உன்னை நான் யாசிக்கின்றேன் (Unnai Naan Yaasikkindren) Chapter – 10 (Heart Touching Love Story)
ஆசிரியர் குறிப்பு (Author’s Note)
‘உன்னை நான் யாசிக்கின்றேன்’ (Unnai Naan Yaasikkindren) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது.
இந்த அத்தியாயத்தில் (In this Chapter):
அச்சுதன் இதழ்கள் தீண்டும் போது யார் பெயரை சொன்னாள்!
யாசகம் – 10
வீடு திரும்பிய சன்விதா முதலில் செய்த காரியம் கரணுக்கு கால் எடுத்தது தான். ஆனால் நோட் ரீச்சபிள் என்று வர “ச்சு….” என எரிச்சலுடன் போனை தூக்கி மெத்தையில் போட்டவள் குளித்து பிரெஷ் ஆகி வந்தாள் அலமாரியை குடைந்த போது தான் நியாபகம் வந்தது சில அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வைக்க வேண்டும் மனதில் குறிப்பெடுத்தவள் அதை தொலைபேசியில் பதிந்து வைத்தாள். அக்கா மனசா தொலைக்காட்சியில் செய்தி போட ஏதோ தேர்தல் சம்பந்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“அக்கா… கார்ட்டூன் சேனல் டாம் அண்ட் ஜெர்ரி வையேன்” என்றவாறு மானசா அருகே அமர்ந்தாள். நம் நாயகிக்கு உலக நடப்பில் அத்தனை நாட்டம். மனசா திரும்பி முறைத்தவள் கேட்டாள் “நீ யாருக்கு ஒட்டு போட போற” ஒரு கணம் விழித்தவள் “ஹி ஹி.. நீ இல்லாட்டி கரண் சொல்லுற ஆளுக்கு தான்” எச்சில் வராமல் ‘து’ என துப்பினாள் மனசா. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா எனற கணக்கில் டீலில் விட்டவள் “ஏன் கரண் போன் நோட் ரீச்சபிள் வருது” என தீவிரமாக வினவினாள். “ஏன்னா அவன் பிலைட்ல இருக்கான் அதான்” புன்னகையுடன் சொன்னாள் மனசா.
“ஐ…” ஆயிரம் வாட்ஸ் பல்ப் முகத்தில் பிரகாசிக்க சிறுமியாய் குதூகலித்தாள். “எப்ப வாறன், எந்த ஏர்போர்ட், எத்தனை மணிக்கு, நீயும் வருவாயா? நாம் போய் கூட்டி வருவோமா? ஏன் எனக்கு சொல்லாமல் வந்தான்? வரட்டும் அவனுக்கு இருக்கு நானும் எத்தனை தரம் கால் பண்ணன் எனக்கு அன்சார் பண்ணவே இல்லை சைத்தான் கே பச்ச உனக்கு இருக்குடா”. வடையையும் தேநீரையும் கொண்டு வந்த பத்மாவதி அவள் தலையில் தட்டி “கொஞ்சம் மூச்சுவிடு” என்றவாறு அருகே அமர்ந்தார்.
“நாளைக்கு வருகிறான் ஏர்போர்ட் போவோமா?” கேட்டாள் மனஸா “நான் வரல நீயே போ, அவன் என்னிடம் சொல்லாம தானே வந்தான் ஹும்” சிறுபிள்ளையாய் மூக்கை சுருக்கி முகத்தை திரும்பியவள் வடையை எடுத்து வாயில் வைத்தாள்.
