Share:
Notifications
Clear all

மொழி - 22

Posts: 54
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 22
“என்ன லக்கிக்கா” என்று பின் தங்கி நின்ற இலக்கியாவை விசாரித்தாள் கவிதா.
 
 
“இல்ல, அந்த ஜானகி எங்கேயோ பார்த்த மாதிரி, அதான் எங்கே என்று யோசிக்கிறேன்” என்றாள் அரைகுறை கவனத்துடன்.
 
 
“இங்கே எப்படி பார்த்திருக்க முடியும்? அவர்கள் இங்கே வந்ததேயில்லையே”
 
 
“லக்கி” மேற் கொண்டு உரையாடல் செல்வதற்குள் உள்ளிருந்து கண்மணி அவர்களை அழைக்கவே இருவரும் உள்ளே சென்றார்கள்.
 
 
வீட்டிலேயே மத்தியான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க மணமக்களை அலங்கரித்த சோபாவில் இருத்தி விட்டு கண்மணிக்கு உதவ சென்று விட்டனர் இருவரும்.
 
 
உறவினர் வாழ்த்து சொல்லி ஃபோட்டோ எடுத்து செல்ல கிடைத்த தனிமையில் அருகேயிருந்தவன் முகம் நோக்கினாள்.
 
 
“என்ன?” சாதாரணமாய் கேட்டான்.
 
 
“இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன் ஜானகியை லக்கி ஆசை மாமி என்று” முழுதாய் கேட்க தயங்கினாள்.
 
 
புருவம் சுருக்கி குழப்பத்துடன் கேட்டான் “அதுக்கு என்ன?”
 
 
“இல்ல கோபமா இருந்த மாதிரி” அவன் முகத்தையே பார்த்தாள்.
 
 
“ஒ அதுவா” என்றவன் “கோபமெல்லாம் இல்ல, சொரூபி இருந்திருந்தா அவளை ஆசை மாமி என்டுதான் கூப்பிட்டு இருப்பீனம் அதுதான் கொஞ்சம்” பார்வையை மறுபுறம் திருப்பினான்.
 
 
“பிறகு ஏன்”
 
 
“என்ன ஏன்?” அவளை கேள்வியாய் நோக்கினான்.
 
 
“இந்த திருமணம்” இன்னும் அவளை மன்னிக்க முடியவில்லை, அது தெளிவாகவே தெரிந்தது. இருந்தும் ஏன் திருமணம்? பாப்பா வந்தாலே சொத்து அனைத்தும் அவன் கைக்கு வந்துவிடும். இப்போதே யோகேஸ்வரன் பல்லு பிடுங்கிய பாம்புதான். இன்னும் ஒரு அசைவில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவான்.
 
 
அவளையே ஆழ்ந்து பார்த்துக் கேட்டான் “நீர் என்ன நினைக்கிறீர்?”
 
 
என்ன சொல்வதென்றே தெரியாமல் ‘ங்கே’ என்று விழித்தாள் யதீந்திரா.
 
 
அவன் கைபேசி சத்தமிடவே நெற்றியால் நெற்றி முட்டி விட்டு உதட்டுக்குள் சிறு சிரிப்புடன் சென்றுவிட்டான்.
 
 
அவன் சென்ற திசையேயே சிறிது நேரம் பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் அழைத்தாள் “ஜெகதீஸ்”.
 
 
ஒரு மூலையில் நின்றவன் அவளருகே வந்தான் “மாம்”.
 
 
“எனக்கு இந்த திருமண சான்றிதழ் வேண்டும்”
 
 
“ஈவ்னிங் உங்கள் போனுக்கு அனுப்பிவிடுறேன்” யாழ்ப்பணத்தில் இருக்கும் இந்தியா தூதரகத்தில் அவர்கள் திருமணத்தை பதிவு செய்ந்திருந்தான் சொரூபன்.
 
 
“உங்கள் அம்மா அப்பா வரலை” கண்களை சுழல விட்டாள்.
 
