மொழி - 21
பின் புறத்தில் தொண்டமானாறு சலசலத்து ஓட, அதன் அருகே வல்லி கொடி முளைக்கும் கோவில் கிணறு, சுற்றிலும் நிழல் தரும் மரங்கள், அதன் மேல் பறவைகள், கீழே உலக வாழ்கை வேண்டாம் என்று வந்த சில மனிதர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிபர்கள், ஆதரிக்க யாருமற்றவர்கள் என்று அங்கங்கே அமர்ந்திருக்க, அனைவரையும் பாரபட்சமின்றி தழுவி சென்றது இளந் தென்றல், அந்த சில்லென்று வீசிய தென்றலில் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
இவற்றின் நடுவே சிறிய கோவிலில் குடியிருந்தார் செல்வ சந்நிதி முருகன், அன்னதான கந்தன். இங்கு நந்தியாய் மயில் இல்லை காளை, ஒரு காலத்தில் ஐம்பத்திநான்கு அடி உயரமிருந்த கண்டாமணி கோபுரம் இப்போது சற்று சிறிதாகியிருந்தது.
அதிகாலை நல்லூரின் அமைதி ஒருவிதமென்றால் சந்நிதியான் வீதியில் கண் மூடி அமர்ந்திருப்பது ஒரு மோனம்.
பிரசித்தி பெற்ற அந்த முருகன் கோவிலின் முன்னால் சொருபனின் கார் நிற்க, அதிலிருந்து இறங்கினாள் யதீந்திரா, கூடவே இலக்கியாவும் கவிதாவும்.
வேஷ்டி சட்டையுடன் காரை ஓட்டி வந்த நிஷாந்த அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளுக்கோ நேற்றிரவு சொரூபன் கூரை சேலையையும் நகைகளையும் கையில் வைத்த போது தொடங்கிய குழப்பம் இன்னும் ஓய்ந்தபடில்லை. அவள் கையில் சேலையையும் நகையையும் வைத்தவன் வேறு கேள்வி கேட்பதற்கு முன்னர் அங்கிருந்து சென்றிருந்தான்.
“அய்யா” என்று ஏதோ சொல்ல வருவதற்குள் இன்னொரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் சொரூபன்.
மெல்லிய தங்க கரையிட்ட பழுப்பு நிற பட்டு வேட்டி, மேலே அதே நிறத்தில் பட்டுச் சட்டை, அதன் மேல் குறுக்காய் சால்வை போட்டு இரண்டு முனைகளையும் சேர்த்து பின் குத்தியிருந்தான். தலையில் விசிறி வைத்த தலைப்பாகை, நெற்றியில் அழகாய் சிறிய மூன்று கோடு, நடுவே சிறிய பொட்டு சும்மாவே அவனைப் பார்த்தாள் மயங்குபவள் இந்தக் கோலத்தில் கிறங்கிப் போனாள்.
அவள் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்த சொரூபன் லேசாய் தொண்டையை செருமினான்.
அவள் கண்ணில் மயக்கம் இருந்த இடத்தை இப்போது தவிப்பு ஆட்கொண்டது. நடப்பதை நிஜமென்று நம்பவும் முடியாமல் கனவென்று ஒதுக்கவும் முடியாமல் தவிப்பது புரிய “நானொன்றும் அவ்வளவு பாதகனில்லை” முறுவலுடன் அவளின் கேசத்தை காதோரமாய் ஒதுக்கினான் சொரூபன்.
அவளோ பேச்சு மறந்து நின்றாள். கடந்த பதினைந்து வருடத்தில் சொரூபனுடனான திருமணத்தை கனவில் கூட நினைக்கவில்லை.
“மாமா நானே கஷ்டப்பட்டு அதை ஸ்டைலாய் விட்டு இருக்கிறேன்” என்ற கவிதா மீண்டும் காதருகே அவள் கேசத்தை அழாகாய் சுருட்டி விட்டவாறே கேட்டாள் “மாமி அவசரத்துக்கு நாகசடை கிடைக்கல. நானும் லக்கி அக்காவும் தான் கையால் செய்தோம் உங்களுக்கு பிடிச்சு இருக்குத் தானே’ ஆர்வமும் கவலையுமாய் விசாரித்தாள்.
