Share:
Notifications
Clear all

மொழி - 20

Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 20
 
வீடியோ கோன்பிரன்ஸ் முடித்து கீழே வந்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது. நித்திரையின்றி சோபாவில் படுத்திருந்து கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் யதி.
 
 
தலைமாட்டில் அமர்ந்தவன் “நித்திர கொள்ளல” விசாரித்தான்.
 
 
“வரல”
 
 
போனை வாங்கி சிறு டேபிளில் வைத்தவன் அவள் தலையை மடிமீது எடுத்து வைத்தான் “படும்”.
 
 
துள்ளி விலகியவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த  கண்மணியை பார்த்தாள் “விளையாடுறீங்களா அம்மம்மா... நான் கீழேயே தூங்குறன்”. அவசரமாய் கீழே இறங்கிப் படுத்து விட்டாள்.
 
 
அவளைத் தடுக்கவில்லை ஆனால் “கையை தாரும்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். சற்று நேரத்தில் அமைதியாய் உறங்கி விட அவள் முகம் பார்த்தவனுக்கு முன் மாலையில் நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது.
கல்யாணி போனதும் குளித்து வந்து அவள் அறையை தட்ட சிவந்த கண்களுடன் கதவைத் திறந்தாள் யதீந்திரா. தவிப்பு இதம் இரண்டையும் ஒன்றாய் உணர்ந்தான் சொரூபன்.
 
 
தனக்காக அழுததில் இதம்.
 
 
அதே நேரம் இருவருக்குமான உறவை எண்ணி அழுகிறாள் என்பதை புரிந்து கொண்டதில் தவிப்பு. அவளிடம் சொல்லி விடுவோம் என்று நினைத்து வாயைத் திறக்க கையிலிருந்த கைபேசி அலறியது.
 
 
லண்டனில் இருக்கும் கம்பனி தொடர்பாய் அழைத்திருந்தார்கள்.
 
 
“கீழே அம்மம்மாவுடன் போய் இரும்” என்று கீழே அனுப்பி வைத்தவன் கைபேசியை காதுக்கு கொடுத்தான். அந்த மீட்டிங் இப்போது தான் முடிந்தது.
 
 
***
 
 
அடுத்த நாள் சொன்னதைப் போல் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். மூன்றே முக்கால் அதிகாலை குளிரில் அவனருகே நடந்து சென்ற அனுபவம் இனிமையாய் அவள் மனதில் பதிந்தது.
 
 
பருத்தித்துறை பிரதான சாலையில் ஏற அதிகம் ஆண்களும் சில பெண்களுமாய் ஓடாத குறையாய் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். வழி நெடுக இருந்த கச்சான் விற்பவர்களும், தற்காலிக கடைகளில் இருந்தவர்களும் சரத்தை போர்த்திக் கொண்டு குறுகிப் படுத்திருந்தார்கள்.
பருத்திதுறை வீதியில் ஏற அதில் உயரமாய் இரண்டு பந்தல், வாகனம் போக முடியாமல் தடுப்பு போட்டு அதில் சில பொலிஸார், முதல் பந்தலின் வலது பக்கத்தில் தண்ணீர் பந்தல், கீழே மணல், அதிகாலை தலை முழுகியதில் தேகத்தில் ஓடிய மெல்லிய குளிர், ஆட்களாய் இருந்த போதும் சுற்றிலும் நிறைந்திருந்த அதிகாலை அமைதி என்று அவளுக்கு அனைத்தும் வித்தியாசமாய் இருந்தது.
 
 
நிமிர்ந்து பார்க்க இருட்டின் ஊடே மெல்லிய வெளிச்சத்தில் மஞ்சள் நிறத்தில் கம்பீரமாய் நின்றது நல்லூர் கோவில்.
 
 
திரும்பி சொரூபனை பார்க்க “நல்லூர் கோவில்” என்றான்.
 
 
“கலர் லைட் எல்லாம் போட மாட்டாங்களா?”
 
