மொழி - 01
அந்தக் கம்பனியின் ஐந்து மாடிகட்டிடத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றுதான் அந்த நிறுவனத்தின் புது முதலாளி பொறுப்பேற்க வருகின்றான். அனைத்தும் சுத்தமாகவும் டிசிப்ளினாகவும் இருக்க வேண்டும். அதோடு கொஞ்சம் கோபக்காரன் என்றும் கதை.
அனைவரும் வாசலில் பூங்கொத்துடன் நிற்க ஒருத்தி மட்டும் தன் வேலைகளை கர்மசிரத்தையாய் வேலை செய்து கொண்டிருந்தாள்.
சரியாய் சொன்ன நேரத்திற்கு உள்ளே நுழைந்தது அவனின் கருப்பு நிற மெர்சிடிஸ்- மாய்ப எக்ஸ்லெரோ. உள்ளேயிருந்து இறங்கினான் ஒருவன். கருநீல வெஸ்ட் கோட் காற்சட்டை மேகநீலத்தில் சட்டை அணிந்திருந்தான். ஆறடி உயரத்தில் பெண்களே ஆசைப்படும் பிங்க் கலரில் இருந்தவனை பார்த்து அங்கிருந்த பெண்களில் பலர் கண்ணை விரித்தார்கள்.
அவனுக்கு அடுத்ததாய் ஒருவன் ஆறரையடி உயரத்தில் கம்பீரத்தை எல்லாம் குத்தகைக்கு எடுத்தவன் போல் இறங்கினான். சதரணமாய் கருப்பு நிற காற்சட்டை அதே நிறத்தில் சட்டை சிவப்பு நிற டை என அவனின் மஞ்சள் நிறத்திற்கு தூக்கியடிக்க உள்ளத்தை அள்ளினான்.
இருவரில் யார் முதலாளி… திணறினார் ஜெனரல் மேனேஜர். மற்றவன் கோட்சூட் இல்லமால் பார்ப்பதற்கு சாதாரணமாய் தென்பட்டாலும் அவன் கண்களில் தென்பட்ட அதிகாரத்தில் கொஞ்சம் யோசித்தார்.
“பொஸ்..” சாதாரணமாய் இருந்தவன் ஃபோனை பவ்யமாய் நீட்டினான். அவன்தான் முதலாளி என்று அறிவிப்பதைப் போலிருந்தது அவன் செயல்.
அனைவரும் அவனிடம் பூங்கொத்தை நீட்டினார்கள். சிறு அலட்சிய கையசைவில் மறுக்க அருகே நின்றவன் கண்கள் அங்கு கூடியிருந்த கூட்டத்தை அளவேடுத்தது. அவன் தேடிய நபர் தென்படமால் போகவே முகம் இறுக தன் பாஸை பார்த்தான்.
“உங்கள் ஒருவருக்கும் வேலை இல்லையா? இங்கே குவிந்து நிற்கின்றீர்கள்?” அவன் தமிழ் சற்று வித்தியாசமாக ஒலித்தாலும் அறுத்து உறுத்து வந்தது. “போய் எல்லோரும் அவரவர் வேலையைப் பாருங்கள்” என்றவன் ஜெனெரல் மனஜேரிடம் பார்வையைத் திருப்ப “இந்த வழி” அவன் அறையின் வழியைக் காட்டினார்.
அவர்கள் உள்ளே செல்ல மீதி அலுவலகர்கள் ஸ்டாப் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அனைவர் மனதிலும் ஒரேயொரு வார்த்தை எதிரொலித்தது ‘கஸ்டம்தான்’.
அவர்கள் அறையில் அமர்ந்தவன் தன்னைதானே அறிமுகப்படுத்தினான் “ஜெயசுந்தர நிஷாந்த காமினிகே விக்ரமசிங்க, யு கேன் கோல் மீ விக்ரமசிங்க. அண்ட் திஸ் இஸ் சொரூபன், எனக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுக்க வேண்டும்.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே சொரூபன் இரும “தண்ணி கொண்டு வாருங்கள்” என்றான்.
அவர் அழைப்பு மணியை அழுத்த உள்ளே வந்து நின்ற பியோனின் முன் வைத்தே ஏளனமாய் கேட்டான் “ஏன் நீங்கள் கொண்டு வர மாட்டீர்களா?”
