மொழி - 19
சொரூபன் தான் வேகமாய் முதலில் மேலே சென்றான்.
உள்ளே யதீந்திரா கனவில் எதையோ கண்டு எழுந்து நின்று கையை அழுத்தி துடைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி என்ன” பயத்துடன் லைட்டை போட்டான்.
“இரத்தம் போக மாட்டேன் என்கிறது” கையை அவன் முன் நீட்டி காட்டியவள் குளியலறை செல்ல முயல அவளை தடுத்து நிறுத்தி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“நான் துடைத்து விடுகிறேன் போய் விடும்” கைகளுக்குள் வைத்தவாறே அவள் கையிலிருந்த துவாயை வாங்கி துடைத்து விட்டான்.
“இல்ல இல்ல அது போகுதில்ல” அழுதவாறே அவனிடமிருந்து திமிற அவள் கன்னம் பிடித்து கண்களை நோக்கி “ஷ்.. இரத்தம் போயிற்று” அழுத்தமாய் கூறினான்.
கையை திருப்பி திருப்பி பார்த்தவள் உடல் தள்ளாடியது.
சட்டென கைகளில் ஏந்தி கொண்டு அம்மம்மாவை பார்த்தான். அவருக்கும் அவள் நிலை அதிர்ச்சியே “கீழே கூட்டிட்டு வாங்கோ” என்று விட்டு தண்ணீர் எடுக்க கீழே சென்றார்.
சோபாவில் அருகே அமர்ந்த அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள் உடல் நடுங்க “நானில்லை, வேண்டுமென்று செய்யவில்லை” தெளிவின்றி உளறினாள். இறுகிய முகத்துடன் நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்தான்
“ஒன்டுமில்லை சரியாயிரும்”. தண்ணீருடன் வந்த கண்மணி மறுபுறம் அமர்ந்து “இதை குடியம்மா” மெல்லிய வெதுவெதுப்பான நீரை பருக்கிவிட்டார்.
சற்று நேரத்தில் சுயநிலை அடைந்தவள் “சாரி… நடு சாமத்தில் எல்லோரையும் டிஸ்ரப் செய்திட்டேன்” தயங்கியவாறே மன்னிப்பு கேட்டாள் “நிறைய நாள் வராமல் இருக்கவும் மருந்து எடுக்க மறந்து போனேன்” சங்கடமான ஒரு சிரிப்புடன் எழுந்து மேலே போக முயன்றாள்.
“எங்கே?” சொரூபன்தான் கேட்டான்.
“மருந்து ஹான்ட் பாகில் இருக்கு”
“நான் எடுத்திட்டு வாரேன்”
மருந்துடன் அவள் தலையணை போர்வையையும் எடுத்துக் கொண்டு வந்தவன் அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு மருந்தை அவள் கையில் கொடுத்தான்.
அதை விழுங்கி விட்டு மேலே செல்ல முயல “நீயும் எங்களுடன் கீழே படும்மா” என்றார் கண்மணி.
“இல்ல பரவாயில்ல” வந்த முதல் நாளே இப்படி ஆகிவிட்டதே. அவன் என்ன சொல்வானோ சங்கடமாய் சொரூபனை பார்த்தாள்.
“இன்று கீழேயே படும்” என்றான் அவனும்.
சங்கடத்துடன் படுத்தாலும் பயணக் களைப்பும் போட்ட மருந்துமாய் உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் யதீந்திரா. அருகே படுத்த கண்மணியும் உறங்கி விட சொரூபன்தான் சோபாவில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையுடன் உறங்கும் யதியின் முகத்தையே பார்த்திருந்தான்.
“ஞானா ஞானா” யாரோ எழுப்பவே “ஹ்ம்ம்” என்று திரும்பிப் படுத்தான் சொரூபன்.
“யதியை மேலே அவள் அறையில் விட்டு விடுங்கள்” சோபாவில் படுத்திருந்த அவனை கண்மணிதான் எழுப்பிக் கொண்டிருந்தார்.