 
“இல்ல” சிறு புன்னகையுடன் அவன் விலகி செல்ல கவியும் லக்கியும் அவளை பிடித்துக் கொண்டார்கள்.
 
 
அனைவரும் ஒவ்வொரு வேலையில் பிசி ஆகவே அவர்களிடம் இருந்து பிரிந்து மாடி பல்கனிக்கு வந்திருந்தான் நிஷாந்த. முல்லா நானா அவனுக்கு மெசேஜ் அனுப்பிய போது லண்டனில் இருந்தான். என்ன நடந்தது என்று யோசனையுடன் சொரூபனை தொடர்பு கொண்டால் அவனும் ‘வா’ என்றான். வேலையை ஒதுக்கிக் கொண்டு இலங்கைக்கு டிக்கெட் பதிவு செய்தால், திடிரென சொரூபன் அழைத்து அவன் அம்மாவின் விபத்தின் போதான சில தகவல்களை சரி பார்க்க வேண்டும் என்றான்.
 
 
இந்தியா போய் இறங்கினால் அவனை வேலை செய்ய விடாமல் ஜானகி பிடித்துக் கொண்டாள்.
 
 
“பிங்கி நீ எப்ப சிலோன் போவ”
 
 
“நாலு நாள் கழித்து” விபத்து தொடர்பான அறிக்கையை பார்த்தவாறே கவனமற்று பதிலளிக்க “நானும் வாரேன்” என்று தொடங்கிவிட்டாள்.
 
 
அனைவரும் யோசிக்க மறந்தது அவளின் ஆன்டி, யதி இருவரும் அருகே இல்லை. அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்திய நிஷாந்தவே திருமணம் பற்றிய பேச்சை யதி எடுத்ததில் இருந்து, தன் மனப் போராட்டத்தில் அவளுடன் சாதாரணமாய் கூட கதைக்கவில்லை. கல்யாணி வந்து போன குழப்பத்தில் இருந்த யதியும் சில நாட்களாய் அவளை தொடர்பு கொள்ள மறந்திருந்தாள்.
 
 
முற்றிலும் தனிமையை உணர்ந்தவளுக்கு வரப்பிரசாதம் போல் வந்திறங்கினான் நிஷாந்த. அவனுடனேயே பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டாள் ஜானகி. அவன் போகும் இடத்திற்கெல்லாம் அவளை அழைத்து செல்லவும் முடியவில்லை.
 
 
விமானத்தால் வந்து சரியான நித்திரை கூட இன்றி அடுத்த நாள் அலுவலகம் வந்தவனிடம் மீண்டும் ஒட்டிக் கொண்டு “நானும் வாரேன், பிங்கி என்னையும் கூட்டிட்டு போ” அவன் கையைக் கட்டிக் கொண்டு உதடு பிதுக்கி குழந்தையாய் அடம் பிடித்தாள்.
 
 
“அறிவில்லை வளர்ந்தால் மட்டும் போதுமா? தலையில் மூளை என்று ஏதாவது இருக்கா இல்லையா?” சீறி விட்டான் நிஷாந்த.
 
 
இத்தனை நாளில் அவளருகே இருக்கும் போது மற்றவரிடம் கூட  கோபப்பட்டு பார்க்கவில்லை. இன்று அவனின் கோபம் நேரடியாகவே அவளைத் தாக்கவும், கண்கள் விரிய இரண்டடி பின்னால் நகர்ந்து விட்டாள்.
 
 
அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்ற நிஷாந்த இதையெல்லாம் கவனிக்கவில்லை. கதவில் தட்டி சத்தம் கேட்கவே, கையை இறுகப் பொத்தி  தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு “கமின்” என்றான்.
 
 
உள்ளே வந்தது அலுவலகத்தில் வேலை செய்யும் சுதா “சார் இதை உங்களிடம் தர சொன்னார் ஜெகதீஸ் சார்” புன்னகையுடன் ஒரு கவரை நீட்டினாள்.
 
 
அதை வாங்கி பிரித்துப் பார்த்தவன் சிறு புன்னகையுடன் கூறினான் “டங்க் யூ, டிரைவரை காரை ரெடி செய்ய சொல்லுங்கள்”.
 
