பாவக் கணக்கு
சூரியன் அந்தி சாய பூஜை முடித்து வைரவர் கோவிலடியில் அமர்ந்திருந்தாள் நந்தகி. அவளுடன் வந்திருந்த தோழி அருள்மொழி அருகே அமர்ந்து கழுத்தை வெட்டினாள்.
“என்னாச்சு” என்றவளிடம் “பாவம் சொல்லக் கூடாது ஆனா அந்த வயதான மனிதர் பாவம்” என்றவளைப் பார்த்து சிரித்தாள் நந்தகி.
“என்ன சிரிக்கிறீர்?” சிறு கோபத்துடன் கேட்க “கோபமாய் இருந்தாலும் அழகாய் தான் இருக்கிறீர் அருள்மொழி, ஆனா அதுக்கு அர்த்தம் அதில்லை” சிறு நகையுடன் கூறினாள்.
“அப்படி என்றால்...” ஆர்வமாய் நோக்கினாள். இப்படி ஆரம்பித்தாலே எப்படியும் கதை சொல்லுவாள்.
“அதுக்கு ஒரு கதை இருக்கு கேட்க நீர் தயாரா?”
“தங்கள் சித்தம் என் பாக்கியம் அடியவள் காத்துக் கொண்டிருகின்றேன். சீக்கிரம் சொல்லும்”
கைகளை நீட்டி சுற்ற “என்ன செய்யுறீர்” தெரிந்தே சிறு கடுப்புடன் கேட்டாள்.
“ஹ்ம் நுளம்புத்திரி சுத்த விடுறன் பழைய படங்களில் எல்லாம் சுத்துவினம் அது போல்” விளையாட்டாய் கூற “சுத்தினது போதும் கதையை சொல்லும்” என்றாள்.
முன்னமொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்....
கதை ஸ்டார்ட்
***
சூரியன் இன்னும் உதித்திருக்கவில்லை. ஆனாலும் ஆட்களின் நடமாட்டமும் தீப்பந்தங்களுமாய் அந்த ஆற்றங்கரையே அல்லோகலபட்டுக் கொண்டிருந்தது. ஆற்றின் மறுபுறம் இருந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது தான் அந்த இடத்தை வந்தடைந்த பிராமணர் கூட்டத்தின் தலைவர் ரங்காச்சாரி பிள்ளைவாள்.
“என்ன பிள்ளைவாள், அங்கே ஏதும் கலவரமா?” யோசனையுடன் கேட்டார் அவரின் அத்திம்பேர் கிருஷ்ணா ஐயங்கார், அவருக்கு பயங்கர கிருஷ்ண பக்தி ஏகாதசி விரதத்தை எப்படி முடிப்பது என்ற சிந்தனயில் இருந்தார். இங்கே நிலவரம் கலவரம் என்றால் வேறு இடம் பார்க்க வேண்டுமே.
அவர் கவலை அவருக்கு.
பிள்ளைவாளின் கழுகுக் கண்களில்பட்டது மறுபுறம் நடந்து கொண்டிருந்த சமையலும் அதை மேற்பார்வை செய்த அரசனும். அவரின் தொந்தியுடன் அணிந்திருந்த பூணுலும் குலுங்க உற்சாகக் குரலில் கூறினார் “அத்திம்பேர் இன்று உமது விரதம் பேஷாக நிறைவேறும்”
“எப்படி” என்றவாறே அருகில் வந்தார் கிருஷ்ணா ஐயங்கார்.
“இது அம்பரிஷனின் நாடு”
“எந்த அம்பரிஷன் அந்த துருவாசரை சுதர்சனம் துரத்தியதே அந்த அம்பரிஷனா”
“அது தெரியல... ஒரு அரசன் அவ்வளவுதான், அரசனின் பெயரை கனக்க ஆராய்ச்சி எல்லாம் செய்யாதீர்” கடிந்தவள் திரும்பிப் பார்க்க தோழி அருள்மொழியுடன் மேலும் ஒரு ஐந்து பேர் அமர்ந்து அவள் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை வியப்புடன் நோக்க “எங்களுக்கும் உந்த கதை தெரியாது சொல்லம்மா நாங்களும் கேட்கிறோம்” என்றனர்.
