கழுத்துக்கு கீழ் வரை போர்த்தியிருந்த போர்வையை கைகளால் பிடித்தபடியே புரண்டு படுக்க, அருகே அவன் படுத்திருந்த இடம் மெல்லிய கதகதப்புடன் காலியாய் இருந்தது. சோர்வுடன் நிமிர்ந்து பார்க்க டவலை மட்டும் இடையில் அணிந்து வெறும் மேலில் நீர்த்துளிகள் மின்ன சுவற்றிக்கு பதில் கண்ணாடி பதிக்கபட்ட ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன்.
அவன் முதுகில் இருந்த சிவந்த கோடுகள் அவர்கள் இருவரும் சற்று முன் இருந்த இரண்டறக் கலந்த நிலையை தெளிவாக எடுத்துரைக்க கன்னங்கள் சிவப்பேற தலையணையுள் முகத்தைப் புதைத்தவளுக்கு இந்த மூன்று மாதங்களில் தன்னை காதலிக்கின்றேன் என்ற பெயரில் அவன் செய்த அத்தனையஅலப்பறைகளும் நினைவுக்கு வந்தது.
அன்று அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவளுக்கு தன்னைக் கட்டுபடுத்துவது கஷ்டமான ஒரு காரியாமாகவே இருந்தது. ‘என்னடி அநியாயத்திற்கு அழகா வந்து நிற்கிறான். அன்று பார்க்கும் போது ஒல்லியாய் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்தான்’ இதயத்தின் இதமான படபடப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அதன் பிறகான நாட்களில் அவள் மீதுள்ள விருப்பத்தை தன் செய்கையால் அனைவரையும் அறியச் செய்து கொண்டிருந்தான் சொரூபன். அவள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பைக்குடன் வருபவன் அவள் காரை அலுவலகம் வரை பின் தொடர்ந்தான்.
அலுவலகத்தில் குட்டி போட்ட பூனையாய் அவளையே சுற்றி வந்தான்.
இவனுக்கு பொஸ் வேலையே கொடுக்க மாட்டாரா எனற சந்தேகம் அலுவலகம் முழுதும் இருந்தது. அதை விட அனைத்து ஆண்களிடமும் தீயாய் காயும் யதீந்திரா அவனிடம் மாசி மாத நிலவாய் குளிர்ந்தாள்.
அன்றும் அவனது ட்ரேட் மார்க் புன்னகையுடன் கதவைத் தட்டிவிட்டு அனுமதிக்கு காத்திருக்காது உள்ளே வந்தான்.
“ஹாய் குட் மோர்னிங் யதி”
கையிலிருந்த கோப்பை மூடியவள் அவனை முறைத்தாள்.
“ஒஹ் யதி வேண்டாமா? எண்டா உம்மை எப்படி கூப்பிட? இந்திரா, திரா எதுவுமே யதி அளவுக்கு நல்லா இல்லையே” உதட்டைப் பிதுக்கினான்.
“உண்மையிலேயே நீர் மிஸ்டர் விக்ரமசிங்கவின் பிஏவா?” அவனைப் போலவே யாழ்ப்பான தமிழில் கேட்க முறுவல் மலர்ந்தாலும் கண்ணில் மெல்லிய கவனத்துடன் கேட்டான் “ஏன் என்னை பொஸ்ஸிடம் மாட்டிவிட போறீரோ?”
“இங்கே யார் பொஸ்...” அவன் கண்ணில் தென்பட்ட மெல்லிய அதிர்ச்சியை கவனித்தவாறே “என்று எனக்கே டவுட்டாதான் இருக்கு” என்றாள்.
“ஓ...” என்றவன் “அதை விடும் எனக்கு என்ன பதில் அதை சொல்லும்” காரியத்தில் கண்ணாய் விசாரித்தான்.
“என்ன பதில்” அவள் யோசிக்கவே இரு கைகளின் பெருவிரல் ஆட்காட்டி விரல்களின் நுனியை ஒன்றோடு ஒன்று சேர்த்து பெண்களைப் போல் நெளித்துக் காட்டி “அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னனே” கண்களை படபடவென கொட்டினான்.
கலீரென்று சிரித்தாள் யதீந்திரா.
வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கும் அவளை ஏதோ அலுவலாய் உள்ளே வந்த சதாசிவம் தாத்தா பரிவுடன் பார்த்தவர் வந்த சுவடின்றி சென்றிருந்தார்.
