மொழி - 05
மௌனமாக நிற்க மீண்டும் அதட்டினான் “ஜானகி யார் என்று கேட்டேன்?”.
அவன் அதட்டலில் வெளிப்படையாக உடல் நடுங்குவதை ஆச்சரியத்துடன் கவனித்தான் சொரூபன். அவனுக்கு தெரிந்து யதீந்திரா மிகவும் தைரியசாலி. ‘சிறு அதட்டலுக்கு ஏன் பயபடுகிறாள்’ யோசனையாய் நோக்கினான்.
“அஅந்த அன்டியின் மகள்”
“நான் கடத்திய வயதான பெண்மனியா?” புருவத்தை உயர்த்த ஆமோதிப்பாய் தலையாட்டினாள்.
“ஒஹ்”
“அவர்கள் இருவருக்கும் தெரியாது. இப்போதைக்கு சொல்ல வேண்டாம்”
“ஏன்? அதெப்படி தெரியமால் போகும்?”
“அவளுக்கு சிறு வயதாய் இருக்கும் போதே அவர்கள் மனநிலை சரியில்லை”
ஒரு கணம் கண் மூடி அவள் சொன்னதை கேட்டுக் கொண்டவன் “சரி வா” அழைத்தான்.
‘எங்கே?’ என்பது போல் விழித்தவள் காதருகே இருந்த கேசத்தை ஒற்றை விரலால் ஒதுக்கியவன் “நீர் என் சொல்லை கேட்டு நடக்கும் வரை, அந்தப் பெண்மணிக்கும் ஆபத்தில்லை, ஜானகிக்கும் ஆபத்தில்லை” ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தான்.
தலையை மட்டும் மேல் கீழாய் ஆட்டி வைத்தாள் யதீந்த்ரா.
ஒரு கையை கதவில் வைத்தவன் மறு கையை சற்று தள்ளிப் பிடிக்க ‘பொது இடத்தில் வேண்டாமே’ கெஞ்சுவது போல் பார்த்தாள். அவன் முகம் இறுக அழுத்தமாய் பார்த்து வைத்தான். மறு பேச்சின்றி அவன் புஜத்தை சுற்றி கைகளைக் போட்டுக் கொண்டாள்.
மீண்டும் ஷேர் ஹோல்டர் மீட்டிங் ஹாலுக்குள் இருவரும் வந்த போது மீண்டும் ஒரு மெல்லிய சலசலப்பு எழுந்து அடங்க யோகேஸ்வரன் முஷ்டி இறுக அமர்ந்திருந்தார். குனிந்த தலை நிமிராமல் அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் மேலேயே அனைவர் கண்களும் படிந்திருந்தது.
“க்கும்” என்ற ஒரு தொண்டை செருமலில் தன்னை நோக்கித் திருப்பியவன் “சோ வோட்டிங் ஆரம்பிப்போமா?” என்ற கேள்வி முடியவும் கான்பரென்ஸ் கால் வரவும் சரியாய் இருந்தது.
அந்த அழைப்பு யாரிடம் இருந்து என்பதும் யாருடன் கதைக்க என்பதும் யதீந்திரா சொரூபன் இருவருக்குமே தெரிந்திருந்தது.
“எடுப்பது டேனியல், என்னுடன் பேசத்தான் எடுக்கிறார்” கெத்தாய் கூறினார் யோகேஸ்வரன்.
“அப்ப நீங்களே கதையுங்களேன்” கிண்டாலாய் மைக்கை அவரை நோக்கி நகர்த்தினான் சொரூபன்.
ஒரு கர்வப் பார்வையுடன் “ஹலோ” என்றார்.
“ஹலோ” என்று சொரூபனின் பின்னிருந்த திரையில் வந்தார் டேனியல். “யாரந்த அப்பாடக்கர்” கேலியாய் கேட்டவாறே திரும்பிய சொரூபனின் முகம் டேனியலின் கமராவில் விழுந்தது.
