உன்னை நான் யாசிக்கின்றேன் (Unnai Naan Yaasikkindren) Chapter – 02
ஆசிரியர் குறிப்பு (Author’s Note)
‘உன்னை நான் யாசிக்கின்றேன்’ (Unnai Naan Yaasikkindren) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது.
இந்த அத்தியாயத்தில் (In this Chapter):
எதிர்பாராத நிகழ்வின் பின்னர் சன்விதா அச்சுதன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றார்கள். சந்தித்த முதல் தரமே திருமணத்திற்கு கேட்கும் அச்சுதன், சன்விதாவின் பதில் என்னவாக இருக்கும் அத்தியாத்த்தில்
யாசகம் – 02
வேகமாய் வீட்டினுள் வந்தவள் கைபையை தூக்கி கட்டிலில் வீசி விட்டு அறையை குறுக்கும் நெடுக்குமாய் அளந்தாள். நகத்தை கடித்துப் துப்பியவள் மேஜை மீதிருந்து தன்னைப் பார்த்து சிரித்த கண்ணனை இடுப்பில் கை வைத்தபடி முறைத்தாள்.
“உன்னிடம் நான் என்ன சொன்னேன்? நீ என்ன செய்து வைத்திருக்கின்றாய், நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உனக்கு காது கேட்குமா இல்லையா?” கண்ணனை வம்புக்கு இழுக்க அருகே இருந்த ருக்கு (அதாங்க ருக்மணி) பொங்கிவிட்டார்.
“வர வர இவளின் குழந்தைதனதிற்கு அளவில்லாமல் போய்விட்டது. இவளுக்கு அவன் தான் சரி” ஒரு விரலை காட்டி கண்டித்தார்.
“எனக்கு அவன் புருசனா வேணும்” அவள் ஒரு கணம் நிதானிக்க, ருக்கு “தாதாஸ்து” என்றார்.
“இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன், எனக்கு அவன் புருசனா வேணும் என்றா கேட்டேன், அவன் வடக்கில் இருந்தால் நான் தெற்கில் இருக்க வேண்டும் என்று தானே கேட்டேன்.” காதை தட்டி காட்டி “கேட்குதா வடக்கு தெற்கு” இரண்டு கைகளையும் எதிர் திசையில் விரித்து “இரண்டும் எதிரெதிர் திசை” என்றவள் சட்டென சோர்ந்து போய் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து “அவனைப் பார்த்தேன்” என்றாள்.
கண்ணனோ புன்னகையுடன் அனைத்தையும் பார்த்திருந்தான்.
அவளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னும் சில மாதத்திற்கு முன்னும் அவனை சந்தித்தது நினைவில் வந்தது.
♥♥♥♥♥
சில மாதங்களுக்கு முன் அந்த செவென் ஸ்டார் ஹோட்டலில் இண்டர்வியு….
மழை வேறு தூறிக் கொண்டிருக்க எப்படியோ வந்து சேர்ந்துவிட்டாள். அன்று பார்த்து கிட்டத்தட்ட பத்து கம்பனிகள் அதே ஹோட்டலில் நேர்முக தேர்வை நடத்தின.
“கண்ணா இதுக்குள்ள எங்க போய் தேடுவேன், இவங்க இண்டர்வியு நடத்துறாங்களா இல்ல கலியாண வீடு நடத்துறங்களா? ஒரு பொறுப்பு வேண்டாம். இண்டர்வியு நடத்திற என்றால் கம்பனியில் நடத்தனும். உள்ள போறத்துக்கே ஒரு கிலோ மீட்டர் நடக்கனும் போலேயே” கண்ணிடம் புலம்பித் தள்ளினாள்.
♥♥♥♥♥
ருக்கு ஆர்வமாய் யாரையோ தேட கண்ணன் குறுஞ் சிரிப்புடன் கேட்டான் “யாரை தேடுகிறாய் தேவி?”
“அவனைத் தான் வேறு யாரை”
“அது இப்போதில்லை நேரமிருக்கு”
♥♥♥♥♥
அதற்குள் ஒருவாறு அவளுக்கு இண்டர்வியு நடக்கும் இடத்தைக் கண்டு பிடித்தவள் போன் சத்தமிட அதனுடன் ஓரமாய் ஒதுங்கினாள்.
“ஹலோ அம்மா”
“என்னாச்சு எதுக்கடி போய் பத்து நிமிசத்தில் பத்து தரம் போன் நீயென்ன செவ்வாய் கிரகஹத்துக்கா போய் இருக்கிற? இதே சென்னையின் இன்னொரு பக்கம்” பொரிந்து தள்ளினார் அவள் அம்மா.
‘என்ன கண்ணா அம்மா இமேஜ இப்படி டேமேஜ் பண்றா’ மனதினுள் கண்ணனை வறுத்தவள் “அம்மா…” பாவமாய் அழைத்தாள் “உங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? ஒரு அப்பாவி பயங்கொள்ளி பிள்ளை தனியா வந்திருக்காளே என்னாச்சோ ஏதச்சோ… ஒரு அக்கறை இருக்கா?” மூக்கைச் சுருக்கினாள்.
“கரண் சொன்ன மாதிரி உன்னை நல்ல பழுதாக்கி வைச்சிருக்கோம். இண்டர்வியு முடிஞ்சு வரும் வரை போன் எடுக்க கூடாது” அதட்டினார் அவள் அம்மா.
“எங்கம்மா இடத்தைக் கண்டு பிடிக்கவே முடியல ஒரே கூட்டமா இருக்கு. அது யாரோ பிசினஸ் டைனோசராம் அதாம்மா டைகூன்” இனிமையாய் நகைத்தாள்.
