Share:
Notifications
Clear all

மொழி - 06

Posts: 49
Admin
Topic starter
(@admin)
Member
Joined: 2 months ago
மொழி  - 06
 
அதிர்ந்து போய் கண் விரித்துப் பார்த்துக் கொண்டு நின்றவளை ஏளனமாய் பார்த்தான் சொரூபன் “உன் குணம் மாறவேயில்லை இல்லையா? நீ நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் போவாய் இல்லையா?” வெறுப்பா வேதனையா என்று விளங்காத குரலில் கேட்டான்.
 
 
அவனிடமிருந்து திரும்பி நின்றவள் கண்களை மூடி ஆழ மூச்செடுத்து “எனக்கு மூன்று நாட்கள் டைம் வேண்டும்” என்றாள்.
 
 
“ஏன் மூன்று நாட்கள்” கேள்வியாய் பார்த்தவன் எதையோ வெளிப்படையாய் கேட்க தயங்கினான். அவன் யோசனை செல்லும் திசையை நொடியில் ஊகித்தவள் கன்னம் சிவக்க “அது கம்பனி வேலைகள், தனிப்பட்ட வேலைகள் சிலது முடிக்க இருக்கு” என்றாள் அவசரமாய்.
 
 
சிவந்த கன்னத்தைப் பார்த்து “ப்ரிட்டி” என்றவனை ஏறெடுத்து பார்க்க “படமெடுக்கும் பாம்பு போல்” சேர்த்துச் சொன்னான். “சரி இந்த மூன்று நாள் மட்டும் இரவு வந்து விட்டு பகலில் போ” என்றவனை மறுத்து ஏதோ கூற போக “நிஷாந்த மீட்டிங் முடிந்த பின்தான் போயிருக்கிறான். நினைவில் வைத்துக் கொள்” என்றான் எச்சரிக்கை தொனியில்.
 
 
“ப்ளீஸ் எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, வர மாட்டேன் என்று சொல்லவில்லையே கொஞ்சம் டைம் வேணும் இரவு வேலை முடித்து வர நேரமாகும்” கெஞ்சுவது போல் பார்த்தாள்.
 
 
கோபப் பார்வையுடன் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் ஒரே நாளில் களைத்து சோர்ந்து போயிருந்த அவள் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தானோ “எதையோ செய்து தொலை” உதறி விட்டு செல்ல தலை சுற்றி விழப் போனவளை மீண்டும் பிடித்துக் கொண்டான்.
 
 
“சாப்பிட்டயா இல்லையா?” அவளிடமே சிடுசிடுத்தான்.
 
 
மூன்று நாட்களுக்கு முன்னர் டின்னர் பார்ட்டி முடித்து அவன் வீட்டிற்கு சென்றவள் இன்று காலைதான் வெளியே வந்திருந்தாள். அன்றிரவு முழுதும் அவளில் காவியம் படைத்தவன் அடுத்த இரண்டு நாட்கள் தலை மறைவாகியிருந்தான். அவன் செய்யும் வேலைகள் அவள் காதுக்கும் வரவே தன் திட்டத்தில் மூழ்கியிருந்தவள் வழமை போல் உணவை மறந்து விட்டிருந்தாள். இன்று காலை ஃபோனில் மாமா யோகேஸ்வரன் அழைத்து அவள் அன்டியை கடத்தி விட்டதாயும் தன் சொல்படி கேட்காவிட்டால் கொன்று விடப் போவதாகவும் மிரட்டினார். அவர் பேச்சை முழுமையாய் நம்பமால் தனக்கு கீழ் இருந்தவர்களைக் கொண்டு ஆராய சொரூபன் அவர்களைக் கடத்தி விட்டதை அறிந்து கொண்டாள். 
 
 
“உமக்கு மூன்று நாட்கள் தான் நேரம் அதற்கு மேல் என்னை ஏமாற்ற முயன்றீர்...” வாக்கியத்தை முடிக்காமல் எச்சரிக்கை தொனியில் நிறுத்தினான்.
 
 
“அவர்களை எப்போது விடுவீர்கள்?”
 
 
“யாரை”
 
 
“அந்த அன்டி”
 
 
“இப்போதைக்கு இல்லை” என்றவனிடம் ஒரு பார்சலை நீட்டினாள். “இது அவர்களுக்கான மருந்து. தவறமால் கொடுக்க வேண்டும்” என்றவள் சற்று தயக்கத்துடன் கேட்டாள் “அவர்கள் ஒரு மாதிரி... ஸ்பெசல் நீட் பெர்சன்  எல்லோருடனும் சேர மாட்டார்கள். வழமையாக அவரைப் பார்க்கும் பெண்ணை அனுப்பவா?”
 
