மொழி - 10
சொரூபனின் உலகம் ஒரு கணம் நின்றுவிட்டது.
அவன் பின்னால் வந்த நிஷாந்த “காரில் ஏற்று ஹோஸ்பிடல் போவோம்” என்று காரை ஸ்டார்ட் செய்யவும் அவளை தூக்கிக் கொண்டு பின் சீட்டில் ஏறினான் சொரூபன்.
டிரைவ் செய்தாவாறே முன் கண்ணாடி வழியே நோக்கியவனுக்கு அசைவின்றி அவளையே வெறித்துப் பார்த்த நண்பனின் மனநிலை தெளிவாகவே புரிந்தது.
“இடியட்” வாய்க்குள் முனகினான்.
அவசர சிகிச்சை பிரிவுக்குள் அனுப்பி விட்டு முன்னே போட்டிருந்த சேரில் சாய்ந்தான் சொரூபன். உடலில் அசையக் கூட சக்தியில்லை போலிருந்தது. குனிந்து பார்க்க சற்று முன் அவள் தலை சாய்த்திருந்த இடத்தில் இரத்தக் கறை. தொட்டுப் பார்க்க கையில் பிசுபிசுத்தது.
இவள் துன்பப் பட வேண்டும், இரத்தம் சிந்த வேண்டும் என்றுதான் அனைத்தையும் செய்தான். ஆனால் அவள் துன்பத்தை பார்க்க கூட முடியவில்லை.
அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி யோகேஸ்வரனின் பக்கமிருந்து உதவும் நபர் யதீந்திராதானோ என்ற ஒரு சந்தேகமிருந்தது. ஆனால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் தங்களுக்கு மிக நெருங்கிய ஒருவர் அவளுக்கு ஒற்றார் வேலை பார்ப்பதும் புரிந்தது. அதுவும் யாரென்றும் தெரியவில்லை. இந்த இரண்டையும் கண்டுபிடிக்க இந்த விபத்தையே திட்டமிட்டதே அவன்தான். ஆனால் அவளின் பேச்சில் சற்று தடுமாறிவிட்டான்.
அவனுக்கு நடக்க வேண்டிய விபத்தில் எதிர்பாராத விதமாய் யதீந்திரா குறுக்கே வந்துவிட்டாள்.
மனம் எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்க அவன் கண்கள் மட்டும் அவசர சிகிச்சை பிரிவையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தது.
கதவைத் திறந்து கொண்டு மருத்துவர் வர ஒரே எட்டில் அருகே சென்றவன் “யதி..?” அவள் பெயரையே கேள்வியாய் கேட்டான்.
“அவர்களுக்கு ஒன்றுமில்லை, சின்ன காயம் மட்டும் தான் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்யலாம். வேண்டுமானால் ஒரு ஸ்கேன் செய்து பார்ப்போம்”
“பார்க்கலாம?” கேள்வி அவரிடமிருந்தாலும் கண் அவரைத் தாண்டி உள்ளே அவளைத் தேடியது. அவனின் தேடலைப் பார்த்த மருத்துவர் சிறு சிரிப்புடன் “இந்த ஒரு தடவை விடுகிறேன். அடுத்த தரம் வரும் போது கிளீனாய் வரணும்” மீதியை காற்றிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவன் எப்போதோ அவரைத் தாண்டி உள்ளே சென்றிருந்தான்.
பெட்டுக்கு ஓரடி தூரத்தில் நின்றுவிட்டான். அதற்கு மேல் நெருங்கவில்லை. தன் காரைத் தள்ளி விட்ட கணம் கண் முன்னே நிழலாட அருகே இருந்த இருக்கையில் சேர்ந்து போய் அமர்ந்தான். மனம் இரண்டாய் பிரிந்து நின்று ஒன்றுடன் ஒன்று யுத்த்தம் செய்து கொண்டிருந்தது. அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்தவள் பதட்டத்துடன் எழ முயன்றாள்.
“ஞானா இரத்தம், டாக்டர்”
“அது என்னுடையது இல்ல. உன்...”