சொரூபனுக்கும் சிரிப்பு வரவே “நான் என்ன செய்ய? ப்ரபோஸ் செய்தால் குறைந்தது வெட்கமாவது படனும். உமக்குத்தான் எப்படி வெட்கப்பட எண்டே தெரியல. அதான் எப்படி வெட்கபடுவது என்று டெமோ காட்டினேன்” கண்ணடித்தான்.
“அதுக்கு உங்களை லவ் பண்ணனும் இல்லையா?” செல்பில் ஏதோ பைல் தேடுவது போல் திரும்பி நின்று பாசாங்கு செய்தாள்.
“ம்கூம்...” என்றவன் நெருங்கி நின்று “சரி... இல்ல லவ் பண்ணல என்று ஒரு வார்த்தை சொல்லும். திரும்ப உம்மட கண்ணில் கூட படமாட்டேன்” என்றான் காதுக்குள்.
சட்டென திரும்ப இதழும் இதழும் மயிரிழையில் உரசிக் கொள்ளமால் தப்பியது. முகம் சிவக்க தள்ளி நின்றாள் யதீந்திரா.
‘மௌனமே பார்வையாய் ஒரு பாடல் பட வேண்டும்’ என்ற பழைய பாடலை பாடலை உல்லாசமாய் விசிலடித்தவன் “ப்ரெட்டி ஐஸஸ்...” ரசனையாய் கூறினான். அவள் மொழி மறந்து நிற்க “ஈவ்னிங் ரெடியா இரும். ஒரு இடம் போகனும்” என்றவன் “பைக்கில் வருவீர்தானே” அவள் வருவதை உறுதிப்படுத்தினான்.
அப்போதும் படபடத்த இதயத்தை கட்டுபடுத்தும் முயற்சியில் இருந்தவள் மெல்லிய குரலில் கூறினாள் “சேலையுடன் பைக்கில்...”.
“சரி அப்படியானால் காரிலேயே வருகின்றேன்”
*****
அன்று சொன்னது போலவே நைட் ஸ்கை டைனிங் டின்னருக்கு அழைத்துச் சென்றான். அவன் ஆடி காரிலும், அழைத்துச் சென்ற ஹோட்டலின் தரத்திலும் புருவத்தை உயர்த்தினாள் யதீந்திரா.
“இல்ல மிஸ்டர் விக்கிரமசிங்காவிற்கு இவ்வளவு தாராள மனசு என்று தெரியாதே” ஆச்சரியம் காட்டினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ஞானா க்ரூப்ஸ் ஒப் கொம்பனி என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்? அதன் முதலாளியின் நேரடி உதவியாளார் நான்” அலட்சியமாய் பதிலளித்தவன் “எனக்கு இது போன்ற ஹோட்டலில் எல்லாம் செலவழித்தாலும் சேமிப்புக்கு மிஞ்சும் அளவில் சம்பளம் வரும், போதுமா வீட்டம்மா” என்றான் கேலியாய்.
“நான் இன்னும் உங்களுக்கு சம்மதம் சொல்லவில்லை ஞாபகமிருக்கா?” என்றாள் தன் கெத்தை விடமால்.
“ஓஹோ! ஆனா இத்தனை வருடத்தில் மிஸ் யதீந்திரா தொழில் முறை டின்னர்களை கூட முடிந்தவரை தவிர்ப்பதாக பேச்சு அடிபட்டதே? அதிலும் இரவில் யாருடனும் போனதாக சரித்திரமே இல்லையாமே” யோசிப்பது போல் பாவ்லா செய்தான்.
“அப்படியானால் நான் போகிறேன்” முறுக்கிக் கொண்டாள்.
சட்டென அவள் கையை சுண்டி இழுக்க ஒரு சுற்று சுற்றி அவன் நெஞ்சில் மோதி நின்றாள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு துள்ளி விலக, அவள் ஒரு கையை ஏந்தி இடை வரை குனிந்து, அவள் புறங்கையில் லேசாய் இதழ் பதித்து “ப்ளீஸ்” என்றான்.
கண்கள் விரிய சிரிப்பை அடக்கியவள் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.
சுற்றிலும் பூக்களால் அலங்கரித்திருந்த ஒரு தனியறையில் நடுவே வெள்ளை விரிப்பின் மேல் சிவப்பு ரோஜா பூங்கொத்தும், விஸ்கி போத்தலும், அருகே இரண்டு கண்ணாடி குவளைகள், ஒரு ஒற்றை ரோஜாவும் இருந்தன.
சிறு கையசைவில் விஸ்கி போத்தலை எடுக்க உத்தரவிட்டவன் அவள் அமர கதிரையை பிடித்துக் கொண்டு நின்றான். அவள் அமரவும் அவன் ஃபோன் சட்டைப் பைக்குள் அதிரவும் சரியாய் இருந்தது.