“டைனோசர் இல்ல டைனோசருக்கு தாத்தா வந்தாலும் பரவாயில்ல, போய் தேடிப் பிடி புலி சிங்கமா நிக்குது. மனிதர்கள் தானே நிற்கின்றார்கள். உனக்கு கராத்தேயும் தெரியும்”
“மழை வரும் போலிருக்கு இந்த திருவிழா எப்ப முடிஞ்சு நான் எப்ப வாரது. டெல்லி போகனும் லேட் ஆகுது. மழைக்குள் வந்தால் நான் சக்கரகட்டி கரைந்து விடுவேன் எல்லாம் அந்த டைனோசரால் வந்த வினை” சிணுங்கினாள்.
“அப்படி கரைஞ்சு வந்த திரும்ப காய்ச்சி கட்டியாகிறான். நீ இண்டர்வியுவை முடி” போனை கட் செய்தார்.
போனால் தன் நெற்றியை தட்டியவள் “நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே கண்ணா” ஒரு கணம் தயங்கியவள் “சரி நாம பார்க்கதா? இந்த சரவணனுக்கு யானை கட்டி மேய்க்கும் விதியிருந்தால் அதை மற்ற யாரால் முடியும்”
மறுபுறம் ஆண்மை நிறைந்த சிரிப்பத் சத்தம் கேட்க “அச்சச்சோ கண்ணா மானம் இப்படி காற்றில் கரையுதே” என்றவாறே அங்கிருந்து நகரப் போனவளை தேக்கியது அவன் கம்பீரக் குரல். “அக்கா ப்ளீஸ், ஜோசப் லோஞ்ச் அருகே ஒரு பெண் நிற்கிறாள். டாக்ஸி அரேஞ்ச் செய்து கொடு. அப்படியே பப்ளிக் டிஸ்ரப் ஆகாதா மாதிரி பார்த்துக் கொள். இன்டர்வியூ எங்கே நடக்குது என்று ஒரு வழிகாட்டி வைக்க சொல்லு”
உறைந்து போய் நின்றவள் இதழ்கள் மெதுவே முணுமுணுத்தது “கேசவ்…”
அதற்குள் அங்கே வந்த ஜோசப் அவள் கையிலிருந்த கோப்பு அந்த ஹோட்டலுக்கு புதிதான அவளின் தன்மை என அனைத்தையும் நொடியில் கவனித்தவன் “இண்டர்வியு அந்தப் பக்கம் மாம்” என்றான்.
அவன் குரலில் கலைந்தவள் “தாங்யூ” சிறு முறுவலுடன் அவன் கைகாட்டிய திசையில் விரைந்தாள்.
மறுபுறம் வந்த ஏகே பார்த்தது ஜோசப் கை காட்டிய திசையில் பேயைப் பார்த்தது போல் ஓடும் அவள் பின்புறத்தை தான். அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்த ஜோசப் “அவர்கள் சரவணன் சார் இண்டர்வியுக்கு வந்திருக்கிறங்க சார்” என்றவன் ‘வேறு தகவல் அவளைப் பற்றி வேண்டுமா!’ என்பது போல் பார்த்தான்.
ஏதோ யோசனையில் இருந்தவன் சட்டெனக் கலைந்து ‘வேண்டாம்’ என்பது போல் தலையாட்டினான்.
எப்படி இண்டர்வியு முடித்து வெளியே வந்தாள் என்றே தெரியாமல் வந்தவள் போனை எடுத்து யாருக்கோ அழைத்தாள் “கரண் நீ வர முடியுமா?”
மறுபுறம் மறுக்க நினைத்தவன் அவள் குரலில் “சரி வெயிட் பண்ணு ஐந்தே நிமிடத்தில் வந்திருவேன்” கட் செய்தவன் யோசனை ஓடியது ‘காலையில் விடும் போது நன்றாக தானே இருந்தாள்’ அப்படி ஒன்றும் அவளை தன்னந் தனியாய் விட்டுவிடவில்லை. தனியாக செல்ல விட்டு பின்னால் அவளைக் கண்காணித்துக் கொண்டுதான் வந்தான்.
ஹோட்டல் லாஞ்சில் நின்றவள் ஏதோ கூட்டமாய் இருக்க அங்கு இருப்பது யாரென்று பார்க்க முயன்றால் தெரியவில்லை. “பச், ஏன்தான் எல்லாவனும் இப்படி வளந்து தொலைக்கிறன்களோ” எரிச்சலுடன் முனகியவள் வெளியே வந்து ஹோட்டலின் முன்புறம் ‘சி’ வடிவில் வளைந்திருந்த பாதையின் மறுபுறம் காத்திருந்தாள்.
“ஹேய் சான்விச், என்னாச்சு” அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டான் கரண். எங்கிருந்தோ அவர்கள் முன் வந்து நின்றது கருப்பு நிற பிஎம்டபிள்யூ. இன்னொரு வாசல் மூலமாய் ஏகே, ஆகாஷ், நிலாவுடன் ஜோசப்பும் அந்தக் காரினை நோக்கி வேகமாய் வந்தார்கள்.
முன்னே வந்தவனைப் பார்த்து “அது அச்சுத கேசவன் தானே” சிறு யோசனையுடன் கேட்க ஆமோதிப்பாய் தலையாட்டியவள் முகத்தைத் திருப்பிவிட்டாள்.
ஜோசப் கார் கதவைத் திறக்க உள்ளே ஏறப் போன ஏகே ஒரு கணம் நிதானித்து முன்னே நின்ற இருவரையும் பார்த்து புருவத்தைச் சுளித்தான். அவனைப் பார்த்ததுமே அந்தப் பெண் முகத்தை திருப்பி விட அவள் முகம் தெரியவில்லை.