 
“ஏன் வேவு பார்க்க வேண்டுமா?” ஏளனமாய் கேட்டான்.
 
 
ஆயாசத்துடன் கண்ணை மூடியவள் “இதை கொடுத்து விடுங்கள்” மறுபடியும் மருந்துப் பார்சலை நீட்டினாள்.
 
 
“இன்னும் சற்று நேரத்தில் ஜெகதீஸ் வந்துவிடுவான் அவனிடமே கொடுத்து விடு, அவர்களுக்கு மருத்துவம் பார்க்க நான் அவர்களை கடத்தவில்லை” என்றவன் சென்றுவிட்டான்.
 
 
அவனுக்கு தலைக்கு மேல் வேலையிருந்தது. புதிதாய் வந்திருக்கும் பொறுப்புகள் ஏற்கனவே செய்ய எண்ணியிருக்கும் காரியங்கள், லண்டனில் உள்ள அவன் கம்பனியின் பொறுப்புகள் என நிற்க நேரமில்லை அவனிடம்.
 
 
***
 
 
ஷவரில் இருந்து விழும் தண்ணீரின் அடியில் நின்றான் சொரூபன். நேரம் இரவு பன்னிரெண்டை தாண்டியும் உறக்கம் வருவேனா என்று மல்லுக்கு நின்றது. அதிகாலை நான்கு மணிக்கு ஒன்லைன் வழியே  இண்டர்நேஷனல் மீட்டிங் அட்டென்ட் செய்ய வேண்டும். கடந்த மூன்று நாளாய் காலையில் எழும் போதே அமிர்தம் உண்ட ஒரு உற்சாகம். மூன்று நாளாய் கிடைத்த அவள் வாசம் வேண்டுமென்று மனம் அடம்பிடிக்க, அதற்கு வழி விட விருப்பமின்றி டிரெட் மில்லில் ஓடிக் களைத்து வியர்வையுடன் படுக்க முடியாது குளித்துக் கொண்டிருந்தான்.
 
 
உடை மாற்றி வந்தவனுக்கு தாகம் எடுக்கவே தண்ணீர் போத்தலை எடுத்தால் அதில் நீரில்லை, அறையை விட்டு வெளியே வந்தான்.
 
 
“நிஷாந்த அய்யா” என்ற குரலில் திடுக்கிட்டுப் போய் நின்றான்.
 
 
இது அவளின் குரல், இங்கே எப்படி அதுவும் இந்த நேரத்தில். கீழே பார்த்தால் நிஷாந்த முழங்கால் வரை ஒரு ஷோர்ட்சும் மேலே டிஷேர்டுடனும் நின்றான்.
“ஜானகி” என்றவள் குரல் சோர்ந்து போய் ஒலித்தது.
 
 
“அந்த அறையில் உறங்குகிறாள்” என்று அறையைக் காட்டினான் அவன். உள்ளே செல்ல ஸ்லீபிங் டேப்லேட்டின் உதவியுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் பின்னேயே உள்ளே வந்த நிஷாந்த “உங்களைக் கேட்டு ஒரே கரைச்சல், அதுதான் பாலுடன் ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்தேன்” விளக்கமளித்தான்.
 
 
அவளையே யோசனையுடன் பார்த்தவளைப் நோக்கிக் கேட்டான் “என்ன?”.
 
 
ஜானகி உறங்கிய கட்டிலில் சட்டென அமர்ந்து தலையை தாங்கியவள் “இத்தனை நாள் என்னுடன் தான் இருந்தாள் இப்போது இவளை எங்கே விட ஒன்றும் புரியவில்லை. அதான்” உள்ளங்கையில் முகத்தை அழுத்தித் தேய்த்தாள்.
 
 
“இத்தனை நாள் நீர் இருந்த வீட்டில் விடும்” என்ற குரலில் திடுக்கிட்டு வாசலைப் பார்த்தவள் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.
 
 
“சொரூபன்”
 
 
“ஏன்? வேறு யாரையாவது எதிர் பார்த்தீரா?”
 
 
“நீங்கள் எங்கே இங்கே?” ஆச்சரியத்துடன் கேட்டவளுக்கு பதிலாய் “என் வீட்டில் நான் இல்லாமல் வேறு எங்கே இருப்பேன்” கேலியாய் திருப்பிக் கேட்டான் சொரூபன்.
 
