உன்னை நான் யாசிக்கின்றேன் (Unnai Naan Yaasikkindren) Chapter – 09 (Heart Touching Love Story)
ஆசிரியர் குறிப்பு (Author’s Note)
‘உன்னை நான் யாசிக்கின்றேன்’ (Unnai Naan Yaasikkindren) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது.
இந்த அத்தியாயத்தில் (In this Chapter):
அச்சுதன் இதழ்கள் தீண்டும் போது யார் பெயரை சொன்னாள்!
யாசகம் – 09
அருகே இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்த சன்விதாவுக்கு சட்டென பொறி தட்டியது “ஆனா நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் போது வாசித்து பார்த்தனே அதில இப்படியெல்லாம் இருக்கவில்லையே” புருவம் நெறித்து கேட்டாள்.
மெச்சுத்தலோடு பார்த்தவன் “நல்ல பழக்கமா இருக்கே, இது புதிய ஒப்பந்தம்….”
“நான்தான் இனி கையெழுத்து போட மாட்டனே” சந்தோசமாய் ராகமிழுத்தாள் சன்விதா.
அவள் இருந்த நாற்காலியின் கைகளில் கையை ஊன்றி குனித்தவன் அவள் கண்களை ஊடுருவியவாறே, ஒரு சவால் பார்வையுடன் ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் “யூ ஆல்ரெடி டிட்” என்றான்.
குழப்பத்துடன் பார்த்த சன்விதா “இல்லையே நான் புதிதாக எந்……….” இடையில் நிறுத்தியவள் சிந்தனை அவன் வந்து சென்ற சில நாட்களின் பின் EPF என்று சரவணன் கையெழுத்து வேண்டிய பத்திரங்கள் நினைவுக்கு வர அவ்வளவுநேரமிருந்த புன்னகை மறைந்தது. அருகே இருந்த மேசை மீது சாய்ந்து நின்றவாறு உதடு பிதுக்கி அழுவதற்கு தயாரானவளை அழகாய் அழும் குழந்தையை ரசிக்கும் ரசனையுடன் நோக்கினான்.
இந்த ஒப்பந்தத்தை சரவணன் மூலம் எப்போதோ செய்துவிட்டான். அவள் வேலையை விட்டு நிற்கிறேன் என்று சொன்னால் மட்டுமே அதை ஆயுதமாக பயன்படுத்த எண்ணினான். ஆனால் இன்று அவளோடன வார்தை விளையாட்டில் தன்னையுமறியது விட்டுவிட்டான். எத்தனையே பேரை விரல் சொடுக்கும் நேரத்தில் கணித்து முடிவுகளை தனக்கு சாதகமாக்கி கொள்பவன் இன்று முதன் முறையாக அவளிடம் தோற்று போக ஆசை கொண்டான். ஆனால் அந்த தோல்வியில் அவளையே இழக்க கூடும் என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டுமே அவனை கட்டி போட உதடு கடித்து அந்த உணர்வை அடக்கியவன் கண்களில் பட்டது அழகாய் பிதுங்கிய அவள் செவ்விதழ்களும் கோபத்தில் சுருங்கிய மூக்கும் தான். இதற்கு மேல் தாங்காது என்பது போல் சட்டென குனிந்தவன் ஒரு பக்கமாக அவள் மூக்குக்கும் இதழ்களுக்கும் நடுவில் தன் இதழ்களை புதைத்தான்.
அதிர்ச்சியில் கண்கள் தெறித்துவிடும் போல் விரிய அவன் மூக்கும் குருந்தாடியும் உரசியதில் கன்னங்கள் சிவக்க “சே கரண் என்னை கொல்ல போறா…” என்ற வார்தைகள் உதட்டுக்குள் உறைந்தது அச்சுதனுக்கு தெளிவாகவே கேட்டது.
“ஏய்ய்…” உடலில் எஃகுகின் விறைப்புடன் நிமிர்ந்தான் அச்சுத கேசவன். அவ்வளவு நேரம் கண்களில் இருந்த இலகு தன்மை மறைந்து ஒரு கடினம் வர, தடை இறுக நிமிர்ந்தவனைப் பார்த்து நாற்காலியோடு ஒன்றினாள் சன்விதா. அவன் முகத்தில் அப்படி ஒரு ரௌத்ரம். இத்தனை நாட்களில் அவனது மெல்லிய கோபத்தை கூட காணாதவளுக்கு இந்த ரௌத்ர முகம் அச்சத்தையளிக்க நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது.
