சஞ்சாரம் 1
மும்பையின் கடற்கரையோரம் அமைந்திருந்தது அந்த ஏழு நட்சத்திர ஹோட்டல்,
மேலே தொங்கிக் கொண்டிருந்த சாண்டிலியரிலிருந்து மெல்லிய மஞ்சள் வெளிச்சத்துடன் காதை உறுத்தாத மெல்லிசை கசிய, மனதை மயக்கியது அந்த ஹோட்டலின் கஃபே.
அதன் மூலையில் குசன் சோபாவில் முழங்காலின் மீது மறுகாலின் பாதத்தை வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தவன் சிறு மேசை மீதிருந்த மக்கை எடுத்து காஃபியை அருந்தினான். காஃபியிலிருந்து எழுந்த மெல்லிய ஆவியின் வழியே மேசை மீது சொகுசாய் சாய்ந்திருந்த டப்பைப் பார்க்க, அது அதே ஹோட்டலின் ஆடம்பர அறையொன்றின் உள்ளே நடப்பதை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
அந்த அறையில் இருந்தவன் பெயர் நிதீஷ் பாட் மும்பையின் பிரதான மாஃபியக்களில் ஒருவன்.
கட்டுக் கட்டாய் இறுகியிருந்த தேகம், வெளியே இருவர் மிஷின் கன்னுடன் காவல், உள்ளே பல்க்காய் பத்து பேர், இடையில் கைத்துப்பாக்கி என்று அக்மார்க் மாஃபியா என்பதன் அடையாளமாய் நின்றான். மும்பையின் டிஐஜி கூட நெருங்க நூறுதரம் யோசிக்கும் ஒரு மனிதன். அவனோ நெஞ்சை ஒரு கையால் அழுத்தியவாறு காசநோய் கண்டவன் போல் இருமிக் கொண்டிருந்தான். அவன் படும் அவஸ்தையை நிதானமாய் பார்த்தவாறே காஃபியை சுவைத்தான் அவன்.
அவன் பீனிக்ஸ்...
அங்கே அவனைப் பரிசோதிப்பதற்காய் அழைக்கப்பட்ட மருத்துவர் வரவும் அவன் கீழே விழவும் சரியாய் இருந்தது. அவனைப் பரிசோதித்த மருத்துவர் தலையை ஆட்டி உதட்டை பிதுக்கினார்.
“ச்சு, ஹார்ட் அட்டாக் ஆர் சச் எ கில்லர்” போலியாய் பரிதாபப்பட்டான்.
டப்பில் ஒரு ப்ரோக்ராமை இயக்க நிதிஷின் அறை சுவற்றில் ஒட்டியிருந்த பட்டன் போன்ற காமரா இரண்டாய் உடைந்து குப்பைதொட்டியருகே விழுந்தது. சாதரண கண்களுக்கு கோர்ட் பட்டன் போலதான் தோன்றும்.
“இந்த மும்பை சுத்த போர், ட்ராபிக் ட்ராபிக்.. கடற்கரையில காலை சூரிய உதயம் கூட இல்ல. கொஞ்சம் இயற்கை கொஞ்சும் இடமா வேலையை தாரங்களா?” சோம்பலுடன் சொன்னவன் போனை எடுத்து பார்க்க, டார்க் வெப்பில் இருந்து வந்த சில குறுஞ் செய்திகளைக் காட்டியது அது.
‘பீனிக்ஸ் டார்கெட் இன் கேரளா, ஆர் யூ இண்டர்ஸ்டட்’ ரகசிய கோட் வோர்டில் கேட்டது.
“ஹ்ம்ம் திங் ஒப் டெவில், பட் ஐம் த டெவில் ஹியர். கொல்லம் கண்டவனுக்கு இல்லம் தேவையில்லை. நமக்குதான் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாலிசி சோ, நோ பிரச்சனை.”
“வேற ஏதாவது வேண்டுமா சார்?” பேரர் பணிவாய் கேட்டான்.
