உன்னை நான் யாசிக்கின்றேன் (Unnai Naan Yaasikkindren) Chapter – 03
ஆசிரியர் குறிப்பு (Author’s Note)
‘உன்னை நான் யாசிக்கின்றேன்’ (Unnai Naan Yaasikkindren) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது.
இந்த அத்தியாயத்தில் (In this Chapter):
சன்விதாவின் மறுப்பை ஏற்றுக் கொள்வானா அச்சுதன்? அம்மாவிடம் அச்சுதன் கதைத்ததை அறிந்த சன்விதா என்ன செய்வாள்? இருவரும் மீண்டும் சந்திப்பார்களா !
யாசகம் ♥ 03
யோசனையுடன் கைகளைக் கட்டியவாறே ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தாள் சன்விதா. அச்சுதன் அம்மாவிடம் வந்து பேசினானா! ஆச்சரியமாய் இருந்தது. மலருக்கு மலர் தாவும் வண்டு அவன், எப்படி ஒரு மலரில் வாசம் செய்ய சம்மதிப்பான்.
இல்லை இந்தக் கதைகளில் வருவது போல் எனக்கும் அவனுக்கும் ஏதேனும் மோதல் ஏற்பட்டு அதனால் பழி வாங்க எதுவும்…. நன்றாக யோசித்து பார்த்தாள் அப்படி எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவளுக்கு சில கொள்கைகள் இருந்தாலும் அதை வைத்து மற்றவரை எடை போட்டு பேசும் பழக்கமில்லை. எனவே அப்படி எதுவுமில்லை. சிலவேளை அன்று சந்தித்ததில் இருந்தே….
குழப்பத்துடன் நடந்தவள் அருகே வந்து மோதுவது போல் நின்றது அந்த SUV. காரின் கருப்பு கண்ணாடியை பார்த்து முறைக்கவே, கண்ணாடியை இறங்கியவன் கூலரை கழட்டியவாறே “ஹாய் சன்விதா” அவளைப் பார்த்து புன்னகைத்தான். முழங்கையினை காரில் ஊன்றி விரல்களில் கூலரை வைத்து சுழற்றியவாறே கேட்டான் “வாவேன் வீட்டில் இறக்கி விடுகின்றேன்”.
பெரிய்ய்ய காதல் மன்னன் அவனிடம் பொரிந்து தள்ள வாயெடுத்தவள் அவன் காரை அடையாளம் கண்டு அங்கேங்கே நின்றவர்களின் சுவாரசியமான பார்வையில் தன்னை நிதானித்தவளாக பல்லை கடித்தவாறே “நாம் கொஞ்சம் பேச வேண்டும் மிஸ்டர் அச்சுத கேசவன்”.
ஒரு கணம் கண்களில் மின்னல் மின்னி மறைய “ஷுயர் எங்கே போவோம் கஃபே, டிரைவ் இன்ஸ், இந்த ஹோட்டலின் கஃபே கூட நல்லாய் இருக்கும் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்”
பல்லை கடித்தவள் இவன் போவதற்குள் என் பல்லெல்லாம் போயிரும் போல இருக்கே கோபத்தினை அடக்கி “இதோ பாருங்கள் மிஸ்டர் அச்சுத கேசவன் நாமிருவரும் டேட்டிங் போகல, உங்களோட கொஞ்சம் பேசணும் அவ்வளவுதான், காரிலேயே பேசுவோம்”
நெஞ்சில் கைவைத்து லேசாக தலைசாய்த்து “அப்படியே ஆகட்டும் மஹாராணி” என்றவனுக்கு ஏனோ எல்லாம் விளையாட்டாகவே இருந்தது. அவனுக்கு அவள் தன்னோடு வர சம்மதித்ததே தித்திக்க கூலரை ஷிர்டில் மாட்டியவன் ஒரு புறமாக சரிந்து காரின் கதவை திறந்துவிட்டான்.
காரினை போக்குவரத்து குறைந்த சாலையில் செலுத்தியவன் முகங் கொள்ளாத புன்னகையுடன் “சோ…” என்றான்.
“மிஸ்டர் அச்சுத கேசவன்….”