அவளை ஆறுதலாய் அணைத்து தோளை தட்டிக் கொடுத்தவனை பார்க்க ஏனென்றே தெரியாமல் இங்கே இவனுக்கு ரத்தம் கொதித்தது. அவர்களை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப் போனவனை தடுத்தது ஆகாஷின் குரல் “பாஸ் மீடியா..”.
அவன் உள்ளே ஏற கார் எதிர் பக்கமாய் சென்றது.
குனிந்திருந்த தலையை பார்த்தவனுக்கு காரணம் புரிய பெருமூச்சு விட்டுக் குறுக்கே தலையாட்டி “ஹ்ம் சான்விச் மோல் போவோமா, பீச் போவோமா?” அவள் மனதை மாற்ற முயன்றான்.
“பீச் போய் குல்பி குடிப்போம்” முனங்கினாள்.
“சரி வா, உனக்காக ஒருவர் வெயிட்டிங்…”
வீதியின் மறுபுறம் நின்ற காருக்கு செல்ல அதிலிருந்து வெளியே வந்த பெண்ணைக் கட்டிக் கொண்டாள் சன்விதா “அக்கா…”. அவளை அணைத்த மானசி நிமிர்ந்து கரணை என்ன என்பது போல் பார்க்க அவன் குறுக்கே தலையாட்டினான்.
அதற்குள் சுற்றிக் கொண்டு வீதியின் மறுபுறம் வந்த அச்சுதனின் பிஎம்டபிள்யூ சீறிக் கொண்டு செல்ல அதன் பின்னே வந்த ஆடி அவர்கள் அருகே சற்றுத் தயங்கி பின் வேகமெடுத்தது.
அன்று முழுவதும் ஊரைச் சுற்றி விட்டு வீட்டிற்கு செல்ல அவள் மனம் சமநிலைக்கு வந்திருந்தது. அடுத்த கிழமையே வேலையில் சேர்ந்துவிட்டாள். வேலை அவளுக்கு பிடித்தும் விட்டது. சரவணின் தொழில் வெவ்வேறு கம்பனிகளுக்கு ரிசேர்ட் வடிவமைத்து அதனைக் கட்டிக் கொடுப்பது. இந்தியா முழுவதுமிருந்து கஸ்டமர் இருந்தார்கள்.
அவர்கள் இடத்தின் கலாச்சாரம் பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு ரிசேர்ட் அமைப்பதற்கு தகவல்களை சேகரிப்பதும் இன்டெர்னல் டேக்ரேசன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வடிவமைக்கும் பொறுப்பு அவளிடம்.
வேலைக்கு வந்து மாதங்கள் கடந்திருக்க அன்று அவளும் சேர்ந்து வடிவமைத்த ரிசேர்ட் கம்பனி ஒன்றின் பார்ட்டி. அந்தமானிலும் மாலைதீவிலும் அமைத்த ரிசொர்ட் வெற்றிகரமாக அமைந்திருக்க அதற்கான பார்டி தான் இன்று.
உள்ளே சென்று சரவணனை கண்களால் தேடி அவன் தோளை தட்டினாள் “சரவண்” திரும்பிப் பார்த்தவன் கண்களில் ‘வந்துவிட்டாயா?’ என்ற ஆறுதலும் ‘ஏன் வந்தாய்?’ என்ற அங்கலாய்ப்பும் சேர்ந்தே தென்பட யோசனையாய் நோக்கினாள்.
“என்ன?”
“ஒன்றுமில்லை” என்றவன் கண்களில் தர்மசங்கடம் நன்றாகவே தெரிந்தது. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி முறைக்க, அவள் தோளை சுற்றிக் கை போட்டவன் “சரி விடு இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கே தெரியும்” என்றான்.
அங்கு வந்திருந்த மீதிப் பேருடன் போய் சேர்ந்து கொண்டவளுக்கு பிடரியில் ஊசி குத்துவது போல் தோன்ற சரியாக அந்த திசையை திரும்பிப் பார்த்தாள். இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் உணர்வு. முப்பது வினாடிகளுக்கு மேல் யாரவது நம்மைப் பார்த்தால் அந்தத் திசையை நம்மை அறியாமலே திரும்பிப் பார்ப்போம். ஆனால் இதை உணர்ந்து பார்ப்பவர்கள் குறைவு. பெண்களுக்கு இயல்பாகவே இந்த உணர்வு இருக்கும்.
திரும்பிப் பார்க்க நெடுநெடுவென உயரத்துடன், வெள்ளை நிற சேர்ட் மேலாக பிளாக் வைஸ்ட் கோட் கோட் அணிந்து, ஒரு கை போகேடினுள்ளும் மறு கையில் இருந்த வைன் கிளாசை வாயில் வைத்தபடி நின்றிருந்தான் ஒருவன். அவள் திரும்பிப் பார்க்க கிளாசுக்கு மேலாக தெரிந்த விழிகள் ஈட்டி போல் பளிச்சிட்டது.
நடுவே வந்தான் ஆகாஷ் “பாஸ்… இதுதான் காரணமா?” முப்பத்திரெண்டு பல்லையும் காட்டினான்.
பார்வையை அசைக்கமால் “நிலா…” அழைக்க “உன்னை…” அவன் தலையிலேயே குட்டிய நிலா அவனை இழுத்துக் கொண்டு விலகிச் சென்றாள்.