 
“பின் வீதியில் கடை எல்லாம் இருக்கு, அங்கே கலர் லைட் டியுப் லைட் எல்லாம் போடுவார்கள். இங்கே இப்படிதான் இருக்கும். கோவிலின் உள்ளேயும் அதிக வெளிச்சம் இருக்காது”
 
 
“ஒ” என்றவள் அடுத்த கடவையை கடந்து கோவில் மணலில் காலடி வைக்க பிரதட்டை செய்பவர்களின் அரோகரா ஒலி கேட்டது. சிலர் தனியாகவும் சிலர் கூட்டமாகவும் சொல்லிக் கொண்டே உருண்டார்கள், கவனித்து கேட்டாள். 
 
வள்ளிக்கு – அரகோர
வேலையனுக்கு – அரோகரா
முருகனுக்கு – அரோகரா
கந்தனுக்கு – அரோகரா
அரோகரா – அரோகரா
அரோகரா – அரோகரா
 
 
ஆர்வத்துடன் பார்க்க அனைத்து வயது ஆண்களும் வேட்டியை தார் பாய்ச்சி கட்டி அதற்கு மேல் சால்வையை கட்டிக் கொண்டு பிரதட்டை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் தேர் முட்டியின் முன் நின்று பிரதட்டை செய்ய இலகுவாய் வேட்டியை கட்டிக் கொண்டிருந்தார்கள்.
 
 
அவர்களின் உருவம் இருளில் வரிவடிமாய் தெரிந்த போதும் “இவர்கள் வேட்டி கட்டும் முறை வித்தியாசமாய் இருக்கே” ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ம் எட்டு முழ வேட்டி கட்டும் முறை, இப்படி கட்டினால் வேட்டியை அவிழ்க்காமலே தார் பாய்ச்சி கட்ட முடியும்”
 
 
கதையுடன் கதையாய் கோவிலருகே வந்திருக்க இருவரும் கால் கழுவிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.
 
 
சொரூபன் சட்டை எதுவும் அணிந்திருக்கவில்லை. அவன் மட்டுமில்லை கோவிலின் உள்ளே நின்ற எந்த ஆண்களும் மேலே சட்டை அணியவில்லை. மேலே போர்த்தியிருந்த சால்வையை இடுப்பில் கட்டியிருந்தான்.
 
 
கோவிலினுள் நுழைந்தவள் சுற்றிப் பார்த்தாள்.
 
 
மூலஸ்தானம், தியான அர்த்த மண்டபம், பின் நந்தியாக மயில், தங்ககொடி மரம் வாடாமல்லிப் பூவுடன் கம்பிரமாய் நின்றது. இடது பக்கமாய் கோவிலின் உள்ளேயே இடது புறமாய் சண்முக தீர்த்த கேணி நட்சத்திர வானத்தை பிரதிபலித்தது.
 
 
அங்கங்கே கோவிலின் கூரையில் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது சாண்டிலியர்கள். கோவிலின் உள்வீதி அதிக வெளிச்சமும் இன்றி இருட்டுமின்றி ஒருவித மங்கலான ஒளியுடன் இருந்தது. ஓரிடத்தில் மட்டுமாய் வெளிச்சம் பிரகாசமாய் தெரிய அங்கே பார்த்தாள். சிறு தேரில் முருகனை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
 
 
தீபாராதனை பார்த்து முருகனை பய பக்தியுடன் வணங்கியவனையே விநோதமாய் பார்த்தாள் யதி.
 
 
உள்வீதியை சுற்றி கும்பிட்டு விட்டு வெளியே வந்தவன் தன் கைபேசியையும் பேர்ஸ்சையும் அவள் கையில் கொடுத்தான்.
 
 
வாங்கிக் கொண்டவள் ‘ஏன்?’ என்பது போல் பார்த்தாள்.
 
 
தேரடியின் அருகே நின்று வேட்டியை மாற்றி தார் பாய்ச்சி கட்டியவன் அதற்கு மேலாய் சால்வையை இரண்டாய் மடித்து இடுப்பிலும் முழங்காலிற்கு பக்கத்திலுமாய் முடிச்சு போட்டான். பெண்கள் அணியும் பிஷ் ஸ்கேர்ட் போல் இருந்தது.
 
 
இரண்டு முழங்காலையும் சேர்த்துக் கட்டியபடி அவன் துள்ளி துள்ளி நடந்தது விநோதமாய் தென்பட்டது அவளுக்கு.
 
