இதயம் முழுதும் அவன் மொழி (Idhayam Muzhuthum Avan Mozhi) 15
ஆசிரியர் குறிப்பு (Author’s Note)
‘இதயம் முழுதும் அவன் மொழி’ (Idhayam Muzhuthum Avan Mozhi) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது.
இந்த அத்தியாயத்தில் (In this Chapter)
யதீந்திராவின் உடல்நிலை சொரூபனைப் பாதிக்கிறது. அவனுக்கு எதிராகச் செயல்பட்டதாக நினைத்தவள், உண்மையில் அவனைக் காப்பாற்றினாளா? அந்த விபத்து பற்றிய உண்மைகளை இருவரும் பேசிக்கொள்ளும் இடம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தை பற்றி சொரூபன் கேட்கும் கேள்விக்கு யதீந்திராவின் பதில் என்ன?
மொழி – 15
சிலவேளை ஏதாவது தவறான புரிதல் இருந்திருந்தால்…
யார் மீது தவறோ இல்லையோ! உனக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கும் பெண்ணை இழந்துவிடாதே.
மாறன் சென்று வெகு நேரமாகியும் உள்ளே செல்லாமல் நின்றவன் மனதினுள் நிஷாந்தாவின் வார்த்தைகளே ஒலித்தது.
சென்னை வந்து பள்ளிகூடத்தில் சேர்ந்த போது இருவரும் ஒரே வகுப்பில்தான் படித்தார்கள். அவன் தமிழிலும் அவனிலும் மயங்கி கை கொடுத்தவள்தான் இன்று வரை அந்த மயக்கம் தீரவே இல்லை. சொரூபன் அதை நன்றாகவே அறிந்திருந்தான். அவள் அம்மா மனோகரியை கூட நேரில் சந்தித்து கதைத்திருக்கின்றான். அவனுக்கு என்று தனியாய் உணவு கூட கொடுத்து அனுப்புவார்.
அந்தப் பத்து நாட்களுள் என்னதான் நடந்தது. அதுதான் அவளின் அன்றைய நடவடிக்கைக்கு காரணமா?
ஆனால் அவன் அம்மாவின் விபத்தும், அதன் பின்னான அவளின் செயலும், அன்று சொல்லிய சொல்லும் அவன் கண் முன்னே நடந்தது. அதில் எதுவித தவறான புரிதலும் இல்லையே!
இப்போது எதற்காக எனக்கு உதவி செய்தாள்?
இது மட்டும் தானா தெரியாமல் வேறு எதுவும் இருக்கா!
செய்த பாவத்திற்கு பிரயாசித்தமா?
வருந்துகிறாளா?
இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்?
அவன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவளை மன்னித்து மணந்து கொள்ள வேண்டுமா?
ஆயிரம் கேள்விகள் எங்கிருந்தோ முளைக்க பதிலின்றி நின்றான் சொரூபன்.
இரத்த அழுத்தம் எகிற நாசியால் இரத்தம் கசிய தொடங்கியது.
“அண்ணாவின் கார் போய் கன நேரம். இன்னமும் இங்கே என்ன செய்கின்றீர்கள்?” கேட்டவாறே வெளியே வந்தாள் யதீந்திரா.
அன்று இதே காரணத்தை பொய்யாய் காட்டி அவளை அடைய பயன்படுத்திக் கொண்டவன் இன்றோ அவளுக்கு மறைக்க திரும்பி நின்றான்.
அவனை சுற்றி வந்து முகத்தைப் பார்த்தவள் சேலை முந்தானையால் நாசியில் கசிந்த இரத்தை துடைத்துவிட்டாள். அவன் கன்னம் தாங்கி “அண்ணா ஏதாவது சொன்னாரா? இதுக்கு எல்லாமா யோசிப்பார்கள். ஃப்ரீயா விடுங்க” அவனை சமாதானப்படுத்தினாள்.
சட்டென அவளை கூர்ந்து பார்த்தான் சொரூபன். ‘என்ன சொல்கிறாள் என்று தெரிந்துதான் சொல்கிறாளா?’