“சரி எங்க விட்டன்”
“இது அம்பரிஷனின் நாடு”
“அ.... இது அம்பரிஷனின் நாடு”
“எந்த அம்பரிஷன் ஏகாதசி விரதம் எடுப்பதாக ஊரெல்லாம் பெயராய் இருக்கே அவனா” குடுகுடுவென ஓடி வந்தார். அவர் தொப்பையும் பிள்ளைவாளின் தொப்பையுடன் போட்டி போட்டு குலுங்கியது.
“அவனே தான் காணும் வாரும்” என்றவாறு “ஆற்றினைக் கடக்க படகுத்துறையை நோக்கி நடந்தார் பிள்ளைவாள்.
படகுத்துறையில் படகில் துடுப்பை அணைத்துப் பிடித்தபடி உறங்கி கொண்டிருந்தான் படகோட்டி. “என்னதிது கிருஷ்ணா, இப்படி உறங்குகின்றான். அப்பா படகோட்டி எழுந்திரு” எழுப்பினார் பிள்ளைவாள்.
“நாங்கள் காசி யாத்திரை முடித்து திரும்புகின்றோம். ஆற்றின் அக்கரை போக வேண்டும். அழைத்துச் செல்ல முடியுமா? அதற்கு எத்தனை பொற்காசு கொடுக்க வேண்டும்”.
“வணக்கம் சாமிங்களா, உங்களை அழைத்துச் செல்லத்தான் இங்கே காத்திருக்கின்றேன்”
“ஏது நீ முற்றும் உணர்ந்த ஞானியாக இருக்கின்றாயே! நாம் இங்கே வருவோம் என்பது உனக்கு முன்னமே தெரியுமா?” உள்ளே ஏற பிள்ளைவாளுக்கு கை கொடுத்தவாறே விசாரித்தார் கிருஷ்ணா ஐயங்கார்.
“அந்த ஞானமெல்லாம் எனக்கு எங்கே சாமி, அது நம் மன்னர் உத்தரவு, யாராவது இக் கரையில் நின்றால் அக்கரைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்” ஆறுபேர் ஏறியிருக்க படகை செலுத்த துடுப்பை எடுத்தான்.
“அடேய் படகோட்டி சற்று பொறுமையா இரும், மீதி பேரும் ஏறட்டும்”
“முடியாது சாமி முடியாது, அவர்களும் ஏறினால் நம் அனைவருக்கும் வைகுண்ட தரிசனம் நிச்சயம்”
விழி பிதுங்கப் பார்த்தவர்களைப் பார்த்து “ஆறு பேரைத் தான் தாங்கும் இந்தப் படகு மீதிப் பெரும் ஏறினால், படகு கவிழ்ந்து விடும். ஆற்றில் உள்ள முதலைகள் நம்மை ஏகாதசிக்கு பாரணை செய்து அனைவருக்கும் வைகுண்டம் தான் இன்று ஏகதாசி இல்லையா?” என்றவாறே துடுப்பைப் போட்டான் படகோட்டி.
“நீ பொற்காசுகளுக்காக பொய்யுரைக்கிறாய் படகோட்டி”
“உங்கள் பொற்காசு தேவையில்லை சாமிகளே, மன்னர் எனக்கு தேவையான பொற்காசு வழங்கியுள்ளார். உங்களைப் போன்றவர்களை அழைத்து செல்வதற்காகவே” அலட்சியமாக கூறிய படகோட்டி படகைச் செலுத்த அப்போது தான் அங்கு நின்ற பிராமணர்களுடன் சேர்ந்து கொண்ட பிச்சைகாரனின் காதிலும் விழுந்தது.
மீண்டும் வந்து மீதி ஆறுவரையும் ஏற்றிச் சென்றதை சோகமாய் பார்த்திருந்தான் அந்தப் பிச்சைகாரன். நம்மை ஏற்றிச் செல்வானா? இல்லையா?
மீண்டும் வந்த படகோட்டி படகில் ஏறமால் நின்ற பிச்சைகாரனைப் பார்த்துக் கேட்டான் “நீங்கள் வரவில்லை?”
“என்னையும் ஏற்றிச் செல்வாயா?”
“மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? பாதிப் பிரச்னையை நீங்களே ஆரம்பித்து வையுங்கள் பின் சாதிப் பிரச்சனை என்று கிளப்பி விடுங்கள். ஏறுமையா” என்ற படகோட்டி துடுப்பை தூக்க அந்த துடுப்பு மரத்தில் தட்டுப்பட்டதில் அதுவரை அந்த மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கருடன் விழித்து வானில் பறந்தது.
கருடனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்ட படகோட்டி துடுப்பை போடத் தொடங்கினான்.