அவன் பதிலை கேட்பதாய் இல்லை “நர்ஸ்...” அவள் சத்தத்தில் ஓடி வந்த தாதி “சார் அவர்களை ரெஸ்ட் எடுக்க விடுங்கள்” அவனிடம் சத்தம் போட்டாள்.
“இரத்தம் அவரை செக் பண்ணுங்கள்” கையைக் காட்டினாள்.
‘இவளை’ பல்லைக் கடித்தவன் கடகடவென சேர்ட் பட்டனைக் கழட்டினான்.
“சார் என்ன செய்யுறீங்க?” பயத்துடன் தாதி கேட்க “கொஞ்சம் பொறுங்கள் சிஸ்டர். எனக்கு அடிபடல எண்டு நிருபிக்கும் வரை இவா இப்படித்தான் இருப்பா” என்றவன் சட்டையைக் கழட்டினான்.
அவள் இருபுறமும் கையூன்றி முகம் நோக்கிக் குனிந்தவன் “சி எனக்கு அடிபடல, போதுமா?”
கையுயர்த்தி அவன் தோளைத் தடவ ஒரு கணம் சிலிர்த்தான் சொரூபன்.
அவன் சிகை கோதி “அடிபடல தானே” கண்ணை விரித்துக் கேட்டவள் முகத்தில் விசன ரேகைகள்.
“ஷ்...” குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து நிமிர அவனுக்கு ஒன்றுமில்லை என்ற நிம்மதியில் உறங்கி விட்டிருந்தாள்.
அசையாது சில கணங்கள் கண் மூடி உறங்கும் அவளையே பார்த்தபடி நின்றான். ‘இன்று எனக்கு என்ன ஆனாது. இவள் ரத்ததை பார்த்தல் அப்படி நடுங்குகிறேன். கடந்த ஆறு மாதங்களில் அவள் அருகே இல்லமால் உறங்கிய நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘எத்தனை தரம் கூடிக் களித்திருப்பேன். அப்போதெல்லாம் வராத சிலிர்ப்பு அரை மயக்கத்தில் தொட்டும் தொடதா இந்த வருடலில் ஏன்?’ கடந்த சில தினங்களாய் இது போன்ற விடையறியா கேள்விகள் அவனிடம்.
“அப்பாடி ஒரு வழியாய் உறங்கிவிட்டார்கள். நாளை காலைதான் கண் விழிப்பார்கள்” என்றார் அருகில் நின்ற தாதி.
கேள்வியாய் நோக்க “இல்ல, உள்ளே வந்ததில் இருந்தே அமைதியில்லமா ஏதோ அந்தரபட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்லீபிங் டோஸ் கொடுத்தும் உறங்கவில்லை. அதான் டபுளா கொடுத்தது. இதுதான் பிரச்சனை என்று தெரிந்திருந்தால் முதலே உங்களை அழைத்திருப்போம்” விரிவாய் விளக்கமளித்தார்.
மீண்டும் அவள் முகத்தையே பார்த்தான். இவளில் எது உண்மை. சொத்துக்காக என் வாரிசை சுமக்க போவதாக அவள் மாமாவிடம் சவால் விட்டு வந்த யதீந்திராவா? இல்லை இப்போது என்னைக் காப்பாற்ற வந்த யதீந்திராவா?
யாருக்கு உண்மையாய் இருக்கிறாள் எனக்கா?
அவள் மாமா யோகேஸ்வரனுக்கா?
இல்லை இருவரையும் ஏமாற்றுகிறளா?
தலைக்குள் ஆயிரம் கேள்விகள் உளியாய் குடைந்தது...
வெளியே வர நிஷாந்த ஜெகதீஸ் இருவரும் கேள்வியுடன் அவன் முகத்தை ஏறிட்டனர்.
“ஆபத்து இல்லை, நாளையே டிஸ்சார்ஜ் செய்து விடலாம்” இருவரின் கேளாத கேள்விக்கும் பதிலளித்தவன் “யாரோ யதியை கொல்ல முயற்சி” என்றான்.