இரவு முழுதும் விழித்திருந்தவன் சற்று முன்தான் அப்படியே சோபாவில் உறங்கியிருந்தான்.
அரைகுறை உறக்கத்தில் அவள் கன்னம் தட்டினான் “யதி யதி”.
அவனை முறைத்தார் கண்மணி “இரவு லேட்டா மருந்து போட்டது அதான் எழும்புற இல்ல, தூக்கிக் கொண்டு போங்க”.
உறக்க கலக்கத்தில் அவரை “அஹ்” என்று பார்த்தவன் அவர் முறைப்பில் மறுபேச்சின்றி அவளை தூக்கிக் கொண்டு போய் அவள் அறையில் விட்டுவிட்டு அயர்வில் தானும் அருகே படுத்து மீண்டும் உறங்கிவிட்டான்.
‘போனவனை இன்னும் காணோம்’ என்று மேலே வந்த கண்மணி உறங்கும் இருவரையும் பார்த்து விட்டு கீழே சென்றுவிட்டார்.
**
லேசாய் திரும்பிய சொரூபன் சோம்பல் முறித்தான். சுற்றிப் பார்க்க அவள் அறையில் படுத்திருப்பது புரிந்தது. ‘எப்போ வந்தேன்’ யோசித்தவாறே அருகே பார்க்க அவளில்லை.
தன்னறைக்கு சென்று பிரெஷ் ஆனவன், இத்தனை நாள் அவள் முகத்தில் விழித்து பழகிய பழக்கத்தில் அவளைத் தேடிக் கொண்டு கீழே வந்தான் ‘இரண்டு பேரையும் காணோம்’ யோசித்தவாறே தேட கிச்சினில் இருந்து பேச்சுக் குரல் கேட்டது.
“எனக்கு சாக்கு அல்லது சாக்கு போல் ஈரத்தை வைத்துக் கொள்ள கூடிய துணி ஏதாவது கிடைக்குமா?” தேநீர் கோப்பையை கையில் வைத்தவாறே மெல்லிய குரலில் கேட்டாள் யதி.
கண்மணியிடம் அவள் எங்கே என்று கேட்க வந்த சொரூபன் இருவர் பேச்சையும் கேட்டு விட்டு அப்படியே நின்றான்.
“ஏன் இப்படி வருது? அடிக்கடி வருமா? தனியாக இருக்கும் போது என்ன செய்வாய்?” கண்மணி விசாரித்தார்.
“அது ஒரு விபத்து அதுக்கு பிறகு... அதுதான் சாக்கு கேட்கிறேன். ஈர சாக்கு போட்டால் காலின் கீழ் மிதிபடும் போது ஓரளவு நினைவு வந்து விடும்” பதிலளித்தாள்.
“இது போல் எப்போது கடைசியாய் வந்தது”
“கொஞ்ச நாள் இல்லமால் இருந்தது. இப்ப திரும்ப வந்திட்டு” தேநீர் கோப்பையை பார்த்தவாறே பதிலளித்தாள்.
வெளியே கேட்டுக் கொண்டிருந்த சொரூபனுக்கு இல்லமால் போன காரணம் லேசாய் புரிந்தாலும் மீண்டும் ஏன் வந்தது என்ற கேள்வியே கண் முன் நின்றது.
அவள் மேலே சென்று விட உள்ளே வந்த சொரூபன் முகம் பார்த்தவருக்கு விளங்கியது, அவனும் கேட்டுவிட்டான்.
அந்த விபத்து தர்சினியா?” மிகச் சரியாய் கேட்டார் பேரனின் குணம் தெரிந்த கண்மணி. திடிரென அவர் அனைத்து கேள்விகளுக்கும் கேளாமலே விடை கிடைத்திருந்தது.
உள்ளங்கையில் முகத்தை புதைத்தவாறே தலையாட்டி ஆமோதித்தான் சொரூபன்.