 
“நீரும் வர போறீரா?” அவள் பார்ப்பதை கவனித்து நின்று கேட்டான்.
 
 
“இதுபோல் கட்டிக் கொண்டா” அவனைக் காட்டி கண்ணை விரித்துக் கேட்க சிறு சிரிப்புடன் முன்னே சென்றவரை காட்டிக் கேட்டான் “அது போல்”.
 
 
ஒருவர் பிரதட்டை செய்ய அவர் பின்னே சிறு குழந்தை ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தது. வேகமாய் தலையாட்டி வைத்தாள் “வாரனே”.
கையில் தேங்காயுடன் பிரதட்டை செய்தவன் பின்னே நடந்தாள் யதி.
 
 
**
 
 
தலை முழுகிக் கீழே வந்தவன் கண்ணில் பட்டாள் கண்மணியிடம் எதையோ நடித்துக் காட்டிக் கொண்டிருந்த யதீந்திரா. என்னவென்று நின்று பார்த்தான்.
 
 
இரண்டு முழங்காலையும் சேர்த்து வைத்து நடப்பது போல் துள்ளி துள்ளி காட்டிக் கொண்டிருந்தாள். கண்மணி அவள் காதை முறுக்க நாக்கை கடித்து சிரித்தாள்.
 
 
அவனுக்கு விளங்கியது, சால்வயை கட்டிக் கொண்டு நடந்த தன்னைதான் கிண்டல் செய்து சிரிக்கிறாள் என்று. ஆனால் கோபம் வரவில்லை மாறாக உதட்டில் சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். இத்தனை நாளில் இதுபோல் சிரித்து விளையாடி பார்க்கவேயில்லை அவன்.
 
 
இருவர் கையிலும் தேநீரைக் கொடுத்து விட்டு கண்மணி சென்றுவிட சொரூபன் அழைத்தான் “யதி”.
 
 
‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.
 
 
“கடவுள் நம்பிக்கை இல்லையா?”
 
 
தேநீர் கோப்பையையே சிறிது நேரம் பார்த்தவள் மறுத்து தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
 
 
‘ஏன்’ என்ற வார்த்தையை தொண்டைக் குழிக்குள் விழுங்கிக் கொண்டான் சொரூபன்.
 
 
அவனும் விபத்துகளையும் இழப்புகளையும் சந்தித்தான்தான். ஆனால் சிறு வயதில் தாத்தாவுடன் கோவிலுக்கு போய் பழகிய பழக்கமும் இரத்தத்தில் ஊறிய பக்தியும் அவனை விட்டுப் போகவில்லை
 
 
சிறிது நேரம் அமைதியில்ழிய “இண்டைக்கு சப்புரம் முடிய போவோம்” என்றான் சொரூபன் திடிரென்று
 
 
“எங்கே”
 
 
“பின் வீதிக்கு, கடைக்கு”
 
பின்னேரம் அவளை ஆறுதலாய் அம்மம்மாவுடன் வர சொல்லி சென்றுவிட்டான். மீண்டும் அங்கே அழைத்து சென்றால் நேற்றுப் போல் உறக்கமின்றி இருப்பாள் என்று தோன்றவே கண்மணியிடம் சொல்லி சென்றுவிட்டான்.
 
 
ஏழு மணிக்கு அனார்கலி அணிந்து வர கீழே இரண்டு பெண்கள் நின்றார்கள்.
 
 
பதினைந்து வயது சிறுமியாய் இருந்தவள் கையாட்டினாள் “ஹாய் மாமி”.
“நான் பிரமாணர் இல்ல, என்னோட பெயர் யதீந்திரா, இந்திரா, யதீந்திரா, யதி எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்”
 
 
“தெரியும் ஆனா நீங்கள் என்னைவிட பெரியவர், பெயர் சொல்லி கூப்பிட முடியாதே”
 
 
“அப்ப அக்கா என்று கூப்பிடுங்க”
 
 
“ஐயோ அது தப்பாயிரும்” இரு கைகளையும் உதறி வாயில் வைத்தாள் சிறுமி.
 
 
“சரி உங்கள் பெயர் என்ன?”
 