“ஆனா நாம்தானே விபத்தை செட்டப் செய்தது” குழப்பமாய் கேட்டான் நிஷந்தா.
“நான் எடுத்துச் சென்றது யதியின் கார். அதில் பிரேக் இல்ல” சுட்டிக் காட்ட இருவரும் அதிர்ந்து போய்ப் பார்த்தார்கள். “இரண்டே நாளில் எனக்கு தகவல் வேண்டும்” உத்தரவாய் எழுந்தது அவன் குரல்.
“அப்படியே அந்த டிரைவரும் வேண்டும்” என்ற நிஷாந்தவை அர்த்த புஷ்டியாய் பார்த்தான் சொரூபன். அவர்களின் திட்டப்படி சொரூபனை மட்டும் அதிக காயம் படாதபடி விபத்துக்குள்ளக்க வேண்டும். ஆனால் சொரூபனின் கார் விலகிய பின்பும் ஏன் விபத்து நடந்தது. அப்படியே அந்த நேரத்தில் தன்னை மீறி நடந்த செயல் என்றாலும் இதுவரை டிரைவர் ஏன் இன்னும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.
***
அன்றிரவு சொரூபனும் நிஷந்தவும் மருத்துவமனையின் கார்டனில் இருந்த பெஞ்சில் அமர்ந்து எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“மச்சா எனக்கு சந்தேகமே இல்ல எய தமாய் (அவள்தான்)”
“ஆனா ஏன்?” யோசனையுடன் கேட்டான் சொரூபன்.
“எனக்கும் தெரியல. நான் யதிந்தீராவுடன் இருந்த போது ஒரு போன் வந்தது. யாரென்று தெரியல. உடனே உனக்கு ஆபத்து என்று காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.”
“அப்ப ஏன் யோகேஸ்வரனிடம் சொத்துக்காக என் வாரிசு வேண்டுமேன்று சொன்னாள்”
“வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்”
“அது தெரிவதற்கு முன் அவளை நம்ப முடியாது”
“சரி வீட்டிற்கு வருகிறாயா?”
“அதுதான் உடை மாற்றி சாப்பிட்டு வந்துவிட்டேனே” ஆச்சரியத்துடன் கேட்டான் சொரூபன்.
“உனக்கு அவளை பிடித்து இருக்கா?” என்ற கேள்வியில் ‘ஹாஹாஹா’ என்று சத்தமாய் சிரித்தவன் “செய்வதை திருந்தச் செய்” உதட்டுக்குள் குரூரமாய் சிரித்தான்.
அவனையே ஆழ்ந்து பார்த்து கூறினான் நிஷாந்த “இது நடிப்பு என்று நீ சொல்வது உண்மையானால் ஒஸ்கர் அவர்ட் உனக்குத்தான் கொடுக்க வேண்டும். நானே நம்பிவிட்டேன்”.
அவன் அமைதியாய் இருக்க “கொஞ்சம் யோசி, சிலவேளை ஏதாவது தவறான புரிதல் இருந்திருந்தால்... இப்போதும் எதுவும் கை மீறிப் போகவில்லை. யார் மீது தவறோ இல்லையோ! உனக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கும் பெண்ணை இழந்துவிடாதே. இப்போது நீ செய்ய உத்தேசித்து இருக்கும் காரியத்தில் திரும்பி வர வழியே இல்லை. ஒரு நண்பனாய் இதை உனக்கு சொல்லியே ஆக வேண்டும். அனைத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கக் கூடும்” தோளில் தட்டி விடைபெற்றான் நிஷாந்த.
அவளை எந்த விதத்திலும் வருத்தப் பட வைக்க முடியவில்லை என்ற கோபத்தில் நடிப்பு என்றுதான் தொடங்கினான். ஆனால் அவனையும் அறியாமல் அது இயல்பாகி விட்டிருந்தது. அதிலும் அவனின் சந்தேகங்களுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவும் கொஞ்சம் இளகிவிட்டிருந்தான்.