“கரண் எதுக்கு உன்னை கொல்லனும்” இரும்பு சாலகைகள் மோதியது போல் வெளிவந்தது அவன் குரல்.
“வா.. வாசி.. சச.. சரியா.. வா.. வாசிக்கமா சைன் ப.. ப.. பண்ணதுக்கு” அச்சத்தில் வார்தைகள் தந்தியடிக்க பயத்தில் ஒடுங்கியவளுக்கு புரியவேயில்லை வுமனைசர் என்ற போது வராத கோபம் கரணை பற்றி பேசும் போது ஏன் வந்தது. (படுபாவி கிஸ் பண்ணும் போதா பேசுவ) அவளது அச்சத்தை கண்டு கண்மூடி தன்னை கட்டுக்குள் கொணர்ந்தவன். “என்னோடு வா” சரவணன் அறையை நோக்கி நடந்தான்.
பயத்தில் நகர முடியாமல் அமர்ந்திருந்தவளை தலையை மட்டும் பக்கவாட்டில் திருப்பி பார்த்தவன் “இப்ப நீயே வருகின்றாயா? அல்லது நான் தூக்கி செல்லவா?” மறுபடியும் வார்தைகள் தந்தியடிக்க “வே வேனாம், வாறன்” விழுந்தெழும்பி அவன் பின்னே சென்றாள்.
விறுவிறுவென நடந்தவனுக்கு சினம் அடங்கவில்லை. அவனுக்கு கிடைத்த தகவல்களின்படி அந்த கரண் சன்விதாவின் லவ்வர் இல்லை. ஆனால் நேரம் காலம் இல்லாமல் இருவரும் இன்னும் இரண்டு பெண்களுடனும் சேர்ந்து சுற்றி இருந்தார்கள் அத்துடன் சன்விதா ஆசைப்பட்ட அனைத்து தகுதிகளும் அவனுக்கு இருந்தது. அது வேறு அச்சுதனுக்கு காந்தியது. அன்று சன்விதா ஒருவனை நேசிப்பதாக சொன்னது உண்மையா பொய்யா என்று சரியாக தெரியாத நிலையில் இந்த கரண் என்ற பெயரை கேட்டாலே சுர்ர்ர் என்று உச்சி வரை ஏறியது கோபம்.
அங்கே அருணுடன் ஆகாஷும் நிலாவும் இன்னும் இரண்டு பெண்களும் நின்றார்கள். அன்று சரவணன் அலுவலகம் வரவில்லை. அதனால் அவனது அறையிலேயே அச்சுதன் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தவன் சிறு கண்ணசைவில் அவர்களை சத்தமின்றி வெளியேற்றினான்.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் சன்விதாவை கவலையாய் நோக்கினார்கள் ‘அவளைப் பார்க்க முகம் கொள்ளாத சிரிப்புடன் சென்றவன் இவ்வளவு கோபமாக திரும்பி வந்திருக்கின்றானே! என்ன சொல்லி வைத்தாளே’.
“மிஸ். சர்மா” யாரை அழைத்தான் என்பது போல் சுற்றும் முற்றும் பார்த்தாள் சன்விதா. “உங்களைத்தான் சொல்கின்றேன்” அவளது செயலுக்கு பதிலளித்தான் அச்சுதன். அவனுக்கு அவள் பயத்திலும் செயலிலும் பாதி கோபம் வந்த வழியே திரும்பிவிட்டது. இமை தட்டி விழித்தவள் ‘ஆக என்ன திடிரென்று மரியாதையை எல்லாம் கொடுக்கிறான், சூதனமா இருந்துக்க’ வடிவேல் மைண்டில் வந்து சொல்லி செல்ல எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள்.
ஆனால் அச்சுதனின் கோபத்திற்கு முன் அவனது அனுபவமிக்க தொழில் வல்லுனர்களே பயப்படும் போது சிறுமி சன்விதா எம்மாத்திரம். அவளது தலையாட்டலில் முகத்தில் வந்த இளக்கத்தை மறைக்க சட்டென வெளி கதவை நோக்கி திரும்பியவன் “உங்களை எனது பிஏவா அப்பாயிண்ட் பண்ணியிருக்கன்”
அப்போது பார்த்து கதவை தட்டிவிட்டு வந்த அருணுடன் உள்ளே வந்த அவனது ஒரிஜினல் பிஏ ஆகாஷ் ‘அப்ப நானு’ என்பது போல் பார்த்து கொண்டிருந்தான்.