 
“நான் கவிதா, இது என் அக்கா இலக்கியா அலைஸ் லக்கி.” என்று இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணைக் கை காட்டிய கவிதா “நாங்கள் இருவரும் தான் இண்டு உங்களுக்கு டூரிஸ்ட் கைட்” என்று யதியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
 
 
மூவருமாய் கோவிலடிக்கு வந்த போது சப்பரம் நிலைக்கு வர திரும்பிக் கொண்டிருந்தது.
 
 
“இந்தக் கூட்டத்துக்குள் எப்படி போறது என்னால முடியாது” யதி பின்வாங்க “லக்கிக்கா வடம் வர போகுது கெதியா அந்தப் பக்கம் போயிருவோம்” என்று இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றாள் கவிதா.
 
 
அந்தக் கூட்டத்திலும் லாவகமாய் சென்ற வித்தையை ஆச்சரியத்துடன் கவனித்தாள் யதி. கோவிலின் வலது பக்கமாய் நாவலர் மண்டபத்தின் அருகே போய் நின்று கொண்டு “மாமா வடம் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கம்தான் வருவார்” ஆர்வமாய் கூறினாள் கவிதா.
 
 
“மாமா சொரூபனா?” என்று கேட்ட யதிக்கு “ஒமோம் அவரேதான் மாமி, ஒவ்வொரு முறையும் வந்து நின்று பார்த்திட்டு ஐஸ்க்ரீம் கேட்பதுதான் கவிக்கு வேலையே” என்று செல்லமாய் அவள் தலையில் தட்டினாள் இலக்கியா.
 
 
“லக்கிக்கா தலை குழம்பிரும்” சிணுங்கினாள்.
 
 
“அது என்ன லக்கி”
 
 
“அதுவா அக்கா பெயரில் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் விட்டா லக்கி” முந்திக் கொண்டு சொன்னாள் கவிதா.
 
 
ஜெகஜோதியாய் சப்ரம் வர அதன் முன்னே நெருப்பை ஊதி வேடிக்கை காட்டுபவர்கள், தீ வளையத்தை சுற்றுபவர்கள், கரகாட்டம், கும்மி ஆடும் ஆண்கள், உறுமி மோளம் என்று பார்க்க நன்றாய் இருக்க புன்னகையும் ஆச்சரியமுமாய் வேடிக்கை பார்த்தாள் யதி.
 
 
கலைகளின் தாயகமான தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த போதும் இது போன்ற திருவிழாவுக்கு சென்றதோ பார்த்ததோ இல்லை என்பதால் அவளுக்கு வேடிக்கையாய் இருக்க ஆர்வத்துடன் பார்த்தாள்.
 
 
வடம் அருகே வர சனக்கூட்டம் ஓரிடமாய் ஒதுங்கியது. சனநெரிபாட்டில் பயந்து தன் முன்னே நின்ற கவிதாவின் தோளில் கையைப் போட்டாள். அவளோ “அதோ அங்கே மாமா” என்று அந்தக் கூட்டத்திலும் அவனை அடையாளம் கண்டு யதியின் நாடியை திருப்பிக் காட்டினாள்.
 
 
அவள் திரும்புவதற்குள் வேகமாய் சென்ற வடத்துடன் கோவிலினுள் சென்றிருந்தான்.
 
 
சுவாமி உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து சரியாய் அவர்கள் நின்ற இடத்தை நோக்கி வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்தவாறே “லக்கி எங்கே?” கவிதாவைக் கேட்டான்.
 
 
“அவள் முருகனை கல்யாணம் செய்ய போட்டாள்” சிரித்தவாறே சொல்ல “உதை விழும் போய் கூட்டிட்டு வாங்கோ” என்று அனுப்பி வைத்தான்.
 
 
அப்போதும் சுற்றி வேடிக்கை பார்த்தவளை கண்டு முகம் மென்மையை தத்தெடுக்க “இருப்போம்” என்று மணலைக் காட்டினான்.
 
 
சுற்றிலும் சிறுவர்கள் மணலை அள்ளி ஒருவர் தலையில் ஒருவர் போடுவதும் ஓடி விளையாடுவதும் என்று விளையாட அதை புன்னகையுடன் ரசித்திருந்தாள் யதி.
 
