மொழி - 04
சம்பால் நிற பிஎம்டபிள்யூ சீறிக் கொண்டு வந்து பத்து மாடி கட்டிடத்தின் முன் நிற்க, அதிலிருந்து இறங்கினான் ஜிஎம்எஸ் என்று அழைக்கபடும் ஞான மந்திர சொரூபன். அவனுகென்றே அளவெடுத்து தைக்கப்பட்ட சாம்பல் வண்ண சூட்டில் கருப்பு நிற சேட்டுடன் நீண்ட கால்களை அகட்டி வைத்து நடக்க பின்னால் வருபவர்கள் ஓட வேண்டி இருந்தது.
“பொஸ்” என்றவாறு அருகே வந்தான் ஜெகதீஸ் “ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் ரெடி எல்லோரும் வந்திருக்கீனம். நிஷாந்த மாத்தையாவும் உங்களுக்குதான் வெயிட்டிங்”. லேசான தலையசைப்புடன் கேட்டுக் கொண்டவன் கண்கள் யாரையோ தேடியது.
“அவர்கள் மட்டும் இன்னும் வரவில்லை” என்றான் அவன் தேடலுக்கு பதிலாய்.
அலட்சியமாய் மீட்டிங் ஹாலுக்குள் நுழைய பிரதான கதிரையில் அமர்ந்திருந்த நிஷாந்த எழுந்து தன் கதிரையை அவனுக்கு கொடுக்க அருகே நின்ற மனஜேருக்கு வியர்த்துக் கொட்டியது. அப்ப இந்த மூன்று மாதமும் அலுவலகத்தில் பிஏ என்ற பெயரில் திரிந்தவன்தான் முதலாளியா? இவை அனைத்தையும் செய்தவனா?
மூன்று நாட்கள்... மொத்தமே மூன்று நாட்களில் கம்பனியின் ஐம்பது வீத பங்குகள் அனைத்தையும் வாங்கி கம்பனியை கையில் எடுத்த அவன் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்தக் கம்பனி பங்குதாரர்களின் பெயர் யோகேஸ்வரனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவருக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள். எப்படி பங்கு தொடர்பான ஆவணங்களை கண்டு பிடித்தான். எப்படி மூன்றே நாளில் தன் பெயரில் மாற்றிக் கொண்டான், மீதிப் பேரை எப்படி மடக்கினான் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.
இதை விட கொடுமை, கம்பனியின் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாய் லண்டன் போயிருந்த யோகேஸ்வரன் இன்றுதான் இந்தியா வருகின்றார். பத்து நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியவர். பிந்தினாலும் அவர் சென்ற காரியம் வெற்றிகரமாக முடிந்திருந்தது. என்ன பிரயோசனம் ஒப்பந்தம் வெற்றிகரமாக கைசாத்திடப்பட்டாலும் அதன் பயன் அவருக்கில்லை.
விபரங்களைக் கூறி நேரே இங்கே வரச் சொல்லியிருந்தார் மனஜேர் ராகவன்.
“அனைத்து பங்குதாரர்களும் வந்துவிட்டார்களா?” தன் இடது பக்கம் அமர்ந்திருந்த நிஷாந்தவை பார்த்துக் கேட்க “இருவரை தவிர மீதி அனைவரும் வந்துவிட்டார்கள்”.
“எனக்கு நேரம் தவறாமை மிக முக்கியமான ஒன்று சோ வந்தவர்களை வைத்து வோட்டிங்கை ஆரம்பிப்போம்” உதட்டுக்குள் சிறு கேலி நகையுடன் கூறினான்.
எதிர்த்தோ ஆதரவாகவோ யாரும் வாய் திறப்பதற்குள் “நாங்களும் வந்திருக்கின்றோம்” என்ற குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் என்ன உணர்ச்சி இருந்தது என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
வாசலில் யோகேஸ்வரனும் அவர் மருமகள் யதீந்திராவும் நின்றார்கள். அவளைப் பார்த்ததும் கண்களில் தென்பட்ட சிறு சலனம் மறு நொடியே மறைந்திருந்தது. இருவரும் உள்ளே வர ஜெகதீஸ்ற்கு விரலசைத்தான். ‘அவர்களுக்கு இருக்க இடம் கொடு’ என்பது போல்.