அருணுக்கு ஒரு பார்வையில் புரிந்துவிட்டது இங்கிருந்து சென்றது அச்சுதன் வருவது AK என்று சின்ன பெண் வேறு என்ன சொல்லி தொலைத்தாளோ மனதினுள் கவலை கொண்டான். அவனின் கோபத்தை, சின்ன பெண் தாங்குவாளா என யோசித்தவன் தன்னை பற்றி யோசிக்காமல் உள்ளே வந்துவிட்டான். கேள்வியாய் நோக்கிய அச்சுதனுக்கு “இல்ல மீட்டிங் போகனும் அதான்… ” என இழுத்தான்.
“போகலாம்” என அவனிடம் தலையாட்டியவன் “எனது இந்த கம்பெனிக்கான என் பிஏவாக நீங்க செயல்படனும்” அவ்வளவுதான் நீண்ட கால்களினால் இரெண்டே எட்டில் அறையினை விட்டு வெளியேறிவிட்டான்.
திரும்பி சன்விதாவை பார்த்த அருண் ‘தைரியமாய் இரு’ என்பது போல் கண்மூடி சைகை செய்தவன், ‘இவனையெல்லாம் தலை கீழா கட்டி காவோலை கொளுத்தணும் லவ்வர் கிட்ட பேசுற மாதிரியா பேசுறான், கிறுக்கு’ மனதினுள் வைதவாறே சென்றான்.
அவன் செல்ல பின்னே விழித்தவாறு நின்றாள் சன்விதா.
“ஹாய்..” உற்சாகமாய் கை கொடுத்த நிலா கேட்டாள். “என்னை ஞாபகம் இருக்கா?”
ஆச்சரியத்துடன் பார்த்த சன்விதா “ஹேய் மூன் தானே” அவளைக் கட்டிக் கொண்டாள். அதற்குள் வெளியே இருந்து “மிஸ். நிலா” அச்சுதனின் எரிச்சல் நிறைந்த குரல் கேட்கவே “நீதான் என் பாசுக்கே பாஸா? நைட் கோல் எடுக்கிறேன்” வெளியே ஓடினாள்.
வெளியே வந்தவளைப் பார்த்தவன் “எப்படி தெரியும்” சிடுசிடுத்தான். அவனைத் தவிர அனைவருடனும் நன்றாகவே பழகுகின்றாள்.
“ஒரே காலேஜ்” அவன் பொறாமையை இனம் கண்ட நிலா சிரிப்பை அடக்கப்பாடுபட்டாள்.
“ஏன் சொல்லவில்லை?”
“சான்விட்ச்தான் உங்கள் லவ்வர் என்று தெரியாதே” என்றாள் அப்பாவியாய்.
உள்ளே உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சன்விதா மூக்கைச் சுருக்கினாள்.
‘பெரிய கோபகாரனா இருப்பானோ’
இன்றே வேலையை விட்டு சென்றாலும் வீட்டில் எவரும் எதுவும் சொல்ல போவதில்லை ஆனால் வீட்டிலும் உறவினர் மத்தியிலும் கடைசி குழந்தை என்பதால் எல்லோரும் செல்லம் கொடுத்து அவளுக்கு எல்லாம் செய்து கொடுக்க சன்விதாவுக்கு பயம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. கரண் சொல்படி பயத்தை வெளியே கட்டி கொள்ளாமல் இருக்க பழகி கொண்டாள். ஆனால் யாரவது நன்றாக தெரிந்த ஒரு நபர் அருகே இருந்தால் தைரியமாக எதையும் செய்வாள். இல்லமால் வேறு யாரவது இரண்டு அதட்டு கூட போட்டால் அழுதுவிடுவாள் இந்த குணம் இல்லமால் போக வேண்டுமென்று தான் வீட்டில் பேசி அவளை, அவர்கள் இருவருக்கும் நண்பனான சரவணனின் கம்பனிக்கு கரண் வேலைக்கு அனுப்பி வைத்திருந்தான். இந்த லட்சனத்தில் சன்விதா கரனுடன் பந்தயம் வேறு பிடித்துள்ளாள் ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டு நிற்க மாட்டேன் என்று இன்னும் ஆறு மாதங்கள் மிச்சம் இருக்கே! அதற்கு முன் வேலையை விட்டு நின்றாள் அவளது வீரதீர பராக்கிரமம் என்ன ஆவாது என்ற கவலை.