அவளோ எப்போதோ மாறன் சென்ற வழியை முறைத்தவாறே “இன்று நீங்கள் வர இரவாகும் என்றீர்கள். அதனால் தான் அவரை இந்த நேரம் வர சொன்னேன். இனி அவர் உங்களை தொல்லை செய்ய மாட்டார்” சிறு சங்கடமான புன்னகையுடன் கூறினாள்.
உணர்ச்சியற்ற முகத்துடன் அசையாது அவளையே பார்த்தவன் கேட்டான் “அவர் என்ன கேட்டார் என்று உனக்குத் தெரியுமா?”
‘இல்லை’ என்பது போல் தலையாட்டி விட்டு கூறினாள் “ஒரு ஊகம் இருக்கு”.
“உன்னை திருமணம் செய்ய சொல்லிக் கேட்டார்” அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான்.
ஒரு கணம் கண்களில் ஆசையும் நிராசையும் போட்டி போட்டு மின்ன நொடியில் அதை மறைத்து மறுத்து தலையசைத்தாள் “அவர் கிடக்கிறார். நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை. உள்ளே வாருங்கள்” கையைப் பிடித்து இழுத்தாள்.
மறுக்கமால் வந்தவனுக்கு சாப்பாட்டை போட்டுக் கொடுத்து விட்டு கன்னத்தில் கையூன்றி அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்.
‘சொரூபனுடன் திருமணம்’ ஒரு காலத்தில் மிக மிக அழகான கனவாய் மனதில் பதிந்திருந்த ஒன்று. இன்றோ…
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் புரண்டு படுக்க அருகே இடம் காலியாய் இருந்தது. எழுந்து அமரவும் யாரோ ஒங்களிக்கும் சத்தம் கேட்கவே வேகமாய் சென்று குளியலறை கதவைத் திறந்தான். யதீந்திராதான் சத்தி எடுத்து களைத்து போய், கையில் பிரஸ் உடன் சுவரில் சாய்ந்து நின்றாள்.
“என்னடி” பதட்டத்துடன் அவளை நெருங்கவே கையை நீட்டி தடுத்து நிறுத்தினாள்.
“மேலெல்லாம் சத்தி, மணக்கும்” ஒரு கணம் நிதானித்து வந்த வேகத்தில் வெளியே சென்று விட யதிக்கு நிம்மதியாகவும் இருந்தது, ஏமாற்றமாகவும் இருந்தது.
கிறுகிறுவென சுற்றிய தலையை சமாளித்து பல் துலக்கி நிமிரவே அவளிடமிருந்த அத்தனை சக்தியும் வடிந்திருந்தது. சோர்ந்து போய் சுவரில் சாய்ந்திருந்தவள் ஆடையை யாரோ கழட்டவே அந்த நிலையிலும் திடுக்கிட்டு எதிர்த்தாள்.
“இங்கே என்னைத் தவிர வேறு யார் வருவார்கள்” சிறு கேலியாய் கேட்டவன் வேலையில் கவனமானான். கையோடு கொண்டு வந்திருந்த துவாயை சுடு தண்ணீரில் நனைத்து உடலை துடைத்து உடையை மாற்றி விட்டான். பூவை போல் கைகளில் தூக்கிக் கொள்ள அவன் கழுத்தை சுற்றிக் கைகளை போட்டு வளைவில் முகம் பதித்தாள்.
அறையினுள் இருந்த ஹீட்டரில் வெந்நீர் போட்டு இதமான சூட்டில் கொடுத்தவன் கேட்டான் “புட்டு சமிக்கலயா?”
மெதுவாய் மறுத்து தலையாட்டினாள் “புட்டு இல்ல”
“பின்”
“எண்ணெய்.. அல்சர்” மெல்லிய குரலில் கூறியவளையே விசித்திரமாய் பார்த்தவன் கேட்டான் “சொல்லியிருக்க வேண்டியது தானே”.
அவள் அமைதி காத்தாள்.
