Share:
Notifications
Clear all

மொழி - 11

Posts: 49
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 11
 
 
ஊரடங்கு சட்டம் முடிய மகன்கள் மட்டும் போய் பழுதடைந்திருந்த அவரின் உடலுக்கு இறுதிக் காரியங்களை நடத்தி வந்திருந்தார்கள். அதன் பின்தான் மனிதர்களின் சுயரூபம் அவனுக்கு தெரியும் நாளும் வந்தது. அவன் ஐந்து மாமாக்களும் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் விட அவனைக் கொண்டாடியதில் வெறுப்பில் இருந்தவர்கள் சமயம் பார்த்து தந்தை வழிச் சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டனர்.
 
 
பாலநாதனின் கருணையில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தப்பிப் பிழைத்தது. இத்தனை நாட்கள் அம்மாவிடம் கனிவாய் கதைத்த மாமன்மார்கள், இப்போது அம்மாவை பேசுவது அவனுக்குப் புரிந்தது. அதே நேரம் தங்கள் மனைவியை வேறு யாரும் பேச விடமால் காப்பாற்றியதையும் கவனித்தவன் அம்மாவிடம் சென்று தீவிரமாய் கேட்டான் “அம்மா, அப்பா எங்கே?”
 
 
“அவர் இந்தியாவில் இருக்கிறார்... வருவார்” மகளை தோளில் போட்டவாறே மெலிந்த குரலில் பதிலளித்தார் தர்சினி.
 
 
“எப்போது வருவார்? மாமாக்கள் தங்கள் பிள்ளையையும் மனைவியையும் பாதுக்கப்பது போல் அவரும் எங்களைப் பாதுகாக்க வேண்டாமா?” மகனின் கேள்வியில் விதிர்த்துப் போய் பார்த்தாள் தர்சினி. இதைத்தானே அப்பாவும் சொன்னார்’ யோசனை ஓட அம்மாவிடம் சென்ற கேட்டாள் “அம்மா நாங்கள் ஒருக்கா அவர் தந்த விலாசத்திற்கு போய்ப் பார்ப்பமே”.
கணவரை இழந்த துயரையும் தாங்கிக் கொண்டு மகளுக்காக நடமாடிக் கொண்டிருந்த கண்மணிக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. ஆனால் அப்படி போய் வந்தால் மகள் ஒரு நல்ல முடிவை எடுக்க கூடும். பாலநாதன் நல்லவன், அவன் கையில் பிடித்துக் கொடுத்தால் போகும் காலத்தில் நிம்மதியாய் சீவன் பிரியும் என்று எண்ணியவராய் “சரி போய் வருவோம், நாட்டு நிலைமையும் கொஞ்சம் யோசனையாதான் கிடக்கு” என்றவர் பாலநாதனை அழைத்து கப்பலுக்கு பதியும் படி சொல்லிவிட்டார்.
 
 
அவன் அதிர்ச்சியுடன் பார்க்க “போய் வந்தாலாவது நல்ல புத்தி வருதா எண்டு பார்ப்போம்” என்றார் வருத்ததுடன்.
 
 
சிறிது நேரம் யோசித்து விட்டு “நானும் வருகிறேன்” என்றான் பாலநாதன்.
கண்மணி கணவர் கொடுத்த பணத்தை சேமித்து வைத்திருந்தார். அவரின் அம்மா வழியில் வந்த தோப்புகளிலும் இருந்தும் அவருக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. அதனால் பணம் ஓரு பிரச்சனையாக இருக்கவில்லை. நாட்டுப் பிரச்சனையில் கப்பல் போக்குவரத்து நின்று விட கள்ளத் தோணியில் மகளை இந்தியா அழைத்து வந்திருந்தார்.
 
 
தமிழ்நாட்டின் கடற்கரையில் கால் பதித்து நிமிர கண் முன்னே கம்பிரமாய் தென்பட்டது ராமேஸ்வரம் கோபுரம். “சிவனை பார்த்திட்டே போவோம். நினைத்தது நல்லபடியாய் முடிய வேண்டும்” பெருமூச்சு விட்டார் கண்மணி.
 
