ஷூவை கழட்டியவன் ஏசியை அதிகரித்து போர்த்திவிட்டவன் முகத்திலிருந்த அமைதியை பார்த்து அவனுக்கு கூறுவது போல் தனக்கு தானே கூறிக்கொண்டான் "இந்த அமைதிக்காகவாவது நீ ஜெயிக்கணும்டா, உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் தான்"

நண்பனுக்காக உலகத்தை எதிர்ப்பவன் காதலியையும் எதிர்ப்பானா?

Reply
Posts: 49
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago

யாசகம் ♥ 17

"எல்லாம் உன்னால தான்" மறுபடியும் மணியுடன் சண்டைக்கு தயாராகி கொண்டிருந்தாள் சன்விதா "என்ன இந்த தடவையும் ஓடி விழுந்திருவாள் என்று கனவோ நடக்காதுடி….." என்றவள் நின்ற இடத்திலேயே காற்றில் எம்பி அடிக்க முயன்று இலகுவாகவே மணியை அடித்தவள் கலீரென்று சிரித்தாள். என்ன இன்னும் கீழே விழல திடீரென எழுந்த சந்தேகத்தில் கீழே குனிந்து பார்க்க அவளது சிற்றிடையை தூக்கி நின்றிருந்தான். அவன் அச்சுத கேசவன். துள்ளி அவன் கைகளில் இருந்து விலகியவளின் கழுத்திலிருந்த புத்தம் புதிய தாலி அவன் முகத்தில் விழுந்து அவள் நெஞ்சில் வந்து மோதியது …

சட்டென எழுந்து அமர்ந்து கழுத்தை சுற்றி கைகளால் தடவி தேடியவளுக்கு அது கனவு என்று புரியவே முழுதாக ஒரு நிமிடம் எடுத்தது.  அருகே படுத்திருந்த மானஸாவை எழுப்ப மனமின்றி அறையை விட்டு வெளியே வந்தவள் மேஜையிலிருந்த தண்ணீரை அருந்திவிட்டு தலையை பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள். கனவின் தாக்கமா என்னவென்று தெரியாமல் வேர்த்து வழிந்தது.

மனம் கண்ணனிடம் முறையிட்டது 'என்ன கண்ணா  இது, கனவில் ஆட்கள் தெரிவார்கள் சில சமயம் நிறம் கூட தெரியும் உணர்வுமா அதே போல் இருக்கும்….? அன்று கோவிலில் அந்த முகம் தெரியாதவனிடம் வந்த அதே உணர்வு. அச்சுதனுக்கும் கோவிலில் பார்த்தவனுக்கு என்ன தொடர்பு?, இல்லை நித்தமும் அவனை பார்ப்பதால் இப்படியெல்லாம் தோன்றுதா?’ மனம் எதையெதையோ சிந்திக்க வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

மெதுவே எழுந்து ஹாலில் அழகாய் மூடி வைக்கப்பட்டிருந்த அதை திறந்தாள். சிறிது நேரத்தில் அந்த இடமே மெல்லிய வீணையின் நாதத்தில் நிரம்பி வழிந்தது.

கண்ணன் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

♥♥♥♥♥

அடுத்த நாள் அலுவலகத்தினுள் வந்தவள் தனது மேஜையை காணாமல் தேடினாள். மேசையில் உள்ள பொருள் காணாமல் போகும் மேசையேவா காணாமல் போகும். அதற்குள் அங்கே வந்த HR "மேம் உங்கள் மேஜை சார் சேம்பர்ல போட்டுருக்கு" பணிவுடன் அறிவித்தார். 

"ஏன் இந்த சரவணனுக்கு என்ன நடந்தது" மெல்லிய சினத்துடன் கேட்டாள்.

பணிவாய் பதிலளித்தார் "சரவணன் சார் இல்லம் மேம் AK சார்"

"AK.....! ஹான் மிஸ்டர் அச்சுத கேசவன்" போக காலெடுத்தவள் "ஒரு நிமிடம் உங்களுக்கு என்ன நடந்தது"

"நல்லவேளை என்னோட மேசையை மாத்தல" பெரிதாய் நிம்மதி பெருமூச்சு ஒன்றினை விட்டார்.