சிறு எரிச்சலுடன் கையில் எடுத்தவன் கொலர் ஐடியை பார்த்து விட்டு எதிரே அமர்ந்திருந்த யதீந்திரவிடம் ஒரு பார்வையை செலுத்தியவன் “ப்ளீஸ் ஒன் செக்” மயக்கும் புன்னகையுடன் கூறி தள்ளிச் சென்றான்.
“ஹெலோ”
“சார், ஷேர் சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் அவர்கள் வீட்டில் இல்லை. அந்த ஆவணம் என்று இல்லை, பெறுமதியான எதுவுமேயில்லை. நன்றாக தேடி பார்த்து விட்டோம்”
புன்னகை எங்கோ தொலைந்திருந்தது.
முகம் இறுக “ஹ்ம்ம், நீங்கள் திரும்பி வந்துவிடுங்கள்” என்றவன் சில கணங்கள் தன்னை நிதானித்து முகத்தை சீர்படுத்தி விட்டு அவளருகே சென்றான்.
“அவர்களை தொல்லைப்படுத்த வேண்டாம், போக விடுங்கள்” தனக்கு வந்த அழைப்பை கட் செய்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
மீண்டும் அதே மயக்கும் புன்னகையுடன் அமர்ந்தவன் “வெயிட்டர்” இரு விரலால் அழைத்து “ஸீபூட் பிரைட்ரைஸ், லாகூன் கிரப் கறி” என ஒரு லிஸ்ட் ஸீபூட் ஐட்டம் சொல்லவே கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் யதி.
அவன் நிறுத்தியதும் “அப்படியே பன்னீர் பிரைட் ரைஸ் அண்ட் காலிப்லோவேர் கறி” என்றாள்.
ஒற்றை புருவத்தை உயர்த்தி “உமக்கு எப்படித் தெரியும்?” விசாரித்தான். ‘இவளும் என்னை போல் ஸ்பை வைத்து விசாரித்து இருப்பாளோ!’
“எனக்குப் பிடித்த ஐட்டம் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? அது போல்தான்” சில கண இடைவெளி விட்டு “இதற்கு முன் என்னை சந்தித்து இருகின்றீர்களா?” அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம்.
“சந்தித்து இருந்தால் இந்நேரம்..” என்றவன் ஒரு பார்வையுடன் போலியாய் பெருமூச்சு விட வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் யதீந்திரா.
“சார் ரெடி” சீருடை அணிந்த ஒருவன் அருகே வந்து பவ்யமாய் கூற அவள் புறம் கைகளை நீட்டினான் “ப்ளீஸ்”.
“எங்கே? அப்ப சாப்பாடு!” ஆச்சரியத்துடன் கேட்க மெலிதாய் நகைத்தவன் “அது வர நேரமாகும்” என்று அவளை கை பிடித்து அழைத்துச் சென்றான்.
அது கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த ஏழு நட்சத்திர ஹோட்டல். அதன் மேல் தளத்திற்கு தான் அழைத்துச் சென்றிருந்தான். அந்த இடம் முழுதும் அவனுக்காக ரிசெர்வ் செய்யப்பட்டு நடுவில் ஒரே ஒரு மேஜை மட்டும் போடப்பட்டு அதன் மேல் பூங்கொத்தும் அழகான சிறு பெட்டி ஒன்றும் இருந்தது.
மேலே வந்த யதீந்திராவின் உடலை உப்புக் காற்று தழுவிச் செல்ல பார்வையை சுழலவிட்டாள். முழுநிலவு தங்கத்தில் உருக்கிய வட்டமாய் கடலில் இருந்து எழுந்து கொண்டிருந்தது. கடல் மட்டத்தில் இருந்து இருநூறு அடிக்கும் மேலே இருந்த அந்தக் கட்டிடத்தின் மேல் நின்று பார்க்க வேறொரு உலகிற்கு சென்றது போல் சுற்றம் மறந்து நின்றாள் யதீந்திரா.
“வாவ்... அழகா இருக்கு” புன்னகையுடன் திரும்பியவள் முன்னே மண்டியிட்டிருந்தான் சொரூபன்.
பிரமிப்புடன் பார்த்தவள் முகத்தைப் நோக்கி புன்னகை சிந்தியவன் கைகளை நீட்ட மயங்கிப் போய் அவன் கையில் கையை வைத்தாள். அவள் விரல்களில் வைர மோதிரம் ஒன்றை அணிவித்து “ப்ளீஸ் பீ மை லவ்வர்” என்று அவள் விரல்களில் இதழ் பதிக்க குறு மீசை குத்தியது. குறுகுறுப்புடன் இழுத்துக் கொண்டவள் மேலும் கீழுமாய் தலையாட்டினாள்.