♥♥♥♥♥
அடுத்த நாள் காலை…..
அனைவருக்கும் அழகாய் புலர்ந்த பொழுது அவளுக்கு மட்டும் கொஞ்சம்.. கொஞ்சமில்லை ரொம்பவே கொடூரமாக இருந்தது. காலின் கீழே விழுந்து இழுபட்ட பெட்ஷீடுடன் தன்னை தானே இழுத்தவாறு எழும்பி வேலைக்கு சென்றவளை கண்டு குழம்பி போய் நின்றாள் அவள் அக்கா மானஸா.
“இந்த லெட்டர் மிகவும் முக்கியமானது அதனால் இதை நீங்களே டைப் பண்ணிருங்க..” என்றான் முன்னே இருந்த மடிகணினியில் எதையோ தட்டியவாறு இருந்த அச்சுதன். அவன் முன்னே பென்னுடன் இருந்த சன்விதாவின் முகம் சட்டென பிரகாசிக்க “எனக்கு ஷார்ட் ஹண்ட் தெரியாது சார்” பளிச்சென சொன்னாள்.
செய்த வேலையிலிருந்து கண்ணெடுக்கமால் “பரவாயில்ல மெதுவாவே சொல்றன்” என்றவனை பார்த்து பல்லை கடித்தவள், வேணாம் வேணாம் பல் பத்திரம் என நினைத்தவாறு ‘இருடா ஏண்டா இந்த பெண்ணை இந்த வேலைக்கு வைச்சம் என்று அழ வைக்கல’ அடி குரலில் மனதினுள் சபதம் எடுத்தவள் “சொல்லுங்க…. சார்” என ராகமிட்டாள்.
சட்டென நிமிந்து சந்தேகமாய் பார்த்தவனுக்கு தெரியவில்லை, எவ்வளவு தூரம் பயந்தவளோ அவ்வளவு தூரம் குறும்புக்காரி என்று. அது புரியாமல் தலையசைத்தவன் “டெல்லி தலைமை அலுவலகத்தில் உள்ள ரொனால்ட் ராய்க்கு அனுப்ப வேண்டும் எலக்ட்ரானிக் சைன் பண்ணி அனுப்புவோம்…” அப்படியே தொடர்ந்து கடகடவென எழுத கூடிய வேகத்தில் சொல்லிக்கொண்டு போனவன் திடீரென நிறுத்தி கேட்டான் “மிஸ். ஷர்மா, நீங்க எழுதியதை நான் பார்க்கலாமா?”
‘மிஸ் ஷர்மாவாம் மிஸ் ஷர்மா’ என மனதினுள் தாளித்து உதட்டை சுளித்தவள் “நிச்சயமாக சார்” எழுதி வைத்திருந்த கல்வெட்டை மகிழ்வாகவே தூக்கி கொடுத்தாள்
“வாட் த” ஒரு கணம் வந்த கோபம் திசை தெரியாமல் ஓடிவிட அவளது குழந்தைதனமான செயல் வேடிக்கையாக இருந்தது. ரொனால்ட் என்ற பெயரை மட்டும் பெரிய எழுத்தில் எழுதி வைத்திருந்தாள். பொங்கி வந்த சிரிப்பு அவனையு மீறி உதட்டில் வழிய நிமிர்ந்தவனிடம் ஏதுமறியா குழந்தை போல் அப்பாவியாய் பதிலளித்தாள் “தாங்க சார் நான் ட்ரை பண்ணி எழுதிருவன் சார் நீங்க சொல்லுங்க”
“ஹ்ம்ம் சன்விதா, உனக்கு என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசை இருக்கா இது எனக்கு தெரியாம போச்சே” போலியாக வருத்தப்பட்டான்.
‘நான் எப்படா அப்படி சொன்னேன்’ என்பது போல் பார்த்து வைத்தாள்.
ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் “நேரடியா சொல்லல தான் பட் யுவர் ஆக்ஷன் ஸ்பீக்ஸ், நான் நினைத்தேன், இந்த வேலையை முடித்து விட்டு போகலாம் என்று பட்….” என இழுத்தவனை இடையிட்டாள் சன்விதா “சொல்லவே இல்ல…” கேள்வியாய் ஒற்றை புருவம் தூக்கியவனிடம் “என்ன வெட்டி கதை வேண்டி கிடக்கு வேலையை செய்வோம்….” என்றவள் லெட்டர் பாடை திருப்பி வாங்கினாள்.
அதன் பின் இருவரும் சில வேலைகளை விரைவாக செய்து முடித்தனர். வேலையில் அச்சுதனின் வேகத்திற்கு சன்விதா ஈடு கொடுத்தாள். இடையிடையே தன்னை மறந்து அவள் முகத்தில் லயித்தவனின் எண்ணங்களை அவளது கேள்வி நிரம்பிய விழிகள் நடப்புக்கு கொண்டு வந்தது. அவன் பார்க்கவில்லை என நினைத்த போது சன்விதாவும் அவனை யோசனையோடு நோக்கினாள்.
மின்னஞ்சல் மூலமாக அனுப்பியவை போக மீதியை கூரியர் மூலமாக அனுப்ப பார்சலினை தயார் செய்து கொண்டிருந்தாள் சன்விதா. அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தவன் மேசையை சுற்றி அவளருகே மேசையின் விளிம்பில் சாய்ந்தால் போல் நின்றவன் பாண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டவாறு அழைத்தான் “சோ சன்விதா….” அவன் சுற்றி வந்து அருகே நின்றதை உணர்ந்த சன்விதாவின் விரல்கள் ஒரு கணம் நின்று மீண்டும் வேலையை தொடர்ந்தது.
அவள் அமைதியாக வேலையை தொடர்ந்தாள்.
“சன்விதா நான் கேட்டால் பதில் சொல்லனும்” கடினமான குரல் அவளின் முதுகு தண்டினை சீலீரென்று ஊடுருவியது. கோபம் நிரம்பிய அவன் கண்களினை நிமிர்ந்து பார்த்தவளுக்கு புரிந்தது தன் முன்னால் நிற்பது நேற்று பார்த்த AK என்று. தொண்டையில் அடைத்ததுடன் சேர்த்து பயத்தையும் விழுங்கியவள் தைரியத்தை கூட்டி பதிலளித்தாள். “நீங்கள் எந்த கேள்வியையும் கேட்கவில்லை Mr. அச்சுத கேசவன், சோ சன்விதா என்பது கேள்வியில்ல”
சற்று முன்புறமாக குனிந்து முறைத்தவன் பல்லை கடித்தான். “ஆல்ரைட், நீ ஏன் கல்யாணம் செய்ய மறுக்கிறாய்….?”
“நான் கல்யாணம் செய்ய மறுக்கவில்லை உங்களை தான் மறுக்கிறேன்” தெளிவாக கூறினாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் மேசையிலிருந்து எழுந்து டையை தளர்த்தி ஷர்ட் பட்டன்களை விடுவித்தான். அவனது செய்கைகளை நாற்காலியோடு ஒன்றி போனவளாக பார்த்திருந்தாள் சன்விதா.
காற்றை கற்றையாக வாய் வழியே ஊதியவன் கேள்வியை மாற்றி கேட்டான் “என்ன செய்தால் திருமணத்திற்கு சம்மதிப்பாய்?” தலையை குறுக்கே ஆட்டியபடி ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தவன் “என்னோட கடந்த காலத்தை பற்றி திரும்ப கொண்டு வராதே, இந்த AK ஒரு முறை வாக்களித்தால் அது உயிர் பிரிந்தாலும் மாறாதது” என்றான்.
“இதற்கு பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டன். எனது…..” கைகளால் சட்டென ஓங்கி மேசையின் மீது அடித்தான் அச்சுதன். “என் கடந்த காலத்தை பற்றி உனக்கு என்னடி தெரியும், நான் எதனால அப்படி மாறி…..” அவளது பயமும் தான் சொல்ல வந்த உண்மையின் தீவிரமும் உறைக்க, கோப மூச்சுகளை வெளியேற்றியவன் மேசை மீது இருந்த பொருட்கள் அனைத்தையும் ஒரே தட்டில் தட்டிவிட்டான். கடந்த மூன்று மாத காலத்திலும் ஏன் நேற்று கூட இவ்வளவு கோபத்தை பார்க்காதவள் கைகளை முஷ்டியாக்கி கண்களை இறுக மூடி மனதினுள் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என அவளது கண்ணனை துணைக்கழைத்தாள்.
