மொழி - 03
“நீதான் வேண்டும்” அவன் உடல் நடுங்குவது வெளிப்படையாகவே தெரிந்தது.
“என்ன” அதிர்ச்சியுடன் கேட்டவள், ஆச்சரியத்துடன் அவன் உடலும் நடுங்குவதைக் கவனித்தாள்.
அவன் மீதே அவனுக்கு எரிச்சல் வர அதை அவளிடம் காட்டினான் “உமக்கு காது கேட்குமா இல்லையா?”
இன்று அவள் அவனை விட்டுப் போகக் கூடாது. வேறு வழியே இல்லையா என்றால், இருக்கு. ஆனால் இதற்காகதானே இத்தனை காலம் காத்திருந்தான். அனைத்தையும் செய்து முடித்தான். காலம் கூடி வரும் வேளையில் இந்த மனம் கோழை போல் தடுமாறுதே!
கடைக் கண்ணில் தென்பட்டது அவள் குழந்தை போல் தூய்மையான முகம். அதை நேராய் பார்க்கும் துணிவின்றி விலகிச் சென்று கடலை வெறித்தான். அவளுக்கு அவன் நடவடிக்கை ஆரம்பத்தில் ஆச்சரியத்தை கொடுத்தாலும் அன்றொரு நாளும் இதே போல் தவித்ததும் தான் ஆறுதல் கொடுத்ததும் நினைவிலாடிச் சென்றது.
வேகமாக அருகே சென்றவள் பின்னிருந்து அவன் இடுப்பைச் சுற்றிக் கையைப் போட்டு அணைத்துக் கொண்டாள். அந்த மொட்டைமாடியின் பில்லரை இரு கையாளும் இறுக பிடித்திருந்தவன் வலிக்க உதட்டைக் கடித்து தன்னை நிதானிக்க முயன்றான்.
“ஷ்... இப்ப என்ன நான்தானே வேண்டும். இன்று முழுவதும் உங்களுடன் இருக்கின்றேன் போதுமா?”
அவனோ விலகிச் சென்றான். “இன்று இருந்துவிட்டு நாளை போய் விடுவாய். நாளை இதை தனியாய்தானே எதிர் கொள்ள வேண்டும் சரிவராது” அந்த நிலையிலும் தன் வலையில் முழுதாய் விழுத்த முயன்றான்.
“சரி திருமணம் செய்து கொள்வோம். உங்கள் அருகிலேயே எப்போதும் இருப்பேன்” மீண்டும் அணைத்து அவன் முதுகில் கன்னத்தை அழுத்தினாள்.
“அது வரை?” அவன் கேள்வியாய் நிறுத்த, அவன் முன் வந்து கன்னம் தாங்கியவள் “உங்களுக்கு என்னதான் வேண்டும்?” மென்மையாய் கேட்டாள்.
அவள் தூய்மையான கண் பார்க்க முடியாது விலகியவன் “நீதான்” என்றவனை இடை மறித்தாள் “அது தான் சொன்னேனே....”. அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் தோளை இறுகப் பற்றியவன் “எனக்கு நீ எப்போதும் வேண்டும். இந்தக் கணம் முதல் மரணம் வரை, வர முடியுமா உன்னால்? உன் மாமா சம்மதிக்காவிட்டால்... என்ன செய்வாய்?” கண்களையே ஆழ்ந்து நோக்கினான்.
அவன் செய்யப் போகும், செய்து கொண்டிருக்கும் காரியம் நிச்சயமாய் அவளைப் பாதிக்கும். அதே நேரம் சிலவற்றறை செய்து முடிக்க அவள் அவனருகே வேண்டும்.
எல்லாவற்றிகும் மேலாய்...
அந்த வார்த்தைகள்...
இத்தனை வருடம் கழித்தும் எதிரோலிக்கின்றதே...
‘நான்தான் காரணம், குறுக்கே வந்தா நான் வேற என்னதான் செய்வது?’
அதில்தான் எத்தனை அலட்சியம், எத்தனை ஆணவம்...
அன்று போலவே கோபத்தில் உடல் அவன் கட்டுப்பாட்டை மீறி நடுங்கத் தொடங்கியது. சட்டென நெருங்கி அணைத்து முதுகை வருடிக் கொடுத்தாள். “ஷ்... நீங்களே என்னை விட்டுப் போ என்று சொன்னால் தவிர, என் மரணம் வரை உங்களை விட்டுப் போக மாட்டேன், போதுமா?”