“இப்ப ஓகேவா”
“ஹம்”
“சரி படும்”
சிறிது நேரம் மௌனத்தில் கழிய, அவள் புறம் திரும்பிப் படுத்தவன் பார்வை அவள் வயிற்றை நோக்க என்னவென்று இனங்காண முடியாத மெல்லிய ஏமாற்றம் நிறைந்த குரலில் கூறினான் “நான் வேறு நினைத்தேன்”.
“வேறு என்ன?” குழப்பத்துடன் கேட்டாள் யதி.
அவன் பரந்த உள்ளங்கையுள் அவள் குட்டி வயிறு அடங்க “பேபி” முணுமுணுத்தான்.
சட்டென அவனிடமிருந்து திரும்பிப் படுத்தவள் கூறினாள் “அது வராது”.
“ஏன்? அதற்குதானே அன்று மாமாவிடம் சவால் எல்லாம் விட்டு வந்தாய்” முரட்டுத்தனமாய் அவளை தன்னை நோக்கித் திருப்பினான்.
“டேப்லெட் யுஸ் பண்ணுறேன் வராது” சொல்லும் போதே அவள் குரல் உடைந்தது.
“எஎன்ன ஏன்?” காற்றுதான் வந்தது. அன்று அவள் மாமாவிடம் கதைத்ததை அவன் கேட்டானே. “என் குழந்தையை சுமப்பது உனக்கு அவமானமா?” சீறினான்.
சில நாட்களுக்கு முன் அவன் சொன்ன அதே வார்த்தையை சொல்லி கண்ணில் நீர் வழிய கூறினாள் “இப்படிபட்ட, எதற்குமே ராசியில்லாத, பாவப்பட்ட தாய்க்கு பிள்ளையாய் பிறப்பது அதற்குதான் அவமானம்”.
சட்டென கழுத்தை பிடித்த சொரூபன், கண்களை மூடி அசையாது இருந்தவளை உதறி விட்டு எழுந்து பல்கனிக்கு சென்றுவிட்டான். அவளை இப்படி ஒரு நிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவள் உயிராய் மதிக்கும் மானத்தை இல்லாமால் செய்யத்தான் அனைத்தையும் செய்தான். ஆனால் எதிர்த்து போராடாமல் இலகுவாய் ஏற்றுக் கொண்டதை மனம் ஏற்க மறுத்தது. அனைத்துக்கும் மேல் அண்மை கால நிகழ்வுகளை மனதினுள் கோர்த்து பார்க்க ஒன்றுக்கொன்று முரன்பட்டது.
வெகுநேரம் நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி யோசித்தவன் கடைசியாய் ஒரு நம்பருக்கு அழைத்து சில உத்தரவுகளை இட்டு உள்ளே வந்த போது லேசாய் விசித்தபடி உறக்கதில் இருந்தாள் யதி.
வாய் வழியே காற்றை கற்றையாய் ஊதி தள்ளினான். “ரட்சசிடி நீ, தெரியாத்தனமா ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதை வைச்சே என்னை கொல்லுற” அவளருகே படுத்தவன் மார்பில் போட்டு மெதுவாய் தட்டிக் கொடுக்க விசிப்பது நின்றது. “அப்படி சொன்னது தப்புதான் இல்லையா சொரிடி, ஆனா எனக்கு தெரியாம நிறைய மறைச்சிட்ட இல்ல” லேசாய் கரகரத்த குரலில் கேட்டு அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.
அவளோ நீண்ட புருவங்கள் நெளிய எதையோ கனவில் எதையோ பிதற்றினாள். அதைக் கேட்டவன் உடல் எஃகாய் இறுகியது.
******
அலுவலகம் செல்ல தயாராகி கீழே இறங்கி வந்தவன் வீடு முழுவதும் தேடிவிட்டான் அவளைக் காணவில்லை. நேரம் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
கையிலிருந்த கைபேசி சத்தமிட “ஹலோ, ஜானகி யதி” என்று அவன் தொடங்க முதலே “லெமன் இந்த யதிக்கு இப்பெல்லாம் என் மேலே பழைய அன்பே இல்ல. உன்னை தவிர வேற யாருமே அவள் கண்ணுக்கு தெரியல” அவள் முறைப்பாட்டில் வாய் விட்டே சிரித்தான் சொரூபன்.