“ஹாய் ஜிஎம்எஸ், நீங்கள் எங்கே இங்கே? இந்தக் கம்பனி உங்களுடையதா?” ஆச்சரியத்துடன் கேட்டவன் அவனிடமே உரையாடலை தொடர்ந்தான் “உண்மையில் ரிசன்ட் ஷேர் மார்க்கெட் ப்ரோப்லத்தால் இந்த கம்பனியுடனான அக்ரீமென்ட் கன்சல் செய்ய சொல்லி போர்டு முடிவு எடுத்து இருக்கு. அதை சொல்லதான் எடுத்தேன். பட் இது உங்கள் கம்பெனி என்றால் நான் போர்டிடம் பேசுகிறேன்” ஆர்வமும் உற்சாகமுமாய் கூற திரும்பிக் கூட பார்க்காமல் மைக்காக கையை நீட்டினான் சொரூபன்.
முகம் சிறுத்து விட மைக்கை அவனை நோக்கி நகர்த்தினார் யோகேஸ்வரன்.
“ஷுயர், ஷேர்மன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சற்று நேரத்தில் ஷேர் ஹோல்டர் மீட்டிங் முடிய உங்கள் பர்சனல் போனுக்கு எடுக்கிறேன்” என்றான் புன்னகையுடன்.
யோகேஸ்வரன் பேச்சிழந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த டானியல் அசிஸ்டண்டை பார்க்கவே பத்து நாள் எடுத்தது. எத்தனை இலகுவாய் பர்சனல் போனுக்கு எடுக்கிறேன் என்கிறான். இப்போது யதீந்திரா தனக்கு வாக்களித்தால் கூட ஜெயிக்க முடியாது. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் யோகேஸ்வரன்.
அவன் தெரிந்துதானே அனைத்தையும் செய்தான். அவன் எதிர் பார்த்தது போலவே முப்பது பேரில் இருபத்தி ஐந்து பேர் அவனுக்கு வாக்களித்து இருந்தனர்.
அதில் ஒரு வாக்கு சீட்டை மட்டும் எடுத்துக் கொண்டு வந்த மனேஜர் ராகவன் நம்ப முடியாத பிரமிப்புடன் யதீந்திராவைப் பார்த்தார். பங்குதாரர் வாக்களிக்கும் விதியின் படி வாக்கு சீட்டில் ஏதாவது கமெண்ட் இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர் எடுத்து வந்தது யதீந்திராவின் வாக்கு சீட்டு.
அனைவருக்குமாய் வாசித்தார் “இந்தக் கம்பனியை என் மாமா யோகேஸ்வரனை விட சொரூபன் திறம்பட நடத்துவார் என்பதில் எனக்கு மலையளவு நம்பிக்கை இருப்பதால் சொரூபனுக்கு வாக்களிக்கின்றேன் - யதீந்திரா”.
சில கணங்கள் ஊசி விழுந்தால் கேட்கும் நிசப்தம் நிலவ, குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் யதீந்திரா. ஒரு கபடப் புன்னகையுடன் யோகேஸ்வரனை பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன்.
அந்த சீட்டை யதீந்திராவின் கையில் கொடுத்ததே அவன்தானே.
அதற்கு மேல் அவன் கேலிப் பார்வையை தாங்க முடியாது ஆக்ரோசமாய் கதிரையை தள்ளிக் கொண்டு எழுந்தவர் யதீந்திராவை முடிந்த வரை முறைத்து விட்டு வெளியேறிவிட்டார்.
குனிந்திருந்த யதீந்திராவின் கன்னத்தில் கோடாய் ஒரு துளி நீர் இறங்கியது.
சட்டென முகம் இறுக எழுந்தவன் “யதி...” நிறுத்தி “ஐ மீன் மிஸ் யதீந்திரா, இந்தக் கம்பனி தொடர்பாய் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என் அறைக்கு வாருங்கள்” வேகமாய் சென்று விட்டான்.
ஒவ்வொருவராய் வெளியே சென்று விட அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்த அவள் தோளில் கை வைத்தான் “டிக்கக் இவசிமட்ட இன்ன நங்கி. எயா மொடய வகே வெட கரன்னவா. மம எயட்ட கத்தாகரனவா” (கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தங்கச்சி. அவன் முட்டாள் மாதிரி சில வேலைகள் செய்கிறான். அவனிடம் நான் கதைக்கிறேன்).