கீழே விழுந்திருந்த நப்கின்னை காட்டி “அதை எடுத்து தா” என்றவன் பேரர் குனிந்து எடுக்கவே சட்டென முழங்கால் நிலத்தில் முட்டாமல் குதிகாலில் அமர்ந்து “என்னைப் பார்” என்றான்.
அவனை நோக்கிய அந்த பேரரின் கண்களை ஆழ்ந்து நோக்கி விரல்களால் அவன் முன்னே சொடக்கிட்டான் “நீ என்னை பார்த்ததே இல்ல. நான் யாரென்றே உனக்குத் தெரியாது ரைட்” வசிகரிக்கும் மெல்லிய குரலில் கூறவே பேரரும் “உங்களை யாரென்றே எனக்குத் தெரியாது. நான் உங்களைப் பார்த்ததே இல்ல” மந்திரித்து விட்டது போல் கூறினான்.
“குட்” மெல்லிய ராகத்துடன் கூறி புன்னகைத்தவன் மேசை மீது இரண்டு நோட்டை வைத்து விட்டு டப்புடன் வெளியேறினான்.
கஃபேயின் ஹாலை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கவும் அந்த நீதிஷ்ஷின் உடலை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரவும் சரியாய் இருந்தது. அதைப் பார்த்தவாறே வெளியே சென்றவனுக்கு மாபியா நிதிஷை அமரர் நிதிஷ் ஆக்கிய தருணம் கண் முன் நிழலாடியது.
**
சரியாக இரண்டு நாட்களுக்கு முன்,
இரண்டு மாதத்திற்கும் மேல் நிதிஷை கண்காணித்து இருந்தான், அவனின் அத்தனை பழக்கங்களும் அத்துப்படியாய் இருந்தது. அதிலிருந்து அவனின் ஒரு பழக்கத்தை கண்டிருந்தான். தன் சிகரட்டை யாருடனும் பகிர்வதில்லை. இன்னொருவர் சிகரெட்டையும் பிடிப்பதில்லை.
அன்றும் ஹோட்டல் வாசலில் காரை நிறுத்தி விட்டு வல்லேட்டிடம் கார் கீயை எறிந்து விட்டு செல்ல, வல்லெட் வேடத்தில் இருந்த பீனிக்ஸ் அதை பிடித்துக் கொண்டான். காரில் அமரவே கூடவே நிதிஷின் அடியாள் ஒருவனும் அவனுடன் ஏறினான்.
அந்த அடியாளின் கண் முன்னேயே லாவகமாய் நிதிஷின் சிகரெட் கேசை மாற்றிவிட்டான். உண்மையில் இந்த வேலையை வந்த இருபது நாட்களிலேயே முடித்துக் கொண்டு சென்றிருப்பான். நிதிஷின் சிகரெட் கேசை போலவே இன்னொரு கேசை வாங்குவதற்கு தாமதமாகிவிட்டது. எந்தளவு வேலையை சரியாய் செய்தான் என்றால், இரண்டு நாட்களுக்கு முன் வரை நிதிஷ் வைத்திருந்தது அவன் சிகரெட் கேஷே இல்லை. சில நாட்களுக்கு முன்னரே அதை மாற்றிவிட்டான்.
இப்போது அசலை வைத்து விட்டு போலியை எடுத்துவிட்டான் அவ்வளவுதான்.
காரை பார்க் செய்து பவ்யமாய் திறப்பைக் கையில் கொடுக்க அலட்சியமாய் அதை வாங்கி கொண்ட அந்த அடியாள் காரை திறந்து சிகெரட் கேசையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அதில் உள்ள ஏழு சிகரெட்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ரசின் எனப்படும் ஒருவித விசத்தை ஊசி முலம் செலுத்தியிருந்தான். நிதிஷின் புகை பழக்கத்தின் அடிப்படையில் அதிலுள்ள அத்தனையையும் ஒரே நாளில் முடித்துவிடுவான். இன்னொரு விதமாய் சொன்னால் அவனின் ஆயுள்காலம் ஒரேயொரு நாள்.