 
அதில் ஒரு வாண்டு அவள் பின் வந்து ஒளிய, துரத்திக் கொண்டு வந்த குட்டி தம்பி யதியின் மேல் விழ மூவருமாய் சிரித்தார்கள். அதை ரசித்திருந்த சொரூபனின் கண்களில் இனிமையாய் ஒரு கனவு விரிந்தது.
 
 
அவர்கள் சென்று விட மென்மையாய் கேட்டான் “இதற்கு முன் திருவிழா போனதே இல்லையா?”
 
 
“சிறு வயதில்... பின் ஹோஸ்டல் வாசம்” தயக்கத்துடன் நிலம் பார்த்தாள். 
சில கணங்கள் மௌனமாய் கழிய “என்ன வேண்டும்?” என்றான் திடீரென்று சொரூபன்
 
 
அவனை குழப்பமாய் நோக்கினாள்.
 
 
“இல்ல பின் வீதியில் கடைகள் இருக்கு. என்ன வேண்டும் என்று கேட்டேன்?”
“தெரியலையே” என்றவள் அருகே தொப்பென்று அமர்ந்தாள் கவிதா.
 
 
“உங்களுக்கு என்ன வேண்டும்” கவிதாவைப் பார்த்து கேட்டாள் யதி. “எனக்கு ஒன்றும் வேண்டாம்” கோபத்துடன் கையை கட்டி முகத்தை திருப்பினாள் சிறுமி.
 
 
யதிக்குதான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. முகம் லேசாய் கன்றி விட நிமிர்ந்து சொரூபனைப் பார்த்தாள்.
 
 
“கவிதா” சொரூபனின் அழுத்தமான குரலில் கண்டிப்பு கலந்திருந்தது.
 
 
அவன் குரலில் பயந்த கவிதா “சொறி மாமி, ஆனா உண்மையாவே எங்களுக்கு எதுவும் வேண்டாம்” என்றாள் அழு குரலில்.
 
 
“ஷ் என்ன குட்டிமா இது” தோளில் தட்டிக் கொடுத்த யதி, சொரூபனை முறைத்தாள். ‘நீ அதட்டியதால் தான் அழுகிறாள்’ என்பது போல்.
 
 
“கவிதா” அழுத்தமாய் அழைத்து கேட்டான் அவன் “உள்ளே யார் நின்றது?”. அவன் தொனியே கூறியது ‘எனக்கு தெரியும். பதில் சொல்லியே ஆக வேண்டும்’.
 
 
“கல்யாணி மாமி”
 
 
“என்ன சொன்னா?”
 
 
“எங்களுக்கு கஷ்டமாம், அதற்கு உங்களிடம் இருந்து வறுகிறோமாம்” சினந்து வெடித்தாள் சிறியவள்.
 
 
அப்போதுதான் அங்கே வந்த இலக்கியா “கவி” அதட்டல் போட்டாள் “சொறி மாமா சின்ன பிள்ளை கதைக்க தெரியாமல் கதைக்கிற” சொரூபனிடம் மன்னிப்பு கேட்டாள்.
 
 
“நான் உண்மையைதானே சொன்னேன்” என்ற குரலில் நால்வரும் திரும்பிப் பார்த்தனர். கல்யாணிதான் தன் அம்மா அப்பாவுடன் நின்று கொண்டிருந்தாள்.
 
 
“லக்கி வா நாங்கள் போவோம்” எழ முயன்றாள் கவிதா.
 
 
“அப்ப என்னுடன் பின் வீதிக்கு யாரு வருவா?” பாவமாய் கேட்டாள் யதி.
சிறியவர் இருவருமே குழப்பி போய் நின்றார்கள்.
 
 
“எல்லா அன்னக்காவடியும் ஒன்றாய் சுத்த வேண்டியதுதான்” வேண்டுமென்றே சத்தமாய் சொன்னாள் கல்யாணி.
 