ஒரு கணத்தில் அவன் யாரென்பது புரிந்துவிட்டது ‘கண்ணா இந்த அச்சுத கேசவன் இங்கே என்ன செய்கின்றான்’. இத்தனை நாள் காரில் மட்டும் பின் தொடர்ந்தான். இப்போ இங்கேயும் வந்திட்டானா? நகம் தன் பாட்டில் அவள் பற்களிடையே போய் அமர்ந்து கொண்டது. கண்ணனும் ருக்குவும் தொடங்கி வைத்த நாடகத்தை பார்க்க தயாரானார்கள்.
இந்த ப்ரொஜெக்டில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி சொல்லி பார்டியை அவனே தொடங்கி வைத்தான். கட்டிக் கொடுத்ததும் அவன் கம்பனி வாங்கிக் கொண்டதும் அவன் கம்பனி. அவன் நன்றியிலிருந்து இப்போது தான் தெரிந்து கொண்டாள். ‘இதுக்க ஏன்டா நன்றி சொல்லுறீங்க’ மனம் கவுண்டர் கொடுக்க கண்கள் சரவணனை தேடியது ‘அவனிடம் சொல்லி விட்டு எஸ்கேப் ஆவோம்’, ஏனெனில் நன்றி சொல்லும் போதும் அச்சுத்தன் கண்கள் தன்னையே பார்த்தது போல் ஒரு பிரம்மை அவள் மனதில்.
“சன்விதா” சரவணின் குரல் கேட்க “சரவணா நான் போ…” மீதி வார்தையை காற்று முழுங்கிக் கொண்டது. சரவணன் அருகே மனதை கொள்ளை கொள்ளும் மெல்லிய புன்னகையுடன் நின்றான் அச்சுத கேசவன்.
“இது சன்விதா சர்மா, இண்டேரியர் இவர்கள்தான் டிசைன் செய்தது” என்ற சன்விதாவை நோக்கி “இவர் அச்சுத கேசவன், ஏகே” மேற்கொண்டு அறிமுகப்படுத்துவதற்குள் குலுக்குவதற்கு கையை நீட்டினான் அச்சுதன்.
“ஹாய்…” அன்று போலவே ஆண்மை நிறைந்த ஆழ்ந்த குரல்.
அவளுக்கு அன்று நெற்றியை பிடித்துக் கொண்டு கை நீட்டியது மனக் கண்ணில் வர பிரமை பிடித்தது போல் அசையாமல் நின்றாள்.
அவள் அசையாது நின்றதைப் பார்த்தவன் சத்தமாய் அழைத்தான் “ஆகாஷ்…”. அவன் அழைப்புக்கு பதில் சொல்ல அவன் இந்த உலகத்தில் இருந்தால் தானே. பார்டிக்கு வந்ததிலிருந்து அச்சுதன் செய்த செயல்களில் சன்விதாவை விட பிரமை பிடித்து நின்றான் அவன்.
ஆகாஷை உலுக்கிப் பார்த்த நிலா அவன் அசைய போவதில்லை என்றதும் அவனையும் இழுத்தவாறே அருகே வந்து “சார்” என்றாள். அவளைப் பார்த்து தயங்கி ‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்தவன் மீண்டும் ஆகாஷை பார்க்க, கொஞ்சமாய் தெளிந்து அருகே வந்தான். இத்தனை கலவரத்திலும் சன்விதாவிடம் நீட்டிய கை நீட்டியபடியே இருந்தது.
அவனிடம் வைன் கிளாசை கொடுத்தவன் எதிர்பாராத விதமாய் கை குவித்து வணங்க பதிலுக்கு தன்னையறியாமலே கரம் குவித்தாள் சன்விதா.
“உங்களிடம் சற்றுப் பேச வேண்டுமே!” அவனின் இதழ் பிரியா மயக்கும் புன்னகையுடன் அனுமதி கேட்க யோசனையுடன் சரவணனைப் பார்த்தாள்.
பதிலுக்கு அவஸ்தையாக அவளைப் பார்த்து வைத்தான். அவளுக்கு உள்ளே வரும் போதே அவன் ஏதோ அந்தரப்பட்டது போன்ற தோற்றம் நினைவு வர அவனை முறைத்தவளுக்கு புரிந்தது, இது ஏற்கனவே செய்யப்பட்ட ஏற்பாடு.
முகம் இறுக முன்னே செல்லும்படி கை காட்டினாள். ‘முடியாது என்று மறுத்து விட்டு போய்விடலாம்தான். ஆனால் இதை நிச்சயமாக இப்படியே வளர விட முடியாது. அவன் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தன்னை சுற்றி வருவதனை நினைத்தது முதலில் பணக்கார ரோக்கின் பொழுது போக்கு கண்டுகொள்ளாமல் விட்டால் தானே விலகி போய்விடுவான் என்று தான் நினைத்தாள். கடைசியில் பார்த்தால் அவள் அலுவலகத்தின் முதலாளியாக வந்து நிற்கிறான். போதாகுறைக்கு சக ஊழியர்கள் எல்லாம் அவன் காரை கண்டாலே உன் ஆள் வருகின்றார் என கூறி விலகத் தொடங்கினார்கள் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள். உனக்கென்று வந்து வாய்க்கிறதே விதா வைரவருக்கு டாக் வாய்த்தது போல்.