தன் நெஞ்சில் அவள் கையை வைத்து அழுத்தியவன் “ப்ராமிஸ்” சிறுபிள்ளை போல் கேட்க கண் மூடித் திறந்து சொன்னாள் “ப்ராமிஸ், யதீந்திரா வாக்கு மாறமாட்டாள். நீங்களாக போக சொல்லும் வரை உங்களை விட்டுப் போக மாட்டேன் போதுமா?”அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவனோ தள்ளடினான்.
அவனைப் பிடித்து கதிரையில் அமர வைத்து தண்ணீர் அருந்தக் கொடுத்தாள். “அன்று வந்த பிறகு இது போல் எப்போது வந்தது” அவனிடம் கதை கொடுத்து சுயநிலைக்கு வர வைக்க முயன்றாள்.
கடந்த காலத்தின் வடுக்கள் அவனை இலகுவில் விடுவதாகவும் இல்லை நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இரண்டின் அழுத்தமும் தாங்காமல் தடுமாறினான் சொரூபன். உள்ளங்கையில் முகத்தைப் புதைத்து இருந்தவன் நிலையைப் கவலையுடன் பார்த்தவள் “நான் இங்கேயே ரூம் புக் செய்யவா?” தலையையும் முதுகையும் வருடிவிட்டாள்.
தலையாட்டி மறுக்க “என் வீட்டுக்கு வருகின்றீர்களா? என் அப்பார்ட்மென்ட்” கேட்டாள். அதற்கும் ‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்தவன் போனை எடுத்து கட்டளையிட்டான் “கால் ஜெகதீஸ்”.
“பொஸ்”
“எங்கே?”
“இங்கே கீழேதான்”
“சரி காரை எடுத்து வை வருகிறேன்” கட் செய்தான்.
“நீங்களே பிஏ உங்களுக்கு ஒரு பிஏவா” கேலியாய் கேட்டாலும் கண்கள் எதையோ எதிர் பார்த்து அவனிடம் இறைஞ்சியது. ‘என்னிடம் சொல்வாயா?’
லிப்டிலிருந்து வெளியே வந்தவன் தளர்ந்த உடலையே கவலையாய் பார்த்தாள் யதீந்திரா. ‘இன்று அவனே பேசாவிட்டாலும் நான் பேச வேண்டும்’ தனக்குள் நினைத்துக் கொண்டவள் ஹோட்டலை விட்டு வெளியே வர காருடன் தயாராய் நின்றான் ஜெகதீஸ்.
சென்னையில் விஐபிக்கள் மட்டும் வசிக்கும் பகுதிக்குள் கார் நுழையவே மீண்டும் திரும்பி பார்த்தாள். எதையாவது சொல்வானா? அவனோ உணர்ச்சியற்ற முகத்துடன் கண் மூடிச் சாய்ந்திருந்தான்.
நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான வீடு, ‘பிஏவாய் இருக்கும் ஒருவனுக்கு இந்த வீடு அதிகமில்லை’ யோசனை ஓடியது. அவளையும் அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றவன் ஏதோ ஒரு டப்லட்டை போட்டு விட்டு குப்பற படுத்துவிட்டான். அவளுக்குதான் அவனை அப்படியே விட்டுப் போவதா வேண்டாமா என்று யோசனையாய் இருந்தது.
ஆனால் அன்று போல் மீண்டும் வந்தால் என்ற யோசனை ஓட போனை எடுத்து “ஜானகி என்னோட ட்ரெஸ் இரண்டு செட் பக் செய்து நான் அனுப்பியிருக்கும் விலாசத்திற்கு கொடுத்து விடு” என்றவள் வெளியே ஹாலில் காத்திருந்த ஜெகதீசிடம் “எனது ட்ரைவர் ஒரு பார்சல் கொண்டு வந்து தருவார். அதை வாங்கிக் கொண்டு வந்து தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.
மறுபுறம் திரும்பிப் படுத்திருந்தவன் முகத்தில் கபட புன்னகை உதயமாக திருப்தியுடன் கண்ணை மூடி உறங்கிவிட்டான். இத்தனை நேரமிருந்த பதட்டத்தின் சாயல் கூட இல்லை.
***
லேசாய் புரண்டவன் திரும்பிப் பார்க்க இன்னும் விடிந்திருக்கவில்லை. மேல் கசகசவென்று இருக்க ரெப்ரெஷ் ஆகமால் மீண்டும் உறக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
அப்படியே குளியலறை சென்றவன் குளித்து இடையில் டவல் மட்டும் அணிந்து வந்து லைட்டைப் போட அவன் கண்ணில்பட்டாள் யதீந்திரா. சோபாவில் ஒரு புறமாக சாய்ந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். சேலையில் இருந்து த்ரீ குவட்டருக்கு மாறியிருக்க இன்னும் சிறு பெண்ணாய் தென்பட்டாள்.