ஆற்றின் நீளத்திற்கு பறந்த கருடன் சமையல் நடக்கும் இடத்தின் அருகே ஆற்றிலிருந்து கரையேறிய நாகம் கண்ணில் பட அதை நோக்கி தாழப் பறந்து அப்படியே அலகால் கொத்திக் கொண்டு மேல் எழும்பிய கருடன் பாம்பைக் காலின் கீழ் பிடித்து வைத்தவாறே மரத்தில் அமர்ந்தது.
அந்த மரத்தின் கீழ் தான் சற்று முன்னர் சமைத்த உணவுகளை பெரிய பெரிய அண்டாவில் கொண்டு வந்து வைத்திருந்தனர். வலியில் நெளிந்த பாம்பு விசத்தை கக்க அது நேரே பாயாச அண்டாவின் உள்ளே விழுந்தது.
சற்று நேரம் கழித்தே அங்கு வந்த தலைமை சமையல்காரர் “இந்த நாராயாணன் இதை மூடமால் சென்றுவிட்டானே மூடன்” பேசிக் கொண்டிருக்க, அந்த அண்டாவை மூட மூடியுடன் கூடவே ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டு வந்தான் நாராயணன். ஐந்து பேர் தூக்கி செல்லும் பெரிய அண்டா. ஐவருமாய் சேர்ந்து அந்த அண்டாவை தூக்கி சென்று சபை நடக்கும் இடத்தின் அருகே வைத்தனர். அவர்கள் நின்ற இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் மன்னன் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தான்.
“வர வேண்டும் வர வேண்டும். நான் அளிக்கும் தானத்தை ஏற்று என்னை சிறப்பிக்க வேண்டும்” பணிவுடன் கேட்டுக் கொண்டான்.
அப்போது தான் நீராடி சுத்தமாகி வந்த பிராமணருடன் நீரடாமல் வந்த பிச்சைக்காரனை பார்த்து “தாங்கள் யார்?” மன்னன் விசாரித்தான்.
“நான் பிச்சைக்காரன்” என்றான் பிச்சைக்காரன்.
சட்டென சிரித்த மன்னன் “தாங்கள் யாராய் இருந்தாலும் சரி இது விரத உணவு அதனால் தாயை கூர்ந்து நீராடி வர வேண்டும்” பணிவுடன் கேட்டுக் கொண்டான்.
பிச்சைக்காரனுக்கு நீராடுவதே பிடிக்காது, நீராடி பழக்கமில்லாதவன் ஆனால் கேட்பது மன்னர் அதுவும் பணிவுடன், வேறு வழியின்றி நீராட சென்றான்.
பிராமணர்களை அழைத்து தானே முன்னின்று பவ்யமாக உணவு பரிமாறினான் மன்னன். கடைசியாய் பாயசத்தையும் ஊற்ற வயிராற உண்ட மகிழ்ச்சியில் அதனையும் ஒரு கை பார்த்தனர்.
அனைவரும் உண்ட களை தீர அமர்ந்திருக்க தாம்பூலம் கொண்டு வந்த மன்னன் கையில் இருந்த தாம்பூல தட்டு கீழே விழுந்து சிதறியது.
பண்ணிரெண்டு பிராமணர்களும் இறந்து கிடந்தார்கள்.
“நாராயணா இது என்ன கொடுமை! நான் எத்தகைய பாவத்தை செய்துவிட்டேன்” மன்னன் கலங்கினான்.
நீராடி வந்த பிச்சைக்காரன் இறந்து கிடந்த பிராமணர்களை பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.
**
“இப்போ சீன் எமலோகத்திற்கு ஷிப்ட் ஆகுது” என்றாள் நந்தகி.
“ஏன்?”
“பாவக் கணக்கை அங்கே தானே பார்ப்பார்கள்”
**
எம லோகத்தின் தார்பாரில் அமர்ந்திருந்த எமதர்ம ராஜன் சித்திரகுப்தனை பார்த்து புன்னகைத்தான்.
“சித்ரகுப்தா என்ன நடந்தது?” எமன் தன்னை பார்த்து நகைக்கிறான் என்பது தெளிவாகவே புரிந்தது சித்திரகுப்தனுக்கு
“பிரபு... நானே பாவம் என்ன செய்வது என்று தெரியாமல்... அறியாமல்... இருக்கின்றேன் தாங்கள் அறியாததா இந்த சிறுவனை பார்த்து தாங்கள் நகைக்கலாமா” பாவமாய் கேட்டான் சித்திரகுப்தன்.