அருகேயிருந்த இன்னொரு ஹாலுக்கு அழைத்துச் சென்றவன் அவனே ஒரு கையால் கதவைத் திறந்து மறு கையால் உள்ளே சொல்லும்படி சைகை செய்தான், திகைத்து போய் நின்றாள் சன்விதா. சுற்றிலும் வண்ணத் துணிகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு நடுவில் ஒரே ஒரு மேஜையும் இரண்டு கதிரையும் அதன் மேல் ரோஜா பூங்கொத்தும் இருந்தது. சில செவென் ஸ்டார் ஹோட்டல்களில் கப்புள்ஸ் அறை பதிவு செய்தாலே இப்படி தான் அலங்கரித்து இருப்பார்கள். வேலைக்கு வந்து இத்தனை நாட்களில் அதை கவனித்து இருந்தாள். ஆனாலும் உள்ளூர ஒரு உதறல் எடுத்தது. ரோஜா மல்லிகை இரண்டின் வாசமும் ஏசியுடன் கலந்து சுவாசத்துடன் மனதையும் நிறைத்தது.
“ஹாய் சன்விதா” அவள் மோனத்தை கலைத்தவன் புன்னகையுடன் கதிரையை பின்னே இழுத்து அவள் அமர காத்திருந்தான்.
கண்களை விரித்துப் பார்த்தாள் சன்விதா ‘ராணி போல் உணர வைக்கின்றானே’.
கூடவே வேறு சில நினைவுகளும் சேர்ந்தே வர எரிச்சலடைந்தவளாய் மற்ற கதிரையை நோக்கிச் செல்ல “ம்கூம், இதில்தான் இருக்க வேண்டும்” என்றவன் குரலில் சட்டென நின்றுவிட்டாள் சன்விதா.
“எஎன்ன?” வார்தை தந்தியடிக்க ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்தது போன்ற ஒரு உணர்வு. இத்தனைக்கும் அவன் குரலை உயர்த்தவே தாழ்த்தவோ இல்லை. முகத்தைப் பார்க்க புன்னகையுடன் தான் இருந்தது. ஆனால் கண்களில் தென்பட்ட மெல்லிய கடினம் என் வார்தையை மீறாதே! என்று எச்சரிப்பது போலிருந்தது.
‘என்ன கண்ணா பயமுறுத்திறான். சரி அவன் சொன்னபடி கேட்டு நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போகின்றேன்’ மெல்லிய படபடப்புடன் அருகே வந்து அவன் முகத்தை பார்த்தாள். இப்போது அந்த கடினத்தை காணவில்லை, கற்பனையோ என்று என்னும் அளவிற்கு இருந்தது.
உள்ளே வரும் போது கோட்டையும் டையையும் கழட்டியிருக்க வைட் சேர்ட்டின் மூன்று பட்டன்கள் கழன்று ப்ளக் வைஸ்ட் கோட் அணிந்து நின்றவன் மேனியிலிருந்து வந்த மெல்லிய இதமான வாசம் அவள் நாசியை நிறைத்தது.
இது போன்ற சிக்கலான சூழ்நிலையில் சிக்கி இருக்கவிட்டால் ‘என்ன சென்ட்’ என்று கூட விசாரித்து இருப்பாள். கதிரையில் அமர்ந்ததும் எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தவன் “சோ என்ன குடிக்கிறீங்க? மில்க் ஷேக், ஹாட் சாக்லெட் ஓர் குல்பி” குல்பி என்று சொன்னவன் கண்களில் மெல்லிய குறும்பு.
திடுக்கிட்டு போய் அவனைப் பார்த்தாள் சன்விதா. தெரிந்து சொல்கின்றானா இல்லை எதிர்பாராத விதமாய் வந்ததா?
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் “நீங்கள் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னதாய் ஞாபகம்” அவனுக்கு நினைவூட்டினாள்.
“ஹ்ம்… அதற்கு தானே வந்ததே!” மீண்டும் அழகான பல்வரிசை பளீரிட புன்கைத்தான்.
‘மூஞ்சியும் முகரக்கட்டையும், பல்லை கழட்டி கைல குடுக்கணும்’ நினைக்க மட்டும் தான் செய்தாள். ஏனென்றால் அவனின் ப்ளாக் ப்ளாசாரினையும் வைட் ஷிர்டினையும் மீறி தெரிந்த உடல்கட்டு அவனை அப்படியெல்லாம் அடித்து விட முடியாது என எச்சரித்தது.
முள்ளின் மேல் இருப்பது போல் அமர்ந்திருந்தவள் சங்கடமாய் அவனைப் பார்த்தாள். உள்ளே வரும் போதே வெளியில் இருந்தவர்கள் அனைவரும் அவளை ஆர்வமாய் பார்ப்பது போல் தோன்றியது. இந்த இடம், சற்று முன் அவன் நடந்து கொண்டது கண்ணாடி மூலாமாய் அனைவருக்கும் மூலமாய் அனைவருக்கும் தெரிந்திருக்க வெளியிலிருந்த அனைவரின் ஆர்வமும் தூண்டபட்டிருந்தது. அனைவர் பார்வையும் இங்கேயே இருப்பது தெளிவாகவே விளங்கியது.
அவள் மனமோ வசைபாடித் தீர்த்தது ‘இவனுக்கு கதைப்பதற்கு வேறு இடமேவா கிடைக்கவில்லை. என் பின்னாலேயே சுத்தினான் இல்ல அப்போதெல்லாம் விட்டுட்டு இப்ப வந்து நிற்கின்றானே!’
“என்ன செய்ய இரண்டு மூன்று தரம் உன்னை நெருங்கினேன். விலகி விலகி போனாய் அதுதான் இங்கே வைத்து லோக் செய்ய வேண்டியதாய் போயிற்று” ஒரு பக்க உதட்டால் மட்டுமாய் சிரித்தான்.
‘ஆத்தி மனசில நினைக்கிறத அப்படியே சொல்றான்’
“ஷால் ஐ புல் தி கர்டைன்!”