நிமிராமல் தலையை மட்டும் ஆட்டியவள் “ஜானகி” என்றாள். தொண்டை கட்டிப் போயிருக்க சத்தம் வெளியே வரமாட்டேன் என்றது.
“அவளிடம் தான் போகிறேன். ஈவ்னிங் கூட்டிட்டு வாரேன்” என்று விட்டு வெளியே சென்றுவிட்டான். அவனாலும் அவமானத்தில் குனிந்திருந்த அவள் முகம் பார்க்க முடியவில்லை.
**
ஜெகதீசிடம் “கார் கன்னகோ” (காரை எடுங்கள்) என்ற நிஷாந்த முன் சீட்டில் அமர்ந்தான். டையை தளர்த்தி சேர்ட் கழுத்து பட்டனை கழட்டி விட்டான். அவன் உடல்மொழியிலேயே அமைதியின்மை தென்பட்டது. அவர்கள்தான் அவளைக் கடத்தினார்கள். அவளுக்கு எந்த ஆபத்துமில்லை. இருந்தாலும் மனம் ஏனோ அமைதியின்றி அலைந்து கொண்டிருந்தது. மீட்டிங் முடிவதற்குள் செத்துப் பிழைத்துவிட்டான்.
இந்த மூன்று மாதங்களில் நிஷாந்தவிற்கு தன்னை விட அதிகமாய் ஜானகியை பிடித்து விட்டது. பிங்கி பிங்கி என்று அவன் பின்னால் சுற்றும் விதமோ இல்லை அவள் குழந்தைதனமோ அவனை அவளிடம் ஈர்த்துவிட்டது.
சொரூபன் பொய்யாய் நடிக்க சொன்னால் நிஜமாகவே அவளை லவ் பண்ணத் தொடங்கிவிட்டான்.
அன்று அவன் சுழல் நாற்காலியில் இருக்க மேசையில் ஏறி அமர்ந்து அவன் நாற்காலியில் ஒரு கால் வைத்துக் கேட்டான் “மச்சா எயட்ட ஆதரேதா?” (அவளை காதலிக்கிறாயா மச்சான்) கேட்க “ஓயட்ட பிஷ்சு தமாய்” (உனக்கு பைத்தியம்) பதிலளித்த நிஷாந்த முகம் சிவந்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த ஜானகி “என்ன பிங்கி ரெட் டோமோட்டோ ஆகிட்டு” என்று சொரூபனை பிடித்துக் கொண்டாள்.
“அதெல்லாம் இருக்கட்டும் யதி எங்கே?”
“கொடைக்கானல் போயிருகின்றார்கள். அதை விடுங்கள் அவள் நின்றால் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டே இருப்பாள்” மூக்கைச் சுருக்க நண்பர்கள் இருவரும் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கொண்டார்கள்.
“அண்ணா எனக்கு கேட்டு சொல்வதாக சொன்னீர்கள்”
அவள் குரலில் லேசாய் திடுக்கிட்டுவிட்டான் சொரூபன். அவள் அண்ணா என்று அழைத்தது இதயத்தில் ஏதோதோ நினைவுகளை தூண்டிவிட்டிருந்தது.
‘நான் என்ன செய்ய அவர்கள் குறுக்கே வந்து விட்டார்கள்’
‘என் மருமகள் மீது பிழையில்லை’
தலையை உலுக்கி ஒலித்த குரல்களை கட்டுப்படுத்தியவன் தன் உணர்வுகளை மறைத்து “அவனே முன்னால் இருக்கிறான். அவனிடமே கேட்டுக் கொள்ளம்மா. ஆளை விடு” சிரித்தவாறே விலகி சென்றவன் கதவருகே நின்று இருவரையும் சில கணங்கள் பார்த்து விட்டு சென்றுவிட்டான்.
அதன் பிறகு நிஷாந்தாவை அவளை காதலிக்க சொல்லி வற்புறுத்தவில்லை. நிஷாந்தவும் வேறு விதத்தில் அவளை அணுக முயலவில்லை.