“அச்சுதன்”
“ஹான்…”
“என் பெயர் அச்சுதன், அச்சு, சுதன் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்”
“அப்ப கேசவன் அப்பாவின் பெயரா?” எரிச்சலுடன் கேட்டாள்.
“இல்லை அதுவும் என் பெயர் தான்” புன்னகையுடன் பதிலளித்தான்.
“இரண்டு பெயரா?”
“ம் அம்மாவுக்கு அச்சுதன் என்ற பெயர் வைக்கணும் என்ற ஆசை அப்பாவுக்கு கேசவன், அதன் இரண்டு பெயரையும் ஒன்றாக்கி வைத்துவிட்டார்கள் எப்படி…”
“ஐடியா நல்லாத்தான் இருக்கு”
அவளை ஒரு கணம் பார்த்தவன் “சோ உன் பெயருக்கு என்ன அர்த்தம்” தெரிந்திருந்ததும் கேட்டான்.
“அமைதி…. என் பெயரை பற்றி பேசவா என்னை அழைத்து வந்தீர்கள்” எரிச்சலுடன் கேட்டாள். அவனோ புன்னகை மன்னனாக இருந்தான்.
“அமைதியை விரும்புவாள் இல்லையா?” கார் கல்யாண ஊர்வலம் போல் ஊர்ந்து கொண்டிருந்தது.
“அதோடு நம் திருமணத்தினைப் பற்றியும் பேச, எப்போது வைத்துக்கொள்ளலாம், ஹால் திருமண வேலையெல்லாம் நானே பார்த்துக்கொள்கின்றேன் எப்போது என்பதை மட்டும் சொல்லு” கண்களில் கவனத்தோடு கேட்டான்.
அவன் அழிச்சாட்டியத்தில் கண்களை முடி திறந்து பார்த்தவள் ஒரு கணம் காரில் ஏறியதிலிருந்து இருவருக்குமான சம்பாஷணையினை அசை போட்டாள் எங்காவது தன் சம்மதத்தினை சொன்னேனா என்று. அவனை பார்த்தவளுக்கு அவன் கண்களில் இருந்த கவனம் புரிய உள்ளூர ஒரு குரல் எச்சரித்தது. ‘இவன் அபாயமானவன் கவனமாய் இரு’. அத்துடன் இவ்வளவு திறமை இல்லாமல் தொழிலில் கொடிகட்டி பறக்கவும் முடியாது என பாராட்டு பத்திரத்தினையும் சேர்த்து வழங்கியது. அதை உடைப்பில் போட்டவள்
“அடப்பாவி….. நான் எப்போது திருமணத்திற்கு சம்மதம் சொன்னேன்.”
“இல்லையா… பெயர் விபரம் எல்லாம் கேட்க நான் நினைத்தேன் உனக்கு சம்மதமோ என்று” கள்ளச் சிரிப்புடன் பதிலளித்தான்.
“இதோ பாருங்கள் மிஸ்டர் அச்சுத கேசவன்…”
இடையிட்டவன் “அத்தான்..” அழுத்தமாக சொன்னான்.
“ஹான்….” குழப்பத்துடன் பார்க்கவே
“இல்ல என் பெயர் சொல்லி கூப்பிட விரும்பாவிட்டால் அத்தான் என்று கூப்பிடு என்று சொன்னேன்”
அவள் குழப்பம் தீராமல் கிளிப்பிள்ளையாய் திருப்பி படித்தாள் “அத்தான்..”
சட்டென பிரேக் அடித்தவன் அவளை திரும்பி பார்த்தவன் கண்களில் தென்பட்ட வேட்கையில் பயந்து வாயினை கைகளால் மூடி கார் கதவோடு ஒன்றினாள் சன்விதா.
அவளின் பயத்தை பார்த்தவன் கையை முஷ்டியாக்கி வாயில் வைத்து கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவன் மீண்டும் காரை ஸ்டார்ட் எடுத்தவாறே புன்னகையுடன் கூறினான் “நம் திருமணம் முடியும் மட்டும் நீ என்னை அப்படி கூப்பிடாமல் இருப்பதே நல்லது”
இன்னும் அது நிலையில் இருந்தவாறே தலையை வேகமாக ஆட்டியவளை பார்த்து சிறு சிரிப்புடன் உல்லாசமாக கேட்டான் “என்ன கல்யாணம் செய்வோமா?”.