இறக்கும் போது உடலில் விசத்தின் வடு கூட இருக்காது. அனைத்தும் சுவாசம் மூலமாய் காற்றில் கலந்துவிடும்.
அவன் செல்வதையே திருப்பதியான புன்னகையுடன் பார்த்தான் பீனிக்ஸ்.
முகத்தில் அணிந்திருந்த முகக்கவசம் அடையாளத்தை மறைக்க அவன் உதடுகள் முணுமுணுத்தது “கிரியோசிட்டி கில்ஸ் பட் இக்நோரன்ஸ் இஸ் பனிஷ்மென்ட்”. போனை எடுத்து தட்டியவாறே வெளியேறினான்.
அத்தனை நேரம் கோமாவில் இருந்த சிசிடிவி உயிர் பெற்று தன் வேலையை மீண்டும் தொடங்கியது.
வாஷ்ரூமிலிருந்து வயிற்றை பிடித்துக் கொண்டு வெளியே வந்த உண்மையான வல்லெட் குழப்பதுடன் நின்றான். ஒரு மணி நேரத்திற்கு முன் நன்றாய் இருந்த வயிறு திடிரென கலவர பூமியானதன் காரணம் அவனுக்கு புரியவேயில்லை.
பீனிக்ஸ் மனோவசிய கலை மூலம் அவனை மைன்ட் கன்றோல் செய்தது இந்த பிறவியில் அவனுக்குத் தெரியப் போவதேயில்லை.
அதே நேரம் சென்னை,
‘உண்மையை தேடி’ என்ற பெரிய போர்ட்டை தாங்கி நின்றது அந்த நான்கு மாடிக் கட்டிடம். தமிழ்நாட்டின் பிரபலமான இன்வெஸ்டிகேசன் ஜெர்னலிச கட்டுரைகளை மாத இதழாய் வெளிவிடும் பத்திரிக்கை நிறுவனம் அது.
அதன் எடிட்டர் அறை...
சுற்றிலும் இருளாய் இருக்க ப்ரொஜெக்டர் திரையில் சில செய்தி துண்டுகள், வெவ்வேறு மாநிலங்களின் நகரங்களில் நடந்த சில தற்கொலைகள் தொடர்பானவை அது.
“இது அனைத்திலும் ஒரு ஒற்றுமை. அனைவரும் பதினாறு வயதுப் பெண்கள். நல்ல குடும்பத்தை சேர்ந்த நன்றாக படிக்கும் பெண்கள், ஒழுக்கமானவர்கள். ஆனால் சோசியல் மீடியாவில் அவர்கள் ஆடைகளை களைந்த வீடியோ வந்ததால் சூசைட், நண்பர்களிடம் விசாரித்த போது ஒரு சில நாட்களாய் அவர்கள் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது”
கணனியில் தட்டி விட அடுத்த செய்தி துண்டுகள் சில.
“இவர்கள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த கொலையாளிகள், கிரிமினல்கள். இவர் பின்னணியும் சமூகத்தில் நல்ல குடும்பத்தை சேர்ந்த நன்றாக இருந்தவர்கள். இதற்கு முன் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடவில்லை, ஈடுபட காரணமும் இல்லை.”
அடுத்ததாய் சில தொழிலதிபர்களின் படங்கள் வர “இவர்கள் அனைவரும் ஒரு வங்கிக் கணக்கிற்கு மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்துகின்றார்கள். ஆனால் அது தொடர்பாய் அவர்கள் கம்பனியில் எந்த கணக்கும் கட்டப்படவில்லை. கேட்டாலும் சொல்ல தயாராக இல்லை. அந்த வங்கி மக்சிகோவில் இருக்கு”
“இட்ஸ் சிண்டிகேட் கிரைம்” அந்த பத்திரிகையில் இன்வெஸ்டிகேசன் ஜர்னலிஸ்ட் ஆக பணிபுரியும் பௌலோமியின் குரல் அந்த அறையில் எதிரொலித்தது.