அந்தக் கம்பனியில் மொத்தமாய் முப்பது ஷேர்ஹோல்டர்கள். அவர்களில் பதினைந்து பேரைத்தான் அவனால் வாங்க முடிந்திருந்தது. அவனிடம் இருப்பது நாற்பத்தி ஒன்பது வீதம் பங்குகள். ஐம்பத்தியொரு வீதம் பங்குகள் இருந்திருந்தால் இந்த அரைவாசிப் பேரின் வாக்குகளே போதுமானதாய் இருந்திருக்கும். இப்போது இருவரும் சமமான வாக்குகளை எடுத்தால் கம்பெனிக்கு லாபமாய் அடுத்த இருபத்தி ஐந்து வருட ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் யோகேஸ்வரனா இல்லை புதிதாய் வந்திருக்கும் சொரூபனா என்றே பார்ப்பார்கள். அதில் யோகேஷ்வரனுக்கு அதிக நன்மை இருப்பது தெளிவகாவே புரிந்தது.
யதீந்திராவின் பங்குகளையும் மாற்றியிருந்தால்... இன்று யதீந்திரா வந்தது அவனே எதிர் பாராத ஒன்று. அவள் வராமலிருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துதான் இங்கே வந்திருந்தான்.
அவன் பார்வை அவளை மேலிருந்து கீழாய் அக்குவேறு ஆணிவேறாய் கூறு போட்டு கழுத்தில் நிலைக்க அவனுடன் சேர்ந்து அங்கிருந்தவர்களின் பார்வையும் அதே இடத்தில் நிலைத்தது.
‘அப்படியே உள்ளே புதைந்து விட மாட்டோமா’ என்பது போல் நின்றாள் யதீந்திரா. தயாராகி வரும் போதே கண்ணாடியில் அதைப் பார்த்துவிட்டாள். என்ன செய்தும் அவன் அவளில் பதித்த அடையாளம் விட்டுப் போவேனா என்று அடம் பிடித்தது. ஆனால் நிலைமை கை மீறிப் போயிருந்தது. இப்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
“மிஸ் யதீந்திரா” கம்பீரமான அவன் குரலில் அவள் முழுப் பெயர் வினோதமாய் ஒலித்தது. “மிஸ் தானே” உறுதிப்படுத்தியவன் கண்கள் அர்த்த புஷ்டியுடன் மீண்டும் அவள் கழுத்தடியில் படியவே முகம் வெளிறிப் போய் நின்றாள் யதீந்திரா.
சுற்றி இருந்தவர்களிடம் மெல்லிய சிரிப்பொலி.
அதிக பட்சம் தன்னிடம் கோபம் கொள்வான். இரண்டு அடி கூட அடிப்பான் என்றுதான் நினைத்திருந்தாள். இது போல் சபை நடுவே நிற்க வைத்து அவமானபடுத்துவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை. வாயினுள் நாக்கை கடித்து கண்ணீரை நிறுத்தியவள் கண்கள் அவனிடம் இறைஞ்சியது.
‘இப்படி செய்யாதே’
ஒரு கணம் குற்றவுணர்ச்சியுடன் தாழ்ந்த பார்வை மறு கணமே உணர்ச்சியற்று அவளை நோக்கியது.
உண்மையில் இந்த ஷேர் ஹோல்டர் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் எண்ணமே இல்லை அவளுக்கு. ஆனால் விமான நிலையத்திலிருந்து நேரே வந்த யோகேஷ்வரன் சொன்ன செய்தியில் வர வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தாள்.