அவனது உல்லாச சீண்டலில் பழைய நிலைக்கு மீண்டவள் சட்டெனெ தன்னையும் அறியாமல் கேட்டள் “பின் எப்படி கூப்பிடட்டும்”
“வேறு எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு”
இனிமையான குரலில் “ஆடு, மாடு, எருமை, கிங்காங் டைனோசர்…..” நாடியில் கைவைத்து யோசித்தவளை நோக்கியவன் கண்களில் ரசனை வழிந்தது.
அவனையும் மீறி அவன் கைகள் நீண்டு தலையை பிடித்து செல்லமாக ஆட்டியது. அதுவரை அவளை சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழ அவள் எதற்கு அவனுடன் வந்தாள் என்பதும் நியாபகத்திற்கு வந்தது.
“தொடக்கூடாது” சட்டென கையை தட்டிவிட்டாள்.
“சரி சரி…. தொடலை “
“மிஸ்டர் அச்சுத கேசவன்”
உதட்டை கடித்தவாறே அவளை திரும்பி பார்த்தவன் “ஹ்ம்ம்….” என்றான்.
“இதோ பாருங்கள் எனக்கு என்று சில கொள்கைகள் இருக்கு, எனக்கு வரும் கணவர் எப்படி இருக்கனும் என்று கனவும் இருக்கு”
“ஹ்ம்ம்…”
“அதோட எனக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை”
“ஹ்ம்ம்….”
“என்னுடைய கணவர் ராமனாக இருக்கனும் கண்ணனாக இல்லை” கண்களில் கனவு மிதக்க “என்னை மட்டுமே காதலித்து என்னை மட்டுமே தொடுபவராக இருக்க வேண்டும்….”
மேற்கொண்டு எந்த சத்தமும் வராமல் போகவே திரும்பி பார்த்தவன் கண்களில் விழுந்தது லேசாக சிவந்திருந்த அவள் கன்னமும் கனவு மிதந்த விழிகளும்.
அவன் புன்னகைத்தான் “இதுதான் உன் பிரச்சனையா?” அவள் கையை தன் கையில் எடுத்தவன் மென்மையான குரலில் “நான் காதலிக்கும் முதல் பெண்ணும் கடைசி பெண்ணும் நீதான்”
அவன் முகத்திலிருந்த மென்மையினை பார்த்த சன்விதா கையை விலக்காமல் மென்மையாக கேட்டாள் “நீங்கள் ராமான…”
அவள் கையை விடுவித்தவன் உதட்டை கடித்தவாறே மெல்ல இல்லை என தலையசைத்தான்.
“எனக்கு என் கணவர் ராமனாக இருக்கணும், அது நீங்கள் இல்லை” மென்மையாகவே கூறினாள்.
அவன் முகத்தில் இருந்த மென்மை மெதுவே மறைய உணர்ச்சியற்ற பாறை போலான முகத்துடன் மெல்ல தலையசைத்தவாறே கூறினான் “உன்னோட இந்த கனவை மட்டும் என்னால் நிறைவேற்ற முடியாது ப்ளீஸ்”
“இந்த தகுதி இல்லாத ஒருவரை நான் மணமகனாக ஏற்க முடியாது “ அழுத்தமாக கூறினாள்.
முகம் மேலும் இறுக “அனைத்து கனவுகளும் நனவாவதில்லை” வறண்ட குரலில் கூறினான்.
ஆழ்ந்த மூச்சினை எடுத்து விட்ட சன்விதா பொறுமையாக சொன்னாள் “கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் நான் உங்களை திருமணம் செய்ய முடியாது”
“ஏன்… மறுபடியும் அதே காரணம் வேண்டாம் வேறு எதாவது இருந்தால் சொல்” எதிரே இருந்த பாதையில் கண்களினை பதித்தவாறே கூறினான்.
அவனை முறைத்தவள் “நான் வேறு ஒருவரை காதலிக்கின்றேன் போதுமா காரணம்” மெதுவே சென்று கொண்டிருந்த கார் இப்போது நின்றே விட்டிருந்தது.
“ஏய்ய்..” அடிக்க கையோங்கியவன் அவளது பயத்தினைப் பார்த்து ஸ்டேரிங் வீலில் ஓங்கி அடித்து அதையே இறுக பிடித்தான். ஸ்டேரிங் வீலை பிடித்திருந்த கரங்களின் முட்டி வெண்மையாக மாறத் தொடங்கியது.