கண்கள் விரிய ‘ஏதே வேறு வினையே வேண்டாமே!’ மனதினுள் அவனை வறுத்தவள் “வேண்டாம் வேண்டாம்” அவசரமாய் மறுத்தாள். “நீங்கள் சொல்ல வேண்டியதை சொன்னால் கேட்டுட்டு போய்ட்டே இருப்பேன்” உதட்டை இழுத்து வைத்துப் புன்னகைத்தாள்.
“சோ என்ன குடிக்கிறாய்?” மீண்டும் கேட்டான். அவன் முகத்தில் இருந்த பிடிவாதமே சொன்னது குடிக்காமல் விட மாட்டன் “மில்க் ஷேக்” என்றவள் மனது ‘இன்னொரு தரம் வாழ்கையில் மில்க் ஷேக்கே குடிக்க மாட்டேன் கண்ணா’ சபதமிட்டது.
சிறு கையசைவில் வந்த செர்வன்டிடம் “வன் மில்க் ஷேக்” என்றான். அவளுக்கு மில்க் ஷேக்க்கும் அவனுக்கு நீண்ட கிளாசில் கபில நிறத்தில் ஏதோ கொண்டு வந்தார். குடிவகையாக இருக்குமோ என்ற எண்ணம் ஓட சிறு முறுவலுடன் மேஜையிலிருந்த பூங்கொத்தை தள்ளி வைத்தவன் சற்று முன்னே சாய்ந்து இரு விரலால் முன்னே வரும் படி சைகை செய்தான்.
கவனத்துடன் முன்னே சரிந்து மூக்கை சுருக்கி கண்களை மூடும் அழகை பார்த்தவாறே முகத்தில் வாயை குவித்து ஊதினான். மெல்லிய மின்ட் வாசனை நாசியை தாக்கியது.
சட்டென கண் திறந்தவள் “அப்போ அங்கே வாயில்…” மீதி வார்தைகளை உதட்டை கடித்து நிறுத்தினாள்.
“அப்படியானால் நீ என்னை கவனித்தாய்!” வாய் விட்டே சிரித்தவன் இரண்டு கண்களையும் சிமிட்டினான் “அது சும்மா பவ்லா”.
“அச்சோ சன்விதா மானம் போச்சு” லேசாய் முகம் சிவக்க அவன் பார்வை மெதுவே மாறியது.
அவன் மாற்றத்தை லேசாய் உணர்ந்தவள் “எஎஎன்ன?” பயத்துடன் கேட்க தன்னை சுதாகரித்தவன் “ஒன்றுமில்லை, குடி” என்றான். சில வினாடிகள் மௌனத்தில் கழிய திடிரென “சொறி” என்றவனை. மில்க் ஷேக்கின் மேலாக கேள்வியாய் நோக்கினாள்.
“இல்ல முதல் தரம் இருவரும் ஒன்றாக வந்திருக்கின்றோம், சோ ஒன்றும் கொடுக்கமால் அனுப்ப மனமில்லை. கம்பேல் செய்ததற்கு..” விளக்கமளித்தான்.
மில்க் ஷேக்கை கீழே வைத்தவள் “நீங்கள் ஏதோ சொல்ல வேண்டும் என்றீர்கள்” கேள்வியாய் பார்த்தாள்.
நிதானமாய் தன் திராட்சை ரசத்தை உறிஞ்சியவன் “யெஸ்… முதலில் நான் சொல்வது முழுவதையும் கேள். அதன்பின் உன் முடிவைச் சொல்” திடிரென ஒருமைக்கு மாறியவனை கவனமாய் பார்த்தவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
“லிசின் சன்விதா… நான் ஒன்றும் டீன் ஏஜ் பையன் இல்லை அல்லது உன்னை நேற்று சந்தித்து இன்று ப்ரோபோஸ் செய்யல” நிதானமாய் சொல்லிக் கொண்டு வந்தவன் அவள் வாயிலிருந்த மில்க் ஷேக் புரையேற நிறுத்தினான். “ஹேய் பார்த்து…” அருகே இருந்த டிஸ்சுவை எடுத்துக் கொடுத்தான்.
“யூ ஒகே…” சற்றுக் கவலையுடன் விசாரிக்க “நீங்கள் என்னை ப்ரொபோஸ் செய்கின்றீர்களா?” கண்களை விரித்துக் கேட்டாள் சன்விதா.
“ஏன் முட்டி போட வேண்டுமா? போடவா?” புன்னகையுடன் வினவினான்.
“வேண்டாம் வேண்டாம்” வேகமாக மறுத்து இரு கைகளையும் ஆட்ட வாய் விட்டே சிரித்தான். அவன் சிரிப்பு பார்க்கவும் கேட்கவும் இனிமையாய் இருக்க தன்னை மறந்து பார்த்திருந்தாள். அவள் முகத்தில் ரசனையை கண்டவன் இதழ்களில் ஒரு கர்வ புன்னகையுடன் முழங்கால் மீது பாதம் வைத்து அமர்ந்து கேட்டான் “ஷால் வீ கன்டுநியு?”
“ஹ்ம்ம்..” தலையை மேல் கீழாக அசைத்தாள்.
“என்ன சொன்னேன்… ஆஹ் கிட்டதட்ட ஆறு மாதம் காத்திருந்து. உன் அம்மா அப்பாவிடம் பேசி அதன் பிறகுதான் இங்கே உன்னிடம் பேசுகின்றேன்”.
அவளுள் யோசனை ஓடியது ‘அம்மாவிடம் கேட்டானா? ஆனால் அம்மா எதுவும் சொல்லவில்லையே?’
அமைதியாய் பார்த்திருக்க அவனே தொடர்ந்தான் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உன்னை மட்டும்தான் பிடிச்சிருக்கு. எப்போது திருமணம் செய்யலாம்” இலகுவாய் கேட்டான்.
