Share:
Notifications
Clear all

மொழி - 17

Posts: 45
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 17
 
மாடியில் இருந்து கீழே தோட்டத்தில் எதையோ வெட்டிக் கொத்திக் கொண்டிருந்த சொரூபனையே வைத்த கண் எடுக்கமால் பார்த்துக் கொண்டிருந்தாள் யதி.
 
 
இரண்டு நாளைக்கு முன்தான் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். கொழும்பில் விமான நிலையத்தில் இறங்கி ஒரு பதினைந்து மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு பிளாட்டிற்கு அழைத்து சென்றவன் “இங்கே ரெஸ்ட் எடும் எனக்கு கொஞ்ச வேலைகள் இருக்கு” என்று விட்டு அதிகாலை சென்றவன்தான் மீண்டும் வந்த போது நடுசாமம் தாண்டியிருந்தது.
 
 
இடையில் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வந்து சமைத்து வைத்து விட்டு சென்றிருந்தார். கதவு திறக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து நிற்க சொரூபன் தான் திறந்து கொண்டு வந்தான். அவள் திகைத்து போய் நிற்பதை பார்த்து விட்டு “என்ன பயந்திட்டீரா?” வினாவினான்.
 
 
வாய் வழியே காற்றை வெளியேற்றியவள் முறைத்தாள்.
 
 
“நான்தான் சொன்னேனே, இது நிஷாந்தவினதும் எனது பெயரிலும் இருக்கும் இடம். இங்கே என்னை மீறி யார் வருவார்கள்?”
 
 
“க்கும் ஏதோ இந்த பில்டிங்கே உங்களுடையது போல பெரிய பில்ட்டப்தான்” வாய்க்குள் முணுமுணுத்து உதட்டை சுளித்தாள்.
 
 
சுளித்த அவள் உதட்டை இரு விரலால் பிடித்தபடி பதிலளித்தான் சொரூபன் “அதைத்தான்டி நானும் சொல்கிறேன், இந்த பில்டிங்கே எங்களுடையது”
 
 
அவன் கையை தட்டிவிட்டவள் கண்ணை விரித்து பார்க்க “குளிச்சிட்டு வாரேன்” என்று சென்றுவிட்டான்.
 
 
பல்கனியில் நின்று வெளியே பார்த்தாள்.
 
 
கொல்பிட்டி என்று அந்த இடத்தின் பெயர் பார்த்தாக ஞாபகம் வந்தது. அவளுக்கு இங்கே பெரிதாய் இடத்தைப் பற்றி சரியாக தெரியாவிட்டாலும், கொழும்பின் முக்கிய கேந்திர நிலையங்களில் ஒன்று என்பதை சரியாகவே கணித்திருந்தாள்.
 
 
சில்லென்ற கரம் இடையை தழுவ சிணுங்கினாள் “குளிருது”.
 
 
அவள் தோளில் புதைந்த இதழ்கள், கரத்திற்கு எதிராய் சூடாய் இருந்தது. அவன் கைகளுக்கு நடுவே சுழன்று திரும்ப அப்படியே தூக்கிக் கொண்டான்.
 
 
வெற்று மார்புடன் முழங்கால் வரை ஷார்ட்ஸ்  மட்டும் அணிந்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட நின்றான் சொரூபன். அப்படியே உள்ளே தூக்கி செல்ல, ஒரு கையால் எட்டி சோபாவில் அவன் போட்டிருந்த துவாயை எடுத்தவள் “இறக்கி விடுங்கள்” என்றாள் கராறாய்.
 
 
“பச்” சிறு சலிப்புடன் இறக்கி விட்டவன் எரிச்சலுடன் கேட்டான் “ஏன் வேண்டாமா?”
 
 
அவனுக்கு பதில் சொல்லாமல் தலையை துடைக்க முயன்றாள், எட்டவில்லை. சோபாவில் ஏறி நின்று வாய்க்குள் முனகினாள் “ஏன்தான் இப்படி வளர்ந்து தொலைக்கிறாங்களோ?”
 
 
“அப்பதானே நினைச்ச படிக்கு தூக்க வசதியா இருக்கும்” குறும்பாய் கூறிய சொரூபன் அவள் தலை துடைத்து விடுவதை இமைக்காது பார்த்திருந்தான்.
 
 
கவலையுடன் நோக்கினாள் அவளுள் இருந்த அவன் காதலி யதி.
 