“யதி எங்கே?”
“இன்று முழுக்க வர மாட்டாள்”
அவள் கூறியதில் அலுமாரியில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தவன் கை அப்படியே நின்றது.
******
அம்மா அப்பாவின் படங்களை வைத்துக் கொண்டு இறங்க சிரமபடவே ஒரு கை அதை வாங்கிக் கொண்டு காரின் கதவையும் விரியத் திறந்துவிட்டது.
வெளியே இறங்கியவள் கண்ணில்பட்டான் கார் கதவை பிடித்துக் கொண்டு நின்ற சொரூபன்.
இலங்கை முறையில் வேட்டி அணிந்து வேட்டியின் இரு முனைகளையும் எடுத்து முன்னே பெல்ட் அணியும் இடத்தில் முடிச்சு போட்டு விட்டிருக்க, பாதி வேட்டி மடித்து கட்டியபடி இருக்க மீதி கால் தெரியாமல் இரண்டு லேயராக நின்றது. ஸ்கூல் படிக்கும் போது ஒருதரம் இப்படி வேட்டி கட்டி வந்தது நினைவு வர கலங்கியிருந்த கண்ணில் மெல்லிய மயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவள் கண்ணில் மயக்கத்தை கண்டு கொண்டவன் உதடுகளில் கர்வ புன்னகை தவழ அருகே நெருங்கி நெற்றியில் பட்டும் படமாலும் இதழ் பதிக்க, கண்களில் தேங்கி நின்ற நீர் கோடாய் இறங்கியது.
அதை அழகாய் கமராவில் படம் எடுத்திருந்தாள் ஜானகி. கூடவே நின்ற நிஷாந்தவிடம் காட்டுகிறேன் என்ற பெயரில் நெருங்கி நிற்க, அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்து விட்டு சற்று விலகி நின்றான் அவன்.
“வா” யதியின் தோளை சுற்றி ஆதரவாய் கை போட்டு அழைத்து சென்றான் சொரூபன்.
கடற்கரையில் வைத்து அம்மா அப்பாவிற்கு திதி கொடுக்க அவனும் அருகே இருந்து உதவினான். ஐயர் தந்தவைகளை கடலில் விட்டு வரவே கரையில் நின்ற ஜானகியை பார்த்து புருவத்தை சுருக்கினாள்.
சிறு முறுவலுடன் அவள் முகம் பார்த்தவன் “அவளைப் பேசாதே நான்தான் வர சொன்னேன்” அருகே செல்ல முன் எச்சரித்தான்.
“அவள் உங்களை சுண்டு விரலில் வைச்சிருகிறாள்” செல்லமாய் திட்டியவாறே சென்று விளையாட்டாய் ஜானகி காதை பிடிக்க “நீ அங்கேதான் வர வேண்டாம் என்றாய்” என்று சலுகையாய் கட்டிக் கொண்டாள் அவள்.
காரில் ஏற யதீந்திராவிற்கு முன் கதவைத் திறந்துவிட்டான். நிஷாந்த தலையை குறுக்கே அசைத்தவாறே ஜானகியுடன் பின் சீட்டில் அமர்ந்தான். ட்ரைவின்ங் சீட்டில் தானே அமர்ந்த சொரூபன் “சோ லேடீஸ், அடுத்து எங்கே” புன்னகையுடன் கேட்க “இன்று உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா?” விசாரித்தாள் யதி.
“இன்று உங்கள் இருவருக்கும் டிரைவிங் வேலைதான் என் வேலையே” சிரிப்புடன் பதிலளித்தான் சொரூபன்.
“ஆசிரமத்திற்கு போக வேண்டும்.”