 
“அம்மம்மா எங்கே போறோம்” கண்மணியை நோக்கியே கேள்வியை வீசினான் சொரூபன். அந்த வயதிலேயே ஏனோ அம்மாவை விட கண்மணியின் முடிவுகளில் ஒரு நம்பிக்கை.
 
 
“அப்பாவைப் பார்க்க போகிறோம்” அனைவரையும் முந்திக் கொண்டு பதில் சொன்னாள் தர்சினி.
 
 
பெரிதாய் ஆர்வமின்றி “ஒ..” என்ற சொரூபன் பெரியவர்களைப் பார்க்க இருவர் முகத்திலும் ஒரு அதிருப்தி. அதற்கு மேல் கேள்வி கேட்டு யாரையும் தொல்லைப்படுத்ததா போதும் சிறுவன் முகம் ஆழ்ந்த யோசனையைக் காட்டியது.
 
 
***
 
 
சென்னை வந்து இரண்டு வருடங்கள் ஓடிப் போயிருந்தது. கண்மணி பாலா இருவரும் எதிர் பார்த்ததை போல் ஜெயநாதன் கொடுத்திருந்த விலாசம் போலியானதாய் தான் இருந்தது. இலங்கையின் நாட்டு நிலைமையை முன்னிட்டு அவர்களும் தமிழ்நாட்டிலேயே தங்கி விட்டிருந்தார்கள். யாழ்ப்பணத்தில் இருந்த வயலிலும் வீட்டிலும் இருந்தும் ஓராளவு வருமானம் வந்தது. சாதாரண காலமாய் இருந்தால் அதுவே போதுனதாக இருந்திருக்க கூடும். கண்மணியின் சேமிப்பிலும் பாலாவின் உழைப்பிலும் நாட்கள் நகர சொரூபனை ஆங்கில பள்ளி ஒன்றில் சேர்த்திருந்தார்கள்.
 
 
பாலா தன் வேலையை கொழும்புக்கு மாற்றிக் கொண்டு அடிக்கடி இந்தியா வந்து போய்க் கொண்டிருந்தான்.
 
 
அன்றும் யாழ்ப்பாணம் போய் வந்திருக்கவே சொரூபனை அழைத்துக் கொண்டு தர்சினி பாலா இருவருமாய் மெரீனா பீச் வந்திருந்தார்கள். கண்மணி வேண்டுமென்றே நின்றுவிட்டார். கடற் கரையில் நின்று அஸ்தமித்த சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்த தர்சினியின் மனதிலும் ஜெயநாதனைப் பற்றிய நம்பிக்கை அஸ்தமித்திருந்தது.
 
 
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சொரூபனைப் பார்த்தவாறே கேட்டான் பாலா “என்ன முடிவு எடுத்திருகின்றீர்?”.
 
 
அவளுக்கு விளங்கியது. அனைவருக்கும் பாரமாய் கரைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவனை திரும்பிப் பார்த்தாள் தர்சினி. காதின் ஓரம் நரைத்து கண்களின் ஓரம் சுருங்கி அவனின் இளமை தொலைந்து கொண்டிருந்தது. தன்னை நேசித்த இவனை ஏன் என்னால் நேசிக்க முடியாமல் போனது. தன்னைத் தானே நொந்து கொண்டவள் “நான் வருவதாய் இல்லை, நீங்களும் இனிமேல் வராதீர்கள்” மெல்லிய குரலில் கூறினாள்.
 
 
திரும்பிப் ஒரு பார்வை பார்த்தவன் “நீர் பாரமெண்டு நினைத்திருந்தால் இங்கே வந்தே இருக்க மாட்டேன்” அழுத்தமாய் கூறினான்.
 
 
“நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்கவில்லை. நீர் என்ன செய்ய போறீர்? அதை மட்டும் சொல்லும்” என்றவன் குரல் உணர்ச்சியற்று இருந்தது.
 
 
கண்களில் நீர் நிறைய “சொரூபனைத் தான் கேட்க வேண்டும்” என்றவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. இருவரின் கெட்ட காலமோ இல்லை நல்ல காலமோ இருவர் கண்ணிலும் பட்டார் ஜெயநாதன்.
 