சில கணங்கள் தன்னை மறந்து அவள் குழந்தை போன்ற அழகில் தன்னைத் தொலைத்து நின்றவனின் மனத்தில் எதிரொலித்தது அந்தக் குரல் ‘நான்தான் செய்தேன் இப்ப அதற்கு என்ன செய்ய? நாடு ரோட்டில் வந்தார்கள் ப்ரேக் பிடிக்க முடியல’ அன்று இதே குழந்தை முகத்தில்தான் எத்தனை அலட்சியம். ஒரு உயிரை பற்றி சிந்திக்க கூட இல்லையே! முகம் இறுக அவளிடமிருந்து விலகி வெளியே தென்பட்ட இருளை வெறித்தான்.
‘இவள் மாமாவை பழிவாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்தாகிவிட்டது. நாளை காலை....
ஆனால் அது மட்டும் போதாது அவனுக்கு. அவர்கள் அனைவரையும் துடிதுடிக்க வைக்க வேண்டும் அதற்குதான் இத்தனை நாள் காத்திருந்தான். இன்று அவன் திட்டப்படி அனைத்தும் அவன் கைகளில். நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு கண்கள் தணலாய் சிவந்தது.
‘அவர்களுக்கு ஸ்டேடஸ் ரெம்ப முக்கியம். தவறான ஒரு பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் மகாக் கவனம்’ அவளைப் பற்றி ஆராய்ந்த டிடெக்டிவின் குரல் மூளைக்குள் ஒலித்தது.
சிதறிய உணர்வகளை அடக்கி கபட புன்னகையுடன் அருகே அமர்ந்தவன் சுட்டு விரலால் முக வடிவை அளந்தவாறே “இன்றிரவு நீ இங்கே தங்கியிருக்க கூடாது, இங்கிருந்து தப்பிப் போயிருக்க வேண்டும். ச்சு...” போலியாய் பரிதாபப்பட்டான்.
சில்லென்ற தொடுகையிலோ அல்லது அவன் விரலின் வருடலிலோ எழுந்தவள் நிமிர்ந்து அமர்ந்தாள். குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். இது அவளது அறை இல்லையே! அருகே கையைக் கட்டி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்க்க இரவு அவனுடன் தங்கியது நினைவில் வர “உங்களுக்கு ஒன்றுமில்லையே, இப்ப ஒகேவா?” அவன் தோள் பற்றிக் கேட்டவள் குரலில் கவலை வெளிப்படையாகவே தெரிந்தது.
“ஹ்ம்ம்” என்றவன் பார்வையில் இருந்த மாற்றம் தெளிவாகவே புரிய குனிந்து தன்னைப் பார்த்தாள். உறக்கத்திலிருந்து எழுந்ததில் ஆடைகள் விலகியிருக்க அதை சரி செய்தவள் “நான் போகிறேன்” எழுந்தாள்.
அவளை அப்படியே கைகளில் அள்ளியவன் சிறுசிரிப்புடன் கேட்டான் “எங்கே?”.
கூச்சத்துடன் நெளிந்தவள் “வீட்டிற்கு” என்றவளை மயக்கும் புன்னகையுடன் நோக்கியவன் “இன்றிலிருந்து என்னுடன் இருப்பதாக வாக்கு தந்தது ஞாபகம் இருக்கா?” குறும்பாய் கேட்டான்.
“ப்ளீஸ்” என்ற அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“நீதான் என்னை ப்ளீஸ் பண்ணனும்” என்றவன் அனலாய் கொதித்த உதடுகள் அவள் கழுத்தில் புதைய அவன் கைகளும் உதடுகளும் அவளை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றது.
***
கிரேக்க சிற்பம் கையை மார்புக்கு குறுக்காய் கட்டி திறந்திருந்த யன்னல் வழியே வந்த குளிர் காற்றை எதிர் கொண்டு நின்றவனின் மனம் அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. அவளை அணைக்கும் வரை அவளின் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அவன் மூளை மனம் இரண்டையும் ஆக்கிரமித்து இருந்தது. ஆனால் அவளை அணைத்த நொடி முதல் விலகும் வரை தன்னையே மறந்துவிட்டான்.
இத்தனை நாள் காட்டிக் காத்த பிரம்மச்சர்யம் உடைந்தது கூட அவனுக்குப் பொருட்டில்லை. ஆனால் இத்தனை நாள் நில்லென்றால் தான் சொன்ன இடத்தில் நின்ற அவன் மனம் அவன் வசமின்றி சென்றதைத்தான் சகிக்கவே முடியவில்லை.
கையிலிருந்த போன் அதிரவே எடுத்து காதுக்கு கொடுத்தான்.