“நா நானா... நான் ஜெனரல் மனஜேர்” தடுமாறினார்.
“பார்க்கிறது மாமா வேலை எந்த போஸ்டா இருந்தா என்ன?” கிண்டலாய் கேட்டவன் முகம் இறுக “நான் சொல்வதை செய்யத்தான் உங்களுக்கு சம்பளம் போய் கொண்டு வாருங்கள்” சுழல் நாற்காலியில் திரும்பியவன் அருகே நின்றவனை நோக்கி “சொரூபன் இந்த கம்பனியின் பழைய முதலாளியை பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள்” இன்னமும் விழித்துக் கொண்டிருந்த ஜெனரல் மனஜேரிடம் திரும்பி “நீங்கள் இன்னும் போகவில்லையா?” விசாரித்தான்.
மனிதர் வியர்த்து விறுவிறுக்க வெளியே வந்தவர் கைகுட்டையால் வழுக்கையில் வழுக்கிய வியர்வையை ஒற்றினார்.
அவர் வெளியே சென்றதும் நாற்காலியில் இருந்து சட்டென எழுந்தவன் “சொரூபன் ஒயட்ட பிஸ்சு தமாய்” (சொரூபன் உனக்கு பைத்தியம் பிடிச்சிட்டு). என்னால் நடிக்க முடியாது. பாவம் ஓல்ட் மேன்” பரிதாபப்பட்டான்.
“மச்சா நீ என் யாழுவா...(நண்பன்)”
“ஆ ஊன்னா இது ஒன்றை சொல்லி என்னை ஓப் செய்” எரிச்சலுடன் மொழிந்தான் நிஷாந்த.
“நான் போய் முதலாளியை... பழைய முதலாளியை கூட்டிட்டு வாரேன்” ஒரு நக்கல் சிரிப்புடன் வெளியே சென்றான் சொரூபன். வெளியே வியர்த்து வழிந்து நின்றவரிடம் “என்ன செய்வது எங்கள் பொஸ் கொஞ்சம் கோபக்காரர், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யுங்கள். தண்ணீர் தானே கேட்டார், வாஷ்ரூம்மை கழுவ சொல்லியா கேட்டார்!” அவருக்கு ஆறுதல் கூறுவது போல் ஊருக்கே அவருக்கு நேர்ந்த அவமானத்தை பறை தட்டினான்.
“அதுசரி உங்கள் முதலாளியம்மா அறை எது?” ஏளனமாய் கேட்கவே அந்த வாரந்தவின் மறுபுறமிருந்த அறையைக் கைகாட்டினார் ஜிம். பாவம் அவரால் வாய் திறக்கக் கூட முடியவில்லை. கவர்ச்சியான ஒரு புன்னகையை சிந்திப் போக அவருக்கோ பூச்சியை பிடிக்க சிலந்தி கட்டியிருக்கும் வலைதான் நினைவுக்கு வந்தது.
*****
கண்ணாடி வழியே நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் சுழல் நாற்காலியில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தார்.
“அம்மாடி...”
“நான் பார்த்துக் கொள்கின்றேன் தாத்தா. இதற்குத்தானே இத்தனை காலம் நாம் காத்திருந்தோம். நீங்கள் போங்கள்”
அவளை வருத்ததுடன் பார்த்தவர் கதவைத் திறந்து வெளியே செல்லவும் சொரூபன் உள்ளே வரவும் சரியாய் இருந்தது. அதில் அவன் உள்ளே வந்த சத்தமே கேட்கவில்லை. தன் முன் கண்மூடி சாய்ந்திருந்தவளை அளவெடுத்து அவன் கண்கள்.