 
சட்டேன அவன் புஜத்தைப் பிடித்த தர்சினி “சொரூபனின் அப்பா” என்றாள் வெற்றுக் குரலில்.
 
 
ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்த பாலா ஆமோதிப்பாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தான். அவரை பின் தொடர முயன்றால் கடற்கரை சனக் கூட்டத்தில் மறந்திருந்தார். ஒரு தடவை பார்த்துவிட்டதால் இனி தேடிக் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் முதலில் சொரூபனை அழைத்து செல்ல வந்தால், அவனிடம் உரையாடிக் கொண்டிருந்தார் ஜெயநாதன்.
 
 
“சொரூபா” பாலா அழைக்கவே புன்னகையுடன் ஓடி வந்து அவன் கையை பற்றிக் கொண்டான் சிறுவன். “நான் சொன்னேனே நேற்று எங்கள் ஸ்கூலுக்கு ஒருவர் பிரைஸ் கிவின்ங் கொடுக்க வந்தார் எண்டு” அறிமுகப்படுத்தி வைத்தான் “இவர்கள் என் அம்மா தர்சினி. இவர் என்னுடைய பிரன்ட் பாலநாதன்.”
 
 
“உன் மகனா இவன், என்ன பெயர்?” என்ற அவர் கேள்வியில் தர்சினி விதிர் விதிர்த்துப் போக அவரை முறைத்துப் பார்த்தான் பாலா.
 
 
அவர்கள் இருவர் முக பாவனையையும் பார்த்து விட்டு “நம் மகன்” என்று திருத்திக் கொண்டவர் தன் விசிட்டிங் கார்டைக் கொடுக்க கையில் வாங்கமால் பாலாவைப் பார்த்தாள் தர்சினி.
 
 
உதட்டைக் கடித்தவன் கை தயங்கியவாறே அவர் புறம் நீண்டு கார்டை வாங்கிக் கொண்டது.
 
 
தர்சினியோ ‘ஏன் வாங்கினாய்?’ என்பது போல் பார்த்தாள்.
 
 
இருவரது பார்வைப் பரிமாற்றத்தையும் கவனித்தவர் “இப்போதே வருகின்றீர்களா?” அழைத்தார்.
 
 
“இல்ல”
 
 
“ஓம்”
 
 
பாலா மறுக்க தர்சினி போக சம்மதித்தாள்.
 
 
கார் கதவை பணியாள் திறந்து விட சில கணங்கள் நின்று கருப்பு நிறத்தில் பளபளவென மின்னிய காரைப் பார்த்தவளுக்கு அவரின் செல்வநிலை நன்றாகவே புரிந்தது. இத்தனை வருடங்களில் ஒரு தரம் கூட தங்களை தொடர்பு கொள்ள முயலவில்லை, ஏன் என்ற கேள்வியின்றியே விடை தெளிவாக புலப்பட்டது.
 
 
அமைதியாய் ஏறியவளை ஒரு வித ஏமாற்றத்துடன் பார்த்தான் பாலா. இந்த தடவை வந்திருந்த போது அவளில் ஒரு மாற்றம் தென்பட்டது போல் உணர்ந்திருந்தான்.
 
 
சற்று முன் கூட கையைப் பிடிக்கும் போதும்...
 
 
“நீங்களும் வருகின்றீர்களா? கணவன் மனைவி நீண்ட நாளின் பின்னர் சந்திக்கின்றோம்...” ஜெயநாதன் இழுக்கவே “அவர் வந்தால்தான் நான் வருவேன்” தர்சினியின் குரலில் இது வரை இல்லாத ஒரு தெளிவு.
 
 
“நானும் பிரன்ட் வந்தால் தான் வருவேன்” பாலாவின் கையைப் பிடித்துக் கொண்டான் சொரூபன்.
 
 
ஏற்பட்ட எரிச்சலை மறைத்துக் கொண்டு உதட்டை இழுத்து வைத்து கூறினார் “ஏறுங்கள்”.
 
 
சென்னையின் விஐபிக்கள் வசிக்கும் பகுதிக்குள் கார் நுழைய தர்சினியின் முகம் இன்னும் இறுகியது. கண்மணி எதிர்பார்த்தது போல் அவரை நேரில் சந்தித்ததில் அவள் புத்தி தெளிந்துவிட்டது.
 