"ச்சு அதில்லை என்னை ஏன் நீங்கள் மேம் என்று அழைக்கிறீர்கள்"

"இதுவும் AK உத்தரவு அவருக்கு கொடுக்கும் மரியாதை அவரது பிஏவுக்கும் கொடுக்க வேண்டுமாம்"

"ஓஹ் ரியலி" பல்லை கடித்தாள். இந்த ஜித்தன் என்ன நினைத்து கொண்டிருக்கிறான்.

மனதினுள் வழமை போல் வறுத்தவள் நேரே அவனது அறையில் போய் நின்றாள்.

அச்சுதன், சரவணன் அர்ஜுன் அருண் என நால்வரும் அங்கே எதையோ விவாதித்து முடித்து அச்சுதனை தவிர மீதி மூவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். புயலாய் உள்ளே வந்தவள் அவர்களை அலட்சியம் செய்து ""மிஸ்டர் அச்சுத கேசவன்" கைகளை மேசையில் ஓங்கி அடித்தாள்.

"அவுச்" அவசரப்பட்டுட்டியே சன்வி இப்படியா செய்து வைப்பாய் ஏற்கனவே இவனால் பல்லு போயிரும் போல இருக்கு இப்ப கையும் போச்சா அவள் மூளையே அவளை கேலி செய்தது.

வேகமாக அருகே வந்த அச்சுதன் சிவந்த உள்ளங்கையை பார்த்தது "ஒன்றை செய்ய முன் யோசிக்க மாட்டாயா?" கடிந்தவாறே இதமாக உருவிவிட்டான்.  சன்விதா குனிந்து கையை பார்த்தவள் நிமிர்ந்து அவனையும் பார்த்தாள். அவன் பேச்சுக்கு எதிராக கை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. 'ஏற்கனவே கனவால் ஒரு பிரச்சனை போய்ட்டு இருக்கு, இப்ப கண்ணை பார்த்து வில்லங்கத விலைக்கு வாங்கதே கண்ணை பார்க்காத கண்ணை பார்க்காத பார்த்துட்டாளே' மூளையின் எச்சரிக்கையையும் மீறி பார்த்தாள். பார்த்து கொண்டிருக்கும் போதே எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே ஏன் இந்த உணர்வு புரியாமல் அவன் கண்களில் தொலைந்து கொண்டிருந்தாள் சன்விதா.

கையை உயர்த்தி அவள் உச்சி முடியுடன் விளையாடியவன் சுட்டுவிரல் பக்கவாட்டில் அவள் முகத்தை அளவிட்டு நாடியில் நின்றது. அவன் தொடுகையில் வெட்கம் ஒரு சிவப்பு புள்ளியாய் கன்னத்தில் தோன்றி முகம் முழுவதும் பரவியது. சன்விதாவுக்கு மூச்சு எடுக்கும் முறை மறந்தது சற்று குனிந்தாள். ஒரு விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை ஊடுருவியவனாய் மென்மையாக அழைத்தான்.

"சன்வி"

"ஹ்ம்ம்"

"சன்வி அது"

"ஹ்ம்ம்"

அவன் ஓரடி நெருங்க அவள் ஓரடி பின்னே சென்றாள். சில அடிகளில் பின்னே சுவர் தட்டுப்பட அவள் முன்னால் நெருக்கத்தில் நின்றான் அச்சுதன். அவன் வெப்ப மூச்சு அவள் கன்னத்தை மேலும் சிவக்கடிக்க ஒரு பக்கமாக தப்ப முயல கையை வைத்து தடுத்தவன் அடுத்த பக்கத்திலும் தடை போட வலையில் மாட்டிய மானாய் நடுவில் அங்கும் இங்குமாய் விழித்தாள்.

அவனை தள்ளி விட அவளது கைகள் அவளுக்கும் பின்னே இருந்த சுவருக்கும் இடையே மாட்டியிருக்க அதை எடுக்க முயன்றால் அவனோடு ஒட்டி கொள்ள வேண்டும் அந்த ஐடியா அவளுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லாது இருக்க அவன் கண்கள் அவளை எங்கோ சுழலுக்குள் இழுத்து செல்ல சிப்பி இமைகளை வைத்து தடுமாறும் தன் மனதை காத்தாள்.  அவள் நிலை தெளிவாக புரிய அவன் மூச்சின் வெப்ப காற்று அவள் கழுத்தில் உரச மெதுவே குனிந்த அச்சுதன் ஆண்மை நிரம்பிய கரகரப்பான குரலில் மென்மையாக அழைத்தான்.