 
கோபத்துடன் சொரூபன் ஏதோ சொல்லப் போக அவன் கை மீது கை வைத்து தடுத்த யதி “அச்சோ குட்டிமா நான் உங்கள் இருவரையும் நம்பித்தானே வந்தேன். அப்ப கடையெல்லாம் யாரு சுத்திக் காட்டுவா?” அப்பாவியாய் கேட்டாள்.
 
 
சிறுமி பதில் சொல்ல முடியாது விழிக்க “உங்களுக்கு மனோகரி அண்ட் கோ கம்பனி தெரியுமா? தீவிரமாய் விசாரித்தாள் யதி.
 
 
“டிவியில் விளம்பரம் பார்த்திருக்கிறேனே பெரிய கடை, எலெக்ட்ரொனிக்ஸ் ஐட்டம் எல்லாம் தாயரிப்பார்களே” ஆர்வமாய் கூறினாள் கவிதா.
 
 
“அது என்னோட கடைதான். உங்கள் மாமா அளவு இல்லாட்டியும் நானும் பணக்காரிதான். உங்க மாமாவின் காசில் இல்ல என்னுடைய காசில் ஐஸ்கிறீம் குடிப்போம் சரியா?”
 
 
சொரூபனை தவிர அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இத்தனை பெரிய பணக்காரியா இவள். அனைவரும் சொரூபனின் பிஏ என்றுதான் நினைத்தார்கள்.
 
 
தன் சொத்து மதிப்பை விட அவளின் சொத்து பலமடங்கு அதிகம் என்பது புரிய உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள் கல்யாணி.
 
 
கல்யாணியுடன் பேசக் கூட இல்லாமல் நொடியில் மூக்கறுத்த தொழிலதிபர் யதீந்திராவை பெருமையும் புன்னகையுமாய் ரசித்தான் சொரூபன்.
 
 
“ஆனா ஒரு கண்டிசன்” என்று நிபந்தனை போட்டாள் கவிதா.
 
 
“நாளைக்கு என்னுடன் வெளியே இருந்து காவடி பார்க்கனும் சரியா?”
 
 
“பக்கா” என்று தொண்டைக் குழியில் கையை வைத்தாள் யதி.
 
 
கவிதாவும் லக்கியும் முன்னே செல்ல, தன் பேர்சில் இருந்து காசை கற்றையாய் எடுத்து யதியின் கை பையையினுள் வைத்தான் சொரூபன். அவள் மறுத்து எதுவும் சொல்லமால் சென்று விட புன்னகையுடன் பின் தொடர்ந்தான்.
 
 
இருவருக்குமிடையே தென்பட்ட உரிமையில் நெருப்பில்லாமல் புகைந்தாள் கல்யாணி.
 
 
***
 
 
வெளியே இருளிலில் அமர்ந்திருந்தாள் யதி. மனம் லேசாகி பறப்பது போன்ற ஒரு உணர்வு. சொரூபனின் கையை பற்றியபடி இந்த இடமெல்லாம் அலைந்து திரிந்தது வாழ் நாள் முழுமைக்கும் போதும் போல் இதமாய் இதயத்தில் பதிந்திருந்தது.
 
 
கவிதாவையும் லக்கியையும் வீட்டில் விடுவதற்காய் அவர்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி விட்டு, அவர்கள் பின்னால் அவன் முதுகில் தலை சாய்த்து பைக்கில் சென்று வந்த அனுபவம் ஜென்மத்துக்கும் மறக்காது.
 
 
யாரோ அருகில் அமரும் அரவம் கேட்கவே திரும்பாமாலே புரிந்தது சொரூபன்தான்.
 
 
“என்ன இங்கேயே உட்கார்ந்திட்டாய்”
 
 
“வாழ்க்கை அழகா இருக்கில்ல”
 
 
சட்டென திரும்பி இருளை துளைத்துக் கொண்டு அவள் முகம் நோக்கினான். அவள் குரலில் என்ன இருந்தது.
 
 
ஏதோ நிறைவேறாத ஆசை...
 
 
ஏக்கம்....
 
“உன் வாழ்க்கையும் அழகாககும்” அவள் முன்னுச்சி முடியை ஒதுக்கிவிட்டான்.
 