 
ஆனால் நேரம் கடந்து வந்த ஞானதோயமா?
 
 
“இருங்கள்’ சோபாவைக் கை காட்டியவர் உள்ளே பார்த்து அழைத்தார் “ராகவா”. நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த வழுக்கை விழ தொடங்கியிருந்த மனிதர் தன் சிறு தொப்பையையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.
 
 
“ஐயா”
 
 
“மூவருக்கும் தேனீர் கொடு” சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவன் வந்து நின்றான் “ஐயா உங்கள் மச்சான் வந்திருக்கின்றார். உடனே உங்களைப் பார்க்க வேண்டுமாம்”.
 
 
“சரி அலுவலக அறையில் காத்திருக்க சொல்லு வருகிறேன்” தர்சினியிடம் திரும்பி “ஒரு ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்” என்று விட்டு உள்ளே சென்றார்.
 
 
“பாலா எனக்கு ஞானாவிடம் ஐந்து நிமிடம் தனியாக பேச வேண்டும்”
 
 
“இப்போது இங்கேயா?” ஆச்சரியத்துடன் கேட்க “ஓமோம் இங்கேயேதான்” அழுத்தமாய் அங்கீகரித்தாள். அவன் வெளியே செல்ல முயல “நீங்கள் இருங்கள். அப்படியே திரும்பிப் போக டக்சிக்கும் ஏற்பாடு செய்யுங்கள்” என்றவள் சொரூபனை கை பிடித்து அழைத்துச் சென்றாள்.
 
 
சற்று தனிமையாய் இருந்த இடத்தில் நிறுத்தி “ஞானா நன்றாக யோசித்து சொல்லுங்கள். நீங்கள், நான், தங்கச்சி சொரூபி, அம்மம்மா, பாலா எல்லோருமாய் ஒன்றாய் ஒரு வீட்டில் இருப்போமோ? உங்களுக்கு பாலாவை அப்பா என்று கூப்பிட சம்மதமா?” ஒரு குழந்தையின் அம்மாவாய் நிறைய தவறு செய்து விட்டது தந்தையை இழந்து வெளியுலகை தனியாக எதிர் கொண்ட போதே விளங்கியது.
 
 
போன காலம் போகட்டும். இனியாவது சொரூபனுக்கு குடும்ப அமைப்பு ஒன்றினைக் கொடுக்கும் கடமை அவளிடம் இருக்கிறது.
 
 
ஒரு கணம் திகைத்துப் போய் பார்த்த சொரூபன் தாயைக் கட்டிக் கொண்டான் “எனக்கு சம்மதம் அம்மா, வாருங்கோ இப்பவே போய் சொல்லுவோம். எனக்குத் தெரியும் பாலா...” என்றவன் இடையில் நிறுத்தி “அப்பாவுக்கும் சம்மதம்தான்” குரல் துள்ளியது.
 
 
நெஞ்சில் சாய்ந்திருந்த தலையைக் கோதிக் கொடுத்தவளுக்கு அழுகை முட்டியது. இந்தக் குழந்தையின் குழந்தைதனத்தை அவள் ஒரு தவறு பறித்துவிட்டது. ஆனால் இனியும் அதே தவறை விடவே மாட்டாள்.
 
 
“ஆனால் உங்கள் அப்பா ஜெயநாதன்...” என்று தொடங்கியவளை தடுத்து நிறுத்தினான் சொரூபன் “அவரைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை”.
 
 
“நேற்று உங்களுக்கு பிரைஸ் கொடுத்தவர் என்றால் கூடவா?” சற்றுக் கவலையுடன் கேட்டாள். ஏனென்றால் நேற்று வந்ததில் இருந்தே அவரைப் பற்றிய புராணம்தான்.
 
 
நெற்றி சுருக்கி யோசித்தவன் “இல்லம்மா அது இவரில்லை. இவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். ஸ்கூல் ஒனர் அவரைப் பற்றித்தான் சொன்னேன்” விளக்கமளிக்க நிம்மதியாய் மூச்சுவிட்டாள் தர்சினி.
 