நிலவைப் போல் வட்ட முகம், வில்லாய் வளைந்த புருவத்தின் கீழ் நீண்ட கண்கள் மூடியிருக்க விசிறி போல் கன்னமேட்டில் படிந்திருந்தது இமைகள். நீண்ட நாசி, சரியாய் நாசியின் கீழ் நயன்தாராவை போல் ஒரு மச்சம், அழகாய் ஒரேஞ்ச சுளைகளை ஓட்ட வைத்தது போன்ற சொக்லேட் இதழ்கள் இயற்கையின் முரண்பாடோ, தேன் நிறம், புருவத்தின் மத்தியில் சிறிதாய் ஒரு சிவப்பு பொட்டு, உடலைத் தழுவியிருந்த கருநிற சேலை, அழகிதான். ஆனால் முகம்தான் செந்தளிப்பு என்பதேயின்றி சோர்ந்து களைத்து போனது போலிருந்தது. இதற்கு முன் அவளைப் பார்த்தது ஞாபகத்தில் வந்தது. குண்டு குண்டென்று செழுமையான உடலும் கன்னமுமாய் பந்து போல் குதித்து கொண்டிருந்தவள் இன்று மெலிந்திருந்தாள். ‘என்னாச்சு’ அவனறியாமலே மனம் பதறியது.
“க்கும்” தொண்டையை கனைத்தான் சொரூபன்.
கண் திறந்து பார்த்தவள் முகம் பூவாய் மலர்ந்தது ‘சொரூபா’.
சட்டென எழுந்தவள் தன் கண்முன் நிற்பவனை மனதினுள் நிறைத்தாள். ஆறரை அடி உயரத்தில், அளவான உடல்கட்டுடன் சாதாரண உடையிலும் கம்பீரம் குறையாமல் நின்றான். நீள்வட்ட முகம், நீண்டு அடர்ந்த இமைகளின் கீழ் பளிச்சிட்ட கண்கள், கூர்நாசி, அழுத்தமான உதடுகள், கன்னத்தில் அளவாய் ட்ரிம் செய்யப்பட்ட தாடி இதற்கு முன் பார்த்ததை விட ஆரோக்கியமும் அழகும் கூடித் தெரிய நிம்மதியில் புன்னகை மலர்ந்தது.
“சொரூபன்” கை நீட்டினான்.
அவன் பெரிய கைகளில் தன் கைகளை வைத்தவள் “யதீந்திரா...” அவள் பார்வை ஒருவித எதிர்பார்ப்புடன் அவன் மீது படிந்தது.
“நைஸ் டு மீட் யூ மிஸ்...” இழுத்தவன் அவன் நெற்றியை பார்த்துக் கேட்டான் “மிஸ்தானே” அவன் உள்ளே வந்ததிலிருந்து அவள் பொட்டு அவனை தொல்லைப்படுத்தியது.
மெலிதாய் நகைத்தவள் “மிஸ்தான், சிவப்பு பொட்டு ப்ரொபோஸ் தொல்லையை தவிப்பதற்காக” அவன் பார்வைக்கும் சேர்த்து பதிலளித்தாள்.
அவள் வார்த்தையில் நிம்மதியுற்றாலும் அதைப் பற்றி கவலையற்றவன் போல் “பொஸ் உங்களை சந்திக்க வேண்டும் என்றார்” என்றவனை பார்த்து புருவம் உயர்த்தியவள் போகலாம் என்பது போல் கைகாட்டினாள்.
அவன் அலுவலக அறையை, முன்பு அவளுடையதாக இருந்த அறையை தட்டினாள். “கம்மின்” உள்ளிருந்து குரல் கேட்கவே இருவரும் சேர்ந்தே உள்ளே சென்றார்கள்.
“ப்ளீஸ் சிட்” அவன் முன்னிருந்த கதிரையைக் காட்டினான் நிஷாந்த.
“தேங்கயூ மிஸ்டர் விக்கரமசிங்கே” கரம் குவித்தாள். அவளை சுவாரசியமாய் பார்த்தவன் ஓரப் பார்வையால் சொரூபனை அளந்தான். அருகே இருந்த இன்னொரு கதிரையில் அலட்சியமாய் கால் நீட்டி அமர்ந்திருந்தான் அவன்.
“சோ நீங்க ஏதோ சொல்ல வேண்டும் என்றீர்கள்?”
“சாரி சாரி” புயல் போல் நுழைந்தாள் ஒரு பெண். மூவரும் திரும்பிப் பார்க்க “சாரி இந்த பைல் எடுத்து வர நேரமாயிட்டு” யதீந்திராவிடம் பைலை நீட்டியவாறே கூறினாள் “பைல்”.