செய்தியில் “தமிழ் நாட்டின் பிரபல தொழிலதிபரான அச்சுத கேசவன் சில தினங்களுக்கு முன் பிரதமரை சந்தித்தார்” அச்சுதன் பெயரை சொன்னதும் நிமிர்ந்து பார்த்தாள் சன்விதா செய்தி தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது “தேர்தல் காலத்தின் போதான இந்த சந்திப்பு தமிழ் நாட்டில் பெரும் பரப்பப்பினை ஏற்படுத்தியுள்ளது…..” செய்தி தொடர்ந்து செல்ல பின்னனியில் திரைக்காட்சியாக கண்களில் கருப்பு கண்ணாடி, ப்ளஸ்ர் மேல் கோட் அணிந்து தனது பாதுகாவலர் புடைசூழ கம்பிரமாக நடந்தவனை மீடியாவால் கூட அருகே நெருங்க முடியவில்லை. அச்சுதன் நடந்து வர மீடியாவினை நெருங்க விடாமல் பாதுகாவலர்கள் தடுத்தது கொண்டிருந்தனர். அவன் முகத்தில் இருந்த அலட்சியமும் கடுமையும் இது தான் நித்தமும் பார்க்கும் அச்சுத கேசவன் தானா என சன்விதாவிக்கு சந்தேகம் வர அம்மாவின் முகத்தை பார்த்து அவனேதான் என சந்தேகத்தை தீர்த்து கொண்டாள்.
அவள் கை எப்போதோ வடையை கைவிட்டு விட அதுவரை உதட்டில் ஒட்டியிருந்த இருந்த வடை தொப் என்று மடியில் விழ அக்காவையும் அம்மாவையும் பார்த்தாள் சன்விதா. பத்மாவதி பரிவுடன் பார்க்க சிரிப்பை அடக்கிக் கொண்ட மானஸா “சன்வி, உனக்கு தெரியும்தானே” ஆதரவாய் தோளை பற்றினாள். இல்லை என பரிதாபமாய் தலையாட்டினாள் சன்விதா. பத்மாவதியும் மானஸாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர், பின் இவள் அவனை பற்றி என்ன தெரியும் என்று எதை சொன்னாள் என்பது போல். தொலைக்காட்சியில் வேக நடையுடன் அவனுக்கு ஈடு கொடுத்து நடந்து வந்த அருணிடம் கையசைத்து ஏதோ உத்தரவிட்டவாறே வந்தவன் தன் முன்னே வழுக்கி கொண்டு வந்து நின்ற கருப்பு கண்ணாடி போட்ட காரில் ஏறி செல்வதை காட்ட அதை பார்த்தவாறு மெதுவே தன் மடியில் படுத்தவளை பார்க்க மனஸாவுக்கு அந்த அச்சுதனிடம் காரணமின்றி கோபம் வந்தது.
இவள் மனதை மாற்ற வேண்டுமே என நினைத்தவள் அவளது போனை பார்த்து “நீ ஷாப்பிங் போக போறியா சன்வி” என கேட்க இன்னும் தெளியாமால் இருந்தவள் ஆம் என்பது போல் தலையாட்ட “சரி எனக்கும் கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டும் அதையும் சேர்த்து பர்சைஸ் பண்ணிடு நோட் பண்ணு, ஏர்போர்ட்ல இருந்து கரனை நான் கூட்டி வாரன் சரியா” என்றவள் வாங்க வேண்டிய பொருட்களை சொல்ல அதை சன்விதா குறித்து கொண்டாள் மெதுவே கார்ட்டூன் சேனலை வைக்க டாம் அண்ட் ஜெர்ரியில் ஆழ்ந்தவளை இடுப்பில் கூச்சம் காட்டி சிரிக்க வைத்தாலும் மானஸாவின் மனம் எதையோ நினைத்து தெளிவில்லாமல் குழம்பியிருந்தது. நாளை கரனுடன் தனியாக பேச வேண்டும். இவளை அழைத்து சென்றாள் அவளை வாய் கூட திறக்க விடமாட்டாள்.
இரவு நேர நட்சத்திரங்களை மேகங்கள் மறைக்க நிலவு வெளியே வர அதன் வெளிச்சம் அந்த இரு சகோதரிகள் மீதும் விழுந்தது. மானஸா நிமிந்த படுத்திருக்க குப்பற படுத்திருந்த சன்விதா அக்காவின் தோள் மீது கையை வைத்து அதன் மீது தன் தடையை பதித்திருந்தவள் கேட்டாள் “அக்கா உண்மையிலேயே இந்த ராஜராஜ சோழன் அவ்வளவு பெரிய அப்பாடக்கர..” ஒரு கணம் விழித்த மானஸா சிறு சிரிப்புடன் கேட்டாள் “யாரை கேக்கிறாய், அச்சுத கேசவனையா? ஏன்?”