“ஷுயர்” என்றவன் விலாசம் கூட கேளாமால் காரை செலுத்தினான்.
ஆசிரமத்தில் குழந்தைகள் சாப்பிட்டு விட்டு விளையாடுவதை பார்த்தபடி நின்றவள் அருகே வந்தவன் கேட்டான் “நீர் சாப்பிடல”. பொங்கி வந்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் ‘இல்லை’ என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
கடைசியாய் அம்மா அப்பாவுடன் வந்தது இங்கேதான். அதன் பிறகு அவள் வாழ்கையில் எல்லாமே கனவாய் கலைந்திருந்தது. குனிந்து மடியில் கோர்த்திருந்த விரல்களைப் பார்க்க, குனிந்த தலையையே உதடுகளை கடித்தபடி பார்த்திருந்தான் சொரூபன்.
அவன் கைபேசி சத்தமிட காதுக்கு கொடுத்தவன் கண்கள் அங்கிருந்து வந்த தகவலில் விரிந்தது.
குனிந்திருந்த அவளையே கூர்ந்து பார்த்தபடி கூறினான் “யோகேஸ்வரனுக்கு விபத்தாம், மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். காலுக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாம். கையெழுத்து போட ஆளில்லை. உம்மை தேடுகின்றார்கள்”.
இதழ்களில் ஒரு முறுவல் நெளிய கூறினாள் “என்னுடைய போன் இன்று முழுவதும் அணைத்துதான் வைக்கப்பட்டிருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்தது”.
“ஆசை மருமகள் கதைப்பது போலில்லையே” அவன் குரல் கேலி செய்வது போலிருக்க நிமிர்ந்து பார்த்தாள் யதி.
அவன் முகம் தீவிரமாய் தென்பட்டது.
அவள் சலனமற்று நிற்பதைப் பார்த்தவன் கைபேசியுடன் ஒதுங்கினான்.
குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிய ஜானகியையே நோக்கியபடி நின்றான் நிஷந்தா. தன் மனம் அந்தக் குழந்தை பெண்ணிடம் மயங்குவது தெரிந்தே இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் நின்றான் அவன். வழமைக்கு மாறாய் வெறும் டீ சேர்ட் ஜீன்ஸில் நின்றவன் அவள் குழந்தை மனதை தடுமாற வைக்கவே முதல் முறையாய் அவனை நெருங்க தயங்கி விலகி நின்றாள்.
நிஷந்தாவின் பார்வையையும் ஜானகியின் தயக்கத்தையும் கவனித்தவாறே கைபேசியில் உரையாடியவன் அதை அனைத்து விட்டு யதியின் அருகே வந்தான்.
அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க தொண்டையை செருமி “மணி ஐந்தாக போகுது, போவோமா?” என்றவனுக்கு ஆமோதிப்பாய் தலையாட்டி வைத்தாள். அப்போதும் அங்கிருந்த சிறுவர்களுடன் சிறுமி போல் விளையாடிக் கொண்டிருந்த ஜானகியை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள்.
ஸ்டார் ஹோட்டலின் முன் காரை நிறுத்த “இங்கே ஏன்?” என்று கோரசாய் கேட்ட இரு பெண்களும் தங்கள் ஆடையை பார்த்தார்கள். மெல்லிய சிரிப்புடன் “இருவருமே வடிவாத்தான் இருக்கிறீங்க வாங்கோ” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
எங்கிருந்தோ வந்த ஜெகதீஸ், அதே ஹோட்டலில் ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த அறை சாவியை கொடுக்க “ஒரு சின்ன அலுவலக வேலை என்னுடன் வா” என்று அழைத்து சென்றான்.
அறைக்குள் வந்தவள் கேள்வியாய் நோக்கினாள். “பிரேஷ் ஆகி வா” என்று அனுப்பி வைத்தான் சொரூபன்.
கடற்கரை காற்றில் நின்றது கசகசவென்று இருக்கவே தலை முழுகி வெளியே வந்தாள். முழங்காலுக்கு சற்று மேலேயே நின்ற பாத்ரோப்புடன் வெளியே போது சொரூபனும் குளித்து உடை மாற்றி சோபாவில் காத்திருந்தான்.