“தென் போர்ஹெட் ஹிம் அண்ட் லேர்ன் டு லவ் மீ”
சன்விதா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். இவ்வளவு நேரம் தன்னிடம் பேசியவன் முகமா இது கடும்பாறை அது போல் அவன் குரலும் எதுவித உணர்ச்சியுமற்று இருந்தது.
“மனுஷன் பேசுவான உங்களிடம், கதவை திறங்க நான் போகணும்” கார் கதவை திறக்க முயன்றவாறே எதுவித அசைவுமின்றி அமர்ந்திருந்தவன் கையை மட்டும் அசைத்து அன்லாக் செய்ய போனவனின் விரல் இடையிலே நிற்க கேட்டான் “அவன் பெயர் என்ன?”
“அவன் பெயர்… அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு, நீங்க கதவை திறவுங்கள்” அவள் குரல் அவளையும் மீறி கெஞ்சியது.
அவன் விரல் அவனையும் மீறி கதவை திறந்துவிடவே, கைப்பையினை எடுத்தவாறு இறங்கியவள் “குட் பாய், மிஸ்டர் அச்சுத கேசவன், நாம் இனி சந்திக்காமல் இருந்தால் நல்லது” திரும்பியும் பாராமல் நடக்க தொடங்கினாள்.
அவனது கூற்றின்படி அவன் அவளது பெற்றோரிடம் வந்து முறையாக பெண் கேட்டிருக்கின்றான். எதோ காரணத்தினால் அவர்கள் மறுத்தும் இருக்கின்றார்கள். இன்று நிச்சயமாக அம்மாவிடம் இது பற்றி பேசியே ஆக வேண்டும் தள்ளி போடுவது நல்லதில்லை. பெண்கள் இவ்வாறு வெளியில் நடக்கும் சம்பவங்களினை வீட்டுக்கு மறைப்பதனால் ஆபத்துத்தானே தவிர ஒரு நன்மையும் இல்லை. அவளது பெற்றோர்தான் அவளின் முதல் நண்பர்கள் எதை பற்றியும் அவர்களிடம் பேசலாம். அவ்வளவு சுதந்திரம் உண்டு அவளுக்கு அவர்களிடம்.
அவள் போவதையே இறுகி போய் எதுவித அசைவுமின்றி பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் கடினம் ஏற முகம் உணர்ச்சியற்று கல் போல் ஆனாது.
♥♥♥♥♥
வீடு வந்து சேரும் வரை அவளைப் பின்தொடர்ந்த அச்சுதனின் SUV அவள் வீட்டிற்குள் செல்லவும் திரும்பிச் சென்றது. அவனது காரில் இருந்து இறங்கிய சன்விதாவுக்கு அவனது பார்வை உள்ளுர சில்லெடுக்க வைக்க திரும்பியும் பார்க்காமல் தப்பித்தால் போதும் என்று ஒரு ஆட்டோவினை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவள் கண்ணனிடம் வந்து அலப்பறையடித்துக் கொண்டிருந்தாள்.
“மிச்சம் குளிச்சிட்டு வந்து வைச்சுக்கிறேன்” கண்ணனிடம் சொல்லிவிட்டு குளிப்பதற்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
பொதுவாக கோவிலுக்கு சென்று வந்தால் தவிர மற்றும்படி என்ன வேலையாக சென்றாலும் வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு மேல் கழுவ வேண்டும் இல்லாவிட்டால் சரிப்படாது. ஆனால் இன்று இந்த யோசனையில் தலைக்கு ஊற்றியவள் வெளியே அமர்ந்து தலையை காய வைத்துக்கொண்டிருந்தாள்.
கோவிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பத்மாவதி, அவளது அன்னை அவள் கண்ணில் தென்பட்டார். வட்ட முகம், காதருகேயும் உச்சி வகிட்டிலும் லேசாக ஓடிய நரை, தலையில் சூடிய மல்லிகை நெற்றியில் குங்குமம் என்று மங்களம் என்பதன் வரைவிலக்கணமாக வந்தவரைப் பார்த்து “அம்மா அத்தை என்னை விட்டுட்டு நீங்கள் மட்டும் தனியாக கோவில் போய் வந்துடீங்க இல்லை” என செல்லமாக முகத்தை தூக்கி வைக்கவே, அம்மா அவளது கதை பிடித்து திருக்கினார் “உனக்கு எத்தனை தரம் சொல்வது, அந்தி சாய்ந்த பிறகு தலைக்கு ஊற்றதே என்று உன் தலைமுடியின் அடர்திக்கு ஜலதோஷம் பிடிக்கும், சொன்னல் சொன்ன சொல் கேட்கிறாயா?”.
அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்ட சன்விதா அத்தை ரேஷ்மாவின் பார்த்து “அத்தை….” என முக்கால் குரல் கொடுக்க அவளது சப்போர்ட்க்கு வந்தார் அத்தை.
“சரி விடு, எதோ சின்னப்பிள்ளை முழுகிவிட்டாள், நான் தலைக்கு சாம்பிராணி போட்டு விட்டால் ஜலதோஷம் பின் வாசல் வழியாக ஓடுது” அத்துடன் நில்லாமல் உள் நோக்கி குரல் கொடுத்தார் “மானு கொஞ்சம் சாம்பிராணி எடுத்து வாம்மா”
அத்தையிடம் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சியவளை அதற்கு மேல் கண்டிக்க மனமில்லாமல் அவள் அம்மா உள்ளே செல்ல சாம்பிராணி கொண்டு வந்த அக்கா மானசவினை பார்த்தவள் “அக்கா நீ உள்ளே தான் இருந்தாயா? கண்ணில் படவே இல்லை” என கேட்டவளை கோபமாக முறைத்தாள் மானசா என்கின்ற மானு. அன்று காரில் வைத்து அவளைக் கட்டிக் கொண்ட நங்கை.
பின் உள்ளே வரும் போதே அவள் முகம் சரியில்லை என்று முன்னால் வந்து என்ன எது என்று கேட்டு தொண்டை கிழிய கத்தினால் முன்னால் நின்றவளை கணக்கே எடுக்காமல் சுற்றி கொண்டு சென்றுவிட்டு இப்போது உள்ளேயா இருக்கிறாய் என்றால் கோபம் வரத்தானே செய்யும் ஜனங்களே.
அவள் முறைக்க ‘என்ன முறைக்கிறாள் வழமை போல் யோசனையில் கண்டுகொள்ளாமல் போய்ட்டமோ சரி சமாளிப்போம் நாம பார்க்காதத’ என இல்லாத தைரியத்தை வரவழைத்து கொண்டவள் “ஹிஹிஹி…” என அசட்டு சிரிப்பொன்றை சிரித்து வைத்தாள்.
“எத்தனை தரம்தான் சொல்வது? எப்போதுதான் இந்த பழக்கத்தை மாற்றப் போகின்றாயோ?” என கடிந்தாள் மானசா.
“உனக்கு தான் என் குணம் தெரியுமே, என்னை பிடித்து நிறுத்தி இருக்க வேண்டியது தானே, கையில் என்ன இருந்தது”
“ஆ… மருதாணி…” கையிலிருந்த மருதாணி கிண்ணத்தை காட்டியவள் “உனக்கு வைக்கலாம் என எடுத்து வந்தேன் உன் வாய் கொழுப்புக்கு கிடையாது போ…” முகத்தை திருப்பி கொண்டாள்.
மானஸாவின் கையை பிடித்து இழுத்து அருகே அமர்த்தியவள், அவள் கன்னத்தை வலிக்காமல் கிள்ளியவாறே “என் செல்ல அக்கா இல்ல, என் அம்முக்குட்டி, என் தங்கம் என் ரத்தினம்…. புஜுக்கு புஜுக்கு” என அவளை கொஞ்சியவாறு கால்களினை மானசாவின் மடியில் போட்டவள் “முதலில் காலுக்கு வைத்துவிடு பிறகு கைக்கு வைக்கலாம் என்ன” என்றவளை ஆவென பார்த்தவள் “உனக்கு மருதாணி வைப்பதாக யார் சொன்னது, முடியாது போ” வாய் முடியாது என சொன்னாலும் கை தன்பாட்டுக்கு மருதாணியினை எடுக்கவே அங்கு வந்த அவர்களின் அம்மா பத்மாவதி தேநீரினை அவர்கள் புறம் வைத்துவிட்டு மருதாணியை அவள் கையிலிருந்து பறித்தார்.