“ஹாஹாஹாஹாஹா” சத்தமாய் நகைத்த எமதர்ம ராஜன் “பரவாயில்லை சித்தரகுப்தா, என்னதான் உன் பிரச்சனை என்று நீயே வாயைத் திறந்து சொல்லேன்” என்றான் எமதர்மராஜா.
“தாங்கள் அறியாததா! இருந்தும் என் வாய் மூலம் கேட்க விரும்புகின்றீர்கள். நானே சொல்கின்றேன்” என்ற சித்திரகுப்தன் தனது தர்ம சங்கடத்தை சொல்ல தொடங்கினார்.
“இப்போது, சற்று முன், பூலோகத்தில் ஒரு சம்பவம் நடந்தது மன்னன் அம்பரீசனின் ஏகாதசி விரத பாரனையின் போது 12 பிராமணர்கள் இறந்துவிட்டனர். இந்த பிராமண ஹத்தி தோஷத்தை யார் கணக்கில் எழுவது என்பது குழப்பமாக உள்ளது பிரபு”.
மென்னகை புரிந்த எமதர்மன் உத்தரவிட்டான் “இன்னும் விளக்கமாக சொல் சித்திரகுப்தா”.
“இன்று நடந்த இந்த சம்பவத்தில் கருடன், பாம்பு, மன்னன் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். கருடன் தனது இரைக்காக பாம்பினை கவ்வியது. அது இயற்கை நியதி. அதனை தவறு சொல்ல முடியாது”.
“சரிதான் கருடன் பம்பைதான் உண்ண வேண்டும். அடுத்தது...”
“அடுத்தது பாம்பு அதன் மரண வேதனையில் விஷத்தை கக்கியது. அதற்கு யாரையும் கொல்ல வேண்டும் என்று எண்ணமே இல்லை. அது வலியின் வெளிப்பாடு”
“அதுவும் உண்மைதான். இதில் என்ன பிரச்சனை உமக்கு” எமதர்ம ராஜன் வேண்டுமென்றே சித்ரகுப்தனை சீண்டினான்.
‘ஏன்’ என்பது போல் பார்த்த சித்ரகுப்தன் தொடர்ந்தான்.
“அடுத்தது மன்னன்... மன்னனுக்கு பிராமணர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அந்த பாயாசத்தில் அவன் விஷம் கலக்கவில்லை. விஷம் இருப்பது தெரிந்திருந்தால் கொடுத்தும் இருக்க மாட்டார். இப்போது இந்த 12 பிராமணர்களை கொன்ற தோஷம் யாரை சேரும்? என்பதுதான் எனது தர்ம சங்கடமான நிலை பிரபு” என்றார் சித்திரகுப்தன்.
ஒரு மர்ம சிரிப்புடன் “சித்ரகுப்தா! இதற்குரிய பதிலை இப்போது உனக்கு சொல்ல முடியாது. அந்த கணக்கினை நிலுவையில் போடு. காலம் வரும் போது அதை யார் தலையில் போட வேண்டும் என்பதை நான் உனக்கு கூறுகின்றேன்” என்றார் எமதர்மராஜா.
**
“இந்த மூவரில் யார் கணக்கிலும் அந்த கொலை பாவம் வரவில்லையா? எப்படி?” ஆச்சரியத்துடன் கேட்டால் அருள்மொழி.
நந்தகி அவளை புன்முறுவலுடன் நோக்க “அப்படியானால் இதை யார் கணக்கில் போடுவது?” என்ன யோசித்துப் பார்த்தும் விடை கிடைக்காமல் அவளை பார்க்க “மீதி கதையையும் கேள்” என்றாள்.
**
அந்த பாவக்கணக்கு நிலுவையிலேயே நிற்க காலங்கள் உருண்டோடி அந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்திருந்தது.
அம்பரீசன் மன்னரின் கொடை குணத்தையும் அவன் அவனின் பெருமையை கேட்ட இன்னொரு பிரமணார் கூட்டம் அவனைச் சந்திக்க தலைநகருக்கு வந்திருந்தது.
அந்த அரண்மனை வாசலில் அதே பிச்சைக்காரன் இன்றும் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தான்.
வந்த பிராமணர் கூட்டத்திற்கு வழி தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவர்கள், அந்த பிச்சைக்காரனிடமே “அரண்மனைக்கு போகும் வழி எது” விசாரித்தார்கள்.