இருவரும் சேர்ந்து தான் அவளை அலங்காரம் செய்தார்கள். இலக்கியா அழகுக்கலை படித்து இருந்தது வசதியாய் இருந்தது.
இலக்கியா அவளைப் போல் வெளிப்படையாக கேட்காவிட்டாலும் யோசனையுடன் தன்னை நோக்குவது புரிய “அழகாய் இருக்கு, எனக்கு பிடிச்சும் இருக்கு” என்றாள் புன்னகையுடன்.
ஏற்கனவே தம்பதியினராய் வாழ்ந்ததால் ஒரு கும்பம் வைப்பதா பன்னிரெண்டு வைப்பதா என்ற பிரச்சினை வரும். கூடவே பலரின் வீண் பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும் அதுதான் அனைத்தையும் யோசித்து சந்நிதியில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தான் சொரூபன்.
இங்கே நடக்கும் திருமணம் வித்தியாசமானது. வள்ளியின் சந்நிதிக்கு முன்னர் வேதமந்திரமின்றி வாயை துணியால் கட்டிய கப்பூகர் என்று அழைக்கப்படுபவர் முன்னின்று நடத்தி வைப்பார். மாலை மாற்றி பொன் தாலி அணிவித்து உச்சியில் குங்குமம் வைக்கும் போதே நிகழ்வது உறைக்க சந்தோசத்தின் உச்சத்தில் ஒரு துளி கண்ணீர் யதீந்திராவின் இமை தாண்டியது.
அனைத்து நாட்களும் அன்னதானம் நடப்பதால் அன்னதான கந்தன் என்ற பெயருடன் இருக்கும் சந்நிதியானுக்கு சொரூபனும் அன்னதனத்திற்கு பணம் செலுத்தியிருந்தான். நிறைய திருமணம் ஒரே நேரத்தில் நடப்பதால் அன்னதானத்திற்குரிய பணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி விட வேண்டும் அன்னதானத்தை அவர்களே நடத்துவார்கள்.
திருமணம் முடித்து வெளியே வந்த கையுடன் அவன் கண்ணசைவில் ஒரு பெரிய பெட்டியை தூக்கி கொண்டு வந்தார்கள் சிலர். உள்ளே பெண்களுக்கு ஆண்களுக்கு என்று தனித்தனியாய் பைகள் இருந்தது. பெண்களுக்கானதில் சேலை, சாதாரணமாய் அணியும் சோர்ட்டி, போர்வையுடன் ஆண்களுக்கு வேட்டி சட்டை ஜீன்ஸ் சரம் போர்வை என்று இருந்தது. அதை எடுத்து இருவருமாய் அங்கே மடத்தில் தங்கியிருக்கும் வயதானவர்களுக்கு கொடுத்தார்கள்.
மாப்பிள்ளை பொம்பிளையாய் இருவரும் ஒரே காரில் ஏற டிரைவர் சீட்டில் அமர்ந்தான் நிஷாந்த. பின் சீட்டில் கவிதா அமர முன்னால் இலக்கியா அமர்ந்தாள்.
நிசாந்த காரின் ஸ்டேயரிங்கை திருப்பி வாகனத்தை எடுக்கவும் “நிஷாந்த மாமா ஜானகி யாரு” பின்னிருந்து கவிதா கேட்க “சொறி மாமா வர வர இவளுக்கு வாய் கூடி போட்டு.” கவிதாவை கடிந்தவள் “எங்களுக்கு கண்டி முறை கலியாணம் பார்க்கனும் எண்டு ஆசை. எங்களுக்கும் சொல்லுவியள் தானே” என்று காலை வாரினாள் அவள்.
மாமாவின் நண்பன் என்ற ரீதியில் மாமா என்று அழைத்தாலும் சொரூபனிடம் இருக்கும் மாமா என்ற பயமின்றி சற்று செல்லமாய் பழகுவார்கள் இருவரும்.
நிஷந்தா பாவமாய் பார்த்து வைத்தான்.
“போட்டோ இருக்கே” ஆர்வமாய் நிஷாந்தாவின் கைபேசியை எடுக்க மீசைக்கடியில் புன்னகையுடன் பார்த்திருந்தான் சொரூபன். அவர்கள் கவனம் அங்கே செல்ல அவன் கையின் கவனம் அருகே இருந்த மங்கையின் இடையில் சென்றிருந்தது.