 
அவளுக்கு கடந்த ஆறேழு மாதங்களவே இதே சிந்தனைதான். ஆனால் சொரூபனுக்கு பதினைந்து வயது முடிந்திருக்க மீசையரும்பும் பிள்ளையை வைத்துக் கொண்டு எப்படி இப்படி ஒரு முடிவை எடுப்பது என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
 
ஆனால் அத்தனை தூரம் யோசித்திருக்கவே தேவையில்லை போல.
 
 
“சொரூபியிடமும் அம்மம்மாவிடமும் கேட்டு சம்மதித்த பின்னரே இது முடிவாகும், சரியா” புன்னகையுடன் கேட்க “அவர்கள் நிச்சயமாய் சம்மதிப்பார்கள்” ஆர்வமாய் பதிலளித்தான் சொரூபன்.
 
 
“எனக்கும் விளங்குது, ஆனால் கேட்பதுதானே முறை”
 
 
“அம்மா நீங்கள் எப்பவுமே இப்படியே இருங்கள்” கண்கள் மின்னக் கூறிய மகனை தோளோடு அணைத்துக் கொண்டு உள்ளே நடக்க இருவரையும் நிறைந்த மனதுடன் நோக்கினான் பாலா.
 
 
“அம்மா” என்று அழைத்து அவள் காதிற்குள் ஏதோ சொல்ல கட்டை விரலை உயர்த்திக் காட்டி தலையசைத்தாள் தர்சினி.
 
 
ஏனோ அம்மம்மாவிடம் இருந்த ஒட்டுதல் அவன் அம்மாவிடம் இல்லையே என்று பலதடவை வருந்தியிருக்கின்றான் பாலா. ஆனால் இன்று அவன் தோளின் மேல் கை போட்டு நடந்து வந்ததைப் பார்த்தவன் கண்ணில் லேசாய் பனிப்படலம்.
 
 
தேநீர் வர அதைக் குடிக்கும் எண்ணம் மூவருக்குமே இல்லை.
 
 
“நாங்கள் போவோம்” என்று தர்சினி எழ முயலவும் ஜெயநாதன் வரவும் சரியாய் இருந்தது.
 
அவர் எதுவும் சொல்ல முதல் தர்சினியே கூறினாள் “உங்களிடம் சற்று தனியாக கதைக்கனும்”. பாலாவை நோக்கி கெத்தாய் ஒரு பார்வையை வீசியவர் “நிச்சயமாய் உள்ளே வா. மகன் எங்கே?” வினாவினார்.
 
 
“வெளியே நிற்கிறார், வருவார் வாருங்கள்” சுருக்கமாய் பதிலளித்தவள் கைபையில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றாள்.
 
 
பாலா எழுந்து சொரூபனை தேடி வெளியே சென்றான். இப்போது இங்கேதானே இருந்தான் அதற்குள் எங்கே சென்றான்.
 
 
தோட்டத்தில் தேட சற்றுத் தூரத்தில் தன் வயதை ஒத்த ஒரு பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தான் சொரூபன். இறப்பர் பந்தைப் ஓரிடத்தில் நிற்காமல் துள்ளிக் கொண்டே இருந்தாள் அந்தக் குட்டிப் பெண். பாலாவைப் பார்த்து விட்டு சொரூபன் கையாட்ட அந்தப் பெண்ணும் கையாட்டினாள்.
 
 
‘இண்டைக்கு அம்மாவுக்கும் மகனுக்கும் என்ன நடந்தது. என்னை நடு வீட்டில் இருத்தி விட்டு இரு பக்கமும் கதைக்க போய்ட்டாங்க’ மனதினுள் இருவரையும் வறுத்தான் பாலா.
 
 
“இவர் என்னோட பிரன்ட் பாலா” அந்தப் பெண்ணிற்கு அறிமுகப்படுத்தினான். “இவ யதி, என்னோட ஸ்கூல ஒன்றாய் படிக்கிறா”
“ஹலோ” என்று பாலா கை கொடுக்க “ஹலோ அங்கிள், சொரூபன் ரெம்ப ஷார்ப் தெரியுமா? உங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்”. பாலாவிடம் இலகுவாய் கதைக்கத் தொடங்கினாள். “பாப்பா கொஞ்சம் வாம்மா” என்றவாறே வந்தார் பதினைந்து வருடம் இளமையாய் இருந்த சண்முகம் டிரைவர் அங்கிள்.
 