அவர்களை மேலிருந்து கீழாக நோக்கிய பிச்சைகாரன் அரண்மனைக்கு போகும் வழியை கை காட்டினான்.
“நன்றியப்பா” என்ற வார்த்தையுடன் அவர்கள் செல்லவே, செல்லும் அவர்களையே நோக்கிய பிச்சைக்காரன் திடிரென அவர்களை அழைத்தான் “ஐயா பிராமணர்களே!”.
“ஏனப்பா தவறான பாதையை காட்டி விட்டாயா?” கேட்டனர்.
“அப்படியெல்லாம் இல்லை ஐயா, இந்த மன்னன் பிராமணர்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவான். அதுதான் எச்சரிக்க அழைத்தேன்” என்றான்.
**
“சித்திரகுப்தா....” எமதர்மனின் கர்ஜுனையில் எமலோகத்தின் தார்பாரே அதிர்ந்தது.
அரைகுறை உறக்கத்தில் எழுதிக் கொண்டிருந்த சித்ரகுப்தனின் தொப்பியும் இறகும் திசைக்கொன்றாக பறக்க அரக்க பறக்க எழுந்து நின்றான் சித்த்ரகுப்தன். இரவானால் இந்த பிராமண ஹத்தி பாவத்தை யார் தலையில் போடுவது என்ற சிந்தனையே புழு போல் தலையை குடைந்து கொண்டிருந்தது.
இதற்கு மிருகினஜம்போவே பரவாயில்லை என்று தோன்ற தொடங்கிவிட்டது.
**
“ஏது மிருகினஜம்போவா?
“அதான் கிருமிபோஜனம், ச்சு சித்ரகுப்தன் சுஜாதா பேன்”
“சித்ரகுப்தனா இல்லை நீரா?”
“ஹிஹிஹி கதையை கேளும்”
**
“அந்த நிலுவையில் உள்ள மொத்த பாவத்தையும் இந்த பிச்சைக்காரனின் கணக்கில் எழுது” என்றார் எமதர்மராஜான்.
சித்ரகுப்தன் மனமோ ‘ஆஹா அந்த பாவக் கணக்கிற்கு ஒரு முடிவு கிடைக்கின்றது’ என குதுகலிக்க சந்தேகமாய் கேட்டார் “ஆனால் பிரபு அந்த பிச்சைக்காரன் இதில் சம்பந்தப்படவே இல்லையே!”.
புன்னகைத்த எமதர்மராஜன் “ஒருவர் செய்த பாவத்தை கதைத்தால் அந்த பாவத்தின் பாதிப் பாவம் கதைப்பவனை போய் சேரும். அதே போல் செய்யாத ஒரு பாவத்தை கதைத்தால், அந்த முழுபாவமும் கதைப்பவனை சென்றடையும். மன்னன் எண்ணத்தினாலும் எண்ணாத ஒரு பாவத்தை இவன் சொன்னதால் அந்த முழு பாவமும் இவனையே சாரும்”.
“இதுதான் பாவக்கணக்கு... எமனின் நியாயக் கணக்கு” மீசையை முறுக்கினார் எமதர்மராஜா.
*****
“இப்போது விளங்குகின்றதா? பாவம் சொல்லக்கூடாது என்பதன் அர்த்தம் என்ன என்பது” வினாவினாள் நந்தகி.
“அடக்கடவுளே பாவம் சொல்லக் கூடாது என்பது அர்த்தம் இதுவா! இதை தெரியாமல் நாங்கள் எல்லோரும் பாவம் என்ற சொல்லை சொல்லக்கூடாது என்று அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்” ஆச்சரியத்துடன் கூறினாள் அருள்மொழி.
“சரி இருட்டுது, இதுக்கு மேல நின்றால் அம்மாவிடம் வாங்கிக் கட்டனும் போவோம் வாரும்” என எழுந்த நந்தகியுடன் கதை கேட்டவர்களும் எழுந்தார்கள்.
“நன்றிம்மா... அருமையான கதை” என்றவாறே சுற்றி இருந்தவர்களும் எழுந்து அவரவர் பாதையில் செல்லத் தொடங்கினார்கள்.
அனைவர் மனதிலும் ‘இனி மேல் ஒருவரைப் பற்றி தெரியாமல் கதைக்க கூடாது. அப்படியே கதைத்தாலும் அவர்கள் செய்யும் பாவத்தை பற்றி கதைக்கவே கூடாது. பாதி பாவம் கதைப்பவனுக்கு இல்ல வருது’ என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.