 
“உங்கள் வீடா? நிஷாந்த அ...” என்றவள் குரல் தேய்ந்தது. இருவரும் ஒரு வீட்டில் இருப்பார்கள் என்று அவள் என்ன கனவா கண்டாள்.
 
 
“ஒஹ்” என்றவள் அவனை தாண்டி அறையை விட்டு வெளியே வரும் போதுதான் கவனித்தான் அவள் களைத்து சோர்ந்து போயிருந்த முகத்தை. புஜத்தை பிடித்து நிறுத்தியவன் “சாப்பிட்டியா இல்லையா?” எரிந்து விழுந்தான்.
 
 
“என்ன சாப்பாடு?” விழித்தவள் “ச்சு பசியில்லை” என்று போக முயல அழுத்தமாய் பிடித்து நிறுத்தினான். “முதலில் அங்கே” ஜானகியின் அறையில் இருந்த வாஸ் ரூமை காட்டி “சென்று பிரஷ் ஆகி வா” என்றவனை மறுத்து ஏதோ சொல்ல முயல “இது என் உத்தரவு, ரிமெம்பர், நான் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும்” என்றவனை ‘இது என்ன அழிச்சட்டியம்’ என்பது போல் பார்த்து வைத்தாள் யதீந்திரா.
 
 
‘போ’ கண்களால் உத்தரவிட்டான். உள்ளூர புகைந்த போதும் “மாற்றுடை கூட இல்லாமல் எப்படி?” தப்பிப் போக வழி பார்த்தாள்.
 
 
“சரி என்னுடன் வா” மாடியை நோக்கி நடக்க ‘அச்சோ அவன் சொல்லும் போது இங்கேயே ரெப்ரெஷ் ஆகியிருக்கலாமே’ மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டே பின் தொடர்ந்தாள்.
 
 
வாஷ்ரூமை காட்டி உள்ளே போகும்படி சைகை செய்தான்.
 
 
“உடைகள்” என்று விழித்தவளுக்கு “வாஷிங்மெசினில் இருக்கு ஐந்து நிமிடத்தில் காய்ந்து விடும்” பதிலளித்தவன் பாத்ரோப்பை எடுத்துக் கொடுத்தான். தலை முழுகி அதையே அணிந்தவள் தலையை மட்டும் வெளியே நீட்டினாள். கட்டிலில் அவள் ஆடைகள் இருந்தது. அவனைக் காணோம். மெல்ல அடிமேல் அடி வைத்து வந்து ஆடையில் கை வைத்தவள் இடையை வலுவான கரம் சுற்றி வளைக்க திகைத்துப் போனவள் மூச்சு தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டது.
 
 
ஓரு அசைவில் தன்னை நோக்கித் திருப்பினான்.
 
 
அவள் ஆடைகளை எடுத்து வந்து கட்டிலில் வைத்தவன் மனதின் அலை பாய்தலை, அவளை தேடும் உடலை கட்டுப்படுத்த முடியால் பல்கனிக்கு சென்று குளிர் காற்றில் நின்றான். கதவு சத்தம் கேட்டுத் திரும்பியவன் கண்களில் விழுந்தத அவளின் பூனை நடை அவன் இதழ்களில் சிறுநகையை பூக்க செய்திருந்தது. தலையிலிருந்து நீர் சொட்ட முகத்திலும் கழுத்திலும் மின்னிக் கொண்டிருந்த நீர் துளியை பார்த்தவன் மனம் அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்து விட்டிருந்தது. நொடியில் அருகே சென்றவன் கைகளில் அவளை வளைத்திருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன்னர் தன் முப்பத்திரண்டு வருட பிரம்மச்சர்யத்தை அவளிடம் இழந்திருந்தான். அவளைத் தொட்ட நாளிலிருந்து மோகம் மொட்டவிழ்ந்து முள்ளாய் குத்த தொடங்கிவிட்டது. குனிந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க, இத்தனை நேரமாய் நித்திரையின்றி தேடிய அவள் வாசம். ஆழ்ந்து நுகர அவளுடல் நடுங்கியது.
 
 
சற்று விலகிப் பார்க்க “ஞானா” உதடுகள் மெதுவாய் அதிர அவளிதழ்களை கொள்ளையிட்டான். இன்னும் பிஜமா மட்டும் அணிந்து நின்றவன் வெற்று மார்பில் அவள் விரல் நுனிகள் பட்டும் படாமலும் வருடி விலக அவன் உணர்ச்சிகள் எங்கெங்கோ சுழன்று வந்தது. அவன் கைகள் அத்து மீற தொடங்க “வேணாம்” என்றவள் மறுப்பு அவளுக்கே கேட்கவில்லை.
 