 
“பிறகு பார்ப்போம்” என்று விடை பெற்றவள் துள்ளிக் கொண்டு சென்றாள்.
 
 
“இறப்பர் பந்துதான் இல்லையா” இருவரும் ஒரே குரலில் சொல்லி சத்தமாய் சிரித்து ஹைபைவ் போட்டுக் கொண்டார்கள்.
 
 
“என்னை விட்டு என்ன சிரிப்பு?” என்ற அதட்டலில் இருவரும் திரும்பிப் பார்க்க தர்சினிதான் கைப்பையுடன் நின்றாள்.
 
 
“போவோமா?”
 
 
“உத்தரவு மகாராணி”
 
 
சொரூபனை நடுவில் விட்டு மூவருமாய் பேசிச் சிரித்து சென்றதையே சிவந்த கண்களோடு பார்த்திருந்தார் ஜெயநாதன்.
 
 
***
 
 
அன்றிரவு பாலாவின் பிறந்தநாளின் போது தர்சினி தன் முடிவைச் சொல்லி விட அனைவருக்குமே சந்தோசம். கேக்கை அவள் வாயில் எடுத்து வைத்தவன் கண்கள் முதல் முறையாய் கலங்கிப் பார்த்தாள் தர்சினி.
 
 
“உங்கள் இளமைக் காலம், குழந்தைகளின் சிறுவயது ஆசைகள் அனைத்தையும் வீணாக்கிவிட்டேன் இல்லையா?”
 
 
“பெட்டர் லேட் தான் நெவெர்” புன்னகையுடன் தோளில் தட்டிக் கொடுத்தான். 
 
 
“அவரிடம் என்ன சொன்னீர்” சிறு குறுகுறுப்புடன் கேட்டான் பாலா.
 
 
“அவருடன் வாழ முடியாது என்றேன்” சுருக்கமாய் கூறிவிட்டாள்.
 
 
அன்று மட்டும் அங்கு நடந்ததை முழுமையாக கூறியிருந்தால் பின்னால் நடந்த எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமலேயே போயிருக்கும்.
 
 
“பிள்ள நாங்க ஊருக்கு போவோம்” கண்மணி ஆரம்பிக்க “நிச்சயமாய் அம்மா” என்று உறுதி செய்தாள் தர்சினி. மகளின் முகத்திலும் குரலிலும் தெளிவைக் கண்டு கொண்ட கண்மணி தனக்குள் புன்னகைத்து கொண்டார். புத்தருக்கு ஞானம் வரவே ஒரு போதிமரம் தேவைப்பட்டது.
 
 
“சரி சொரூபனின் ஸ்கூலில் கதைக்க வேணும், திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணனும் அதனால் ஒரு மாதம் கழித்து வெளிகிடுவோம். அப்படியே ஷோப்பிங்கும் செய்வோம்” பாலா சொல்லவே “அப்பா அப்படியே பிளாக் தன்டரும் போவோம் அப்பா” என்று நொடிகொரு அப்பா போட்டான் சொரூபன்.
 
 
“அப்பா” என்று கால்களை கட்டிக் கொண்டாள் சொரூபி.
 
 
அனைவரின் மகிழ்ச்சியைப் பார்த்த போது தர்சினிக்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தாலும் பிந்தினாலும் சரியான முடிவு எடுத்த சந்தோசத்தில் முகம் மலர்ந்திருந்தது.
 
 
கண்மணியின் பிடிவாதத்ததில் அடுத்த நாளே இலங்கை தூதரகத்திற்கு சென்று திருமணத்தை பதிவு செய்ய மனு போட்டுவிட்டார்கள். ஜெயநாதன் தர்சினி இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி மட்டுமே திருமணம் நடந்ததால் விவாகரத்து தேவைப்படவில்லை.
 