“இப்படிதான் எப்போதுமா இல்ல”
“தெரியல, என்னுடன் இருக்கும் போது ஒரே ஒரு தடவை” சொல்ல முடியாது தவித்தான். அந்த விபத்து அவளை இத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“விபத்து என்பதே எங்களை மீறி நடப்பதுதான். அதிலும் பதினைந்து வருடமாய் இரவில் இது போல் அனுபவிப்பதை விட தண்டனை வேறில்லை” என்றவர் அவனிடம் ஒரு அல்பத்தை கொடுத்து கூறினார் “இந்த அல்பத்தில் இருக்கும் படங்களை பாருங்கோ, உங்களுக்கே சிலது விளங்கும்”.
லண்டனில் இருந்த போது அவன் படங்களை அவருக்காக கழுவி அனுப்புவான். அதை அவன் திரும்பிப் பார்த்தது குறைவு. பார்த்து ரசிக்கும் மனநிலையோ நேரமோ இருந்ததில்லை. அந்தப் படங்களைத்தான் ஒரு அல்பத்தில் போட்டு வைத்திருந்தார் கண்மணி.
‘இதில் என்ன இருக்கு’ யோசனையுடன் புரட்டிப் பார்க்க அது ஏற்கனவே அவனுக்கு உறுதியான ஒன்றை இன்னும் உறுதிப்படுத்தியது.
சில படங்களின் பின்னால் யதி நின்றிருந்தாள்.
‘அப்படியானால் லண்டனிலும் நிழல் போல் என்னை தொடர்ந்து கொண்டா இருந்தாள். ஆனால் எப்படி கண்ணில் படவில்லை’ என்ற அவன் கேள்விக்கு ஒடிந்து விழும் போலிருந்த அவள் தேகமும் வற்றி போயிருந்த கன்னமும் பதிலாய் தென்பட்டது.
**
கைபேசியின் சத்தத்தில் நினைவு கலைந்தவள் யாரென்று பார்க்காமலே எடுத்து காதுக்கு கொடுத்தாள்.
“கீழே வாரும்” சொரூபன்தான். கண்ணை விரித்து பார்க்க சிறு சிரிப்புடன் கீழே நின்று கை காட்டினான்.
கீழே வந்தவள் மண்ணை மூன்று குவியாலாய் ஐந்தடி உயரத்திற்கு வெட்டி குவித்திருக்க அதையே சுற்றி வந்து கேட்டாள் “என்ன செய்யுறீங்க? ஏன் மண்ணை இப்படி வெட்டி போடுறீங்க?”
“மண்ணை வெட்டிப் போடல, பாத்தி போடுறேன்”
“ஹா..”
“பனம் பாத்தி”
அப்போதும் புரியாமல் பார்க்க “நேற்று பனங்கிழங்கு சாப்பிட்டனீர்தானே” ஓரிடத்தில் குவித்திருந்த பனை விதைகளை வெட்டிப் போட்ட மண் குவியலில் அடுக்கியவாறே விசாரித்தான்.
“ஹ்ம்ம் நல்ல ருசி”
“அது எங்கே இருந்து வருது”
சிறிது யோசித்தவள் “பனை வேரிலிருந்து”
ஒரு கணம் ஆச்சரியமாய் பார்த்த சொரூபன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.
“உருளை, இராசவள்ளி, மரவள்ளி கிழங்கு எல்லாம் வேரில் இருந்து தானே வருது அப்ப பனங்கிழங்கும் வேரில் இருந்து தானே வரணும்” என்று நீண்ட விளக்கம் வேறு கொடுத்தாள்.
அவனோ இன்னும் பலமாய் சிரிக்க “என்ன?” என்று சிணுங்கியவள் அனைத்தும் மறந்து அவன் சிரிக்கும் அழகை ரசித்தாள்.
அவள் ரசனை நிறைந்த நோக்கில் பார்வை மாற அருகே நெருங்கியவன் “என்னடி அடிக்கடி இப்படி பார்த்து வைக்கிற. மனுஷன் எவ்வளவு தூரம் தான் கண்ரோல் பண்ணுறது” அவள் பின்னால் நின்ற பலா மரத்தில் இருபுறமும் கையூன்றினான்.