லைட்டை தட்டி விட்ட எடிட்டர் ராமநாதன் கேட்டார் “எதை வைத்து இதை சிண்டிகேட் கிரைம் என்று சொல்றீங்க மிஸ். பௌலோமி”.
“இந்த பணம் எல்லாம் ஒரே கணக்கிற்கு தான் போயிருக்கு”
“சரி அதை வேண்டுமானால் அப்படி வைத்துக் கொள்ளலாம். ஆனா அந்த பெண்களின் தற்கொலைக்கும் திடிரென குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் என்ன தொடர்பு”
“உங்களுக்கு அதற்கான பதிலை சீக்கிரமே தாரேன் சார். ஆனா அதற்கு நான் கொச்சின் போகணும்”
சிறிது நேரம் யோசித்த எடிட்டர் “சரி உங்களுக்கு மூன்று மாதம் டைம் தாரேன். கூடவே மூன்று ஸ்டாப் அலகேட் பண்ணுறேன். அதற்குள் இது தொடர்பாய் சிறு சாட்சியாவது உங்களால் காட்ட முடிந்தால் சரி இல்லாவிட்டால் இந்த டாபிக்கை இதோட விட்டுறணும்” என்றார் கண்டிப்பாய்.
“நிச்சயமாய் சார். கொச்சின்ல ஒரு விசில்ப்லோவேர சந்திக்கதான் போறேன்” என்றாள் நம்பிக்கையுடன்.
எதிரிகளுடன் இருந்து கொண்டே, அவர்களின் சட்ட விரோத செயல்கள் பிடிக்காமல், அது பற்றிய தகவல்களை பொருத்தமான நபர்களுக்கு கசிய விடுபவர்களை விசில்ப்ளோவர் என்று அழைப்பார்கள்.
“கேர்புல் அது ட்ராப்பா கூட இருக்கலாம். யாரையாவது துணைக்கு அனுப்பவா?” அவள் மறுப்பாள் என்று தெரிந்தே கேட்டார்.
“இல்ல சார் வேணாம். நானே பார்த்துக் கொள்ளுறன். தேவையென்றால் கேட்கிறன்”
“கவனம் வேற மாநிலம்.... அஹ் ஒவ்வெரு நாளும் நைட் பதினோரு மணிக்கு எனக்கு போன் எடுங்க மிஸ் பௌலோமி”
“நிச்சயமா சார்”
“ஹலோ நான் எடிட்டர் ராமநாதன், அந்தப் பெண் இன்றிரவு கொச்சின் போறாள்”
“சரி நான் பார்த்துக் கொள்கிறேன். யாரையாவது கூட அனுப்பி வைத்தால் ஒரு ஸ்பை கூடவே இருப்பது போலிருக்கும்” கரகரத்தது போல் கேட்டது அந்தக் குரல்.
“கேட்டேன் வேண்டாம் என்றுவிட்டாள்”
“ம் சரி மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” அழைப்பை துண்டித்த அந்த மனிதர் சாய்ந்து அமர்ந்தார். அறையில் அவருக்கு பின்னிருந்து கசிந்த மெல்லிய வெளிச்சத்தில் முகம் தெரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்து விட்டு முன்னிருந்த மைக்கை தட்டினார்.
“ஹலோ தேவராஜ்”
“சொல்லுங்க ஹிப்னோஸ்”
“அந்த சிவநாதனின் மகள் விசில்ப்லோவேரை சந்திக்க இங்கே வருகிறாள்”
“முடித்துவிடவா?”
“வேண்டாம், பத்திரிகை ரசாபாசம் ஆகிவிடும், வேறு ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்த விசில்ப்லோவேர் யாரென்று கண்டுபிடி”
அடுத்த நாள் காலை, கொச்சின் விமான நிலையம்,
‘ஹ்ம்ம் அழகு ஆபத்தை சந்திக்கும் இடம்... கேரளா, கடவுளின் பூமி’ தனக்குள் சொல்லியவாறே விமான நிலையத்தின் லகேஜை எடுக்கும் பகுதிக்கு வந்தான் பீனிக்ஸ். அவன் கண்கள் அந்த இடத்தை கவனமாய் அலச லகேஜ் வருவதற்காய் பெல்ட் அருகே காத்திருந்தான்.