♥♥♥♥♥
“இவள் வேற நேரம் காலம் தெரியாம ஏற்கனவே உனக்கு உதவியதில் ருக்கு காண்ட் ஆக இருக்கிறாள். இப்ப ஹெல்ப் பண்ண உனக்கு எதிரா எதாவது செய்தாலும் செய்திருவாள், அவன் உன்னை அடிக்க மாட்டான் சும்மாயிரு” என்றவாறு வெண்ணையை தேடிக் கொண்டிருந்தான் அவளது கண்ணன்.
♥♥♥♥♥
அவளது பயத்தை பார்த்து தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தவனாய் “சோ, எனது கடந்த காலம் பற்றி உனக்கு என்ன தெரியும், வாட் இஸ் த கோட் டாமன் ரீசன்….”
பரிதாபமாக நிமிர்ந்து பார்த்த சன்விதா கேட்டாள் “எதுக்கு நான், என்னை விட அழகான அறிவான நிறைய பெண்கள், முக்கியமா உங்களை மணமுடிக்க ஆசைப்படும் பெண்கள் நிறைய பேர் இருக்காங்களே”
மெல்ல அவளை நோக்கி குனிந்த அச்சுதன் நாற்காலியின் முதுகு புறத்தில் ஒரு கையை ஊன்றி மறு கையால் அவளது கன்னத்தை தாங்கியவன் அவள் கண்களை பார்த்தவாறே சொன்னான் “உண்மையிலேயே எனக்கு தெரியலடி, ஆரம்பத்தில இதெல்லாம் எனக்கு சரி வராது என்று விடத்தான் நினைத்தேன், ரெம்ப ட்ரை பண்னேன்….. ஆனா என்னால முடியல…, என்னை நம்பினால் நம்பு உன்னை தவிர வேறொரு பெண்ணை தொடுறது என்ன மனதால் நினைக்க கூட முடியலடி” அந்த செங்கபில நிற கண்களினை பார்த்தவள் அதிலிருந்த நேசத்தில் அதை கூறும் போது தென்பட்ட தவிப்பிலும் உண்மையிலும் மெதுவே அக்கண்களில் கரைந்து போனாள் சன்விதா.
அவளின் கண்களில் தென்பட்ட மாற்றத்தை உணர்ந்தவன் உணர்ச்சி கொந்தளிக்க கூறினான் “நீ இல்லாம ஒரு நாளை கூட என்னால் நினைக்க கூட முடியலடி”
அச்சுதனின் உணர்வு மிக்க கண்கள் அவளையே பார்த்தது கொண்டிருந்தன. மெதுவே கன்னத்தை தன் பெரு விரலால் வருடியவனின் செங்கபில கண்களில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்த சன்விதாவுக்கு தனக்கு என்ன நடக்கின்றது என புரிந்தும் புரியாமலும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். நொடிகளோ மணி துளிகளா என தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க அச்சுதனின் கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்த தவிப்பு சன்விதாவை ஏதோ செய்ய அவளையுமறியாமல் அவள் கரம் உயர அச்சுதன் பார்வை அவள் கரங்களை நோக்கியது.
மெல்ல அவள் விரல்கள் அவனின் கன்னத்தை மென்மையாகவும் லேசாகவும் பட்டும் படாமல் தொடவே, நடப்பதை நம்ப முடியமால் மெதுவே கண்ணிமை மூடி அந்த கணத்தினை தனக்குள் உள்வாங்கினான் அச்சுதன். அவன் கரம் தானாக உயந்து அவள் விரல் இடைவெளிகளை தன் விரல்கள் கொண்டு நிரப்ப, மிக மிக மென்மையாக ஒரு மில்லி மீட்டரே வைத்திருந்த தாடி கன்னத்தில் வைத்து அழுத்தினான். அவளது உள்ளங்கையின் மென்மையை பதம் பார்த்த அவனது தாடி அவளது நாடி நரம்புகளில் மின்னலை பாய்ச்சி சில பட்டாம் பூச்சிகளை வயிற்றில் சிறகடிக்க விட்டது. அவன் இதழ்களை பார்த்தவளின் பார்வை மெதுவே உயர்ந்து மெல்ல திறந்த இமைகளின் பின் தென்பட்ட வேட்கை கொண்ட விழிகளை நோக்கியது.