ஆனால் ஜானகிக்கும் நிஷாந்தவிற்கும் இடையில் யதீந்திரா நின்றாள். எப்போதெல்லாம் நிஷாந்தவின் பக்கம் சாய்கிறாளோ அப்போதெல்லாம் அவளை வேறு வழிக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். இன்று ஜானகியின் நல்ல காலமோ இல்லை கெட்ட காலமோ யதீந்திரா கொடைக்கானல் சென்றிருந்தாள்.
“ம் சொல்லுங்கள்” அவனருகே நெருங்கி நிற்க வந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டிருந்தான். வயதுதான் இருபத்தியொன்று ஆகுதே தவிர அவளிடம் இன்னும் குழந்தைதனம் மாறவில்லை.
“பிங்கி உனக்கு எப்படி ஸ்கின் இவ்வளவு பிங்க் கலர்ல இருக்கு. என்னோடது பார்” அவள் தேன் நிற கன்னத்தை ஒரு பக்கம் உப்பிக் காட்டினாள்.
சொக்லெட் போலிருந்த கன்னத்தை கடித்து வைக்கும் எண்ணத்தை கட்டி வைத்தவன் அவளிடம் தனியாய் மாட்டி விட்ட தன் நண்பனை மனதார சபித்தான்.
“உனக்கென்ன நல்ல சொக்லெட் மாதிரி அழகா தான் இருக்கு” என்றவன் அவளிடமிருந்து ஓரடி விலகினான். “இப்போது யார் உன்னை அழகில்லை என்று சொன்னது. ஓய ஹரிமா லாஸ்ஸனாய்” பண்ட் போக்கொடினுள் கைகளை விட்டான்.
“நீ ஏன் மேன் தள்ளி தள்ளிப் போற?” அருகே வந்தவள் ஆர்வமாய் நோக்கிக் கேட்டாள் “அப்படின்னா”
“நீ மிகவும் அழகு என்று அர்த்தம். இப்போது பிங்க் கலரில் இருந்து என்ன சாதிக்க போகிறாய்?” மீண்டும் விலகி மேசையில் சாய்ந்து நின்றான்.
“நீ கோபப்படும் போது வெக்கப்படும் போது எப்படி சிவக்கிற, என்னை பார் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல” உதட்டைப் பிதுக்கினாள்.
“இப்ப யாரிடம் கோபப்பட வேண்டும்?” சிறு முறுவலுடன் கேட்டான்.
“அந்த ராகவன் உன் முகம் சிவப்பதைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறான்” என்றவளை இடைமறித்து “ஏன் உன்னிடம் தவறாக நடந்து கொண்டானா?” உடல் எஃகாய் இறுக கடினக் குரலில் கேட்டான்.
“என்னிடம் இல்லைதான் ஆனால் அவன் பெண்களை பார்க்கும் பார்வையே சரியில்ல” கழுத்தை வெட்டினாள்.
“சரி, யாரிடம் வெட்கப்பட வேண்டும்” அவளுடன் வார்த்தையாடுவது பிடித்து தொலைத்தது. அவனுக்கு தெரியும் இருவருக்கும் இடையில் ஒன்பது வருட வித்தியாசம். அவள் குழந்தைத்தனம் எதுவும் அவனுக்கு செட் ஆகாது ஆனாலும் மனம் முரண்டியது.
“அது….” சற்று நேரமெடுத்து யோசிக்க இங்கே இவனுக்கு இதயம் முரசு கொட்டியது.
“இதுவரை அப்படி யாரும் இல்ல” நெஞ்சில் பாலை வார்த்தாள்.
அவள் ஒவ்வொரு அசைவிலும் மனம் அவள் காலடியில் விழ மேசையிலிருந்து எழுந்து அருகே வந்தவன் ஒரு விரலால் கன்னத்தை வருடி “இந்த நிறமே உனக்கு அழகாய் தான் இருக்கு. இப்ப போய் வேலையை பார்” என்றான்.
அவளோ அவன் ஒற்றை விரலின் தொடுகையில் தன்னை மறந்து நிற்க அவள் கண் முன்னே சுண்டி கதவை நோக்கிக் கண்ணைக் காட்டினான்.