 
இரண்டு கிழமை கழித்து திருமணத்தை முறைப்படி எம்பசியில் பதிந்து கோவிலில் வைத்து தர்சினியின் கழுத்தில் தாலி காட்டியிருந்தான் பாலா. நிம்மதியாய் கண்மூடி இறைவனைத் தொழுதார் கண்மணி. தன் கணவரின் கடைசி ஆசையையே நிறைவேற்றி வைத்தது போல் மனதில் ஒரு நிறைவு. தனக்கு பின் அவளுக்கு ஒரு துணை இருக்கு என்ற நினைவே நெஞ்சில் நிம்மதியை விதைத்தது.
 
 
மத்தியானம் கண்மணியே அனைவருக்கும் சமைத்துக் கொடுத்தார். சொரூபனுக்கு மகிழ்ச்சியில் கால் நிலத்திலேயே நிலை கொள்ளவில்லை. சொரூபனுக்கு தாத்தாவின் பின்னர் அவனை குருவாய் நண்பனாய் வழி நடத்த யாருமில்லாமால் ஒரு வெற்றிடம் உருவாகியிருந்தது. அந்த இடத்தை இலகுவாக பாலநாதன் எடுத்துக் கொண்டார்.
 
 
அண்ணனும் தங்கையுமாய் சேர்ந்து அவனை “அப்பா அப்பா” என அன்பில் குளிப்பாட்டி விட்டிருந்தனர். பாலவுக்கு இவர்களின் நேசத்திற்காகவாது தர்சினியை பலவந்தமாக என்றாலும் மணந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.
 
 
அன்று மாலை எல்லோரும் சேர்ந்து பிரபலமான மோல் ஒன்றிற்கு செல்ல கண்மணி வீட்டிலேயே இருக்கப் போவதாக கூறிவிட்டார்.
 
 
ஐஸ்க்ரீம் ஓர்டர் கொடுத்து விட்டு திரும்பிப் பார்த்தால் குழந்தைகள் இருவரையும் காணோம்.
 
 
லேசாய் பதற தொடங்கிய தர்சினியின் தோளை தட்டிக் கொடுத்தவன் “இங்கேதான் இருப்பார்கள். தேடிப் பார்ப்போம்” என்று தேடவே அவளருகே வந்தார் ஜெயநாதன்.
 
 
அவர் கையில் அவள் கழற்றிக் கொடுத்த பழைய தாலி.
 
 
அன்று ஜெயநாதனுடன் அவரறைக்கு சென்றது இந்த தாலியை கொடுக்கவே. அவர் முகத்தில் வீசியெறிந்து விட்டு வந்துவிட்டாள். என்று இங்கே வந்து அவர் கொடுத்த விலாசம் போலி என கண்டாளோ அன்றே தாலியை கழற்றி கை பையினுள் வைத்துவிட்டாள். இனி ஊருக்கு எப்படி போவது சொந்தம் பந்தம் நடுவில் எப்படி தலை நிமிர்ந்து நிற்பது என்ற யோசனையில் மதி மயங்கி நின்றவள் ஒரு நாள் கோவிலால் வரும் போது ஜெயநாதனை அவரின் மனைவியுடன் பார்த்துவிட்டாள், யாரிடமும் சொல்லவில்லை.
 
 
தந்தை சொல்லை மீறி இவனை மணந்தது எத்தனை பெரிய தவறு மனம் நொந்தவள் ஊருக்கு போய் தலை நிமிர்ந்து வாழ முடியாது இங்கேயே இருந்து விடுவோம் என்று முடிவெடுத்த போது அதற்கு தடையாய் நின்றான் பாலா. கொழும்பிலிருந்து வேலைமெனக்கெட்டு வந்து அவள் மனதை கரையாய் கரைத்தான்.
 
 
“என்ன கணவனைக் கண்டதும் புது பெண்ணாகி விட்டாய்?” ஏளனமாய் கேட்க “அப்படியானால் இங்கே சட்டப்படி மணந்த உங்கள் மனைவியை எப்படி அழைப்பீர்கள் மிஸ்டர் யோகேஸ்வரன்?” தலை நிமிர்ந்து கேட்டாள்..
 
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”