ரொபின் நீல நிற முழுக்கை சட்டை, அஷ் நிற பண்ட், இடையில் கருநிற பெல்ட் என்று கம்பீரமாய் அவளை நோக்கி வந்தவனை இமைக்காது பார்க்க, அவள் கையில் ஒரு பொதியை வைத்தான்.
“என்னடி பார்வையெல்லம் பலமா இருக்கு. நேற்றிலிருந்து நீ சரியே இல்ல. மனுசன டெம்ப் பண்ணிட்டே இருக்கிற” நெருங்கி நின்றவன் கண்கள் வழவழவென்று தெரிந்த தொடையில் பதிந்து மீள அவள் சங்கடத்துடன் நெளிந்தாள்.
அவள் நாசியில் சுண்டி “இதை கட்டிட்டு வாரும்” என்றான். பிரித்துப் பார்க்க உள்ளே அவன் சட்டைக்கு பொருத்தமான ரொபின் நீல நிறத்தில் சேலை. உதட்டை பிதுக்கினாள் யதி.
“இந்த நிறம் உங்கள் நிறத்திற்குதான் அழகா இருக்கும்”
அவள் உதட்டை இரு விரல்களால் பிடித்தவன் “உமக்கும் வடிவாதான் இருக்கும் போய் கட்டிட்டு வாரும்” என்றவன் கையை தட்டி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். சேலையை அணிந்து வர அவள் தேன் நிறத்திற்கு அழகாய்தான் இருந்தது.
அவள் தலையை காய வைக்க மீண்டும் போனுடன் பல்கனிக்கு சென்றான்.
யோசனையாய் பார்த்தவாறே லேசானா ஒப்பனையுடன் தயாரனாள். அவள் கைபேசி அடிக்கவே எடுத்து காதுக்கு கொடுத்தாள். மறுபுறமிருந்து வந்த தகவலில் அவள் முகம் குழப்பத்தை தத்தெடுத்தது.
உள்ளே வந்த சொரூபனையே கையைக் கட்டிக் கொண்டு பார்க்க அவனோ நமட்டு சிரிப்புடன் “என் இடத்திலேயே ஸ்பை இருக்கு போல” கேலியாய் கேட்டான்.
அவளோ அவனையே கூர்ந்து நோக்கி ஒரே ஒரு கேள்வி கேட்டாள் “ஏன்?”
“எல்லோரும் வைட் பண்ணுறாங்க வாரும்” அவளை திசை மாற்ற முயன்றான். அவளோ கையை கட்டிக் சோபாவில் அமர்ந்து “பதில் தெரியமால் வர முடியாது” என்றாள்.
மிரட்டி அழைத்து செல்ல முடியாது என்பதில்லை. ஆனால் இன்று மிரட்ட மனமின்றி அவள் முன் மண்டியிட்டு கன்னங்களை கையில் ஏந்திக் கொண்டான். “இப்படி நீர் நடக்க வேண்டாம். ஏதோ போலிருக்கு. அன்பே உருவான என் யதி… இப்படி மாமாவையே கொல்ல ஆள் ஏற்பாடு வேண்டாம், இது நீரில்லை” ஒரு கணம் அமைதி காத்து “இது தப்பு உம்மால் ஒரு உயிர்… அதுவும் இன்று வேண்டாம்” தலையை குறுக்கே அசைத்தான்.
கையை கன்னத்திலிருந்து விலக்கிவிட்டவள் “அவரை கொல்ல சொல்லவில்லை. ஒரு மாதத்திற்கு படுக்கையில் இருப்பது போல்தான். ஏன் இப்போது ஆபத்தா? இல்லையே எனக்கு அப்படி தகவல் வரலையே” எதுவித பதட்டமுமின்றி சாதாரணமாய் கேட்டாள்.