 
அவனையே இமைக்காது பார்த்தாள் ஜானகி.
 
 
இப்போதுதான் தன்னிடம் சீறினான். ஆனால் அந்த சுதாவுடன் எத்தனை இனிமையாய் பேசுகிறான். இதயத்துள் எதுவோ லேசாய் சுருண்டு கொண்டது.
 
 
அதிலுள்ள தகவல்களை பார்த்தவாறே வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.
 
 
“சும்மா சும்மா குழந்தை மாதிரி நடித்தால் இப்படி தான் யாரிடமாவது வாங்கிக் கட்ட வேண்டி வரும்” கேலியாய் சொன்ன சுதா “இனியாவது வளர்ந்த ஆள் மாதிரி நடவுங்கள்” இலவசமாய் அறிவுரை வேறு வழங்கினாள்.
 
 
அவளும் வந்ததில் இருந்து பார்க்கிறாள் சொரூபன் நிஷாந்த இருவருமே ஏதோ பொக்கிஷம் போல் அவளை நடத்துவதையும் எது சொன்னாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதையும். சந்தர்ப்பம் பார்த்து வயித்தெரிச்சலை கொட்டிச் சென்றிருந்ததாள்.
 
 
மறந்து விட்டுச் சென்றிருந்த வோல்லட்டை எடுக்க வந்த நிஷாந்தவின் கண்களில் விழுந்தாள் முழுதாய் தனக்குள் சுருண்டு போய் நின்ற ஜானகி.
மனம் சுட “ஜானு” கிட்ட நெருங்கவே அவன் கைபேசி அலறியது.
 
 
எடுத்துக் காதில் வைக்க அந்த விபத்து தொடர்பாக விசாரித்த காவலர் தான் எடுத்திருந்தார். திருமணமான தன் மகனுடன் யூஎஸ்ஸில் செட்டில் ஆக போகிறார். இன்னும் ஐந்து மணி நேரத்தில் விமானம். இன்று விட்டால் அவரைப் பிடிக்கவே முடியாது என்பதில்லை. ஆனால் சொரூபன்...
 
 
“ஜானகி” அவள் தோளைப் பிடித்து லேசாய் உலுக்கினான்.
 
 
“ஹா…” கனவிலிருந்து விழித்துக் கொண்டவள் போல் மலங்க விழித்தாள் அவள்.
 
 
இதயத்தில் ஏதோ இடற “சொறி” அருகே நெருங்க முயன்றான்.
 
அனிச்சை செயல் போல் இரண்டடி பின்னால் சென்றாள் ஜானகி.
 
சிறு அதிர்வுடன் நோக்கியவன் “நான் வந்து கதைக்கிறேன் சரியா” அவசரமாய் சென்றுவிட்டான். போகும் போது மறக்காமல் ஜெகதீஷ்க்கு அழைத்து “ஜானகியை பார்த்துக் கொள். நான் வரும் வரை எங்கேயும் விட வேண்டாம்” என்று எச்சரித்தே சென்றான்.
 
 
முன் சீட்டில் அமர்ந்திருந்தவன் மனம் அமைதியின்றி தவித்தது. இரண்டு நாளைக்கு முன் லண்டன் போய் உடனே திரும்பி வந்தது வந்து ஓய்வின்றி அடுத்த நாளே வேலைக்கு வந்தது எல்லாவற்றிற்கும் மேலாக அவளை தள்ளி வைக்க முடியாமல் தடுமாறும் மனதை அடக்க முடியாமல் அவளிடமே பாய்ந்து விட்டான்.
 
 
கணத்தில் அவளது ஒட்டிசத்தையும் மறந்துவிட்டான். “ஷிட்” தொடையில் கையால் குத்தினான்.
 
 
“ஹலோ யதி”
 
 
“சொல்லுமா யதி நித்திரை” என்று சொரூபனின் குரல் கேட்டது.
 
 
“லெமன் அண்ணா, சொரி ஐ மீன் சார் எனக்கு யதியுடன் பேசணும்” என்றாள்.
 