அவன் செல்லவும் சிவந்த கண்களுடன் எதிரே வெறித்துக் கொண்டிருந்தான் சொரூபன். அவள் அவனுக்காய் உயிரைப் பயணம் வைத்ததில் அதிர்ந்துதான் போயிருந்தான். ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் இதேபோலொரு அவளின் நாடகம் நினைவில் நிழலாடியது. அவனின் அத்தனை துன்பத்திற்கும் காரணமான ஒருத்தியை எப்படி விடுவது.
வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் தடுமாறினான் சொரூபன்.
***
அவன் அம்மா தர்சினி, அம்மம்மா தாத்தா அனைவருமாய் ஒன்றாய் இருந்த காலம். யாழ்ப்பாணத்தில் செட்டி ஸ்ட்ரீட்டில்தான் அவர்களது வீடு, அந்தக் காலத்து நாற்சார வீடு. எட்டிப் பார்த்தால் நல்லூர் கோவில். சற்று தூரம் நடந்து சென்றால் மந்திரி மனை, சங்கிலிய மன்னனின் அரண்மனை முகப்பு. பதின்மூன்று வயது வரை அவன் வாழ்க்கை அத்தனை அழகாய் இருந்தது.
அவன் தாத்தா திருஞானசம்பந்தர் அந்தக் காலத்து அப்புகாத்து (சட்டத்தரணி). ஊரில் அவருக்கு நல்ல மரியாதை இருந்தது. அவன் அம்மம்மா கண்மணி அவனைக் கண்ணுக்குள் வைத்து வளர்த்தார். படிப்பில் கெட்டிக்காரன் ஆங்கிலம் தமிழ் சிங்களம் டச் என அனைத்து மொழிகளையும் தாத்தா சொல்லிக் கொடுத்ததில் அவனுக்கு அந்த வயதிலேயே சரளமாக கதைக்க வரும். தாத்தாவுடன் சேர்ந்து ஏட்டில் எழுதியிருக்கும்ம் டீட்டையும் வாசிக்கப் பழகியிருந்தான். அவன் தாத்தா எப்போதும் அவனிடம் சொல்லும் வாசகம் “என்னோட வாரிசு நீங்கள் தான் சொரூபன்”.
ஆனால் அவன் அப்பாவைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் அனைவரும் சேர்ந்து ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவன் எண்ணத்தை திசை மாற்றிவிடுவார்கள். அவன் அம்மா காதலித்து மணந்த ஜெயநாதன் இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரி. கடைசியாய் அவன் தங்கை சொரூபி ஐந்து மாத கருவாக இருக்கும் போது படகில் இந்தியா போகும் போது காணமல் போயிருந்தார். ஒரு நாள் நிச்சயமாய் வருவார் என்று அவனிடம் கூறியிருந்தார்கள்.
பன்னிரெண்டு வயது வரை அவனுக்கு சிரிப்பையும் சந்தோசத்தையும் தவிர வேறு எதுவும் தெரியாது.
அன்றும் ஸ்கூல் விட்டு வந்தவன் காரிலிருந்து இறங்கியதுமே “தாத்தா...” என்ற கூவலுடன் ஓடிச் செல்ல அவனை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டார் அவர்.
“ஸ்கூல நான்தான் ஃபேஸ்ட்” என்றவனை அணைத்துக் கொண்டு எப்போதும் போல் “நீங்கள்தான் என் வாரிசு” என்றார். உண்மையில் அவரையே பிரதிபிம்பமாய் கொண்டு வந்திருந்தான் சொரூபன்.
அருகே நின்ற அவர் மூத்த மகன் சிவகுருநாதன் “என்ன அப்பா நீங்கள், ஊர் பெயர் தெரியாதவனுக்கு பிறந்தவனை எல்லாம் எல்லோருக்கும் வாரிசு என்று அறிமுகப்படுத்திறீர்கள். அப்ப எங்கள் பிள்ளைகள் யாரின் வாரிசு” சுணங்கினான்.