சிறுமியாய் கண்கள் மின்ன மேலும் கீழுமாக தலையாட்டினாள் “இல்லை கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு மேல் என் பின்னேயே சுத்துறான் பின் இந்த வேலையெல்லாம் எப்படி பார்ப்பான்” கண்களை அழகாய் வெட்டி பார்த்தாள்.
அவள் தலையை பிடித்து ஆட்டிய மானஸா “இதை அவரிடமே கேட்க வேண்டியது தானே…” யோசனையாய் பார்த்தவள் “ஹும் சரி அடுத்த முறை பார்க்கும் போது கேட்கிறேன்” என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் “அடுத்த முறை பார்க்கும் போத அவரை சந்திப்பதற்கு குறைந்தது மூன்று மாதத்திற்கு முன் அப்பொய்ன்ட்மென்ட் எடுக்கனும்” என்றவளை லூசா நீ என்பது போல் பார்த்து வைத்தாள்.
“நான் போக தேவையில்லை, அவனே வருவான்.” ஏதோ கேட்க வந்தவளை “எப்படி எங்கே என்று எல்லாம் தெரியாது, வரக்கூடாத இடத்திற்கு வரவே கூடாத நேரத்திற்கு வந்திருவான்” என்று உதட்டை சுளித்தாள்.
“சரி நாம தூங்குவோம்” என்றவாறு அக்காவின் கையை எடுத்து தன் மேல் போட “மூன்று கழுத வயசாகுது உனக்கு இன்னும் கைகால் போடனும் போடி” என்றவள் திரும்பி படுக்க, நீ போடாட்டி போ நான் போடுறான் என்பது போல் அக்காவை கட்டிக் கொண்டு உறங்கினாள்.
திரும்பி படுத்திருந்த மானஸா முதல் முறையாக நினைத்தாள் இவளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்காமல் வளர்த்திருக்கலாமோ என்று அப்படியே அன்று தன் அன்னையை சந்தித்து சென்ற அச்சுதனை தான் சந்தித்தது நிழலாடியது.
♥♥♥♥♥
அன்று அவன் அச்சுதன் அன்னையிடம் பேசியத்தையெல்லாம் கேட்ட மனஸாவுக்கு அவன் விடைபெற்று சென்ற பின் இருப்பு கொள்ளவில்லை நேரே கிளம்பி அவன் அலுவலகம் சென்றுவிட்டாள். ஆனால் பத்து மாடி கொண்ட அவனது அலுவலகத்தை பார்த்து பிரமித்து போய் நின்றாள். ஏதோ உத்வேகத்தில் வந்துவிட்டாள் ஆனால் இப்போது அவன் அவளை சந்திக்க ஒப்புக்கொள்வானா என்பதே கேள்வியாய் நிற்க வரவேற்பு பெண்ணிடம் சென்று அச்சுத கேசவனை சந்திக்க வேண்டும் என கேட்டாள். அதிகம் பேசாமல் அடுத்த மூன்று மாதத்தின் பின்னரான ஒரு தினத்தை கொடுத்து குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும் என்ற வரவேற்ப்பு பெண் எதாவது மாற்றங்கள் இருந்தால் உங்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கபடும் என கூடுதல் தகவல் ஒன்றையும் கூற கையிலிருந்த ஸ்லிப்பை பார்த்து விழித்துக் கொண்டு நின்றாள் மானஸா.
அவளைக் கண்டதும் முகம் மலர அருகே வந்தான். அவளது நல்ல நேரம் அதே இடத்தில் அருண் நின்றிருந்தான். அவளை பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டவன் புன்னகைத்தான் “நீங்க சன்விதாவோட சிஸ்டர் தானே..” என தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டான். அவள் வந்த காரணத்தை கூற திரும்பி வரவேற்புக்கு பெண்ணிடம் “அந்த அப்பொய்ன்மெண்ட் கேன்சல் பண்ணிடுங்க” உத்தரவிட்டவன் மானஸாவிடம் “என்னுடன் வாங்க” என்றவாறு லிப்டை நோக்கி நடந்தான்.