அவன் கையில் கிள்ளி விட்டவள் லேசாய் நெளிந்தாள்.
கண்ணாடியில் நண்பனின் குறும்பை கண்டு கொண்ட நிஷாந்தவின் உதடுகளில் குறும்பு புன்னகை நெளிய “இவர்கள் இருவருக்கும் தெரியும் அவர்களிடம் கேளுங்கள்” என்று இருவரையும் மாட்டி விட்டான்.
சிறியவர்கள் இருவரும் திரும்புவதற்குள் கையை எடுத்துக் கொண்ட சொரூபன் “இவாவின் தங்கைதான்” என்று கழண்டு கொண்டான்.
“போட்டோ காட்டுங்கள்” இருவரும் அவளைப் பிடித்துக் கொள்ள “சரி சரி” என்று கைபேசியில் சேமித்து வைத்திருந்த படங்களினைக் காட்டினாள்.
ஜானகியும் அவளுமாய் சேர்ந்து நின்ற படங்கள் சில, சிலது சொரூபனுடன் மூவருமாய் நின்றது, அடுத்ததாய் நிஷாந்தவுடன் சமையல் செய்யும் படத்தை பார்த்துவிட்டு இருவரும் “ஊ..” என சத்தமிட சிவந்த முகத்தைத் திருப்பினான் நிஷந்தா.
“ஜானகி நிஷந்தாவிற்கு வைத்திருக்கும் பெயர் பிங்கி” என்று எடுத்துக் கொடுத்தாள் யதீந்திரா.
“சரியா தான் ஆசை மாமி வைச்சு இருகிறா” என்று கவிதா சிரிக்க முகம் இறுக வெளியே பார்த்தான் சொரூபன். அடுத்த படத்தை தட்டுவதற்கு முன்னர் அவளின் கைபேசி சத்தமிட அதை வாங்கிக் கொண்டாள் யதி.
அவள் அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அழைப்பு, ஜானகிதான் அழைத்திருந்தாள்.
“ஹலோ” என்று காதில் வைத்தவாறே நிமிர்ந்து அவனைப் பார்க்க யாரென்று சொல்லாமலே புரிந்ததில் ‘ப்ளீஸ் சொல்லாதே’ என்று கெஞ்சுவது போல பார்த்தான் நிஷந்தா.
பெயர் சொல்லாமலே அலுவலக ரீதியாய் பேசி விட்டு வைக்கவும் வீடு வரவும் சரியாய் இருந்தது. படத்தில் கை தட்டுபட அடுத்ததாய் அண்டியும் அவளும் ஜானகியுமாய் இருக்கும் படம். அதைப் பார்த்தவள் முகம் யோசனையை தத்தெடுக்க இறங்க மறந்து காரினுள் அமர்ந்திருந்தாள்.
“யதி” குனிந்து அவள் தோளை தட்ட சட்டென போனை அணைத்தவள் அவன் கையை பற்றியபடி வெளியே வந்தாள்.
வாசலில் வைத்து ஆராத்தி சுற்றி உள்ளே வர நெருங்கிய சொந்தகாரர்களுக்கும் அயலவர்களுக்கும் மட்டுமாய் அழைப்பு கொடுத்திருந்தான். கல்யாணியும் அவள் அப்பாவும் கூட வந்திருந்தார்கள்.
“என்ன லக்கி” என்று பின்தங்கி நின்ற இலக்கியாவை விசாரித்தாள் கவிதா.
“இல்ல, அந்த ஜானகி எங்கேயோ பார்த்த மாதிரி, அதான் எங்கே என்று யோசிக்கிறேன்” என்றாள் அரைகுறை கவனத்துடன்.
வாசலில் நின்ற அம்மம்மாவைப் பார்த்த யதிக்கு ஏதோ போலிருந்தது. விருந்தாளியாய் வந்தவள் திடிரென மண பெண்ணாய் வந்து நிற்கிறாள் எப்படி ஏற்றுக் கொள்வாரோ தயக்கத்துடன் நோக்கினாள். அவரோ புன்னகையுடன் அவள் கன்னம் வழித்துக் கொஞ்சினார்.