“அதை எடுங்கள்” என்றவாறே ஓடி வந்தாள் ஒரு பெண்.
திரும்பிப் பார்க்க ஒரு லகேஜ் மட்டும் தனியாய் போய்க் கொண்டிருந்தது. அவன் அதை எடுத்து கீழே வைக்கவும் அருகே வந்தவள் பெயரைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டாள், அவளுடையதுதான்.
“தங்யூ” என்று நிமிர்ந்து பார்க்க இடம் காலியாய் இருந்தது. “முகத்தை பார்க்கலேயே, ஒரு நன்றியை கூட வாங்கமா போய்ட்டார்” தோளை குலுக்கியவாறே செல்ல சற்று தூரத்தில் அவள் கண்ணுக்கு மறைவாய் நின்ற பீனிக்ஸ் வெளியே வந்தான்.
மெல்லிய நீலத்தில் போலோ நெக் டீசேர்ட், கறுப்பு ஜீன்ஸ், கழுத்தில் தொங்க விட்டிருந்த கறுப்புக் கண்ணாடி, கையில் கருப்பு நிற கைகடிகாரம் அவன் கில்லர் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
ஜீன்ஸ் போகேடினுள் கை விட்டு காலை குறுக்காய் ஊன்றி தூணின் மீது சாய்ந்து நின்றவன் “என்ன கண்ணுடா சாமி” வாய்க்குள் முனகினான்.
“உண்மையில் அழகு ஆபத்தை சந்திக்கும் இடம்தான்” தனக்குத்தானே சொல்லியவாறே ஒரு பக்க உதட்டால் மட்டுமாய் சிரித்து தலையை குலுக்கி “வேண்டாம் பீனிக்ஸ், நீ செய்யும் வேலையை விட இது ஆபத்து அதிகம்” தன்னைத்தானே எச்சரித்து வேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.
“அவளை கொல்ல ஏற்பாடு செய்துவிட்டாயா?” ஹிப்னோஸின் கையாள் தேவரஜ்தான் அந்த பத்து மாடி கட்டிடத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் அமர்ந்து கேட்டான்.
நேற்றுதான் ஹிப்னோசிஸ் இந்த இலக்கத்தை கொடுத்து பேச சொல்லியிருந்தார். கொச்சின் நகரை விட்டு நன்றாக தள்ளி இருந்த குட்டித் தனியார் தீவில் அமைந்திருந்தது. சுற்றிலும் ஒரு பத்து சிறு வீடுகள் அவ்வளவுதான் அந்த தீவில் இருக்கும் கட்டிடம். இறால், கருவாடு ஏற்றுமதி இறக்குமதி என்ற பெயரில் அத்தனை குற்றங்களையும் அந்தத் தீவில் செய்து கொண்டிருந்தார்கள்.
“ஏற்பாடு செய்திருகின்றேன், இன்றுதான் வருவான் வந்ததும் சொல்கிறேன். ஆனா” மறுபுறம் டார்க்வெப் மூலமாய் அழைப்பில் வந்தவன் பதிலளித்தான்.
“என்ன ஆனா ஆவன்னா?”
“அவனை சம்மதிக்க வைப்பது கடினம். அவன் செய்தால் செத்தவன் நிழலுக்கு கூட சந்தேகம் வராது”
“பணம் பிரச்சனையில்லை அவனையே ஏற்பாடு செய்”
“சிலவேளை தன் வேலைக்கு என்று குறித்த நேரம் கேட்பான். உடனடியாய் நடக்காது அதுதான் பிரச்சனை”
“சரி மேலிடத்தில் பேசிவிட்டு சொல்கிறேன். எத்தனை நாட்கள் வேண்டும்”
“இன்று வருவான், சம்மதித்தால் கேட்டுச் சொல்கிறேன். இது ப்ரோஃபசனல் கில்லர் தொடர்பான வேலை. நீ எனக்கு எடுப்பது போல் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. கொஞ்சம் காலம் எடுக்கும்”
போனை வைத்த தேவராஜ் சிறிது நேரம் யோசித்து விட்டு கொச்சின் துறைமுகத்தில் இருக்கும் தன் அடியாள் ஒருவனுக்கு உத்தரவிட்டான் “நாயர், இன்று அந்த சிவநாதனின் மகள் கொச்சின் வருகிறாள். வாட்ஸ் அப்பில் படம் அனுப்பியிருகின்றேன். பின் தொடர்ந்து எங்கே தங்கியிருக்கிறாள்? யாரை சந்திக்கின்றாள் என்று பார்.”