 
அதிகாலை நான்கு மணிக்கு சென்றவன் வீட்டிற்கு திரும்ப வந்த போது நேரம் பன்னிரெண்டரை, கிட்டத்தட்ட இருபது மணித்தியாலம் இப்படி உழைத்தால் உடம்பு என்னத்திற்கு ஆகும். முகத்தில் களைப்பு அப்பட்டமாய் ஒட்டியிருக்க முகத்தை நுனி விரலால் வருடி “சாப்பிட்டீர்களா?” கவலையுடன் கேட்டாள்.
 
 
“இனித்தான்” என்றவன் பார்வை உதட்டில் பதிந்தது.
 
 
“இன்று எதுவுமில்லை” அவனை தள்ளி விட்டு குளிர்சாதன பெட்டியை பரிசோதித்தாள். பால் பாக்கெட் இருக்கவே காய்ச்ச எடுத்து கொண்டு சென்றாள்.
 
 
அவள் பின்னேயே கிட்சின் சென்றவன் “சாப்பாடு ஏதும் செய்து தர மாட்டீரா?” வேண்டுமென்றே அவளை சீண்டினான்.
 
 
தவித்து போய்ப் பார்த்தாள் யதி “எனக்கு தோசையை தவிர வேறு ஏதும் செய்ய தெரியாதே”
 
அடுப்புக்கு அருகே ஏறியிருந்து “உமக்கு என்னை சரியா பிடிக்குமில்ல” கேட்டவன் குரல் லேசாய் கரகரத்தது.
 
 
அவன் கதையை காதிலேயே எடுக்காமல் “எதிலாவது ஆர்டர் பண்ணலாமா?” கைபேசியை எடுக்க, அதை வாங்கி கீழே வைத்தான்.
 
 
“கண்ட நேரமும் நான் சாப்பிடுறதில்ல, பாலை காய்ச்சி தாரும்” என்றான். அவன் கண்ணில் இருந்த உணர்ச்சியை படிக்க முயன்று தோற்றவள் தடுமாறினாள் “என்என்ன?”.
 
 
அவள் கன்னத்தை இரு கைகளிலும் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்தான்.
 
 
“யதி”
 
 
“ஹ்ம்ம்” அவள் இந்த உலகத்திலேயே இல்லை.
 
 
“யதி”  மீண்டும் அழுத்தமாய் அழைத்தான்.
 
 
அப்போதும் ‘ஙே’ என்று விழித்தவளுக்கு சிறு சிரிப்புடன் கண் காட்டினான் “பால்”.
 
 
“அச்சோ” என்றவாறு அவசரமாய் பாலை இறக்கி சீனியை தேடினாள். கபோர்டில் இருந்து சீனியையும் கூடவே கொக்கோவையும் எடுத்துக் கொடுக்க ‘இது எதற்கு என்பது போல் பார்த்து வைத்தாள்’.
 
 
“தனியா பால் குடிக்க முடியாது”
 
 
“ஒஹ்” என்றவாறே பாலைக் கலந்து கொடுத்தாள். குடித்து விட்டு அவளை தூக்கிக் கொண்டு படுக்கையறை சென்றவன் அவசரமாய் அவள் இதழோடு இதழ் கலந்தான். பலவந்தாய் அவனிடைருந்து விடுபட்டவள் முறைத்தாள் “இன்று எதுவுமில்லை என்று சொன்னேனா இல்லையா?”
 
 
அவன் குடித்த பாலின் சுவை உதட்டில் தித்திக்க சப்புக் கொட்டினாள். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே “செம்மையா இருக்கு நாளைக்கு ஞாபகபடுத்துங்கோ. அந்த கொக்கோ பவுடரை பாலில் கலந்து குடிக்கணும்” என்றவளை கட்டிலில் தொம்மென்று போட்டான்.
 
 
“சாப்பாட்டு ராமி”
 
 
அவளருகே குதித்து விழுந்தவன் “எனக்கு வேண்டும்” என்று அவள் வயிற்றில் கைவைத்தான்.
 
 
“என்ன வேண்டும்”
 
 
“பவா”
 
 
“பவா” குழப்பாய் பார்த்தவள் புரிந்து கொண்டு “ஒஹ் பாப்பா, ஆனால் ஏன்?” விசாரித்தாள்.
 
 
“நேரம் வரும் போது சொல்கிறேன்” என்று அவளை நெருங்க மீண்டும் தள்ளி விட்டவள் “பாப்பா எங்கேயும் போய்விடாது. இன்று ஓய்வெடுங்கள். நான் சாகுறத்துக்குள்ள உங்களுக்கு பாப்பா பெத்து தாரேன், போதுமா?” விளையாட்டாய் மொழிய கணத்தில் மாறி “ஏஏய்..” அடங்கா சினத்துடன் அவள் தோளை இறுக்கிப் பிடித்தான்.
 