த்ரீ குவட்டேர் மட்டும் அணிந்து கட்டான வெறும் மேல், மாலை நேர மஞ்சள் வெய்யிலிலும் வியர்வையிலும் பளபளக்க அருகே நெருங்கி நின்றவன் வாசத்தில் மூச்சு முட்டிப் போனது அவளுக்கு.
“அஅது ஒன்றுமில்லை. சும்மா தா..தான்”
“ம்கூம்” அழகாய் புன்னகைத்தவன் “அப்ப இங்கே ஏன் சிவந்திருக்கு” கன்னத்தை துடைத்து விட்டான்.
“அஹ் இல்லையே” கன்னத்தை அவளும் துடைக்க “இங்கே கூட சிவந்திருக்கு” மறு கன்னத்தையும் தட்டிக் காட்டினான்.
அதையும் துடைத்த போதுதான் அவன் குறும்புத்தனம் விளங்கியது. அவள் முகத்தில் வேண்டுமென்றே மண்ணை பிரட்டுகிறான்.
“சொரூபன் வேண்டாம்” அவள் விலக மீண்டும் கன்னத்தில் மண்ணை பிரட்ட முயன்றான். அவனிடமிருந்து தப்பி ஓடி தள்ளி நின்று சிரித்தாள்.
அவள் சிரிப்பை ரசித்தவன் “அதை எடுத்து தாரும்” அவளருகே இருந்த பனை விதைகளைக் கை காட்ட சற்றுக் கவனமாகவே அவனும் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கி அடுக்கியவாறே “புழிந்த பச்சை பனை விதைகளை இப்படி மண்ணில் புதைப்பதை பனம் பாத்தி கட்டுறது எண்டு சொல்வோம்” விளக்கி கூறியவன் அவள் இடுப்பை பிடித்து தூக்கி பாத்தியின் மேல் விட்டு “மிதியும்” என்றான்.
“சொல்லிட்டு செய்ய மாட்டீங்க” அவன் தோளைப் பிடித்தவாறே மிதிக்க ஈர மண்ணினுள் விதை இறங்கியது.
முழங்கால் வரை ஸ்கேர்ட்டுடன் மேலே ப்ளௌஸ் அணிந்து நின்றவளைப் பார்க்க அவன் கண்களுக்கு இந்தியாவில் சந்தித்த தொழிலதிபர் போலவே தெரியவில்லை. இன்னும் சிறுபெண்ணாய் தெரிந்தாள்.
அவன் பார்வையை கவனித்து ஸ்கேர்ட்டை விரித்து பிடித்து “இது அம்மம்மா வேண்டி தந்தங்க” என்றவள் ஆர்வமாய் கேட்டாள் “இதிலிருந்து பனை மரம் வளருமா?”.
“அம்மம்மா” வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் “பனை மரம் வளர்க்க வேறு மாதிரி வைப்பார்கள். இதிலிருந்து பனங்கிழங்கு வரும்” என்றான் சிரிக்காமல்.
வட்டமாய் வாய் திறந்து அவனைப் பார்த்தவள் “அப்ப பனை மரத்தின் வேரில் வளராதா?” அப்பாவியாய் கேட்டாள்.
“பெத்த தொழிலதிபர்” அவளைக் கேலி செய்தவன் “வாரும்” என்று அருகே இருந்த பாத்திக்கு அழைத்து சென்று “இது இன்னும் இரண்டு கிழமையில் வெட்டி எடுக்கலாம்” என்று கிண்டி காட்டினான்.
உள்ளிருந்து கிழங்கு எட்டிப் பார்த்தது.
ஆர்வமாய் அதை குனிந்து பார்த்தாள். ஒரு பத்து கிழங்கு கொத்தாய் வந்திருந்தது.