கண்கள் தெறித்து விடும் போல் பார்த்து கொண்டிருந்தவளை அப்போது தான் அங்கு வந்த அவளுடன் வேலை செய்யும் சக பெண் உலுக்கினாள் “என்னடி ப்ரியா எதை பார்த்து இப்படி விழிக்கிறாய் கண்விழி கீழே விழுந்திட போது” அப்போதும் அசையாமல் மனஸாவுடன் சிரித்து பேசியவாறு போய் கொண்டிருந்த அருணை கையை உயர்த்தி காட்டினாள் “அருண் சார் அந்த பொண்ணு கூட சிரிச்சு பேசினாருடி” “ஏது…” என்றவள் கையில் வைத்திருந்த போத்தலை கைவிட அது டங்கென்ற ஒலியுடன் கீழே விழுந்தது.
சத்தம் கேட்டு திரும்பிய மானஸா அப்போது தான் பார்த்தாள். வரவேற்பு பெண்களுடன் சேர்ந்து அங்கங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் திறந்த வாய் மூடாமல் இருவரையுமே பார்த்து கொண்டிருந்தனர். அவளுக்காக லிஃப்டை திறக்க பொத்தானை அழுத்திய அருண் அவர்களை அதிகாரம் நிரம்பிய கண்களால் ஒரு தடவை வட்டமடித்து பார்த்தான். அவ்வளவுதான் சற்று முன் பார்த்த தோற்றம் பொய்யோ எனும்படியாக அனைவரும் அவரவர் வேலையயை செய்து கொண்டிருந்தனர்.
அவளை நோக்கிய அவன் கண்களில் சற்று முன் இருந்த அதிகாரமில்லை. ஸ்நேகமே நிரம்பியிருந்தது. கண்களால் சிரித்தவன், உள்ளே செல்லும்படி சைகை செய்தான். சுற்றிலும் கண்ணாடி தடுப்புள்ள லிஃட்.
அது பிரத்தியேகமான லிஃட் என்பது சற்று நேரம் கழித்தே புரிந்தது. அவளை ஓர் அறையில் கொண்டு வந்துவிட்டவன் “AK மீட்டிங்ல இருக்கிறான். இங்கேயே காத்திருங்கள் நான் வந்து அழைத்து செல்கின்றேன்” என்றவன் அருகே இருந்த மேசையில் அமர்ந்து தன் வேலையை தொடங்கியிருந்தான். ஒரு பெரிய நீள் சதுர அறை அது, அதில் பாதியில் அவள் இருந்த ‘ட’ வடிவ சோஃபாவும் சிறு கண்ணாடி டேபிள் மற்றும் LCD திரை என அடைத்திருக்க அதனை தேவைப்பட்டால் மீட்டிங் ரூமாக கூட பயன்படுத்தலாம் என்பது புரிய திரும்பி அருண் இருந்த இடத்தை பார்த்தாள் இருவருக்கும் நடுவில் மெல்லிய வெள்ளை நிற திரைசீலை தொங்கி கொண்டிருந்தது. வரும் போது அது இருக்கவில்லையே யோசித்துக் கொண்டிருந்த போதே இண்டர்காமினை எடுத்து AK யை பார்க்க வந்திருப்பவர்கள் லிஸ்டை கொண்டு வருமாறு பணித்தான்.
AK யை பார்க்க வந்தவர்களில் பாதிப்பேரை அவனே சந்தித்து அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியுமா இல்லையா என் முடிவெடுத்து அவர்களை அனுப்பியவன் கதவில் யாரோ தட்ட “எஸ் கம்மின்” என்றான். ஒரு பெண் காபி ட்ராயுடன் வந்தாள், அவள் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டு “சார் காபி” என்றவளை கணக்கே எடுக்காமல் மானஸா இருந்த பக்கம் கை காட்டியவன் அவன் மேசையிலிருந்த சில பத்திரிகைகளினையும் எடுத்து இதையும் கொடுங்கள் என்பது போல் சைகை செய்தான்.