அந்த அறையின் ஓர் பக்க சுவர் முழுவதும் சிறுசிறு செய்தி துண்டுகளை ஒட்டி முடித்து இடையில் கைவைத்து அனைத்தையும் திருப்தியாய் நோக்கினாள் பௌலோமி. இன்று காலைதான் விமானம் மூலம் வந்து இறங்கியவள் வந்ததுமே வேலையை தொடங்கிவிட்டாள். சாப்பாட்டிற்கு கூட வெளியே செல்லவில்லை. ஆப் மூலம் எடுத்த மதிய உணவை வாங்க சென்ற போது அருகே இருந்த வீட்டினர் காலி செய்யவே வியப்புடன் நோக்கினாள்.
அப்பா காணமல் போய் முதல் தடவை இங்கே வந்த போது அவர்கள்தான் அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.
“பேடிக்கண்ட மோளே, கீழே உள்ள ப்ளோர் தான் போறோம் ஏதாவது தேவையென்றால் ஒரு போன் செய்” என்றார் அந்தப் பெண்மணி.
“ஏன் அப்படி” குழப்பத்துடன் கேட்டாள்.
“இதுல வேலை செய்ய போறாங்களாம்.”
அவர்களிடம் விடைபெற்று உள்ளே சென்றவள் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டாள், இப்போதுதான் முடிந்தது. நேரத்தைப் பார்க்க மாலை நான்கு என்றது கடிகாரம். வெளியே செல்லத்தான் வேண்டும்.
காலையில் வரும் போது சிலர் பின் தொடர்வதைப் கவனித்து அவர்களை திசை திருப்பி விட்டு வந்திருந்தாள். இப்போது வெளியே சென்றால் நிச்சயமாய் அவளை பின் தொடரதான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்தால் இந்த தொழிலை செய்ய முடியாது, அலட்சியமாய் தலையை குலுக்கி விட்டு சென்றாள்.
டாக்சியில் ஏறி “தமன்னம் மார்கெட்” என்றாள். இது அவர்களின் இடம் ஒரேடியாய் தவிர்க்க முடியாது. ஆனால் சுத்தலில் விடலாம், அதைதான் செய்ய செய்ய போகிறாள்.
வாட்ஸ் ஆப் மூலமாய் விசில்ப்லோவரிற்கு சந்திக்கும் இடத்தை அனுப்பினாள். என்கிரிப்டட் மெசேஜ், அவர் பார்த்ததும் தானாகவே அழிந்து விடும்.
அவள் எதிர் பார்த்தது போலவே பாதி வழியிலேயே அவளை பின் தொடர தொடங்கினார்கள். மார்கேட்டினுளும் பின் தொடர்ந்தார்களே தவிர அவளை எதுவும் செய்ய முயலவில்லை. சற்று யோசித்தவள் ஆள்நடமாட்டம் குறைந்த இடத்திற்கு சென்றாள். சற்று எச்சரிக்கையடைந்து அவளை பார்த்தார்களே தவிர நெருங்கவில்லை.
நீண்ட புருவம் நெளிய யோசித்தவளுக்கு நொடியில் புரிந்தது. அவர்களுக்கு விசில்ப்லோவரை பற்றி தகவல் கிடைத்திருகின்றது.