ஒரு உயிரைப் பற்றி அத்தனை சாதரணமாய் கேட்டது சட்டென எரிச்சலடைய செய்தாலும், நேற்று மாறன் கூறியது நினைவுக்கு வந்தது. சந்தோசம் துக்கம் எதுவுமற்ற நிலை.
அன்றும் இது போல தான் இருந்தாளா?
சிலவேளை அவன் நேரில் சந்தித்து இருந்தால் மாறியிருக்குமா?
அவன் விடயத்தில் மட்டும்தான் சந்தோசம் துக்கம் எல்லாமுமா?
என்ன மாதிரி மனநிலை இது?
அப்படியானால் நான் அருகே இல்லாத இத்தனை நாளும் எப்படி வாழ்ந்தாள்?
வெறும் பொம்மையா?
முற்றிலுமாய் குழம்பிப் போய் நின்றான் சொரூபன்.
“லுக் அந்த விபத்து நானேதான் ஏற்பாடு செய்தது. யோகேஸ்வரன் இல்ல”
“தெரியும்” சாதரணமாய் கூறி அவனை அதிரவிட்டாள்.
“பின் ஏன் குறுக்கே வந்தீர்?”
அதற்கு பதில் சொல்லமால் எதிர் கேள்வி கேட்டாள் “அந்த டிரைவர் எங்கே? அதன் பின் உங்களை சந்தித்தாரா?”
அவன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்திருந்தது. இவளிடம் அதை சொன்னால் என்ன செய்வாளோ என்ற யோசனையுடன் மறுத்து தலையாட்ட “நீங்கள் ஏற்பாடு செய்த ஆளை கொன்றுவிட்டார்கள். அவருக்கு பதிலாய் இன்னொருவரை அனுப்பி வைத்தார்கள்” என்றாள் அவள் சாதரணமாய்.
“சரி நீர் யோகேஸ்வரனுக்குதானே சப்போர்ட், பின் ஏன் திடிரென்று அவருக்கு எதிராய்…” அவன் கண்கள் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவளை நோக்கியது.
மடியிலிருந்த கைக்கு பார்வையை திருப்பியவள் “அது… எனக்கு அவருடன் சொத்துகளை பங்கு போட விருப்பமில்லை” தயங்கியவாறே பதிலளித்தாள்.
“யார் உம்மட சொத்து”
திடுக்கிட்டு போய்ப் நிமிர்ந்து பார்த்தாள், அவன் குரலில் என்ன இருந்தது.
அவள் பதிலளிப்பதற்கு முன் தன் இதழ் கொண்டு அவள் இதழ்களை மூடியிருந்தான். கணங்களோ மணிகளோ என்று தெரியமால் பாவை மயங்கியிருக்க விலகியவன் நெற்றியோடு நெற்றி முட்டி “இத்தனை நாள் எப்படியோ இனி இது போன்ற வேலைகளை செய்ய கூடாது. உம்மட கையில் இரத்தக் கறை பட கூடாது” கட்டளையாய் ஒலித்தது அவன் குரல்.
“யார் தடுப்பது” அலட்சியமாய் கேட்டாள் யதீந்திரா.
“ஞான மந்திர சொரூபன் தடுப்பான்” தன் பெயரை தானே சொன்னவனை அதிர்ந்து போய் பார்க்க “மேக்கப் கலைஞ்சிட்டு போய் சரி பண்ணிட்டு வாரும்” என்று எழுந்தான்.
வாசலை நோக்கிச் சென்றவனை பார்த்தவள் வாய் கசந்து வழிந்தது. கையை குனிந்து பார்த்தாள். பதினைந்து வருடத்திற்கு முன்னர் இதே நாள் நான்கு உயிரின் இரத்தக் கரை இந்தக் கையில். அதை எப்படி கழுவுவாள்.
இதழ்களில் வறண்ட புன்னகை நெளிந்தது.
தொடரும்… (To be continued)
Previous Chapter
Next Chapter
© 2025 Nandhaki Tamil Novels. All rights reserved. Unauthorized reproduction or distribution of this material is strictly prohibited.