 
“ஷ் வலிக்குது” அவள் வலியில் முகம் சுளிக்க மறுபுறம் திரும்பிப் படுத்து விட்டான்.
 
 
ஒரு கணம் அன்று அலுவலகத்தை அடித்து நொறுக்கிய உக்கிர சொரூபன் கண்முன் வந்து போக திகைத்துவிட்டாள் யதீந்திரா. ‘அப்படி என்ன சொல்லிவிட்டேன்’ யோசித்தவளுக்கு அன்றும் இன்றும் அவன் கோபத்தின் காரணம் பிடிபடவேயில்லை.
 
 
திரும்பிப் படுத்தவன் அன்றைய அலுப்பில் உறங்கிவிட யதிதான் அவன் கோபத்தின் காரணம் புரியாது உருண்டு புரண்டு கொண்டிருந்தாள்.
 
 
அடுத்தநாள் குளித்து வந்த போது கொக்கோ போட்ட பால் சூடாய் அவளுக்காய் காத்திருந்தது. குடித்தவாறே அவனைத் தேட முகத்தை சிடுசிடுவென்று வைத்துக் கொண்டு திரிந்தான் சொரூபன். நேரத்தைப் பார்க்க மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
 
 
சாதாரண த்ரீ குவாட்டர் சேர்ட்டுடன் மடிக்கணனியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க எட்டிப் பார்த்தாள். கன்பிரன்ஸ் வீடியோ அழைப்பில் இருந்தான். போரடிக்க கைபேசியை எடுத்து வைத்து நோண்டினாள்.
 
 
சொரூபனிடம் இருந்து குறுஞ்செய்தி என கைபேசி காட்ட வியப்புடன் அவனைப் பார்த்து விட்டு செய்தியைப் பார்த்தாள். ‘இன்று மதிய விருந்து போகணும் ரெடியாகும்’.
 
 
‘வரல’ என்பது போல் மறுத்து தலையாட்டினாள்.
 
 
முகம் இறுக கைபேசியில் தட்டிவிட்டான் ‘வாரீர் அவ்வளவுதான்’.
முகத்தை பார்க்கவே புரிந்தது, மறுக்க முடியாது. ‘ட்ரெஸ்’ என்று அனுப்பினாள்.
 
 
‘ஜீன்ஸ் சேர்ட் ஒகே’ பதிலனுப்பியதுடன் கணனியில் ஆழ்ந்துவிட்டான்.
 
 
நீல கலர் டெனிமுக்கு மேல் கருப்பு நிற சேர்ட் அணிந்து வந்த பின்தான் கவனித்தாள். அவனும் அதே நிறத்தில் முழங்கால் வரை த்ரீ குவாட்டரும் கருப்பு நிற சட்டையும் அணிந்திருந்தான்.
 
 
அவளைக் கண்டதும் லப்பை மூடிவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு எழும்பியவன் “பாக் தேவையில்லை, கீழ்தளம் தான்” என்றான்.
 
 
லிப்டில் இறங்கும் போதுதான் அவள் ஆடையின் நிறத்தை கவனித்தவன் வாய்க்குள் சிரிக்க “நான் கவனிக்கல” யதி வாய்க்குள் முனகவே, அவன் முகம் இறுகிவிட்டது.
 
 
‘வரவர இவன் எதுக்கு கோபபடுறான் என்றே புரியல. இதுக்கு தனியா ஒரு லிஸ்ட் எடுக்கனும்’ மனதினுள் வறுத்துக் கொட்டினாள்.
 
 
‘டிங்’ என்ற சத்தத்துடன் லிப்ட் நின்றது.
 
 
சிறு கையசைவுடன் வெளியேறி இடது பக்கமுள்ள கதவின் கோலிங் பெல்லை அழுத்தி விட்டு விலகி கதவின் நிலையில் சாய்ந்து நின்றான் சொரூபன்.
 
 
கதவைத் திறந்தவரை பார்த்து திகைத்துப் போய் நின்றாள் யதீந்திரா.
 
 
அவளை விட குள்ளமாய் நாற்பத்தி ஐந்து, ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர் கண்ணாடி வழியே சற்று அண்ணாந்து அவளைப் பார்த்தார். இங்கு யாரை எதிர்பார்த்திருந்தாலும் இவரை துளி கூட எதிர் பார்க்கவில்லை. சில கணங்கள் தடுமாறி முகத்தை சரி செய்து கொள்வதற்குள் அருகே நின்றவனுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்திருந்தது.
 
 
சொரூபன் கவனமாய் அவள் முகத்தில் வரும் உணர்ச்சிகளையே கவனித்துக் கொண்டிருந்தான்.
 