சொர்க்கத்திலிருந்தான் அச்சுதன், அவள் விரல்களில் தன் விரல்களை கோர்த்தவாறே கைகளை இதழுக்கு நகர்த்தினான். மெல்லிய வெப்பத்துடன் உறுதியான மென்மையான அவனின் இதழ்கள் அவளது உள்ளங்கையில் பதிவதை உணர்ந்த சன்விதாவின் விரல்கள் அவனது விரல்களை சற்று அழுத்தமாக பற்றியது.
மெல்லிதாக நடுங்கிய குரலுடன் அவளது பெயரையே மூச்சாக சுவாசித்தான் அச்சுதன் “சன்விதா ….”
“ஹா….” இமை தட்டி விழித்தவளின் மயக்கம் கலைந்தது.
சட்டென கைகளை இழுத்து கொண்ட சன்விதா, இருக்கையிலிருந்து எழ முயற்சிக்க முன்னே நின்ற அவன் மீது மோதி தடுமாறியவளின் தோளினை பற்றி நிறுத்தியவன் “ஷ்ஷ் சன்விதா ரிலாக்ஸ்..” அவளை அமைதிப்படுத்த முயன்றான். அவளோ தீயை மிதித்தவள் போல் துள்ளி அவனிடமிருந்து விலகி தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அசையாது அதே இடத்தில் நின்று அவளை பார்த்த அச்சுதன் அழுத்தமான குரலில் “சன்விதா லிசின் டு மீ, நான் உன்னை தொடல சரியா, நான் அசையல, நான் இங்கே… நீ அங்கே… ஓகே கூல்…”.
அதன் பின்பே நிதானத்துக்கு வந்தவள் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அவனது கையை பார்த்தவள் பின் தன் கையை திருப்பி பார்த்தாள் நிமிர்ந்து அச்சுதனின் இதழ்களை நோக்கினாள். கண்களில் சற்று முன் என்ன நடந்தது, எப்படி நடந்தது என குழப்பம் கூடாரமிட மிரண்டு போய் நின்றிருந்தாள். அச்சுதன் நின்ற இடத்திலிருந்தே முகத்தில் எதுவித உணர்ச்சியையும் காட்டி கொள்ளாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சன்விதாவோ அவனை தவிர அனைத்து இடத்தையும் பார்த்தாள்.
அவளின் சுட்டுவிரல் மெதுவே உயர்ந்து ஓரிடத்தை சுட்டி காட்டியது. கேள்வியுடன் நோக்கியவனின் கண்களில் பட்டது அவளது கைப்பை. அதை எடுத்து அவளிடம் கொடுக்க கையை சுட்டுவிடும் என்பது போல் படு கவனமாக வாங்கி கொண்டவள் திரும்பி கூட பார்க்காமல் கதவிடம் சென்றவள் திறப்பதற்கு முன் அவன் அசைகிறானா என்பது போல் பார்த்தாள்.
அவன் அதே இடத்தில் நிற்கவும் அவ்விடத்தை விட்டு ஓடி போயிருந்தாள். அதுவரை உணர்ச்சியற்று இருந்த முகத்தில், கண்களில் மின்னல் மின்ன உதடுகளில் அழகாய் திருப்தியான புன்னகை மலர விரல் நுனிகள் கன்னத்தை வருடின.
அவன் கண்கள் கண்ணாடியூடே கட்டுப்பாடற்று துடிக்கும் நெஞ்சை அழுத்தியவாறு பெரு மூச்சுகளை விட்டு தன்னைத்தானே நிலைப்படுத்த முயன்ற சன்விதாவை பார்த்தான்.
“மூன்று மாதம் எனக்கு தாராளம், சன்விதா” உதட்டில் பூத்த திருப்தியான புன்னகை முகம் முழுவதும் பரவியது.
தொடரும்… (To be continued)
Previous Chapter
Next Chapter
© 2025 Nandhaki Tamil Novels. All rights reserved. Unauthorized reproduction or distribution of this material is strictly prohibited.