அவன் பதிலை எதிர்பாராமலே “அனைத்தும் தயார். இன்னும் சற்று நேரத்தில் நீ சொன்னது போலவே செய்து விடலாம்” என்ற நிஷாந்தா “மச்ச பொட்டக் ஹித்தனகோ, நங்கிட்ட வென மொனஹாரி கேதுவ தியன்னவா” (மச்சான் கொஞ்சம் யோசி, தங்கச்சியிடம் வேற எதாவது காரணம் இருக்கும்).
“மொக்குத் நா மச்சா கியல வகே கரன்ன” (ஒன்றுமில்லை சொன்ன மாதிரியே செய் மச்சான்) என்றவனை இரண்டு தளிர்க் கரங்கள் பின்னிருந்து அணைத்து கொள்ள “கவுத நிஷாந்த அய்யாதா?” (யார் நிஷந்தா அண்ணாவா?) முதுகில் முகத்தைப் புதைத்தாவாறே கேட்டாள் யதீந்திரா. இந்த மூன்று மாதத்தில் அவனுடன் ராசியாகியிருந்தாள். சிறுசிறு சிங்கள வார்த்தைகளை அவனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தாள்.
அவன் போன் வழி கேட்ட அவள் குரலில் உறைந்து போய் நின்ற நிஷாந்த “மச்சா எப்பா” (வேண்டாம்) சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனைக் கட் செய்து விட்டான் சொரூபன்.
அவனின் உண்மையான சொருபத்தை இங்கே யாரும் அறிந்திருக்கவில்லை.
முன்னிருந்த ஜன்னலின் திரைச்சீலையை மூடியவன் அவள் கையைப் பிடித்து முன்னே இழுத்தான். அவன் பார்வையின் மாற்றத்தையும் கரங்களின் செய்தியையும் உணர்ந்தவள் “என்ன சாருக்கு இன்று வேலைக்கு போகும் எண்ணமில்லையா?” கேலியாய் கேட்டாள்.
“இன்று முழுதும் வேலையே இதுதான்” என்றவன் மூக்கிலிருந்து துளியாய் நின்ற இரத்தத்தைப் பார்த்தவள் “ஏன் டென்சனாய் இருக்கிறீங்க?” கன்னம் தாங்கி துடைத்துவிட்டாள்.
அவனுக்குத் தெரியும் அவள் கெட்டிக்காரி. இந்த நொடி வெளியே சென்றால் கூட நொடியில் நிலைமையை சரியாக்க கூடிய திறமை அவளிடமிருந்தது. அதற்கு இன்று முழுதும் அவளை வெளியே விட்டால்தானே. உதடுக்குள் மலர்ந்த தந்திரப் புன்னகையுடன் “நீதான் குறைக்க வேணும்” கைகளில் அள்ளிக் கொண்டு அவள் இதழில் தன் இதழ்களை புதைத்தவன் மீண்டும் காமன் பண்டிகை கொண்டாட கட்டிலை நாடினான்.
அவன் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தவளுக்கு சற்று முன் வந்த அழைப்பு நினைவில் ஆடியது.
பெட்ஷீட்டை அள்ளித் தன்னை சுற்றிக் கொண்டவளின் போன் அதிர எடுத்துக் காதுக்கு கொடுத்தாள். மறுபுறம் என்ன செய்தி வந்ததோ “சொன்னது போலவே செய்யுங்கள். ஞானாவை யாரும் தடுக்க வேண்டாம். தடுக்கக் கூடாது” மெல்லிய குரலில் உறுதியாய் உத்தரவிட்டாள். “அவன் எண்ணம் நிறைவேற வேண்டும் அதற்காகதானே நான்...” என்றவள் குரல் தேய மறுபுறம் வைத்துவிட்டார்கள்.
அவளிடம் ஈடுபட்டின்மையை உணர்ந்தவன் “என்னடி” எரிச்சல்பட்டான்.
‘என் சிறுவேறுபாடும் அவனுக்கு தெரிகிறாதா?’ மகிழ்ச்சியுடன் அவன் முகம் நோக்கியவள் சிறு புன்னகையுடன் கழுத்தை சுற்றிக் கையைப் போட்டு தன்னுடன் இழுத்துக் கொள்ள அவன் செய்கையில் அவன் பெயரையே மூச்சாய் சுவாசித்தாள் “ஞானா”.
அந்தப் பெயரை அவள் இதழ்கள் உச்சரிக்கக் கேட்டதில் இதுவரை காமத்தில் சிவந்த கண்கள் கோபத்தில் சிவக்க அவள் இதழ்களை தண்டித்தான் அவன்.