அவள் தாய்க்கு நிகராக மதிக்கும் அந்தப் பெண்மணியை கடத்தியிருந்தார் யோகேஸ்வரன். இத்தனை நாளும் அவர் கண்ணில் படமால் பாதுகாத்து வந்தாள். அன்று ஸ்கை டைனிங் சென்ற இரவு அவர்களிடம் சென்றிருக்க வேண்டிய நாள். அன்று மட்டும் போயிருந்தால் நிச்சயமாய் இடத்தை மற்றியிருப்பாள். கிட்டத்தட்ட பன்னேரெண்டு வருடங்களுக்கு மேலாய் அவரை பாதுகாத்து வருகிறாள். அவள் போயிருந்தால் யாரலும் அவரைக் கடத்தியிருக்க முடியாது. முன்னிருப்பவன் கூட இருந்ததால் போக முடியவில்லை. இப்போதோ சூழ்நிலை அவள் கையை மீறிப் போய்விட்டது. அவள் மாமா யோகேஸ்வரன் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.
இத்தனை வருட தொழில் வாழ்கையில், யதீந்திரா என்றால் ஒழுக்கம் என்ற பெயரைத் தக்க வைத்திருந்தாள். இன்றோ ஒரு பார்வையில் அனைத்தையும் தூள் தூளாக்கியவன் செய்கையில் துவண்டுவிட்டாள்.
“ஜெகதீஸ் அந்த ஜானகி எங்கே?” கேள்வி அவனிடமிருந்தாலும் பார்வை அவளிடம் இருந்தது. அவள் பார்வை நிஷாந்தவிடம் பாய அவமானத்தில் முகம் சிவக்க, அவளை எதிர் கொள்ள முடியாமல் கண்களை தாழ்த்தினான் அவன்.
கடவுளே ஜானகியை யார் கடத்தியிருந்தாலும் பரவாயில்லை. இவன் கடத்தியிருக்க கூடாது. மனம் உருப் போட்டது. அவன் பார்வையோ சந்தேகத்துகிடமின்றி ‘நான்தான் கடத்தினேன்’ என்று கொக்கலி கொட்டியது.
லேசாய் தடுமாறி விழப் போனவளை பாய்ந்து பிடித்தான் சொரூபன்.
“ஜெகதீஸ் மீட்டிங் அரை மணித்தியாலம் கழித்து நடக்கட்டும்” இழுக்காத குறையாய் அவளை சிஇஒவின் அறைக்கு அழைத்து சென்றான்.
சோபாவில் இருத்தி குடிக்க தண்ணீர் கொடுக்க அதை வாங்காமல் “ப்ளீஸ் அவளை விட்டுவிடுங்கள்” கெஞ்சியவள் குரல் நடுங்கியது. ‘எனக்கு செய்ததை போல் செய்து விடுவானோ! கடவுளே!’
“அஅஅவளை அவளை” கேட்க வார்த்தை வரமால் கழுத்தை தடவியவாறே அவனை கேள்வியாய் பார்த்தாள்.
சில கணங்கள் புரியாமல் நெற்றி சுருக்கிப் பார்த்தவன் சட்டென கழுத்தைப் பிடித்துவிட்டான் “முட்டாள் நீ என்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?”
“நீங் நீங்களில்லை நி.. நிநிஷாந்த அய்யா” மூச்சு திணறல்களின் நடுவே கூறியவளை உதறி விட்டு திரும்பி நின்றான். ஆரம்பத்தில் திட்டம் அதுவாகதான் இருந்தது. ஆனால் இருவராலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. முக்கிய காரணம் யதீந்திரா. அவளை நெருங்கவே விடவில்லை. அடுத்தது ஏனோ இருவருக்குமே ஜானகியை பயன்படுத்த முடியவில்லை. மனதில் வஞ்சமின்றி கதைக்கும் அந்த அப்பாவிப் பெண்ணைப் பார்க்கும் போது ‘கடந்த கால நிகழ்வுகளுக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை.’ பின் ஏன் இந்த சுழலுக்குள் அவளை இழுத்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணம்.
சில நிமிடங்கள் நீடித்த கனத்த மௌனத்தை குலைத்தது கதவில் யாரோ தட்டும் சத்தம்.