அவனையே சிறுமுறுவலுடன் பார்த்தவள் திருப்பிக் கேட்டாள் “எனக்குப் பிடிக்க வேண்டாமா?”
“நிச்சயமாய் நீயும் யோசிக்கத்தான் வேண்டும். டேக் யுவர் டைம்” இலகுவாகவே சொன்னவன் “ப்ளீஸ் பினிஷ் திஸ்” என்று அவளின் மில்க்சேக்கை கண்ணால் காட்டினான். அவள் எடுத்துப் பருக “சோ வேலை பிடிச்சிருக்கா?” சாதரணமாய் விசாரித்தான்.
அவளுக்குத்தான் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ஒரு பக்கம் ப்ரொபோஸ் செய்தான். அவள் பதிலளிக்க முன்னர் அவள் யோசிக்க நேரம் கொடுக்கின்றேன் என்ற பெயரில் மறுப்பை தள்ளிப் போட்டான். இப்போதே ஏதோ நீண்ட நாள் நண்பர்கள் போல் அவள் வேலையைப் பற்றி விசாரிக்கின்றான்.
ஒரு கை மேசையில் இருக்க முழங்கையூன்றி ஜூசை பருகியவன் “உனக்கு கண்ணன் ராதை பிடிக்குமா?” கேட்டான். ஆமோதிப்பாய் தலையசைத்து கேள்வியாய் புருவம் உயர்த்த “இல்ல அந்த மாலைத்தீவு ஹனிமூன் ரிசெர்டில் நீ வரைந்த கண்ணன் ராதை ஓவியங்களை பார்த்தேன் அழகாய்…” சிறு இடைவெளி விட்டு “அந்த இடத்திற்கு பொருத்தமாய் இருந்தது” சிறு குறும்புப் புன்னகையுடன் மனதார பாராட்டினான்.
சட்டென முகம் சிவந்தாள் சன்விதா. உண்மையில் அவை அனைத்தும் கண்ணின் காதலில் மயங்கி நிற்கும் ராதையின் காதல் ஓவியங்கள், சற்று நெருக்கமானவை. அவள் முகச்சிவப்பை ரசனையுடன் பார்த்தான் அச்சுதன்.
இருவரும் வெளியே வரவே “சோ மிஸ். சர்மா, என்னுடைய ஒஃபரை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கள். அந்த வெளிநாட்டு கம்பனி உங்கள் ஓவியங்கள்தான் வேண்டுமென்று கேட்கின்றார்கள்” அவளை நோக்கி கையை நீட்டினான் அச்சுதன்.
இப்போதும் கை குலுக்க மறுத்தால் சாதாரண கை குலுக்ளைக் கூட தவறாக சித்தரிக்கும் ஒருத்தியாக தெரிவாள். அதோடு இத்தனை நேரம் உள்ளேயிருந்து உரையாடியதையும் வேறு விதமாய் சித்தரிக்கும் அபாயமும் வரும். நிமிர்ந்து பார்க்க அவன் கண்கள் பளபளத்தது. சட்டென மிகவும் அபாயமான ஒரு மனிதனின் முன்னால் நிற்பதனை உணர்ந்தாள் சன்விதா.
அவர்கள் உள்ளே என்ன பேசியிருப்பார்கள் என்ற அனைவரின் யோசனைக்கும் அந்த ஒரு வசனத்தில் பதிலளித்ததும் இல்லமால் தான் முதலில் கை கொடுக்க மறுத்ததற்கும் சிறு பழிவாங்கல். அதோடு உள்ளே அவள் அவன் ப்ரோபோசை மறுக்கவே இடம் கொடுக்காமல் தள்ளிப் போட்டுவிட்டான். இந்தளவு புத்திசாலித்தனம் இல்லையென்றால் பின் எப்படி இந்த தொழில் சம்ராஜ்ஜத்தை கட்டி ஆளுவான். மனம் புகழாரம் பாட அதை தூக்கி உடைப்பில் போட்டவள் பதிலுக்கு கை குலுக்கினாள்.
“என் பதிலில் மாற்றம் இருக்காது. இருந்தாலும் உங்களுக்காக யோசித்து விட்டு மறுக்கின்றேன்” பதிலளித்தாள்.
அவன் கையிலிருந்த அவள் கையை மென்மையாய் சற்று இறுக்கிப் பிடித்தவன் “நிச்சயமாய் எனக்கு சாதகமான பதிலாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்” உதடு பிரியா மென்முறுவலுடன் கூறினான்.
அவனை அலட்சியமாய் நோக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறியவளை அச்சுதனின் சிறு கண்ணசைவில் அவனது செக்யூரிட்டி கார்ட்ஸ் பின்தொடர்ந்தார்கள்.
அந்த ஹோட்டலின் இன்னொரு பக்கம் பார்க் போல் அமைத்து அதற்குள் நடந்து செல்ல அவினியு ஒன்றும் அதில் அங்கங்கே பார்க் பெஞ்சும் போடப்பட்டிருந்தது. அதிலொன்றில் போய் தொப்பென்று அமர்ந்தவள் மனம் தாளித்து கொட்டியது “அவன் மூஞ்சியும் முகரையும் ஒரு கோட்டு சூட்ட போட்டுட்டு கார்ல வந்த எல்லோரும் பின்னால் வருவாங்க என்று நினைப்பு”.
அவள் செல்லவும் பார்டியில் இருந்தவர்களை நோக்கி “ப்ளீஸ் என்ஜாய் தி பார்டி எனக்கு ஒரு வீடியோ கன்பிரன்ஸ் இருக்கு” என்றவன் அவர்களிடமிருந்து விடை பெற்று அதே ஹோட்டலின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த அவன் அலுவலகத்திற்கு சென்றான். போன் பேசியவாறே பல்கனி வந்தவன் கண்களில் விழுந்தாள் அந்த அவினியுவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த சன்விதா.