"ரோஸ்"

அவள் காதருகே அவன் உதட்டின் வெப்பதில் அவள் இதயம் ஐஸ் க்ரீமை போல் உருக தொடங்கியது

"ஹ்ம்ம்"

"இப்ப நீ அச்சு அசல் சிவப்பு ரோஜாவே தான்"

கன்னத்துடன் கன்னம் உரச விலக்கியவன் அவள் கண்களை கண்களால் கவ்வி கொண்டான். தொட்டு விடும் தூரத்தில் இருந்தன நாசிகள். மயக்கம் முகத்தில் வழிய அவன் கண்ணையும் சிவந்த உதடுகளையும் அவள் கண்கள் கொள்ளையடித்தது. பாதி மூடிய விழிகளும் பாதி திறந்த இதழ்களும் அவன் உணர்ச்சியோடு சதிராட அவளை அந்த இடத்திலேயே முழுதாக அள்ளிக்கொள்ள மனம் துடித்தாலும் இது அவளின் முழு சம்மதமில்லை என்பது புரிய சிறிது தயங்கி பின் வாங்கினான்.

அந்த தயக்கம் சன்விதாவின் மயக்கத்தை கலைக்க போதுமாயிருக்க கால்களை அசைத்து முகத்தை திருப்பினாள். அதில் அவன் நிலை தடுமாறி சரிய கன்னத்தில் அவன் இதழ்கள் வெண்ணையில் விரல் போல அழுந்தி புதைந்தது.

அந்த கணம் அப்படியே உறைய எப்படி நடந்தது என சன்விதா திகைத்து நின்றாள். நடந்ததை நம்ப முடியாது அவன் முத்தமிட்ட கன்னத்தை தொட்டு அவனை பார்க்க  மென்னகை புரிந்தவன் பெரு விரலால் அந்த இடத்தை வருடி அழைத்தான்.

"ரோஸ்" 

அந்த வார்தை எப்போதும் போல் அவளை நிகழ் காலத்துக்கு இழுத்து வர அதிர்ந்து அவனிடமிருந்து விலகினாள். அவளின் அதிர்சியை பார்த்து வினவினான்.

"ஹேய் ரோஸ் வாட் ஹப்பெண்ட்"

"எத்தனை தரம் சொல்ற ரோஸ் சொல்ல கூடாது" மனசாட்சி முகத்திலேயே காறி துப்பியது முத்தம் கொடுத்தது பிரச்சினையில்ல அவன் ரோஸ் சொல்றது தான் பிரச்சனையா? என்ன ஜென்மமடி நீ?

பூத்த மென்னகை மறையாமல் "ஐ காண்ட் ஹெல்ப்" என்றவனை கேள்வியாய் நோக்கியவளுக்கு பதிலாக "வெட்கப்பட்டால் சில நேரம் ரோஜா நிறம் பல நேரம் ஆழ் சிவப்பு,  கிட்டே நெருங்கினால்" நெஞ்சை தொட்டு காட்டியவன் "இங்கே முள்ளாய் குத்துகின்றாய் உன்னை தவிர வேறு யாருமே இந்த பெயருக்கு பொருத்தமில்லை " ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

"அதான் ஊரில் உள்ள அத்தனை பெண்களையும் அப்படித்தான் கூப்பிட்றது இதில என்ன பத்து பக்க விளக்கம்" எரிச்சலுடன் வாய்க்குள் தெளிவில்லாமல் முனங்கினாள்.

ஆனால் தெளிவாகவே கேட்ட அச்சுதன் முகம் உணர்வை தொலைத்தது. பாண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு அவளிடமிருந்து முழுதாக விலகி ஆழமாக பார்த்தவாறே "உன்னிடம் சற்று பேச வேண்டும்" மேசையருகே இருந்த இருக்கையில் ஒன்றை கண்ணால் காட்டி கூறினான் .