வாய் வழியே மூச்சைவிட்டவாறே கோட்டைக் கழட்டி கதிரையில் போட்ட சொரூபன் பண்ட் போக்கேடினுள் கையை விட்டவாறு “கமின்” என்றான்.
உள்ளே வந்தது ஜெகதீஸ்.
“அந்தப் வீடியோவைக் காட்டு” உணர்ச்சியற்று சொன்னான்.
அவனிடம் கொடுக்க “எனக்கு வேண்டாம் மேடத்திற்கு காட்டு” என்றவனை சற்று வித்தியாசமாய் பார்த்தாலும் மறு பேச்சின்றி அவளிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டான். வீடியோ ப்ளே ஆக நிம்மதியில் சட்டென தளர்ந்தவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வெளியேறியது.
சிறு விரலசைவில் ஜெகதீசை வெளியேற்ற அவனோ யதீந்திராவை திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான்.
அவள் பாதுகாப்பில் இருக்கும் அந்த வயதான பெண்மணி “இ.. இவர்கள் இப்போது உங்கள் கஷ்டடியிலா இருக்கின்றார்கள்?” கேள்வி கேட்டவளை பார்த்து ஒரு பக்க உதட்டால் மட்டுமாய் சிரித்தான்.
“இருவருமே இப்போது என் கஸ்டடியில்தான்” கிரகித்துக் கொள்ள சிறிது நேரம் கொடுத்தவன் “ஜானகியை மட்டும் இப்போது விட முடியும். அந்த வயதானவர்கள் என் கஸ்டடியில்தான் இருப்பார்கள். நான் சொல்லும் வரை...” அவளை ஆழ்ந்து பார்த்தவாறே கூறினான்.
கண்களை மூடியவாறே கேட்டாள் “நான் என்ன செய்ய வேண்டும்? அந்த கார்மேன்ஸ் கம்பனியின் பங்குகளை தவிர எதைக் கேட்டாலும் செய்கிறேன். அதற்கும் யோகேஷ்வரனுக்கும் சம்பந்தமில்லை”.
“குட்” மெச்சியவன் “எனக்கு கேர்ள் பிரன்ட் இல்லை. நீர் என் கேர்ள் பிரண்டாய் இரும்” இலகுவாய் கூறினான்.
குழப்பமாய் பார்த்தவள் விசாரித்தாள் “கேர்ள் பிரன்ட் என்றால்”.
“லண்டனில்... பொதுவாய் வெளிநாடுகளில் உள்ளது போல், திருமணத்தை தவிர அனைத்தும்” என்றான் கபட புன்னகையுடன்.
“லிவ் டுகேதர்” உதடுகள் மட்டும் அதிர்ந்தது. அவள் நடுங்கிய உதட்டை அழுத்தமாய் கடிக்க அதை ஒரு விரலால் நீவி விட்டான்.
“அப்படியும் சொல்லலாம்”
“எனக் எனக்கு” வார்த்தை வரமால் பரிதபமாய் கேட்டாள் “நான் ஏன்?”
“கடந்த இரண்டு நாட்களாய் டென்சன் இல்லை, யு ஆர் மை ஸ்ட்ரெஸ் பாஸ்டர். தட்ஸ் இட்”
அவ்வளவுதான் வெறும் ஸ்ட்ரெஸ் பாஸ்டர்... அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் பார்த்தாள் அவனை.
பதிலாய் ஒரு பக்க உதட்டால் மட்டுமாய் சிரித்து வைத்தான்.
“எனக்கு யோசிக்கனும்” தயக்கத்துடனேயே கூறினாள்.
“தராளமா... நானும் யோசிக்கின்றேன். இருவரையும் என்ன செய்யலாம் என்று.”
“திருமணம் என்ற ஒன்று இல்லாமல்..”
“ஏன் இலகுவாய் சொத்தில் பாதியை வாங்கி விடலாம் இல்லையா?” கிண்டலாய் கேட்டான்.