“அது போன மாதம் போட்டது. இன்னும் கிழங்கு வரல” அதிலிருந்து ஒரு பனை விதையை எடுத்து கத்தியால் இரண்டாய் பிளக்க உள்ளே ஏதோ வெள்ளையாய் தென்பட்டது. அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“ஹ்ம்ம் சூப்பரா இருக்கே, வேற இருக்கா” அவள் விரிந்த கண்ணைப் பார்த்தவன் “எல்லாத்தையும் பூராணவே சாப்பிட்டா பனங்கிழங்குக்கு எங்கே போற” வேண்டுமென்றே சீண்டினான்.
அப்போது அந்தப் பக்கம் வந்த கண்மணியிடம் “அம்மம்மா எனக்கு அது வேணும் வாங்கித் தாங்கோ” அவர் தோளை சுரண்டிக் கொண்டு சிபாரிசுக்கு ஆள் பிடித்தாள்.
அவளருகே எந்நேரமும் தன் பேரனின் கண்ணில் இருந்த கசப்பும் வெறுப்பும் காணமால் போய் நேசமும் காதலும் தென்பட்டதை என்று பார்த்தாரே அன்றே யதீந்திரா அவருக்கு முக்கியமாய் போனாள்.
பேரனின் மனதை கவர்ந்தவள் என்பதோடு அவளின் கடந்த காலம், அன்றிரவு அவள் பட்ட துன்பம், ஒரு விபத்துக்காய் இத்தனை நாள் வருத்தப்படும் குணம் என அனைத்தையும் கவனித்தவருக்கு யதீந்திரா மீது தனிப்பட்ட அன்பு வந்திருந்தது.
“இருக்கிறது மூன்று பேர், பிள்ளைக்கு இதுதான் பிடிக்குமென்றால் இந்த பாத்தியில் இருக்கும் எல்லாத்தையும் அவளுக்கே கொடு தம்பி” என்றவர் தட்டில் வைத்து நீட்ட, அவனிடம் ஒரு சவால் பார்வையுடனும் சலுகையுடனும் வாங்கிக் கொண்டாள்.
கையை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு தாய் சாய்த்து பார்த்த சொரூபனுக்கு இந்த யதீந்திரா வித்தியாசமாய் தென்பட்டாள்.
தன்னை, ஜானகியை டிரைவர் அங்கிளை என்று அனைவரையும் கவனித்து, வேலைகளில் தெளிவாய் முடிவெடுக்கும் தொழிலதிபர் யதீந்திராவாக தென்படவில்லை. அம்மாவிடம் செல்லம் கொண்டாடும் சிறு குழந்தை போல் தென்பட்டாள்.
வீட்டில் வேலை செய்யும் கனகு யாரோ வந்திருப்பதாக கூறவே கண்மணி முன்னே சென்றார்.
“அந்த அண்டி” என்று திடீரென சொரூபன் தொடங்கவே வெளிறிப் போன முகத்துடன் நின்றாள் யதீந்திரா.
அவள் நிலையைப் பார்த்தவன் “ச்சு அதில்ல, அந்த அண்டியையும் இப்படி, அம்மம்மாவை போல பிடிக்குமா என்று கேட்க வந்தேன்” கன்றிய முகத்துடன் விளக்கமாய் கேட்டான்.
இருவரும் மெதுவாய் நடந்ததில் சற்று பின் தங்கியிருந்தார்கள்.
மெல்ல தலையசைத்தவள் “அவர்களுக்கு சற்று மனநிலை... என்னை அவர்களுக்கு பிடிக்கும் ஆனா இது போல்...” மென்று விழுங்கினாள். ‘கடந்த பதினைந்து வருடத்தில் குழந்தையை போல் நேசித்து, சாப்பாடு தந்து, ஆடைகள் வேண்டி தந்து இது போல் யாரும் என்னிடம் அன்பு காட்டியதில்லை’ என்பதை முழுமையாய் சொல்லாது விட்டாள்.