“அம்மா….” என சிணுங்கிய சன்விதாவிடம் “நேரம் கெட்ட நேரத்தில் முழுகியதும் இல்லமால் மருதாணி வேறா, குளுமையாக்கிவிடும் நாளை காலை வைத்துக்கொள்” மருதாணியுடன் உள்ளே சென்றார்.
இரு சகோதரிகளும் ஒன்று போல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “வட போச்சே” என கோரஸ் பாடினார்கள்.
அத்தை ரேஷ்மா இருவரையும் பார்த்து சிரித்தவாறு உள்ளே சென்றுவிட்டார். அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். ஆனால் இவர்களின் குறும்புகள் அனைத்தும் அத்துப்படி அவர்கள் தந்தையின் சகோதரி அவருக்கு பிள்ளைகள் இல்லை, கணவர் தேவ் ஆர்மியில் இருப்பதால் அடிக்கடி இங்கே வந்துவிடுவார் என்பதை விட கணவருக்கு லீவு கிடைக்கும் போது மட்டும் போவார் என்பது பொருந்தும்.
♥♥♥♥♥
அமாவாசை வானத்தில் மற்ற நட்சத்திரங்களின் நடுவில் ஓரியன் நட்சத்திர கூட்டம் வடக்கு திசையை அடையளம் காட்டியபடி பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. சன்விதாவுக்கு அந்த ஓரியன் நட்சத்திர கூட்டத்தை பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம், சுட்டு விரலினால் மன கோடுகளை வரைந்து கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்தார் அவளது அன்னை. விரலை அந்தரத்தில் வைத்தபடி கழுத்தை மட்டும் திருப்பி அன்னையை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினாள்.
பத்மாவதி எதுவும் பேசாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி தலை சாய்த்து அவளை பார்த்தார்.
அம்மாவை பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்தவள் கேட்டாள் “உங்களுக்கு எப்படியம்மா தெரியும் நான் உங்களுக்காக தான் காத்திருக்கின்றேன் என்று”
புன்னகையுடன் அவள் தலையில் வலிக்காமல் தட்டியவர் “என்னம்மா” என்றார்.
அவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம் முகத்திலிருந்து மறைய “அம்மா அது….” சற்றே தயங்கினாள். அவர்கள் அவளிடம் ஒரு விடயத்தை கூறவில்லையென்றால் அதற்கு நிச்சயமாக ஒரு சரியான கரணம் இருக்கும் என ஆணித்தரமாக நம்பினாள். அதுதான் அதைப்பற்றி கேட்க மிகவும் தயங்கினாள்.
புன்னகையுடன் ஊக்கினார் அவளது அன்னை “பரவாயில்லையம்மா கேள்…”
“அந்த அச்சுத கேசவன், அவன் உங்களிடம் வந்து என்னை பெண் கேட்டது உண்மையா, அம்மா”
அச்சுத கேசவன் என்ற பெயரிலேயே அந்த அன்னையின் முகம் இரத்த பசையின்றி வெளுத்தது, மெல்லிய குரலில் தனக்கு தானே கேட்டுக்கொண்டாவர் “அவன் இன்னும் இவளை மறக்கவில்லையா?”
சன்விதாவிடம் பதட்டமாக கேட்டார் “அவன் உன்னிடம் எதாவது தப்பாக நடந்து கொண்டானா?”
அன்னையின் வெளுத்த முகத்தை பார்த்தவள், சட்டென அவரது கையினை தன் கைகளில் எடுத்துக் கொண்டு “இல்லையம்மா அப்படி எதுவுமில்லை, இன்று அவன் எண்னிடம் பேசினான், தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டான், நான் மறுக்கக் கூட இடம் கொடுக்கவில்லை” மூக்கை சுருக்கினாள்.
“ஆனால் எனக்கும் அவனுக்கும் சரி வராது என்று சொல்லிவிட்டேன்” என்றவள் கண்ணடித்து அம்மாவின் அருகே குனிந்து ரகசியமாய் கூறினாள் “நான் ஒருத்தனை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்” ராகமிட்டு சிரித்தாள்.