அவள் செல்வதையே பார்த்தவன் கண்கள் ஏதோ யோசனையில் சுருங்கியது. அடுத்த நாள் யதீந்திரா அலுவலகம் வந்த போது அவள் முன் போய் நின்றான் நிஷாந்த.
“ஜானகிக்கு என்ன பிரச்சனை?” என்ற கேள்வியுடன்.
“ஹலோ” என்ற குரல் அவன் சிந்தனையை கலைக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அது அவள் குரல் இங்கே எப்படி!
ஜெகதீஸ்தான் இவன் அமைதியின்மையை பார்த்து விட்டு அழைத்திருந்தான்.
“ஹலோ எப்படி இருக்கிறாய் தேன்?”
“என் கலரை சொல்லாதடா” அவனிடம் விளையாட்டாய் மொழிய எரிச்சலுடன் “ஜானகி” என்றான் நிஷாந்த.
“பிங்கிஈ... நீயா” ஜெகதீஸ் கையிலிருந்த ஃபோன் தவறி கீழே விழ நிஷாந்தவை திறந்த வாய் மூடாமல் பார்த்தான். ஃபோனை பிடித்துக் கொண்டவன் “கியன்ன.. ஐ மீன் சொல்லு” என்றான் புருவ முடிச்சுடன்.
“எனக்கு இங்கே இருக்க பிடிக்கல” என்றவள் குரல் அழுகையில் அடைத்தது.
“ஷ்… அங்கேதான் வாரேன். கொஞ்ச நேரம் பொறு” என்றவன் ஜெகதீஸை பார்க்க கார் வேகமெடுத்தது.
“பாஸ்”
“ஹம்ம்”
“பிங்கி… யாரு”
பதிலின்றி ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் நிஷாந்த.
அவளைக் கடத்தியவர்களுக்கு தெளிவாக கட்டளையிட்டு இருந்தான். அந்த வீட்டினுள் அவளை சுதந்திரமாக இருக்க விடுங்கள். வெளியே மட்டும் வர விடாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்று. அவர்களும் ஓரிடத்தில் இருக்க மாட்டேன் என்றவளை ஒருவாறு அதட்டி உருட்டி வைத்திருந்தார்கள். மீட்டிங் நடக்கும் போதே கமராவில் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
‘நன்றாகதான் இருந்தாள். இப்போது என்ன!’ யோசனை ஓடியது.
கார் ஒரு வீட்டின் முன் நிற்க வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவனை புயல் போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஜானகி.
ஜானகியின் கைகள் அவன் கழுத்தை வளைத்து பிடித்திருக்க கால்கள் நிலத்திலிருந்து ஓரடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு கணம் திகைத்து போய் நின்றவன் அவலுடல் நடுங்குவதை உணர்ந்து “ஷ்… உனக்கு ஒன்றுமில்லடா. நான்தான் உன்னுடன் இருக்கிறேன் இல்லையா?” தட்டிக் கொடுக்க அவளோ அவனை விட்டு விலக மறுத்தாள். அவள் தோளுக்கு மேலால் அவளை கடத்தியவர்களை முறைக்க தாங்கள் எதுவும் செய்யவில்லை என்பது போல் தலையாட்டினார்கள்.
அவள் தன்னிடமிருந்து விலக போவதில்லை என்று அவள் இறுகிய அணைப்பு புரிய வைக்க அப்படியே கைகளில் தூக்கிக் கொண்டான்.
அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் சொரூபன். அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளி அவனை என்னவோ செய்தது. அது என்னவென்றும் தெரியவில்லை, ஆராயவும் பிடிக்கவில்லை.
மேலும் சிறிது நேரம் பார்த்தவன் அவள் வரவில்லை என்றதும் கோபத்துடன் தன் ஃபோனைத் தேடியவனுக்கு அதை மீட்டிங் ஹாலில் விட்டு வந்த ஞாபகம் வந்தது. மீட்டிங் ஹாலை நோக்கிச் சென்றவன் கண்களில் தட்டுப்பட்டனர், பல்கனியில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இருவரும்.