இப்போது வர வேண்டாம் என்று சொல்லி விடலாம். ஆனால் இவர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. இப்போது விசில்ப்லோவர் யாரென்று அறிவதுதான் இவர்களின் நோக்கம். விசில்ப்லோவரை ஏதாவது செய்துவிட்டால் கிடைக்க கூடிய மொத்த ஆதாரமும் போய் விடும். இல்லை என்று வர சொன்னால் இத்தனை முயற்சிகளையும் செய்யும் ஒரு நல்லவருக்கு ஆபத்தாய் முடியும்.
“அர்ர்க்” தலையில் கை வைத்து மெலிதாய் தொண்டைக்குள் கத்தினாள்.
போனை எடுத்து வாய்ஸ் நோட் அனுப்பியவள் வேகமாய் நடக்க அவளை விடமால் பின் தொடர்ந்தார்கள். சனசந்தடியுடன் குறுக்கும் நெடுக்குமாய் இருந்த கடைகளின் வழியே வேக நடையுடன் சென்றாள். எதிர் பாராமல் வழியில் வந்தவருடன் மோத இருவர் கையிலிருந்த பொருட்களும் கீழே சிதறின.
“சாரி சாரி” அவருடைய பொருட்களை கையில் கொடுத்தவள் எழுந்து வேகமாக சென்றுவிட்டாள். அவள் செல்லவே பின்னால் வந்தவர்கள் அவனை பிடித்துக் கொண்டதை கடைக் கண்ணால் பார்த்தவாறே எதிரே தென்பட்ட கடையினுள் நுழைந்தாள்.
அதன் முதலாளி கேட்டார் “எந்த மோளே பிரேதம் (பேய்) கண்டது போலே தொனனணு”
“இல்ல கொஞ்ச குட்டி பிசாசுகளதான் பார்த்தேன். பேயை இனிதான் பார்க்கனும்” புன்னகைத்தவள் “தாங்க்யூ” மறு பக்க வழியில் வேகமாக வெளியேறினாள்.
‘எது பேயைப் பார்க்கணுமா?’ போகும் அவளையே முழி பிதுங்க பார்த்தார் அந்தக் கடைக்காரர்.
***
அந்த சந்து இருட்டாய் இருக்க முன்னே தெரிந்த வெளிச்சத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பௌலோமி. நேரம் பத்து மணியை கடந்திருந்தது. நாயரின் ஆட்களை சுத்தலில் விட்டதில் எங்கோ பாதை மாறிவிட்டாள். போகும் இடமெல்லாம் சந்து பொந்தாகவே இருக்க, எலி போல் அத்தனை சந்துகளிலும் ஓடி கடைசியாய் இந்த சந்திற்குள் வந்தால், எதிரே பிரதான சாலை தெரிந்தது.
குறைந்தது ஒரு ஓட்டோ டாக்சியாவது கிடைக்கும் அவர்களிடமிருந்து தப்பியதை விட இடம் தெரியாத இடத்தில் நடந்து களைத்து போனாள். பின்னால் காலடி சத்தம் கேட்கவே கூர்ந்து கேட்டாள். குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். முதலில் நாலு பேர்தான். இப்போது ஆட்கள் சேர்ந்து விட்டது புரிந்தது.
அவளுக்கு நன்றாகவே கராட்டி தெரியும். ஆனாலும் ஆபத்து அதிகம். ஒன்று கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நடந்து களைத்திருந்தாள். அடுத்து அவர்கள் அனைவருமே ரவுடிகள் அதிலும் பல்கான ரவுடிகள் என்பது மாலையிலேயே கவனித்திருந்தாள். பத்து ரவுடிகளிடம் நேரடியாக சண்டை போடுவதை மூளை வன்மையாய் மறுதலித்தது.
சட்டென வேகமாய் ஓட தொடங்க அவர்களும் பின்னால் துரத்த தொடங்கினார்கள்.
எதிர்பட்ட வளைவில் திரும்பியவள் கல்தூணின் மீது மோதி நின்றாள்.
“ஹேய் ஈசி லவ்” அவனில் மோதி விழப் போனவளை பிடித்துக் கொண்டான் அவன்.