கண்களில் சிறு பளபளப்புடன் எழுந்தவன் அதை அவள் பார்க்கும் முன் மறைத்துக் கொண்டான். அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள அவன் மீது தலை சாய்த்தாள். பௌர்ணமியின் ஒளி அவர்கள் மீது பொழிய நேரம் போவதே தெரியாமல் சந்திரோதயத்தை பார்த்துக் கொண்டிருக்க பின்னே சத்தம் கேட்டது.
வைட்டர் உணவுகளைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தார்.
“சாப்பிடுவோம்” அழைத்துச் சென்றான்.
சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் மீண்டும் அவன் ஃபோன் சட்டைப் பையில் அதிர கிண்டலாய் பார்த்தாள்.
“கொஞ்சம் வேலை”
“காலை முழுதும் அலுவலகத்தில் வெட்டியாய் சுற்ற வேண்டியது. இப்போது வேலையா?” கேலி செய்ய சிறு மன்னிப்பு வேண்டும் புன்னகையுடன் விலகிச் சென்றவனையே யோசனையாய் நோக்கினாள்.
“கிடைச்சிட்டு, ஆனா அந்த கார்மேன்ஸ் கம்பனி ஆவணம் மட்டும் கையில் சிக்குதே இல்ல” என்றான் அழைத்தவன்.
உணவை இருவருக்கும் தட்டில் போட்டுக் கொண்டிருந்தவளைத் திரும்பி வெற்றிப் பார்வை பார்த்தவன் “சரி அதையெல்லாம் நிஷாந்தவிடம் கொடுத்துவிடுங்கள்” என்றான்.
“சார் இன்னொன்று, இன்று நைட் சென்னையில் இருந்து கொடைக்கானலில் இருக்கும் ஒரு வீட்டிற்கும் போவார்கள். இன்று அவர்கள் கொடைக்கானல் வீட்டிற்கு போனால் அங்கே தேட முடியாது. அதோட இன்று இந்த ஆவணங்கள் காணமல் போனால் அவற்றை பாதுகாப்பாய் வேறு இடத்திற்கு மாற்ற கூடும் பிறகு” என்று முடிக்காமல் விட்டார் அந்த நபர்.
சிறிது நேரம் யோசித்தவன் “இன்று வர மாட்டார்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கின்றேன். இனி என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். எதுவாய் இருந்தாலும் நிஷாந்தவை கேளுங்கள்” உத்தரவிட்டு அழைப்பை துண்டித்தான்.
திரும்பி வந்து அமர்ந்தவன் கண்களில் தென்பட்ட வெற்றி பளபளப்பை சரியாக கணித்தவள் “லவ் ப்ரோபோஸ் செய்ததில் இத்தனை சந்தோசமா?” தலை சாய்த்து கேட்க பேச்சின்றி அவளருகே அமர்ந்து தோளோடு அணைத்து அவள் உச்சந் தலையில் கன்னம் பதித்தான்.
அவன் தோளில் தலை சாய்த்திருந்தவள் “என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?” வினவினாள். அவன் மனம் ஏனோ அமைதியின்றி அலைபாய அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
அவன் அமைதி காக்க சற்று விலகி அவன் கண் பார்த்து அவளே மீண்டும் கூறினாள் “நீங்கள் எது கேட்டாலும் நான் தருவேன் தெரியும் தானே?”
அவள் கண்களையே ஆழ்ந்து நோக்கியவன் “எது கேட்டாலும் தர முடியுமா?” அழுத்தமாய் கேட்டான்.
“தொழில் வட்டத்தில் கேட்டுப் பாருங்கள் யதீந்திராவின் வார்த்தை சத்தியத்திற்கு சமம். வார்த்தை மீறியதாக வரலாறே இல்லை” என்ற அவள் கண்கள் எதையோ அவனிடம் சொல்லத் துடித்தது.
அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்தவன் “ப்ராமிஸ்” கேட்டான்.
அவன் கேட்க போவதை அறிந்தவள் போல் அவன் தலையில் கையை அழுத்தி “ப்ராமிஸ்” என்றாள் பதிலுக்கு.
அவள் அவன் கேட்க கூடிய ஒன்றை தன்னுடனே கொண்டு வந்திருந்தாள். அதைத்தான் கேட்பான் என்றும் எதிர் பார்த்தாள். அவனோ சற்றும் எதிர்பாரத விதமாய் முற்றிலும் வேறொன்றை கேட்டிருந்தான்.