ஐந்து அண்ணன்களுக்கு ஒரு தங்கை தர்சினி. அவள் பிடிவாதமாக காதலித்து கல்யாணம் செய்யும் வரையும் அவர்களும் அவளை உள்ளங்கையில் வைத்துதான் தாங்கினார்கள். அதன் பிறகு கூட விட்டுப் போனவனை மறந்து அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியும் செய்யாதது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது
“என்னப்பா இது என் பேரன்கள் எல்லோருமே என் வாரிசுதானே” இயல்பாய் சொன்னாலும் மகனின் கதையும் முகத்தில் இருந்த வெறுப்பு அவரை சிந்திக்க வைத்தது.
அடுத்த நாள் காலை கோட்டையில் இயங்கும் நீதிமன்றிற்கு செல்ல முன் தன் அலுவலகத்திற்கு சென்றவர் தன் கீழ் பணிபுரியும் பாலநாதனிடம் “பாலா நான் உயிருடன் இருக்கும் போதே என் சொத்துகளை பிரித்து எழுதினால் நல்லம் என்று நினைக்கிறேன். நான் சொல்வது போல் பேப்பர்ஸ் ரெடி செய்யுங்கள்” என்றவர் தன் அத்தனை பிள்ளைகளுக்கும் சரிசமமாய் சொத்துகளை பிரித்து எழுதச் சொன்னார்.
“ஆனால் ஐயா இதுபோல் எழுதினால் உங்கள் மகன்கள் உங்கள் மீது வழக்குப் போட முடியுமே” என்றதற்கு யோசனையாய் தலையாட்டியவர் “வேறு வழியில்லை” என்றார் கவலையுடன்.
“எப்படியும் அவளுக்காய் வாதட நானும் நீரும் இருப்போம் தானே”
பதினெட்டு வயது முடிவதற்குள் காதலிக்கிறேன் என்று வந்து நின்ற மகள் மீது இல்லாத அதிருப்தி அவள் படிப்பை நிறுத்திய போது அவருக்கு வந்தது. கொழும்பில் இருக்கும் லோ கோலேஜில் சேர்வதற்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டு அவளைப் போக சொன்னால் தனியாக போக மாட்டேன் என்று ஒரே அடம்.
“சரி அம்மாவையும் துணைக்கு அனுப்புகிறேன்” என்றால் “பிள்ளையை வைத்துக் கொண்டு எப்படி படிக்கப் போவது” என்று கண்ணைக் கசக்கியே நின்றுவிட்டாள்.
அதே சிந்தனையில் எழுந்து செல்ல கால் தடுக்கியதில் இரத்தக் காயமாகிவிட்டது. பாலாதான் கட்டைப் போட்டு விட “உம்மைக் கல்யாணம் செய்ய சொன்னால் ஒரு தறுதலையை கல்யாணம் செய்து கொண்டு வீணாகிவிட்டாள். நான் அவளிடம் கதைக்கிறேன். நீர் கல்யாணம் செய்கின்றீரா?” என்று கேட்டவரைப் பார்த்தவன் “எப்படி இருந்தாலும் தர்சினியை எனக்குப் பிடிக்கும். ஆனால் தர்சினியின் விருப்பத்திற்கு விரோதமாய் என்னால் எதுவும் செய்ய முடியாது” ஆணித்தரமாய் கூறிவிட்டான்.
வாசல் வரை சென்றவர் திரும்பி வந்து “எனக்கு மனசே சரியில்லை. எனக்கு ஏதாவது நடந்தால் குறைந்தது இப்போது இருக்கும் அந்த வீடும் தச்சன் தோப்பில் இருக்கும் வயல் காணியின் வருமானமும் அவர்களுக்கு போகுமாறு ஏற்பாடு செய்து விடும்” என்று விட்டு போய்விட்டார்.
அதுதான் அவரைக் கடைசியாய் உயிருடன் பார்த்தது. கோட்டைக்கு போகும் வழியில் நடந்த கலவரத்தில் இறந்துவிட்டதாக தகவல் மட்டும் வந்தது. இறுதிச் சடங்கைக் கூட சரியாய் நடத்த வழியின்றிப் போயிருந்தது.