 
“யாரம்மா நீ என்ன வேண்டும்” விசாரிக்க கரம் குவித்தவள் சொரூபனை நோக்கினாள்.
 
 
கதவு நிலையில் சாய்ந்து நின்றவனின் பார்வையின் தீட்சண்யத்தில் தலை குனிந்தவள் “அடையாளம் தெரியலையா நானா?” என்ற கேள்வியில் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் அடக்கிய கோபத்துடன் அவளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.
 
 
அப்போதுதான் அவன் அங்கே நிற்பதைக் கண்ட முல்லா நானா “அடடடே சொரூப உள்ளே வா. இது யார்?” அவனை வரவேற்று விசாரித்தார் “என்ன அடையாளம்” மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே யதீந்திராவை கூர்ந்து பார்த்தவர் முகம் யோசனையைக் காட்டியது.
 
 
பயத்துடன் அவனையும் அந்த மனிதரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
 
 
“இல்ல நேற்று என்கேஜ்மென்ட் போட்டோ அனுப்பினேன். இன்று சாப்பிடக் கூட கூப்பிடீர்கள். ஆனால் மறந்தீடிங்க போங்க நானா உங்களுக்கு பழைய அன்பே இல்ல” அவரிடம் வம்படித்தான்.
 
 
“அன்புல என்னடா பழைய அன்பு புது அன்பு” அவனிடம் அங்காலாய்த்தவர் “அவன் கிடக்கிறான், நீ உள்ளே வாம்மா” என்று அவளை வரவேற்றார்.
 
 
“சஃபான இங்கே யாரு வந்திருகிற என்று பாருங்கள்” மனைவியையும் அழைத்தார்.
 
 
முள்ளின் மேல் நிற்பது போல் என்றால் என்னவென்று முழுமையாய் உணர்ந்தாள் யதி. இப்படியே திரும்பி ஓடிவிட்டால் என்ன என்று இருந்தது.
 
 
அவர் உள்ளே திரும்பிய கணத்தில் அருகே வந்தவன் ஒரு கையால் இறுக அணைத்து விடுவித்தான். ஏற்கனவே குழப்பத்தில் நின்றவள் அவன் அணைப்பின் இறுக்கத்தில் கதி கலங்கிப் போனாள்.
 
 
முல்லா நானாவின் மனைவி வந்து கையைப் பிடித்து அழைத்து செல்ல உள்ளே சென்றவளிடம் ‘என்ன நடந்தது’ என்று கேட்டால் எதுவும் நினைவில்லை என்றுதான் சொல்வாள். அத்தனை தூரம் கதி கலங்கிப் போய் இருந்தாள். சாப்பிட்டு விட்டு அனைவருமாய் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்க, அனைவருடமும் பேசிப் பழகிய போதும் அவள் கண்கள் நானவையே அடிக்கடி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
 
 
அவரும் பேச்சின் நடுவே யோசனையுடன் அவளைப் பார்த்துக் கேட்டார் “இதற்கு முன் இங்கே வந்திருகிறயாம்மா?”.
 
 
“இல்லையே, இதற்கு முன் இங்கு ஏன், இல்லயே” அவசரமாய் கையை விரித்தாள் யதி.
 
 
போனில் கவனமாய் இருந்த சொரூபன் உதட்டுக்குள் நகைத்தான்.
முல்லா நானாவின் முகத்தில் எதையோ கண்டு பிடித்த ஒளி. “அன்று” என்று முல்லா நானா தொடங்கவே சட்டென கரம் குவித்த யதி வேண்டாம் என்று தலையாட்டினாள்.
 
 
“நீங்கள் இருவரும் கதையுங்கள் ஒரு கோல் கதைச்சிட்டு வாரேன்” பொக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்துக் கொண்டு பல்கனி பக்கம் ஒதுங்கினான் சொரூபன்.
 
 
“அன்று பெட்டாவில் வைத்து சொரூபன் அறைந்தது உன்னைத்தானே?” அவர் சரியாகவே கேட்டார்.
 
 
பரிதாபமாய் விழித்தாள் யதி.
 
 
அவளை யோசனையுடன் நோக்கியவர் கேட்டார் “இன்னும் சொரூபனுக்கு தெரியாத?”
 
 
தலையை மட்டும் குறுக்கே ஆட்டி உதட்டில் கை வைத்தாள்.
 
 
“எனக்குத் தெரியாமல் எப்படி?” என்றவாறே சொரூபன் வர அவளுடல் வெளிப்படையாகவே தூக்கிப் போட்டது.
 