 
ஒருதரம் ஃபோனை காதிலிருந்து எடுத்து கைபேசியிலிருந்த பெயரை சரி பார்த்து விட்டுக் கேட்டான் “யதிக்கு உடம்பு சரியில்லை, நீண்ட தூர பயணம் ஒத்துக் கொள்ளவில்லை, என்ன நடந்தது? சேர் எல்லாம் சொல்ற. யதியிடம் என்ன சொல்ல வேண்டும்” புருவம் நெறியக் கேட்டான்.
 
 
“ஆன்டியின் மருந்து கொடுக்க வேண்டும். யாரிடம் கொடுப்பது என்று தெரியல” அழுகையை அடக்கிக் கொண்டு பேசுவது தெளிவாகவே விளங்க பல்லை கடித்தவன் “ஜானும்மா உன்னை யார் என்ன சொன்னது?”
 
 
அனைத்தையும் அவனிடம் சொல்லத் துடித்தவள் மனதில் சற்று முன் சுதா சொல்லி சென்ற வாசகம் உலா வந்தது. குறைந்தது யதிந்திராவுடன் கதைத்தால் கூட பரவாயில்லை போலிருந்தது.
 
 
சத்தி எடுத்து களைத்து போய் மடியில் உறங்கிய யதியை பார்த்தவனுக்கு அவளை எழுப்ப மனமில்லை. அதே நேரம் அங்கே ஜானகியின் நிலைமையும் சரியாய் இருப்பது போல் தோன்றவில்லை. கண் மூடி யோசித்தவன் கேட்டான்.
 
 
“ஆன்டியிடம் போகிறாயா?”
 
 
“ம்ம்”
 
 
“சரி நான் ஜெகதீஸ்தீஸிடம் சொல்கிறேன். அந்த மருந்தை நீயே கொண்டு போய் கொடுத்து விடு என்ன” குழந்தையிடம் கதைப்பது போல் கதைத்தான்.
 
 
ஜெகதீஸ்க்கு அழைத்து நேரடியாக கேட்டான் “என்ன நடந்தது?”
 
 
“நிஷாந்த மாத்தையா, கொஞ்சம் டயர்ட் என்டு நினைகிறேன். அதில் ஜானுவிடம் சத்தம் போட்டு விட்டார்” சில கணம் தயங்கி “அது மட்டுமில்ல, இங்கே சுதா என்று ராகவனின் ஆள், கொஞ்சம் ஹார்ஷ பேசி போட்டா” என்றான்.
 
 
தடை இறுக “ஜானுவை இன்று அவள் ஆன்டியிடம் கூட்டிட்டு போய் விடுங்கள். அப்படியே அந்த சுதாவை வீட்டுக்கு அனுப்பி விடுங்கோ” என்று கைபேசியை அணைத்து விட்டான்.
 
 
*****
 
 
அந்த போலீஸிடம் கதைத்து விட்டு நேரே அலுவலகம் வந்தவன் ஜானகி ஜெகதீஸ் இருவரையும் காணமால், அவளைத் தேடி சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தவனிடம் வந்த ஜெகதீஸ்க்கு அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் சுத்த விடுவோம் என்று நினைத்திருந்தவன் “ஜானு ஆன்டியுடன் அங்கே இருக்கிறா” என்றான்.
 
 
அவனை முறைக்கவே “சொரூபன் சேர் தான் சொன்னார் அங்கே கூட்டிட்டு போய் விட சொல்லி” என்றான் அவன்.
 
 
அவன் இடத்தை விட்டு எழவே “அவசரம் இதில் ஒரு கையெழுத்து வேண்டும்” என்று அவன் முன்னே ஒரு பேப்பரை வைக்க அதைப் படித்தான் நிஷாந்த.
 
 
சுதாவின் வேலை நிறுத்த கடிதம்.
 
 
ஜெகதீஸை பார்த்து புருவத்தை உயர்த்த “ஜிஎம்எஸ் உத்தரவு ஜானுவுடன் தேவையில்லாமல் கதைச்சு இருக்கிறார்கள்” என்றான் சுருக்கமாய்.
 