 
கட்டிலில் கிடந்த அவன் ஃபோன் அதிர கவனிக்கமால் தன் காரியத்தில் மூழ்கியிருந்தவனை அவள் நடுங்கும் குரல் தடுத்து நிறுத்தியது “போ ஃபோன்”.
ஒரு கணம் கண் மூட மீண்டும் ஃபோன் அடிக்கவே “உடுப்பு மாத்திட்டு அதுல பால் இருக்கு குடி” அவளை தள்ளி விட்டு ஃபோனுடன் பல்கனிக்கு போய்விட்டான்.
 
 
அவன் தள்ளியதில் கட்டிலில் விழுந்தவள் வெளியே வந்து விடும் போல் துடித்த நெஞ்சை அழுத்திப் பிடித்தாள். “ஜஸ்டு மிஸ்டு” தனக்கு தானே தட்டிக் கொடுத்தவளுக்கு ‘ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தொடங்கி விடும்’ என்ற பாடல் வரிகளின் அர்த்தம் முழுதாய் புரிய தொடங்கியிருந்தது.
 
 
அவன் சொன்னது போலவே உடை மாற்றி வந்து நல்ல பிள்ளையாய் பாலைக் குடித்து விட்டு சோபாவில் அமர்ந்தாள்.
 
 
 
 
பின் காலையில் ‘நேரம் வேண்டும்’ என்று கேட்டவளை சொரூபன் விட்டுச் செல்லவும் அவள் ஃபோன் அதிர்ந்தது. மாமா யோகேஸ்வரன்தான்.
“அங்கேதான் வருகிறேன், அங்கே வைத்தே பேசுவோம்” 
 
சொரூபன் குடியிருக்கும் அதே ஏரியாவில்தான் அவர்கள் வீடும் இருந்தது. இரண்டு மாடிகளுடன் குட்டி அரண்மனை போலிருந்த அந்த வீடு அவர்கள் இருவருக்கு அதிகமே. சோபாவில் இருந்தவர் முன்னால் அமர்ந்திருந்தாள் யதீந்திரா.
 
 
“சொல்லுங்கள் மாமா”
 
 
“என்னம்மா நான் ஏதேதோ எல்லாம் கேள்விப்படுறேன். லண்டனில் நிற்கும் என்னை அவசரமாய் வர சொன்னாய். என் பிஏ மூலமாய் செய்தி அனுப்பி உன் பாதுகாப்பில் இருக்கும் அந்த வயதான பெண்மணியை கடத்த சொன்னாய். அதை வைத்து என்னையே உன்னை மிரட்ட சொன்னாய். என்னதான் உன் எண்ணம்”
 
 
முகம் இறுக “பழி... பழி வாங்குவது மட்டும்தான் என் எண்ணம்” என்றவள் இருக்க முடியாது எழுந்து நின்றாள். “என் அம்மா அப்பா இருவரையும் என் கண் முன்னே...” மேற் கொண்டு சொல்ல முடியாமல் குரல் தளும்பியது. “அதற்கு காரணமான ஒருவரையும் விடமாட்டேன்” கைகளை முஷ்டியாக்கி அவரை நோக்கித் திரும்பியவள் முகம் காளி தேவியின் மறு அவதாரமாய் இருந்தது.
 
 
அருகே வந்து தலையை தடவிவிட்டவர் “ஷ்.... கொஞ்சம் அமைதியாகு. உன் அமைதிக்காக தானே இத்தனை நாளும் நீ சொன்னபடியெல்லாம் கேட்கிறேன். அஹ் ஷ்... சரி நீ சொன்னது போலவே செய்வோம்” அவள் தலையை அணைத்து ஆறுதல் கொடுத்தார்.
 
 
“எல்லாம் சரியம்மா... அவன்” மருமகளிடம் எப்படி கேட்க என்று முடியாமல் திணறினார்.
 
 
“நீ அவனுடன்..” அவர் கேட்க வருவது புரிய அவரிடமிருந்து விலகி திரும்பி நின்றவள் “நீங்கள் கேட்பது புரியுது” வீட்டை கண்களால் சுற்றிக் காட்டினாள் “இந்த சொத்துகளை ஆள உங்களுக்கும் வாரிசு இல்லை. எனக்கு திருமணத்தில் நாட்டமில்லை”.
 