அந்த குரலில் சன்விதா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

இத்தனை நாளில் அவன் முகத்தில் கோபம், தாபம், குறும்பு, ரசனை, சந்தோசம் ஏமாற்றம் என பல உணர்ச்சிகளை பார்த்திருக்கின்றாள் ஆனால் முதல் முறையாக அவளருகே அவன் முகம் உணர்ச்சியற்று இருந்தது.  என்னவென்றே புரியவில்லை ஆனால் அது பிடிக்கவும் இல்லை. ஏதும் பேசாமல் இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் முன்னே அமர்ந்தவன் முன்னே குனிந்து மூட்டுகளை தொடையில் ஊன்றி இரு கையையும் ஒன்றாக கோர்த்தவன் கேட்டான் "என்னை முதல் முறை எங்கே பார்த்தாய்?"

"இங்கே இந்த அறையில் மீட்டிங் வந்திருந்த...... "

"அதற்கு முன் பார்க்கவில்லையா....?"

"எ எ எனக்கு ஞாபகமில்லை"

"நீ மட்டுமில்லை உமாகரன் கூட சந்தித்து இருக்கின்றான் இல்லையா?"

அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள்.

"நீ பொய் பேசுவாயா?"

ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

"என்னிடமுமா?"

ஒரு கணம் விழித்த சன்விதா "அந்த கான்ட்ராக்லா பொய் சொல்ல கூடாது என்று போட்டிருக்கா?" விட்டால் அழுதுவிடுவாள் போல் கேட்டாள்.

ஒரு கணம் திகைத்த அச்சுதன் சட்டென சிரித்தான். சன்விதாவின் உலகம் மீண்டும் இயல்புக்கு வந்தது. மெல்லிய புன்னகை கீற்றுடன் அவனை பார்க்க 'என்ன' பார்வையில் வினாவ 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையசைத்தாள்.

"எனக்கு தெரியல ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கின்றோம், எனக்கு ஞாபமில்லை ஆனா உன்னை பார்த்து மறப்பதற்கும் சாத்தியமில்லை, உனக்கு நன்றாகவே ஞாபகமிருக்கு எனக்கு தெரியும் உண்மையை சொல்".

அப்போதும் அவள் அமைதியாக இருக்க "உன் பெயருக்கு அர்த்தம் அமைதியானவள் என்பது தான் ஆனால் உனக்கும் அமைதிக்கும் எப்போதும் சம்பந்தமில்லை அதுவும் தெரியும்"

"...."

வினாடிகள் கடக்க அச்சுதன் கடினமான குரலில் கூறினான் "மிஸ் சர்மா நான் அத்தனை பொறுமைசாலி இல்லை"

இமைகள் படபடக்க நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் மடியில் கோர்திருந்த கைகளை பார்த்தாள்.

சத்தமின்றி பெருமூச்சை வெளியேற்றியவன் "உன்னை தவிர வேறு யாரையும் ரோஸ் என்று அழைத்ததில்லை"

"பொய்..." அழுத்தமாக மறுத்தாள். ஆச்சரியத்துடன் பார்த்த அச்சுதன் நிமிர்ந்து மார்புக்கு குறுக்காக கை கட்டி "சும்மா வெறுப்பேத்ததா சன்வி" என்றான்.

"இல்ல நான் பார்த்தேன் இல்லல்ல கேட்டேன்"

"எதை"

"நீங்க றோஸ் என்று அழைத்ததை"

"ஓஹ் ரியல்லி.. டோன்ட் யூ டேயர்"

"ஹா ரியல்லி...." அவனை போலவே சொல்லி காட்டினாள்.

"அப்படி யாரையம்மா நான் அழைத்தேன்…?" எள்ளலாகவே கேட்டான்.

"என்னை தான்…." குரல் தேய்ந்துவிட்டிருந்தது.

"தென்… என்ன பிரச்சனை" என்றவன் அழுத்தமாய் கேட்டான் "எப்போது?" 

"போன வருடம் டெல்லியில்…" சிறிது சங்கடத்துடன் அவனை பார்த்தாள். அவனோ எதையும் பிரதிபலிக்காத முகத்துடன் 'மேலே சொல்' என்பது போல் பார்த்தான். "நீங்க பார்வதியை ஓ.. ஒரு.. ஒரு இர…." சொல்ல முடியாமல் வார்தைகளை விழுங்கினாள். அவன் அவ்வாறு அழைத்தது அப்போது போலவே இப்போதும் இதயத்தின் ஓரம் வலிக்க  கண்களில் நீர் திரையிட்டது.

Reply
Page 4 / 4
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”