 
முகம் இறுக கையெழுத்திட்டான்.
 
 
அவன் வந்த போது அன்டியின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் கதைக்காமல் வேறு வேலை ஓடவில்லை. உறங்குபவளை பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
 
 
அவருக்கு தான் யாரென்று தெரியாதது தான் அதிகம் பிரச்சனை. மற்றும்படி ஒரளவு சாதரணமாவே இருப்பார். அதிலும் ஜானகி இது போல் இருக்கும் தருணங்களில் ஆறுதலாகவே இருப்பார். அவர் மடியிலேயே உறங்கி எழுந்த போது இரவாகியிருந்தது.
 
 
சமைக்கிறேன் கிச்சின் போனவள் பின்னால் சென்றவன் “என்ன செய்ய போற ஜானு” இயல்பாய் அவளிடம் உரையாட முயன்றான். தூக்கிவாரிப் போட்டது போல துள்ளி விலக அவனுக்கு உள்ளே வலித்தது.
 
 
கரட், லீட்ஸ் கோவா எல்லாம் போட்டு தாளித்து நூடுல்ஸ் செய்தவளையே வலியுடன் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் நிஷாந்த. அன்று இருவருமாய் சேர்ந்து பால்சோறு செய்தது நினைவுபடுத்தமாலே நினைவுக்கு வந்தது.
 
 
அங்கிருந்து வெளிக்கிடுவதற்கு முன்னர் சற்று தூரத்தில் நின்றே கேட்டான் “நாளை சிலோன் போறேன் வா”.
 
 
கீழே அமர்ந்து அன்டியின் மடியில் தலை வைத்துப் படுத்துவிட்டாள். அவன் குரல் அவளுக்கு கேட்டது போலவே தோன்றவில்லை. சொரூபனிடம் கதைத்ததுதான் கடைசி, அதன் பின் அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.
 
 
களைத்து சோர்ந்து பொலிவிழந்த முகத்துடன் அவளைப் பார்த்தவன் அருகே நெருங்கி லேசாய் நெற்றியில் இதழ் பதித்தான். உடல் நடுங்க அவனிடமிருந்து விலகினாள். அவனுக்குப் விளங்கியது தன் உலகிற்குள் தன்னைத்தானே பூட்டிக் கொண்டு விட்டாள். யதியை தான் அழைத்து வர வேண்டும். சோர்ந்த நடையுடன் வெளியேறிவிட்டான்.
 
 
இங்கே வந்தால் அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் இருந்தார்கள் இருவரும்.
 
 
அழுத்தமாய் தலை கோதியவன் தோளில் கை விழவே திரும்பிப் பார்த்தான் சொரூபன் தான் நின்றிருந்தான். கையால் ‘என்ன’ என்பது போல் சைகை செய்தவன் நண்பனை அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தான் “சரி விடு யதி போய்க் கதைத்தால் சரி வருவா, நாளாண்டைக்கு அம்மாவின் துவசம் முடிய வெளிக்கிடுவோம்”.
 
 
தலையை அசைத்து ஆமோதித்த நிசாந்தவிடம் மீண்டும் வினவினான் சொரூபன் “அது சரி, நான் சொன்ன விஷயம் என்ன மாதிரி?”.
 
 
பதில் சொல்வதற்குள் கீழே இருந்து அழைத்தாள் கவிதா “மாமா அம்மம்மா வரட்டாம்”.
 
 
கண்ணை மூடி குறுக்கே தலையசைத்த சொரூபனுக்கு நன்றாகவே புரிந்தது. இரண்டு வினாடியில் கதைத்து தீர்க்கும் விடயமில்லை இது. நிதானமாய் அலசி ஆராய வேண்டிய விடயம். “கீழே போவோம் வா” நண்பன் தோளில் கை போட்டு இழுத்துக் கொண்டு வந்தான்.
 
 
படியில் இறங்கிய இருவரையும் பார்த்த யதியின் முகம் ஆழ்ந்த சிந்தனையை தத்தெடுத்தது.
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”