“யாரை காதலிப்பதாக சொன்னாய், யாரும்மா அந்த களப்பலி” கேலியாகவே கேட்டார் அவளது அன்னை.
“வேறு யாரும்மா வீரர் தீரர் சூரர் நமது கரண் என அழைக்கப்படும் உமாகாரன் தான்”
அன்னை உடனே கேட்டார் “அவனை காதலிக்கிறாயா? சொல் அவனையே திருமணம் செய்து வைக்கிறோம்”
“ஐயோ அம்மா, நான் சும்மா பொய்க்குத்தான் கூறினேன் அவனை நான் காதலிக்கவில்லை அவன் தான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான்”
சில கணங்கங்கள் அமைதியில் கரைய “அம்மா… ஆனால் எப்போது அவன் வீட்டுக்கு வந்தான்?”
“ஹும்… அது ஒரு ஆறு மாதத்திற்கு மேல் இருக்கும்” மக்களின் முகத்தில் தென்பட்ட குழப்பத்தினை பார்த்து கேட்டார் “ஏனம்மா?”
“இல்லை, என்னிடம் கேட்பதனால் மறுநாளே வந்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாள் கழித்தும் வந்திருக்கலாம், ஏன் ஆறு மாதம் காத்திருந்தான்?”
இருவருக்குமே அந்த கேள்வி ஒரு புதிராய்தான் நின்றது.
“உனக்கு அவனை பிடித்திருக்கின்றதாம்மா, நன்றாக யோசித்து சொல். உன் விருப்பம்தான் முக்கியம்”
திடுக்கிட்டு போய் அன்னையை பார்த்தவள், நிதானமாக யோசித்தள் இன்று நடந்த சந்திப்பில் ஒரு தரம் கூட அவனை காதலிப்பதாக ஒரு உணர்வு கூட தோன்றியதாக தெரியவில்லை அவளுக்கு (நம் ஹீரோவின் லட்சணம் அப்படி) எப்போதடா தப்பி வருவோம் என்றுதான் இருந்தது. அத்துடன் அவனின் பார்வை அப்பப்பா பார்வையா அது குருதியை நாளத்திலேயே உறைய வைப்பது போல்.
தலை குனிந்தவள் பிடிவாதமாய் மறுத்தாள் “எனக்கும் அவன் குணம் தெரியும். அவனுக்கும் எனக்கும் சரியே வராது அவன் அருகில் கூட செல்ல விருப்பமில்லை” என்றவள் தாயின் மடியில் தலை சாய்த்தவாறே நிமிந்து நிலவற்ற நட்சத்திர வானத்தினை பார்த்தாள்.
மீண்டும் சில கணங்கள் மௌனத்தில் கரைய திடீரென அன்னை அவனை காதலிக்கிறாயா என்று கேட்டதில் அன்று இடை தாங்கியவனின் நினைவு வந்தது தொலைத்தது. மனம் வழமை போல் அவனுக்காக கூப்பாடு போட்டு ஏங்கியது எங்கிருக்கிறாடா மீண்டும் காண வேண்டுமே ஆனால் எப்படி, அம்மாவிடம் சொன்னால் சரி ஆனால் என்னவென்று சொல்வது கண்களில் நீர் வரும் போல் இருந்தது.
அப்படியே அச்சுத கேசவனின் கண்களினை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு ஆனால் அதே கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்த வேட்டை பார்வையின் நினைவும் கூடவே வந்து வயிற்றை ஒரு கிள்ளு கிள்ளி செல்லவே மேற்கொண்டு யோசிக்க முடியாமல் “அம்மா எனக்கு டயர்டா இருக்கு படுக்க போகின்றேன்” என்றவாறே எழுந்து உள்ளே சென்றாள்.
♥♥♥♥♥
உள்ளே சென்று படுத்தவளுக்கு இன்னும் தன் இடையினை அவனது வலிய கைகள் தாங்கி பிடித்திருப்பது போல் இருக்கவே சட்டென எழும்பியவள் அவள் மேஜையில் இருந்த கண்ணனினை பார்த்து கை கூப்பியவள் கேட்டாள் “கண்ணா ப்ளீஸ் அவன் எங்கேயிருந்தாலும் என் முன்னே கொண்டு வந்து நிறுத்தேன்”
நிறுத்தினால் மட்டும் உனக்கு அவன் தான் இவன் என தெரிந்துவிடுமா என்ன என அவன் லீலைக்கு ஆள் கிடைத்ததை எண்ணி கண்ணன் சிரித்தவாறு இருந்தான்.