மானஸாவுக்கு காபி கொடுத்த பெண் கண்களை விரித்து அவளையே பார்க்க சங்கடமான ஒரு புன்னகையுடன் காபியை எடுத்து கொண்டள். அந்த பெண் பத்திரிகைகளினையும் அவளருகே வைத்து விட்டு சென்றாள். பத்திரிக்கையை புரட்டியவாறே ‘என்னடா இது எல்லோரும் ஒரு மாதிரியவே பார்க்கிறாங்க பேசாம திரும்பி போயிருவோமா’ சங்கடமாய் நினைத்து கொண்டிருக்க ஒரு குரல் கேட்டது “என்னடா இது நானே கெஞ்சினாலும் என்னை பார்க்க வந்தவர்களை நீ பார்க்க மாட்ட இன்று எட்டாவது அதிசயமா இருக்கே” என்றவாறு உள்ளே வந்தான் அச்சுத கேசவன்.
அளவாய் புன்னகைத்த அருண் “எல்லாம் காரணமாக தான் உன்னை பார்க்க ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வந்திருக்காங்க”. என்று கண்ணை காட்டினான்.
“யாருடா அது?” புன்னகையுடன் கேட்டான். இன்று பாதிப்பேரை சந்திக்கும் தொல்லை விட்ட சந்தோசத்தில் இருந்தான் அவன்.
“சன்விதா…” சொல்லி முடிக்கவில்லை திரையை விலக்கி கொண்டு உள்ளே சென்றிருந்தான். அவன் பின்னேயே வந்த அருண் “…..வோட அக்கா மானஸா” என்று வார்தைகளை முடித்தான்.
தீடிரென வந்ததில் பதறி எழுந்த மானஸா சன்விதா பெயரை சொன்னதும் அவன் வந்த வேகத்தையும் ஒரு கணம் அவன் கண்களில் தென்பட்ட கடும் ஏமாற்றத்தையும் கவனத்தையும் குறித்து கொண்டாள்.
“ஓஹ்…” என்றவன் அவளுக்கு எதிரிலிருந்த ஒற்றை சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் அருணிடம் கேட்டான் “ஏன்டா என் அறைக்கு கூட்டிட்டு வரல”
“பாதுகாப்பு….” ஒரே வார்த்தையில் பதிலளித்தான் அருண். அவனிடம் தலையசைத்தவன் திரும்பி மானஸாவை பார்க்க அவள் இன்னமும் நின்று கொண்டிருக்க சற்று முன்னே சாய்ந்து “ப்ளீஸ் சீட்” என்று வாயால் கூறி சைகையிலும் செய்தவன் அவள் அமர்ந்ததும் “சோ…” என்றான்.
ஓர் கணம் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தலைகுனிந்து இருந்தவளை அமைதியாக பார்த்து கொண்டிருந்தான். “நான் வெளியில் காத்….” என்று ஆரம்பித்த அருணை தடுத்தாள் “இல்லை அது இல்லை எப்படி ஆரம்பிப்பது…..” இழுத்தாள். அச்சுதனுக்கு அவள் வந்த நோக்கம் புரிய கண்களில் கடுமை கூட நீயே சொல்லி முடி என்பது போல் அமைதியாக இருந்தான்.
ஆழ்ந்து சுவாசித்தவள் “உங்களை எதிர்க்கும் பலம் எங்களிடம் இல்லை ஆனால் எங்கள் சன்வி எல்லோருக்கும் செல்ல பெண், சில வேளைகளில் அவள் வாய் துடுக்கு அதிகம், இதுவரைக்கும் நீங்கள் அவளை நேரில் சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமையவில்லை என்று நினைக்கின்றேன். ஆனால் இனிமேல் எப்படியென்றும் தெரியவில்லை. அப்படி பேச நேர்ந்து அவள் எதாவது எக்கு தப்பாக பேசினாள், ப்ளீஸ் அவளிடம் கோபப்படாதீர்கள் ப்ளீஸ் அவள் இன்னும் சிறுபிள்ளை போல் தான்” என கரம் குவித்தாள்.
ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்த அச்சுதன் “என்னால் அவளிடம் கோபப்பட முடியாது” சாதாரணமாக சொன்னவன் கண்களில் இறுகிய கை முஷ்டி ஒன்று பட சுவரசியமானான். “ப்ளீஸ் கைகளை இறக்குங்கள் நான் கடவுளில்லை” ஒர விழிகளில் கை முஷ்டி தளர்வது பட சிறு நகையுடன் கூறினான் “என்னால் முடிந்ததை நான் கட்டாயம் செய்வேன் சொல்லுங்கள்”
“உங்களால் அவளை விட்டுவிட முடியுமா?” சட்டென கேட்டவளுக்கு பதிலாய் முகம் இறுக உறுதியாக மறுத்தான்.
“உங்கள் அம்மாவிடமும் இதே கேள்வியை தான் கேட்டேன் உங்களிடமும் கேட்கிறேன். சன்வி என்னை காதலித்தாள் நீங்கள் மறுப்பீர்களா?” தெளிவாக கேட்டான்.
“அவளுக்கு பிடிக்காது என்பது தானே இப்போது பிரச்சனையே” சோர்வுடன் சொன்னாள் மனஸா. “இன்னொரு விடயம், இதை நான் கேட்க முடியுமா என்று தெரியவில்லை நீங்கள் அவளை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டீர்கள் தானே…” கெஞ்சுவது போல் கேட்டாள்.
“எனக்கு என்று சில வரைமுறைகள் இருக்கின்றன இலகுவில் அதை மீற மாட்டேன். ஆனால் என் கேள்விக்கு இன்னும் பதிலில்லை ” அதிலேயே ஒரே பிடியாக நின்றான்.
“அவள் சம்மதித்ததால் எதுவித பிரச்சனையும் இல்லை அவள் சம்மதிக்காவிட்டால்….” என இழுத்து நிறுத்தவே புன்னகைத்தவன் “இந்த அச்சுத கேசவன் வாழ்கையில் தோல்வி என்பதே இல்லை” கர்வமாகவே சொன்னான் “இப்போது டிசம்பர் மாதமில்லையா வரும் ஆவணி முடிவதற்குள் எனக்கும் சன்விக்கும் திருமணம் முடிந்திருக்கும்” அதை சொன்னவன் கண்களில் இருந்த உறுதி மனஸாவை பயம் கொள்ள செய்தது. தேவையில்லாமல் தூங்கி கொண்டிருந்த இருந்த சிங்கத்தை எழுப்பி விட்டுட்டோமோ.
சிறிது நேரம் மௌனத்தில் நகர “அது சரி நீங்கள் அவளுக்கு அக்கா தானே உங்களுக்கும் திருமணம் செய்ய வேண்டும் இல்லையா?, எனக்கு தெரிந்து நல்ல பையன் ஒருத்தன் இருக்கிறான் பேசட்டுமா?, என்னை மாதிரியெல்லாம் இல்லை” சிறு சிரிப்புடன் கூறினான்.
“இல்ல… இல்ல.. எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் தையில் நிச்சயம்…..” டப் என கேட்ட சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க அருண் கையிலிருந்த காபி கப் உடைந்து ரத்தமும் காபியோடு சேர்ந்து துளி துளியாக விழ அச்சுதனின் முகமும் சட்டென களையிழந்து தென்பட்டது. முகத்தில் வலியை கூட பிரதிபலிக்காமல் வாஷ் ரூம் நோக்கி சென்றவனை இருவரும் பார்த்திருந்தார்கள்.