“சொத்துக்கள் வேண்டாமென்று எழுதித் தருகின்றேன்”
“எனக்கு திருமணத்தில் நாட்டமில்லை”
முழங்காலில் முழங்கையூன்றி சற்று முன்னே சரிந்திருந்தவன் பக்கவாட்டுத் தோற்றம் அப்போதும் மனதை கொள்ளை கொள்ள வெடித்து விடும் போலிருந்த தலையை பிடித்துக் கொண்டாள்.
“சோ” என்றான் அவன்.
“வேவேறு ஏதாவது செய்ய வேண்டுமா?” உள்ளே சென்று விட்ட குரலில் கேட்கவே வெற்றிப் புன்னகை புரிந்தவன் “அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு தகுந்தால் போல் சொல்கிறேன்” என்றான் கெத்தாய்.
“அவர்களை உங்களுக்கு தெரியுமா?”
“யாரை?”
கையிலிருந்த போனை காட்ட “இல்லையே ஏன்?” நெற்றி சுருக்கினான்.
தலையை குறுக்கே அசைத்தவள் “சும்மா கேட்டேன்” என்றாள் தளர்வாய்.
“ஜெகதீஸ்..” அழுத்தமாய் அழைக்க வெளியே நின்றவன் உள்ளே வந்தான்.
“மீட்டிங்கை ஸ்டார்ட் செய்வோம்” எழவே அவனுடன் கூட எழுந்தாள் யதீந்திரா.
கதவில் கை வைத்தவன் நின்று “இன்று உம்முடைய வாக்கு…” உதட்டுக்குள் ஒரு கேலிச் சிரிப்புடன் கேட்க அவனது முழுமையான எண்ணம் புரியாவிட்டாலும் “என் வாக்கு இல்லாமால் நீங்கள் ஜெயிக்கவே முடியாதா?” அயர்வாய் கேட்டாள்.
பதிலாய் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தியவனுக்கு “டேனியல்” என்ற ஒரு வார்த்தையில் பதிலளித்தவள் “இன்று என்னை வரவைத்த காரணம்?” நேரடியாகவே கேட்டாள்.
“ஜெகதீஸ்” ஒரு வார்த்தையில் அவன் வெளியேறி விட பாராட்டுதலான ஒரு பார்வையுடன் அவளை நெருங்கி “பெண்கள் புத்திசாலியாய் இருந்தால் எனக்குப் பிடிக்கும்” என்றவன் ஒரு கரம் சேலையூடே சென்று அவள் வலது புற இடையை பிடிக்க பயத்துடன் விழித்தாள்.
“ஞானா வேண்டாம்” என்றவள் இதழ்களை தண்டித்தான் “ஆனால் அந்த புத்திசாலிதனத்தை என்னிடம் காட்டக் கூடாது”
“உன் மாமாவுக்கு புத்திசாலித்தனம் போதாது. கடத்தி விட்டார்களா இல்லையா என்பதைக் கூட சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை” ஏளனம் செய்து சிரித்தான். “அதோடு அவருக்கு நம்பகமான ஆளை வைத்தே அவரை விழுத்தும் போது அந்த சந்தோசமே தனிதான் இல்லையா?”
“நீங்களும் மாமாவும் பட்டதுபாடு. ஆனால் ஜானகி எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது. நிச்சயமாய் நீங்கள் ஜானகிக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யக் கூடாது”
மார்புக்கு குறுக்கே கைகட்டி ஒரு காலை மடித்து சுவரில் சாய்ந்தவன் கிண்டலாய் “எந்த நிபந்தனையும் விதிக்கும் நிலையில் நீர் இல்லையே” என்றவன் தோளை குலுக்கினான்.
“நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். கேர்ள் பிரண்ட், லிவ் டு கெதர்… வாட்எவர். ஆனால் ஜானகி இந்தப் பிரச்சனைக்குள் வரவே கூடாது”
அவளை கூர்ந்து பார்த்தவன் அழுத்தமாய் கேட்டான் “ஜானகி யார்?”