பூனை போல் நடந்து ஜன்னல் அருகே சென்றவன் அவர்கள் கதைப்பதை ஒட்டுக் கேட்டான்.
“இதுவும் உன் திட்டத்தில் இருக்காம்மா?” அவளின் டிரைவர் தாத்தாதான் கேட்டார்.
பரிதபமாய் அவரைப் பார்த்தாள் யதீந்திரா.
“சொல்லும்மா இது எல்லாம் உன் திட்டத்தில் இருக்கா?” கண்ணில் மீண்டும் நீர் வழிய ‘இல்லை’ என்று தலையாட்டினாள்.
“சற்று யோசிம்மா... உன் மானம் மரியாதை அனைத்தையும் அடகு வைத்து இதை செய்யத்தான் வேண்டுமா? அந்த அளவு பெறுமதியா? அம்மா அப்பா இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பாயா? ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து கொள்” படபடவென்று பொரிந்து விட்டு சென்று விட்டார். ஓரமாய் நின்றிருந்த சொரூபனைக் கவனிக்கவேயில்லை.
இறுக்கி மூடிய முஷ்டியுடன் எஃகாய் இறுகிய உடலுடன் நின்றவன் மனதில் சற்று முன் டிரைவர் தாத்தா சொல்லிச் சென்ற வார்த்தைகள் ஒலித்தது.
‘உன் திட்டத்தில் இருக்கா?’
‘உன் திட்டம்’
‘அப்படியானால் அனைத்தையும் திட்டம் போட்டு செய்கிறாளா?’ கண்கள் சிவக்க ‘அது இந்த ஜிஎம்எஸ்ஸிடம் முடியாது. மீண்டும் உன்னை நம்பி ஏமாற பதினைந்து வயது பாலகன் ஞானா இல்லை, இவன் ஜிஎம்எஸ்’ மனதினுள் நினைத்துக் கொண்டவன் பல்கனிக்குள் அடி எடுத்து வைத்தான்.
டிரைவிங் சீட்டிலிருந்த ஜெகதீஸ் அடிக்கடி பின்னே திரும்பிப் பார்த்தவாறே காரை செலுத்திக் கொண்டிருந்தான். கண் முன் நடப்பதை நம்பவும் முடியவில்லை, கேள்வி கேட்கவும் முடியவில்லை.
“கொஞ்சம் தண்ணீர் குடிம்மா” ஆறுதலாய் நீரை புகட்டினான் நிஷாந்த.
குடித்து முடித்தவள் “யதீந்திரா...” என்று உதடு பிதுக்கினாள்.
அவளுக்குதான் அழைத்திருந்தான் ஆனால் பதிலில்லை. அதோடு இப்போது அவள் நிலையும் தெரியும். ‘சொரூபனிடம் சிக்கி சின்னா பின்னமாகமல் இருந்தாலே போதும்’ என்று நினைத்தவனாய் “அவள் இப்போது கொஞ்சம் வேலையாய் இருக்கிறாள். ஈவ்னிங் உன்னை பார்க்க வருவாளம்” மென்மையாய் கூற மீண்டும் அவன் மார்புக்குள் தஞ்சமடைந்தாள். அரவணைத்துக் கொண்ட நிஷாந்தவிற்கு அன்று கொடைக்கானல் போய் வந்த யதீந்திராவிடம் பேசியது நினைவு வர தலையைக் குலுக்கினான்.
***
“யதீந்திரா” காதருகே கேட்ட அவள் குரலில் தூக்கிவாரிப் போட திரும்பிப் பார்த்தாள். தடித்த உதட்டில் கபட புன்னகையுடன் நின்றவன் முகத்தைப் பார்த்து மூக்கைச் சுருக்கினாள்.
‘இந்தக் கபட புன்னகை அவன் அழகை கெடுக்குது’ மனம் அந்த நிலையிலும் அவனுக்காய் யோசித்தது.
“இன்றிலிருந்து நீ என்னுடன் இருக்க வேண்டும்” மறுப்பின்றி தலையை அசைத்தவளையே கூர்ந்து பார்த்து கூறினான் “என் வீட்டில், என் அறையில், என் கட்டிலில்”