உதட்டை கடித்தவாறு திரும்பிய அச்சுதன் தீடிரென கேட்டான் “நீங்க வரும் போது எல்லோரும் உங்களையே பார்த்திருப்பாங்க கவனித்தீர்களா?” சட்டென முகம் சிவக்க தலையாட்டினாள் மானஸா. “கரணம் நீங்கள் நினைப்பது இல்லை” கேள்வியாய் பார்த்தவளுக்கு பதிலாய் “அருண் எனது நண்பன் என்னை பற்றி அவனுக்கு தெரியாதது இல்லை அத்துடன் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்த நிலையில் இருப்பவன். ஆனா நானும் அவனும் பெண் விடயத்தில் இரு துருவம் அவனிடம் ஒரு பெண் நெருங்க முடியாது நெருப்பு” என்றவனின் கண்களில் தவிப்பும் வேதனையும் வெளிப்படையாகவே தெரிந்தது “நானும் அப்படியே இருந்திருக்கலாம் இல்ல” அடிவாங்கிய சிறு பிள்ளையாய் கூறிய அவனைப் பார்க்க மானஸாவுக்கு பாவமாக இருந்தது. “அப்படியானால் நான் வருகிறேன்” என்று அவள் எழவும் அருண் வாஷ் ரூமில் புதிய ஆடை அணிந்து கையில் சிறு கட்டுடன் வரவும் சரியாக இருந்தது.
சட்டென களையிழந்த நண்பன் முகத்தை உதட்டை கடித்தவாறே பார்த்த அச்சுதன் அவன் தோளில் கைவைத்து “இது முடிவில்லை, இவர்களை விட்டு வா” என்றவனை அருண் முறைக்க மானஸா குழப்பத்துடன் பார்த்தாள். மனஸாவிடம் திரும்பிய அருண் ஸ்நேக புன்னகையுடன் போகலாம் என சைகை செய்தான்.
அன்று அருணே காரில் அவளை அழைத்து சென்று வீட்டில் இறக்கிவிட்டான். AK விற்கு அடுத்த அதிகாரத்தில் இருக்கும் ஒருவன் சாதாரண பெண் ஒருத்திக்கு தானே காரோட்டி சென்றதை அந்த மொத்த அலுவலகமும் வேடிக்கை பார்த்தது.
♥♥♥♥♥
“அவன் பேங்க் கார்ட் பர்ஸ் எல்லாத்திலயும் இங்க் ஊத்தி விடுறன்” உறக்கத்தில் ஏதோ புலம்பியவாறு திரும்பி படுத்த சன்விதா அவளை நிகழ்காலத்துக்கு கொண்டு வர “ஏது இங்க் ஊத்த போறியா நீ எல்லாம் அதுக்கு சரியே வரமாட்டடி உன்னை லவ் பண்ணி அந்த அச்சுதன் என்ன செய்ய போறாரோ தெரியல” செல்லமாய் திட்டியவாறே மானஸாவும் உறங்க முயற்சித்தாள்.
♥♥♥♥♥
அடுத்த நாள் அதிகாலையே மானஸா ஏர்போர்ட் சென்றுவிட சன்விதா அவசரமின்றி ஆடிப்பாடி தயாராகினாள். பத்மாவதி ஆச்சரியத்துடன் பார்த்தவர் வேலைக்கு போகவில்லை என வினவ “இன்று அலுவலகத்துக்கு லீவு கொடுத்துவிட்டாள் இந்த விதா….” கையையும் தலையையும் ஆட்டி பதிலளிக்க தலையில் அடித்துக் கொண்டார் பத்மாவதி “எந்த நேரத்திலடி நீ பிறந்த” “சரியாய் நடுசமாம் பன்னிரண்டு மணி” பதிலளித்தவள் “கிரெடிட் கார்டு எடுத்துட்டு போறன் பை பை” என்றவாறு மான்குட்டியாய் துள்ளி ஓடினாள்.
ஆனால் சிங்கத்தை வேட்டையாட முடியாத சில குள்ள நரிகள் அந்த மானை வேட்டையாட காத்திருந்தன.
தொடரும்… (To be continued)
Previous Chapter
Next Chapter
© 2025 Nandhaki Tamil Novels. All rights reserved. Unauthorized reproduction or distribution of this material is strictly prohibited.