அருகே கம்பீரமாய் அமர்ந்திருந்தவனை பார்த்து கண்ணை விரித்தவள் “ஹாய் ஹன்ட்சம்... யார் நீங்க?” விசாரிக்க யதீந்திரா நிஷாந்த இருவர் முகத்திலும் எரிச்சலின் கோடுகள்.
“நான் ஜானகி, இந்திராவின் பிஏ”
“நான் சொரூபன்” என்று மட்டும் பதிலளித்தான் அவன்.
“இந்த பிங்கியின் பிஏ இல்லையா?” அவளே அவன் பதவியை முடிவு செய்தாள்.
‘ஏதே பிங்கியா!’ இரு ஆண்களுமே முழித்தார்கள்.
“ஹெலோ என் பெயர் ஜெயசுந்தர நிஷாந்த காமினிகே விக்ரமசிங்க” எரிச்சலுடன் இடையிட்டான் அவன்.
“உங்கள் நாட்டில் பெயருக்கு பஞ்சம் இல்லையா?”
“ஏன் கேட்கிறாய்?” சந்தேகமாய் கேட்டான் நிஷாந்த.
“இல்ல ஒருத்தரே இப்படி அஞ்சாறு பேர் வச்சிருக்கீங்களே அதான் கேட்டேன்” என்றவளை முடிந்த மட்டும் முறைத்தான் அவன்.
சொரூபனிடம் திரும்பியவள் “நீங்களும் பிஏ நானும் பிஏ இருவரும் நண்பர்கள் ஆகிருவோம். அதற்கு பதிலாய் எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் போதும்” பலமாய் பீடிகை போட்டாள்.
‘என்ன’ புருவத்தை உயர்த்தினான் சொரூபன்.
வாயருகே கை வைத்து மேடை ரகசியமாய் “உங்கள் பாஸ் ஸ்கின்னுக்கு என்ன போடுறார் என்று மட்டும் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்க பொங்கிய சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவாறே தன் நண்பனை நோக்கினான் சொரூபன். இப்போது அவன் பிங்க் நிற முகம் சிவப்பாய் மாறியிருந்தது.
ஏதோ பதிலளிக்க வாயெடுப்பதற்குள் “ஜானகி...” என்ற யதீந்திராவின் அதட்டல் அவளை அடக்கியிருந்தது. வாயில் விரல் வைத்து நல்லபிள்ளையாய் நின்றவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் சொரூபன். நண்பனின் சிரிப்புச் சத்தத்தை வியப்புடன் பார்க்க சட்டென நிறுத்தியவன் சரிந்து அருகே இருந்த கதிரையை அவள் அமர்வதற்கு இழுத்துவிட்டான்.
“வேண்டாம் சொன்னால் கேளுங்கள், இவளை வைத்துக் கொண்டு ஒரு வேலை செய்ய முடியாது”
“உமக்கு பொறாமையே, இவவை வைச்சுக் கொண்டு வேலை செய்ய முடியாதெண்டால் ஏன் வேலைக்கு வைத்திருக்கின்றீர்” இலங்கைத் தமிழில் கேட்க அவளோ கண் விரித்து அவன் தமிழை ரசிக்க, அவன் நண்பனோ அவனை ஆராய்ச்சியாய் நோக்கினான்.
“உங்கள் இஷ்டம்” தோளை குலுக்கி விட்டு நிஷாந்தவை பார்த்து கூறினாள் “நான் சென்னதுதான் நீங்கள் இந்த கம்பெனியை திட்டமிட்டு உங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளீர்கள். அதில் எனக்கு பிரச்சனையில்லை. எனக்கு ஒரே ஒரு நிபந்தனைதான் இந்த பைலில் பெயர் குறித்துள்ள வேலையாட்களுக்கு எதுவித பிரச்சனையும் வரக்கூடாது. அவர்கள் அனைவரின் பிள்ளைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். குறைந்தது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் வேலைக்கு உத்தரவாதம் வேண்டும்”
லேசாய் உதடு பிரியாமல் நகைத்த சொரூபன் “அதை சொல்லும் நிலையில் நீர் இல்லையே!” என்றான் கேலியாக.