 
“ப்ச் எனக்குதான் கொடுப்பினை இல்லயே, மனிசியே இல்ல, ராட்சசி நான், கையில் நாலு உயிரின் இரத்தக்கறை. இரவில் தூங்க கூட முடியலையே” நடுங்கும் குரலில் தனக்குள் மெதுவாய் முணுமுணுத்தவள் வேகமாய் உள்ளே சென்றுவிட்டாள்.
 
 
சொரூபன்தான் திகைத்துப் போய் அசைய மறந்து அமர்ந்திருந்தான். அன்று அவன் சொன்ன அதே வார்த்தைகள். பதினைந்து வருடங்கள் கழித்து அட்சரம் பிசகாமல் நினைவில் வைத்திருக்கிறாள்.
 
'ஆனால் நாலு உயிர் எப்படி…’
 
 
'ஏதாவது தகவல் கிடைத்ததா?’ நிஷாந்தாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மேலே சென்றான்.
 
 
ஏதோ மருந்தை போட்டுத் தண்ணீரை குடித்தாள். மருந்து போடுவதென்றால் அவளுக்கு எவ்வளவு கஷ்டம் என்று நன்றாகவே தெரியும் அவனுக்கு. அப்படியிருந்தும் மருந்து போடுகிறாள் என்றால்...
 
 
ஏதோ தோன்ற தலைக் காயத்தை பரிசோதித்தான். சிறு தழும்பாய் மாறியிருந்தது.
 
 
பெருவிரலால் வருடி விட தடுமாறினாள் “எஎன்என்ன?”.
 
 
கூர்ந்து பார்த்துக் கேட்டான் “அதைதான் நானும் கேட்கிறேன், என்ன?”
 
 
வெறுமே தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
 
 
“திடிரென்று ஆறு மாதத்திற்கு முன் இந்தியா வந்த போது சந்தித்தித்த யதி வந்து நிற்கிறாள். என்ன பிரச்சனை சொன்னால்தானே தெரியும்”
 
 
“அம்மாம்மா கூப்பிடுற” என்றவள் வெளியே ஓடிவிட்டாள். யோசனையுடன் அவள் கட்டிலில் அமர்ந்த சொரூபன் அயர்வில் அதிலேயே உறங்கிவிட்டான்.
வெளியே வந்தவள் முகம் வெளுக்க தன் கையிலிருந்த போனைப் பார்த்தாள். வீட்டுக்கு வரும் வரையில் சந்தோசத்தின் உச்சியில் தான் நின்றாள். ஆனால் இந்தியாவிலிருந்து வந்த போனில் அனைத்தும் துணி வைத்து துடைத்தது போல் மறைந்து விட்டிருந்தது.
 
 
சொரூபன் விபத்து நடந்தது தொடர்பாய் ஆதரங்களை சேகரிப்பதாய் தகவல் வந்திருந்தது. அதோடு அவர்கள் இருவருக்கும் நடந்த என்கேஜ்மென்ட் தொடர்பாய் வெளியில் ஓர் துளி கூட விஷயம் கசியவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாய் யாருக்குமே தெரியவில்லை.
அது மட்டுமல்ல அன்று மருத்துவமனையில் வைத்து சொரூபன் நிஷாந்தவிடம் நடிப்பதாக கூறியதும் அவள் காதுக்கு வந்து அன்று தோட்டத்தில் கேட்டதை உறுதிப்படுத்தியிருந்தது.
 
 
இங்கே வந்ததில் இருந்து மனதில் ஒரு நப்பாசை..
 
 
அவனும் தன்னை காதலிப்பது போல் ஒரு மனபிரம்மை.. நம்பிவிட்டாள்.
 
 
அவன் தன்னை காதலிக்காகவே முடியாது என்பது தெளிவாய் தெரிந்தாலும், ஆசை கொண்ட மனம் அதை பற்றிக் கொண்டு துடித்தது.
இன்று அனைத்தும் சுக்கு நூறாய் சிதறி விட்டது.
 
 
அவன் காதலித்தாலும் காதலிக்காவிட்டாலும், அவன் மீது அவள் கொண்ட நேசம் எந்நாளும் மாறாதது.
 
 
கண்ணில் திரண்டிருந்த நீர் கன்னம் தாண்டி வழிந்தது.
 