 
“அதற்கு அவன் வாரிசா? அதுவும் முறையின்றி” தயங்கினார் யோகேஸ்வரன்.
“அவனின் வாரிசு இந்த சொத்துகளுக்கு மட்டுமில்லை, அவனின் சொத்துகளுக்கும் வாரிசு” அவள் கண்களில் அத்தனை அலட்சியம்.
 
 
ஒரு கணம் கண்ணில் மின்னல் மின்னி மறைய “எனக்கும் சொத்துகள் வேண்டும்தான். ஆனாலும்... படித்த பெண்... யோசித்து செய்” என்றதுடன் சென்றுவிட்டார்.
 
 
அத்தனை நேரமிருந்த சக்தியும் வடிந்துவிட தொப்பென சோபாவில் அமர்ந்து கரங்களில் முகம் புதைத்தாள் யதீந்திரா.
 
 
“யதீம்மா” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள் டிரைவர் சண்முகம் அங்கிள். நடந்த பேச்சு வார்த்தை அனைத்தையும் கேட்டுவிட்டார் என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.
 
 
தலையை வருடிவிட்டவர்  “ஒன்றுக்கு இரண்டுதரம் யோசிம்மா, ஜானகியை பார்த்தாயா?” மறுத்து தலையாட்டியவள் “இல்ல அங்கிள் இன்னும் வேலை இருக்கு. அங்கே போனால் விட மாட்டாள். அப்பாவின் கம்பனிக்கு போகணும். இப்போதைக்கு நான்தான் அதன் உரிமையாளர் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. சொரூபன் அன்டியை இப்போதைக்கு விட மாட்டார் போலிருக்கு. நான் அவர் வீட்டிற்கு போக வேண்டும். ஜானகியை யாரிடம்...” என்றவாறே தலை குனிந்தாள்.
 
 
“தலை நிமிர்ந்து சொல்ல முடியாத ஒன்றை செய்ய வேண்டாமேம்மா” அவர் குரல் அவளிடம் கெஞ்சியது. அவருக்கும் தெரியுமே அவள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் போவாள்.
 
 
“வேறு வழி இருக்கா அங்கிள்?” தவிப்புடன் கேட்டாள்.
 
 
தெரிந்திருந்தால் தான் எப்போதே செய்திருப்பாரே அமைதியாய் நின்றார்.
 
 
***
 
 
திடிரென்று காற்றில் எழும்பியதில் கத்தப் போனவள் சத்தம் அவன் தொண்டைக் குழிக்குள் அடங்கியது. மெத்தையில் கிடத்தி அவன் இதழ்களும் கைகளும் அவள் மேனியில் எல்லை மீறிய தீவிரவாதத்தில் ஈடுபட அதை தடுக்க முயன்றாள்.
 
 
ஆசைக்கு குறுக்கே வந்ததில் சினந்த ஆண் மனம் அதட்டியது “சும்மாயிரு”.
 
 
அதற்கு மேல் தடுக்கவுமில்லை ஈடுபாடு காட்டவுமில்லை. அவளிடம் ஈடுபாடின்மையை உணர்ந்தவன் “பச்” என்று விலகிப் படுத்தான். எந்த உணர்வும் இல்லாத மரக் கட்டையுடன் உறவு கொள்ள அவன் ஒன்றும் காம பித்தனில்லை.
 
 
அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தவளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடந்த கூடலை நினைத்து கண்ணீர் பொங்கியது. 
 
 
விலகிப் படுத்தவனுக்கும் நித்திரை வருவேனா என்று அடம் பிடிக்க அங்கும் இங்குமாய் உருண்டு கொண்டிருந்தான். சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள் தன் பக்கம் திரும்பியவன் புஜத்தில் தலை வைத்து நெருங்கிப் படுத்தாள்.
 
 
சிறு திடுக்கிடலுடன் ஒரு கணம் அசைவின்றி போனவன் மனதிலும் உடலிலும் இறுக்கம் தளர்வதை ஆச்சரியத்துடன் உணர்ந்தான். அவன் கைகளுக்குள் குழந்தையாய் முட்டி மோதி நெருங்கிப் படுக்க மெதுவாய் கண் மூடினான் சொரூபன்.
 
 
அவன் உடல் தளர கண் திறந்து பார்த்தவள் கன்னத்தில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.
 
 
Reply
Share:

error: “These tales are woven with care. Please don’t copy—let the words live here.”