“இந்த முறை இந்தியா போகும் போது பார்ப்பபோம்” கண்ணில் பரிவுடன் சொன்னான் சொரூபன்.
அவளோ ஏதோ யோசனையில் தனக்குதானே கதைத்தாள். “எனக்கு இந்தியா போக விருப்பமே இல்ல. இங்கேயே இருந்தா என்ன என்று இருக்கு. ஆனா, முடியாதில்ல. இது காணல் நீர், ஜஸ்ட் பஃன்டாசி. அங்கே முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு”.
கண்கள் எங்கேயோ வெறிக்க “அதுக்கு பிறகு..” என்று பாதியில் நிறுத்தினாள்.
நெற்றி சுருங்கக் கேட்டான் சொரூபன் “அதுக்கு பிறகு என்ன?”
சட்டென சுயநிலை அடைந்தவள் “கோவிலுக்கு எப்ப போகலாம்” என்று விசாரித்தாள்.
ஒரு கணம் அழுத்தமாய் பார்த்தவன் “நாளைக்கு மோர்னிங் நாலு மணிக்கு போவோம், விரும்பினால் சாரி கட்டும் இல்லாட்டி பஞ்சாபி போடும். பிரச்சனை இல்ல” என்றவன் முகம் ஆழ்ந்த சிந்தனையை காட்டியது.
முன் வாசலை நெருங்க வீட்டுக்கு வந்த விருந்தினருடன் கண்மணி கதைத்துக் கொண்டிருந்தார்.
“உங்கள் விருப்பம் விளங்குது மகன் ஆனா நான் ஞானாவுக்கு பெண் பார்த்திட்டேன், நல்ல பிள்ளைதான்”
காதில் விழுந்த செய்தியில் அதிர்ந்து போய் நின்றவள் கையிலிருந்து தட்டு நழுவி விழ, கீழே விழும் முன் அதைப் பிடித்த சொரூபன் திருப்தியான புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
யதிக்கோ கண் முன் தெரிந்த நிதர்சனத்தில் உடலெல்லாம் கூசியது. தன்னுடன் உறவில் இருக்கிறான். இன்னொரு பெண்ணை திருமணமும் செய்ய போகிறான். ‘அப்படியானால் நான் யார்?’ என்ற கேள்விக்கு வந்த விடையில் மூச்செடுக்க மறந்து நின்றாள்.
ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. தன் பழிவாங்கும் படலத்தின் உச்சியை எட்டிப் பிடித்துவிட்டான். அதே நேரம் மனசாட்சி அவளைப் பார்த்து சிரித்தது ‘அவன் எப்போது உன்னை காதலிப்பதாய் சொன்னான். குழந்தை வேண்டும் என்று மட்டும்தான் சொன்னான்’.
“அத்தான்” என்ற குரலில் இருவரும் நிமிர அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள் அவன் மாமன் மகள் கல்யாணி. அவள் பார்வையில் சினந்து கையில் இருந்த சட்டையை போட “அத்தான் ஒன்று சொல்லவா, அன்று உங்களை பார்க்கும் வரை எனக்கு பெரிதாய் கல்யாணத்தில் இன்ரேஸ்ட் இல்ல. உங்களை பார்த்த நாளில் இருந்து உங்களை தான் கல்யாணம் செய்யணும் என்று முடிவே எடுத்திட்டேன்” என்று அவனருகே வந்தாள்.
தொண்டையில் அடைத்த துக்கத்தை விழுங்கிய யதி சத்தமின்றி நகர்ந்து விட்டாள்.
“உங்களுக்கு லண்டனில் இருக்க விருப்பமில்லையோ?” மேலுக்கு கிண்டல் குரலில் கேட்டாலும் எச்சரிக்கை தென்பட்டது.
அதிர்ந்து போய் அப்பா மகள் இருவரும் பார்க்க “அன்று சொன்னதுதான். பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கிப் போறேன். பயம் எண்டு நினைச்சா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல” எச்சரித்தவன் விலகி சென்றுவிட்டான்.