அவளை ஒருவரும் தொந்தரவு செய்யதா வண்ணம் அவனின் செக்யூரிட்டி பார்த்துக் கொள்ள அவள் தனிமைக்கு பங்கம் வரவில்லை. பல்கனியின் மதிலில் கையூன்றி சிறு முறுவலுடன் சுவாரஸ்சியமாக பார்த்த அச்சுதனுக்கு தெளிவாகவே புரிந்தது தன்னைத்தான் மனதினுள் தாளிக்கிறாள்.
அவள் போனை எடுத்து யாரையோ மிரட்ட ஐந்தே நிமிடத்தில் அந்த இடத்திற்கு வந்தான் சரவணன். அவனைப் பார்த்து அழகாய் சிரித்து அன்பாய் அருகே வர சைகை செய்தாள். “சொல்லுமா” என்றவாறு யோசனையின்றி அருகே வந்தவன் காலில் ஓங்கி மிதித்தாள் சன்விதா.
“அவுச்…” மேலேயிருந்து பார்த்தவன் ஒற்றைக் கண்ணை மூடினான்.
“ஏண்டி மிதிச்சா….?” அப்பாவியாய் கேட்டான் சரவணன்.
“மாமா வேலையாடா பார்கிறா? இருடா… உனக்கு இது போதாது” அவன் நெஞ்சிலும் முகத்திலும் கைகளால் அடிக்க இரண்டு கைகளையும் பிடித்து வைத்து கொண்டு கெஞ்சினான் “நான் சொல்றத கொஞ்சம் கேளேன்” கையை பயன்படுத்த முடியாமல் போகவே அவன் கால்களில் தன் காலால் அடித்தாள்.
சட்டென அந்த பார்க் பெஞ்சின் பின்புறம் சென்றவன் அவள் கைகளை பின்னால் வளைத்துப் பிடிக்க அவ்வளவு நேரம் சும்மாயிருந்த செக்யூரிட்டி அவர்களை நோக்கி நகர முன் மேலே நின்ற அச்சுதனைப் பார்த்தான். அவன் வேண்டாம் என்பது போல் கையையசைக்க நின்றுவிட்டான்.
ஒன்றும் செய்ய முடியாமல் நின்றவளிடம் கொஞ்சினான் சரவணன் “முதலில் நான் சொல்வதைக் கேள். அதுக்குப் பிறகு அடி” அமைதியானவள் தொப்பென்று அமர்ந்து கையைக் கட்டிக் கொண்டு கூறினாள் “சொல்லித் தொலையும்”.
அவளருகே அமர்ந்த சரவணன் “சன்விதா நான் இந்த தொழிலுக்கு புதிது, என்ன மாதிரி சிறிய தொழிலதிபர்கள் எல்லாம் அவனை போல் ஒரு பிசினெஸ் டைக்கூனை எதிர்த்து நிற்க முடியாது. அவன் இந்த கம்பெனியின் மெயின் பாட்னர். என்னை நம்பி இந்த கம்பெனியில் வேலை செய்பவர்களையும் நான் யோசிக்கனும் இல்லையா? அதோடு…”
“உன்னை பிளாக் மெயில் செய்தானா?” ஆச்சரியத்துடன் இடையிட்டாள்.
“நேரடியாக இல்ல… அவன் கம்பனிதான் இதுவும் எனது பங்கு வெறும் நாற்பது வீதம்தான். அதோடு உன்னிடம் பேச மட்டும் தான் செய்வேன் வேறு எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன் என்று வாக்களித்திருந்தான்”
“பெரிய அரிசந்திர பிரபு… அவன் ப்ராமிஸ் பண்ண நம்பிருவாயா?”
“அவன் வாக்கு தவறியதாக இதுவரை கேள்விப்பட்டதில்ல” புன்னகைத்தான் சரவணன். தொழில் எத்தனையோ இடங்களில் பொய் சொல்ல வேண்டி வரும் நீக்கு போக்காய் நடக்க வேண்டி வரும். இத்தனைக்கும் நடுவில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்பது பிரம்ம பிரயத்தனமே.
“அவன் கேசவன் அச்சுத கேசவன், AK எனக்கு தெரிந்து அவனை எதிர்த்தது ஜெயித்தவர் கிடையாது”.
சரவணன் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தாலும் வாய்க்குள் முணுமுணுத்தாள் “ஆடியோ ரீலீஸ்ல ஹீரோவ புகழுர மாதிரி புளுகிறானே.”
வேறு எதுவும் பேசாமல் திரும்பியவளைக் காண சரவணனுக்கு பாவமாகவும் இருந்தது அவள் குழந்தைத்தனத்தை பார்க்க சிரிப்பும் வந்தது சொல்வதை புரிந்து கொள்கிறாள் இல்லையே என்று கோபமும் வந்தது. அனைத்தையும் உடைப்பில் போட்டவன் அவளை பார்த்து ஆர்வமாய் கேட்டான். “என்ன கேட்டான்? என்ன பதில் சொன்னாய்?”
“ஹ்ம்ம்…. கல்யாணம் செய்வோமா என்று கேட்டான். வந்து புரோகிதம் செய்து வை வா”
தொடரும்… (To be continued)
Previous Chapter
Next Chapter
© 2025 Nandhaki Tamil Novels. All rights reserved. Unauthorized reproduction or distribution of this material is strictly prohibited.

Comments on “யாசகம் ♥ 02”