 
****
 
 
“எங்கே போக போறீங்க?” வேட்டியுடன் தன் முன்னே நின்ற சொரூபனைப் பார்த்து கண்ணை கசக்கியவாறே கேட்டாள் யதி.
 
 
நேற்று அவள் அம்மம்மாவுடன் ஹோலில் உறங்கியிருந்தாள். வெளியே இன்னும் இருளே பிரிந்திருக்கவில்லை.
 
 
“அப்பூ நீ அவளை விட்டுட்டு வா நான் முன்னுக்கு போறேன்” என்றவாறே கண்மணி வாசலைத் தாண்டி போய்க் கொண்டிருந்தார்.
 
 
“அம்மம்மா எங்கே போறா?” பாதி உறக்கத்தில் எழுந்து இருந்தவளைப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. கைகளில் அள்ளிக் கொண்டவன் மேலே அவள் அறைக்கு தூக்கிச் சென்றான்.
 
 
அவன் வெற்று மார்பில் அவள் கைகள் அளையவே அதைப் பிடித்தவன் “நல்லூர் திருவிழா முடியட்டும். உனக்கு இருக்கு பூஜை” என்றான் குறும்பாய்.
 
 
“ஒ அதுதான் பூனை சைவம் ஆகிட்டா, போலிச் சாமியார்” அவனைக் கேலி செய்தாள்.
 
 
“ஹ்ம்ம், போலிச் சாமியார்தான் இரண்டு நாள் பொறு இருக்கு” என்று அவள் கன்னத்தை நிமிண்டினான்.
 
 
“ம்ம் அப்பதான் சீக்கிரம் பாப்பா வரும்”
 
 
“வந்தால்” குழப்பத்துடன் கேட்டான்.
 
 
“வந்தாதான் கல்யாணம் செய்யாமல் சொத்து அனைத்தும் உங்கள் பெயரில் வரும்” உறக்கத்தில் உளறியவாறே ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.
 
 
முகம் இறுக எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டவன் “ஒரு இரண்டு நாள் பொறும். எல்லாத்தையும் விளக்கமா சொல்றன்” நெற்றியில் இதழ் பதித்து கோவிலுக்கு சென்று விட்டான்.
 
 
ஏழு மணி போல் எழுந்த யதி அருகே அமர்ந்திருந்த கவிதாவை பார்த்து சோம்பலாய் சொன்னாள் “குட் மோர்னிங்”.
 
 
“குட் மோர்னிங், கெதிய வாங்கோ காவடி பார்க்கணும்” அவளை துரிதபடுத்தினாள்.
 
 
“மாமா எங்கே”
 
 
“அவர் மூன்று மணிக்கே முருகனை எழுப்ப போட்டார். நீங்க வாருங்கோ”
அன்று முழுதும் காவடி பார்ப்பதும் கவிதா லக்கியுடன் சுற்றுவதிலும் பொழுது போனது. சொரூபன் கண்ணில் கூட படவில்லை.
 
 
தேர் இழுத்து நிலைக்கு வந்ததும் ஒருதரம் அவர்களை கோவிலில் சந்தித்தான்.
 
 
மேலிலும் வேட்டியிலும் இளநீர் கறையும் வேர்வையுமாய் வந்தவனாய் பார்த்து கண்ணை விரித்தாள் யதீந்திரா.
 
 
“ஆறுதலாய் வாருங்கள். நான் முழுகி வருகிறேன்” என்று விட்டு சென்றவன் தான் மீண்டும் பின்னேரம் ஐந்து மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான். வந்ததுமே உடனே கோவிலுக்கு போவதாய் சொல்லி சென்றுவிட்டான்.
 
 
“விட்டா முருகனை லண்டன் கூட்டிட்டு போய் போயிருவான் போல” இதழ்களை நெளித்தாள் யதி.
 
 
அடுத்த நாளும் சொரூபன் கண்ணில் படவில்லை கவிதாவுடன் காவடி பார்ப்பதிலும் பின் வீதியில் வேடிக்கை பார்ப்பதிலும் கழிந்தது. அன்றிரவு அவள் அறைக்கு வந்தவன் அவள் கைகளில் வைத்த பொருட்களைப் பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”