 
அவள் பயத்தை கூர்ந்து நோக்கியவன் “ஷ் ரிலாக்ஸ்” அவள் கைகளை தன் பெரிய கைக்குள் வைத்து தட்டிக் கொடுத்தவன் அவள் உடலின் நடுக்கத்தைப் பார்த்து எழுந்துவிட்டான் “நாங்கள் வருகிறோம்”.
 
 
செல்லும் இருவரையுமே பார்த்திருந்த முல்லா நானா கைபேசியை எடுத்து காதில் வைத்தார் “நிஷாந்த, இக்மேனிட்ட லங்காவ என்ன” (சீக்கிரமாய் இலங்கைக்கு வா)
 
 
******
 
 
சோபாவில் காலைத் தூக்கி வைத்துக் கொண்டு முழங்காலைக் கட்டிக் கொண்டிருந்தவளையே பார்த்தான் சொரூபன். நானாவின் வீட்டிலிருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல், அவளின் பதட்ட நிலை மாறவேயில்லை. அவள் பதட்டத்தின் காரணம் அவனுக்கு விளங்கவே செய்தது. 
 
 
லிப்ட் பட்டனை அமர்த்தி விட்டு சொரூபன் காத்திருக்க அவளோ விறுவிறுவென படிகளில் இறங்கிவிட்டாள்.
 
 
“யதி, இப்போது நான் வெளியே” ஏதோ சொல்லியவாறே திரும்பியவனை வெற்றிடம் வரவேற்றது. யோசனையுடன் படியை எட்டிப் பார்க்க கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்.
 
 
“உப்...” என்று மூச்சை வெளியிட்டு அவனும் இறங்கினான்.
 
 
கட்டிடத்தின் அந்த தளம் முழுவதும் அவர்களுடையதுதான். அவர்களுக்கு என்று தனிப்பட்ட லிப்ட்டும் உண்டு. எனவே வேறு யாரும் வந்துவிடுவார்களோ என்ற பயமில்லை. கீழ் படிக்கு அருகே அமர்ந்திருந்தவள் அருகே அமர்ந்தான் அவன்.
 
 
“ஷ் என்னம்மா” முதுகில் கைவைத்து ஆறுதல்படுத்த இன்னும் நடுங்கினாள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் “ஒன்றுமில்ல இப்ப எதுக்கு இவ்வளவு நடுக்கம்” அவள் கைகள் இரண்டையும் தன்  கைக்குள் வைத்து தேய்த்து கதகதப்பாக்கினான்.
 
 
எது செய்தும் அவள் நடுக்கம் நிற்கவில்லை.
 
 
அப்படியே தூக்கி வந்து சோபாவில் விட முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்து “நீங்கள் போங்கள், இது கொஞ்ச நேரத்தில் நின்றிடும்” என்றவளை ஆழ்ந்து பார்த்து விட்டு கைபேசியை எடுத்து கொண்டு உள்ளே சென்று விட்டான்.
 
 
அவள் முன்னே சூடாய் ஹாட் சாக்லெட் வரவே நிமிர்ந்து பார்த்தாள், சொரூபன்தான். அவன் முகத்திலிருந்து என்ன நினைக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.
எதிரில் அமர்ந்து கேட்டான் “இதற்கு முன் இப்படி வந்ததா?”.
 
 
மெலிதாய் புரையேற சமாளித்துக் கொண்டு தலையாட்டினாள்.
 
 
எழுந்து அவளருகே அமர்ந்தவன் “என் யதி தைரியமானவள்” என்று நெற்றியில் இதழ் பதித்து, மடியில் இழுத்து போட்டு புருவத்தை வருடிவிட்டான் “தூங்கு”.
 
 
“இது இறுக்கம், மாத்தணும்” எழ முயன்றாள்.
 
 
“பிடிவாதம்” செல்லமாய் திட்டியவன் அவனோ அவளுக்கு ஆடை மாற்றி மென்மையாய் கட்டிலில் படுக்க வைத்து கம்பளியால் போர்த்தி தலையை வருடிக் கொடுக்க சற்று நேரத்தில் உறங்கியிருந்தாள்.
 
 
சைலெண்டில் இருந்த போன் செய்தி வந்திருப்பதாக கண்ணடித்தது. எடுத்துப் பார்க்க நிஷாந்த தான் அனுப்பியிருந்தன் ‘நான் லங்கா வாரேன்’.
 
 
‘ஒகே’ என்று பதிலனுப்பி விட்டு படுத்தவனுக்கு வெகு நேரம் உறக்கம் வரவில்லை. மனமும் மூளையும் சேர்ந்து நிகழ்வுகளைக் கோர்க்க முயன்று கொண்டிருந்தது.
 
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”