♥♥♥♥♥
வெளியே அமர்ந்திருந்த பத்மாவதியின் சிந்தனை இரண்டு மாதத்திற்கு முன் சென்றது.
அன்று அலுவலகத்திலிருந்து வந்திருந்த சன்விதாவின் அப்பா அனந்தகிருஷ்ன சர்மா சொல்லிக் கொண்டிருந்தார். “அந்த பையன் அச்சுத கேசவன் உண்மையாகவே நம் சன்விதாவை விரும்புகின்றான் தான் போலிருக்கின்றது, இன்று எதோ அலுவலக வேலையாக எனது அலுவலகத்திற்கு வந்திருந்த போது ஜிஎம்மும் சேர்மானும் பேசிக் கொண்ட போது கேட்டேன். இப்போதெல்லாம் திடீரென ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறானாம் என்று அத்துடன் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும். அவர்களுக்கு நம் விதாதான் என்று தெரியாது”
“அப்படியானால் அவனையே பேசி முடித்துவிடலாம் என்கிறீர்களா?”
சிறிது குழப்பத்துடன் தலையசைத்தார் அனந்தகிருஷ்ன சர்மா. “ஆனால் விதாவுக்கும் அவனின் குணத்துக்கும் சரிப்பட்டு வராதே” என்றவரின் பார்வை குழந்தையென அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த சன்விதாவிடம் இருந்தது. “இதையெல்லாம் இப்போதைக்கு அவளிடம் சொல்லாதே கொஞ்ச நாள் பொறுத்து பார்ப்போம்” என்றவருக்கு தனது ப்ரோமோஷனுக்கும் இடமாற்றத்திற்கும் காரணம் அச்சுத கேசவனோ என்ற சந்தேகத்தினை மனைவியிடம் கூறவில்லை. அவருக்கே உறுதிபட தெரியாத ஒன்றினை எவ்வாறு கூறுவது என எண்ணி விட்டுவிட்டார்.
இரவு பறவையின் சடசடப்பில் நினைவில் இருந்து கலைந்த பத்மாவதி நீண்ட பெருமூச்சினை விட்டு தன்னை சமன் செய்ய முயன்ற போது அன்று அச்சுத கேசவன் கடைசியாக சொல்லி சென்றது நிழலாடியது. மிக தாழ்ந்த மென்மையான குரலில் “Believe me Aunty next time I come in to this house you will welcome me as your Son in law”
அவருக்கு அந்த குரலும் அவன் கண்களில் தென்பட்ட வேட்டை பார்வையும் எதோ செய்தன. சொல்வதை செய்தே தீருவான் என்பதை போல், அத்துடன் அவரது அனுபவத்தில் அவன் தன் மகளை உண்மையாக நேசிக்கின்றான் என்பதும் புரிந்தது ஆனால் மகளின் மனமும் அதைவிட முக்கியம் இல்லையா, மனதை வருத்திவிட்டால் என்ன செய்வது பேசாமல் அவளை லண்டன் அனுப்பிவிடலாமா அங்கே அவரது தம்பியும் அவரது குடும்பமும் இருக்கிறது சிறிது நாளைக்கு அச்சுத கேசவன் கண்களில் படமால் இருப்பதே சன்விதாவுக்கு நல்லது. ஆனால் பத்மாவதி ஒரு முக்கியமான கேள்வியினை சன்விதாவிடம் கேட்க மறந்துவிட்டிருந்தார் அது சன்விதாவுக்கு அச்சுத கேசவனை பற்றி எப்படி தெரியும் என்பது தான் அவரும் கேட்கவில்லை சன்விதாவும் கூறவில்லை.
தொடரும்… (To be continued)
Previous Chapter
Next Chapter
© 2025 Nandhaki Tamil Novels. All rights reserved. Unauthorized reproduction or distribution of this material is strictly prohibited.

Comments on “யாசகம் ♥ 03”