“நிச்சயாமாய் அப்படி ஒரேடியாக சொல்லிவிட முடியாது. இதற்கு நீங்கள் மறுத்தால் நான் வழக்குப் போடுவேன்” அதற்கும் ஏளனமாய் பார்த்து ஏதோ சொல்ல வர “நான் தோற்கலாம், ஆனால் உங்களுக்கு கம்பனி கைக்கு வர நாளாகும்” உறுதியாய் கூறினாள். “நினைத்த வேகத்தில் வேலை நடக்காது. வெளிநாட்டிலிருந்து வந்து செய்யும் முதலீடு... என்னை விட அனுபவம் வாய்ந்தவர்கள் உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை” இருவரையும் நோக்கினாள்.
“சரி எனக்கு ஒரு சந்தேகம்” சொரூபன் தொடங்க இடையிட்டாள் ஜானகி “எனக்கும் ஒரு சந்தேகம்”. மூவரும் கேள்வியாய் அவளை நோக்க “இல்ல முதலாளி பிங்கி தானே ஏன் லெமன் கேள்வி கேட்குது”.
அவனையும் கலரை சொல்லி அழைத்தவளை முறைத்த சொரூபன் “ஹ்ம்ம்... உங்கள் முதலாளியம்மவிடம் கதைக்க நானே போதும் அதுதான்” என்றாவாறே யதீந்திராவிடம் திரும்பினான் “இது உங்கட மாமாவின் கொம்பனிதானே” அவன் கேள்விக்கு ஆமோதிப்பாய் பார்த்திருந்தாள்.
“மாமாவின் கொம்பனியையே எங்களுட்ட விட்டுக் கொடுத்து இருக்கின்றீர்? உம்மை எப்படி நம்புவது?” கேள்வியாய் பார்த்தான்.
“கர்மா...” என்றாள் உணர்ச்சியற்ற முகத்துடன் “ஒரேடியாக விட்டுக் கொடுக்கவில்லை. முக்கியமாய் இந்த கம்பனியை விட்டுக் கொடுக்கும் எண்ணமும் இருக்கவில்லை. சிறு பிசகு, இப்போது சிலவற்றை என்னால் சொல்ல முடியாது. போகப்போக உங்களுக்கே புரியும்” காற்றை கற்றையாக வாய் வழி வெளியிட்டு கேட்டாள் “சோ என் நிபந்தனைகளை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?”
இருவருமே யோசனையுடன் அவளைப் பார்த்தார்கள். இங்கே வரும்போது அவளிடமிருந்து இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. கொம்பனியின் பழைய ஆட்களில் யார் நம்பிக்கைக்குரியவர் என்ற விபரம் ஏதும் தெரியாமல் இப்படி ஒரு ஒப்பந்தத்தை போடவும் முடியாது.
“இந்த கொம்பனியை கடந்த ஐந்து வருடமாக நடத்தியது நீர்தானே” சற்று இடைவெளிவிட்ட சொரூபன் “ஐந்து வருடங்களில் தரமான முறையில் வளர்திருக்கின்றீர். அத குறை சொல்ல ஏதுமில்ல. அதனால் உம்மட வேலையாட்களின் வேலை திறத்தில் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் சொல்றதுக்கு இல்ல. ஆனா அவர்கள் யாருக்கு உண்மையா இருப்பீனம் என்றுறதுதான் இப்ப பிரச்சனையே....” அவன் கூற்றை விளங்கிக் கொள்ள சிறிது நேரம் கொடுத்தவன் “சோ ஒரு மூன்று மாதம் கழித்து அவர்கள் வேலை பின்னணி பார்த்துதான் உறுதிப்படுத்த முடியும்”
“சரி அப்ப மூன்று மாதம் கழித்தே நாங்கள் அக்ரிமென்ட் சைன் பண்ணுவோம்” கதிரையிலிருந்து எழுந்து வெளியே செல்ல அவளுடன் அந்த ஜானகியும் இணைந்து கொண்டாள். சென்றவளையே இருவரும் பார்த்திருந்தார்கள்.
மேசையில் விரலால் தாளம் போட்டவாறே யோசனையாய் பார்த்திருந்த சொரூபனை அழைத்தான் நிஷந்தா “மச்சா...”.
மர்ம சிரிப்புடன் அவனைப் பார்க்க நிஷாந்த ‘வேண்டாம்’ என்பது போல் தலையாட்டினான்.